Thursday, May 15, 2014

நாயும் பேயும் !!!!!!!!!

Add caption
நாய்களைக் கண்டால் எனக்கு ரொம்பப் பயம். ஆனால் என்னைக்கண்டாலும் நாய்களுக்குப் பயமா? என்று தெரியவில்லை. என்னைப் பார்த்ததும் குலைக்க ரம்பிச்சிருதுக. தேவதானப்பட்டியில் தெருநாய்கள் பலதடவை துரத்தியிருக்கு, ஆனா நல்லவேளை ஒரு தடவை கூட கடி வாங்கல. ஒரு தடவை நாய் துரத்தி தெருத் தெருவா ஓடி ரொம்பதூரம் போய் காணாமப் போயிட்டேன்.

 இந்தப்பிரச்சனை நியூயார்க் வந்தும் ஓயல. என் பக்கத்து வீட்டுல ஒரு வயதான ஆப்பிரிக்க சகோதரரும், கொஞ்சம் இருங்கள், வயதானவர் எப்படி எனக்கு சகோதரரா இருக்க முடியும்?. வயதான ஆப்பிரிக்கத் தாத்தாவும் அவர் நாயும் வசித்து வருகிறார்கள். இருவர் மூஞ்சியும் ஒரே மாதிரி இருக்கும். இருவருக்குமே என்னைப் பிடிக்காது. ஏன்னு தெரியல. ஆப்பிரிக்கத் தெருவுல தொடர்ந்து இந்தியர்கள் குடியேறுவது பிடிக்கலேன்னு நினைக்கிறேன்.   

அவர் ஓய்வு பெற்ற போலிஸ் அதிகாரின்னு சிலரும், ஓய்வு பெற்ற செக்யூரிட்டி கார்டு என்று பலரும் சொல்றாங்க. உண்மை தெரியல. எது எப்படியோ அவர் பக்கத்துல இருக்கிறது கொஞ்சம் பாதுகாப்பு தான்.  ஏன்னா தெருவில யார் வந்தாலும் என்ன ஏதுன்னு விசாரிப்பார்.
My NY house

என்னோட டிரைவ் வே பக்கத்தில் இடுப்பளவு வேலியின் அந்தப்புறம் அவங்க வீடு. நாய் இருந்தா அந்தப்பக்கம் போக மாட்டேன். அது இருக்கிற உயரத்திற்கு வேலியின் மேல் கொஞ்சம் எட்டிப்பார்த்தா போதும், நேரா என் அது மூஞ்சி என் மூஞ்சிகிட்டே வந்துரும்.

இங்கு கார் எல்லாம் லெஃப்ட் ஹேன்ட் டிரைவ்னால, டிரைவர் பக்க டோர்  அவர்கள் வேலி பக்கம் இருக்கும்.   சில சமயம் நாய் உள்ளே போற வரைக்கும் காரை எடுக்க முடியாம அவஸ்தைப்பட்டிருக்கிறேன்.
கறுகறுன்னு கொஞ்சம் சடைபோட்டு, நீள நாக்கைத் தொங்கப்போட்டு இழைத்துக் கொண்டே தாடையோரப் பற்களைக் காட்டும்.எந்த டங் கிளீனர் யூஸ் பண்ணுதுன்னு தெரியல, நாக்கு எப்பவும் சுத்தமா இருக்கும்.

ஒரு தடவை ஒரு  புல்தகத்துல படிச்சேன். நாய்க்கு பேய்களை அடையாளம் தெரியும்னு. பேயைப் பார்த்ததும் குலைக்குமாம். இதைப்படிச்சதும் எனக்கு ஒரே சந்தேகமாய்ப் போயிருச்சு. அப்புறம் எதுக்கு என்னைப் பார்த்து குலைக்குதுன்னு. தம்பித்தேட்டம் ஹாஸ்டல்ல படிக்கும்போது, ராத்திரி ஸ்டடி நடக்கும்போது நாங்க நாய் ஆராய்ச்சி பண்ணுவோம். அதுல ஆறுமுகம் இருக்கானே அவன் எக்ஸ்பெர்ட். குலைக்கிற சத்தத்தைக் கேட்டு சொல்லிருவான் எதுக்கு குலைக்குதுன்னு. 

