Thursday, May 22, 2014

புத்தகத்திருடி (Book Thief)

(துருக்கி) இஸ்தான்புல்லுக்கு போக டர்க்கிஷ் ஏர்லைன்ஸில் ஏறி உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு, எதிரே உள்ள டிவியில் மேய்ந்ததில் கண்ணில் தென்பட்ட படம் புக் தீஃப். 
Brian Percival
பிரையன் பெர்சிவல் (Brian Percival) என்பவரால் இயக்கப்பட்ட இந்தப்படம் ,இதே தலைப்பில் வந்த நாவலைத்தழுவி எடுக்கப்பட்டது.
Novel

தலைமறைவான கம்யூனிஸ்ட் தாய்க்குப்பிறந்த படத்தின் கதாநாயகி லீசல், ஜெர்மனியின் ஒரு கிராமத்தில் வாழும் ஒரு எளிய குடும்பத்திற்கு தத்துப் பெண்ணாக வருகிறாள். ஹிட்லர் தலைமையில் நாஜிகள் ஆண்ட காலமது. யாரும் வெளிப்படையாக எந்தக் காரியங்களையும் செய்துவிட முடியாது. வரும் வழியில் தன் தம்பியை இழந்ததால் மிகுந்த சோகத்துடனேயே இருக்கிறாள்.  
Sophie Nelisse
புதுத்தந்தை ஒரு வழியாக அவளிடம் நெருங்கிவிட புதுத்தாய் கொஞ்சம் கண்டிப்பானவராக நடந்து கொள்வது அவளுக்குப் பிடிக்கவில்லை. அப்பாவுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை. அம்மா பக்கத்து வீட்டுத்துணிகளை துவைத்து தேய்த்து தருபவள்.

பக்கத்து வீட்டுப்பையன் அவளிடம் நண்பனாக தீவிர முயற்சியெடுக்கிறான். புத்தகங்கள் மேல் அதிக விருப்பமுள்ள பெண்ணுக்கு ஹிட்லரால் புத்தகங்கள் தடைசெய்யப்படுகின்றன. குவியலாக வைத்து கொளுத்தப்பட்ட புத்தகங்களில் யாருக்கும் தெரியாமல் ஒரு புத்தகத்தை மறைத்து எடுக்கும்போது அந்த ஊரிலுள்ள ஒரு சீமாட்டி பார்த்து விடுகிறாள். அவள் வீட்டுக்கு ஒரு நாள் லீசல் அயர்ன் செய்த துணிகளை எடுத்துச்செல்லும்போது, லீசலை அழைத்து சென்று, தன் கணவரின் பெரிய  நூலகத்தைக் காட்டி , அவளை அங்கு வரும்போதெல்லாம் படிக்க அனுமதிக்கிறாள். ஒரு கட்டத்தில் கணவருக்குத் தெரிய வர. அவர் தம் மனைவியைக் கண்டித்து, பெண்ணை இனிமேல வரவிடாமல் தடுத்துவிடுகிறார்.  ஆனால் அவள் யாருக்கும் தெரியாமல் ஜன்னல் வழியாக அடிக்கடி   வந்து புத்தகங்களை படிக்கிறாள்.

இதற்கிடையில் ஒரு கட்டத்தில் லீசலின்  (Liesel Meminger) வளர்ப்புத்தந்தைக்கு பெரும் உதவி செய்த ஒரு யூதரின் மகனுக்கு உதவ வேண்டிய கட்டாயம் நேர்கிறது. உயிருக்குப்போராடும் நிலையில் வந்து சேர்ந்த அவனை இவர்கள் மூவரும் மறைத்து வைத்துக் காப்பாற்றுகிறார்கள். மறைத்து வைத்த தம் புத்தகங்களை அவனுக்கு வாசித்துக் காண்பிப்பதின் மூலம், அவள்மேல்  அவனுக்கு ஒரு  சகோதர  அன்பு ஏற்படுகிறது. ஆனால் சூழ்நிலை காரணமாக அவன் வெளியேற நேர்கிறது. அப்போது அப்பாவை கட்டாயப்படுத்தி ராணுவத்திற்கு அழைத்துப்போய் விடுகின்றனர். நல்ல வேளை சில மாதங்களுக்குப் பின் உயிரோடு திரும்ப வருகிறார்.
அதன்பின் உலகப்போர் கடுமையாகப்பரவ பெண்ணின் கிராமத்தில் குண்டு மழை பொழிகிறது. தன் வளர்ப்புத்தந்தை, தாய் மற்றும் தன் பக்கத்து வீட்டு நண்பனையும் அதில் இழந்துபோகும் அவள் முற்றிலும் தனிமையாக்கப்படுகிறாள். இதற்கிடையில் போரில் தோற்ற ஹிட்லர் தற்கொலை செய்து கொள்வதால் நாடு ஹிட்லரின் பிடியிலிருந்து விடுபடுகிறது.  
சிறிது நாட்களில் ஊரைவிட்டுப்போன யூதன் திரும்பிவருகிறான். அந்தச் சிறுபெண்ணை தன்னிடம் ஏற்றுக்கொள்கிறான். அதோடு படம் முடிகிறது.
இயல்பான நடிப்பில் ஒவ்வொருவரும் பின்னிப் பெடலெடுக்கிறார்கள். மிகையான நடிப்பு, மிகையான மேக்கப், மிகையான வசனங்கள், திணிக்கப்பட்ட காட்சிகள் என்று எதுவுமில்லாமல் சுவாரஸ்யமாய் நகரும் காட்சிகள் அபாரம்.
இதைப்போன்ற   படங்களை பார்க்கும்போது தமிழ் சினிமா யதார்த்தத்தை விட்டு இன்னும் தொலைதூரத்தில் தான் இருக்கிறது என்றே தோன்றுகிறது.
19மில்லியன் டாலர் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப்படத்தின் மொத்த வசூல் 77 மில்லியன் டாலர். 
John Williams 
ஆஸ்கர் விருது பெற்ற ஜான்வில்லியம்சின் இசை, ஒரு தென்றல் போல தழுவுகிறது. இந்தப்படத்திற்கும் அக்காடெமி, கோல்டன் குளோப் மற்றும் BAFTA ஆகிய நாமினேஷன்ஸ் கிடைத்தது. ஜான் வில்லியம்ஸ் அதிகமான ஸ்டீபன் ஸ்பீர்பெர்க் படங்களுக்கு இசையமைத்தவர்.

லீசலாக நடித்த சோஃபி நெலிசி (Sophie Nelisse) அவருடைய பிரமாதமான நடிப்பிற்காக கீழ்க்கண்ட இரண்டு விருதுகளைப் பெற்றார். இவர் கனடாவைச் சேர்ந்தவர்.
1) Hollywood Film Festival Spotlight Award.
2) The Satellite Newcomer Award
3) Phoenix Film Critics Award
Geoffrey Rush
தந்தையாக நடித்த ஜியாப்ஃரி ரஷ் (Geoffrey Rush) பெயர்  'ரஷ்' என்றிருந்தாலும், மிக நிதானமாக நடித்து பல நாமினேஷன்ஸ் பெற்றார்.


சந்தர்ப்பம் கிடைத்தால் பார்த்து மகிழுங்கள்.

அறிவிப்பு:
நண்பர் இசையமைப்பாளர் இரா. பிரபாகர் அவர்களும் அவர் மனைவியும் மதுரையிலிருந்து வந்திருப்பதால்   அடுத்த வாரம் , நம்ம ப்ளாகுக்கு விடுமுறை.

6 comments:

 1. புக் தீஃப் பற்றிய தகவல்களுக்கு நன்றி. இது வரை இப்படம்/புத்தகம் பற்றி கேள்விப்பட்டதில்லை.

  விடுமுறை இனிமையாகட்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வெங்கட் நாகராஜ்.

   Delete
 2. Replies
  1. தங்கள் வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி, திண்டுக்கல் தனபாலன்.

   Delete
 3. ஆல்பி,
  சமீபத்தில் எனக்கு மிகவும் பிடித்த படம் இது. அபாரமான படம். அதிலும் Sophie Nelisse யின் நடிப்பை வியக்காமல் இருக்கவே முடியாது. கதையை அப்படியே சொல்லிவிட்டீர்களே? இது நியாயமா?

  ReplyDelete
  Replies
  1. கதையை அப்படியே சொன்னது நியாயமில்லைதான் காரிகன்.
   அடுத்த முறை தவறை திருத்திக்கொள்கிறேன்.தங்கள் வருகைக்கு நன்றி,

   Delete