உஊ உஊ உ ஊன்னு குலைத்தா, அதுக்கு பிடிக்காத யாரோ அல்லது திருடன் வாரான்னு சொல்வான்.
உக்கு உக்கு உக்குன்னு குலைச்சா அதுக்குப் பசியெடுக்குதுன்னு சொல்வான்
ஊ ஊ  ஊன்ணு நீளமா ஊளையிட்டா, யாரோ சாகப்போறாங்கன்னு சொல்வான்.
உ... உ... உ.. ன்னு இடைவெளிவிட்டு சத்தமில்லாம அடித் தொண்டையில் கூவினா காதலியக் கூப்பிடுதுன்னு சொல்வான்.
உ உ உ உ ன்னு இடைவெளி விடாம குலைச்சதுன்னா, ஏதோ பேய் நடமாடுதுன்னு சொல்வான்.
கேட்க கேட்க ஆச்சரியமாயிருக்கும்.பேயைப்பார்த்தா குலைக்கற சத்தம்னு அவன் சொன்னா, அவனுக்குப்பக்கத்துல போய் உட்கார்ந்து, அவன் போர்வைக்குள்ள முண்டி உள்ளே போயிருவேன்.

ஒரு தடவை அந்த சமயத்தில் அங்கு வந்த வார்டன் அதப்பாத்து தப்பா எடுத்துக்கிட்டாரு. ஆனா ஒண்ணும் கேக்கல, நானும் சொல்லலை. அவரை எப்பனாச்சும் பாத்தா சொல்லனும், நான் அப்படிப்பட்டவன் இல்லைன்னு.

இந்த பக்கத்துவீட்டு நாய் என்னைப்பாத்து குலைக்கறது, ஆறுமுகம் சொன்ன எதுலயும் அடங்கல. ஆனா கொஞ்சம் கொஞ்சம் பேயைப் பாத்து குலைக்கற மாதிரி தெரியுது.

ஒருவேளை எனக்குத் தெரியாம என்ட்ட பேய் எதனாச்சும் இருக்குமோ? எல்லார் மனசிலும் good & Evil ரெண்டுமே இருக்குன்னு தெரியும். அதுனால என்ட்ட இருக்கிற Evil ஐ பாத்து குலைக்குதோ. 

ஏன் என்ன காரணம் எதுக்காக என்னைப்பார்த்து ஆக்ரோஷமா குலைக்குதுன்னு யோசிச்சு யோசிச்சு மண்டையைப் பிச்சுக்கலாம் போல இருக்கு.
ஆறுமுகம் இப்ப எங்கிருக்கான்னு தெரியல. யாராவது காரணம் தெரிஞ்சா சொல்லுங்களேன், வீடு வேற என் சொந்த வீடு. இந்த நாய்க்காக வீட்டை மாத்த முடியாது.
"ஏலேய் சேகரு"?
"என்னடா மகேந்திரா"
"ஏண்டா இதுக்குப்போய் இப்படி புலம்புற ? "
"இல்லடா எனக்கு ஒரே ஆத்திரம் ஆத்திரமா வருது"
"அட லூசு, இது ரொம்ப சிம்பிள்றா"
"சரி நீதான் சொல்லேன்"
"நீ சொல்லு, நாய்க்கு எது ரொம்ப பிடிக்கும்"
"பொரையும் பிஸ்கட்டும்"
"போடா இவனே, எதுறா ரொம்பப்பிடிக்கும்"
தயிர்சோறு பால்சோறு, கறி"
"இப்பதான் நெருங்கி வர்ற, கறியில் எது ரொம்பப் பிடிக்கும்"
"ஆமா ஆமா எலும்பு  எலும்புதான் நாய்க்கு ரொம்பப் பிடிக்கும்"
"இப்ப விளங்குதா உன்னைப் பார்த்து அந்த நாய் ன் குலைக்குதுன்னு" .


....        ...

6 comments:

  1. ஹா ஹா, செம அனுபவம் சார்... இனி அந்த நாய்க்கு எலும்பு வாங்கிப் போடுங்க... ஒண்ணு அதுக்கு உங்களை ரொம்ப பிடிச்சுப்போகும். இல்லேன்னா, பக்கத்து வீட்டுக்காரர் அதை உங்க வீட்டுப்பக்கம் வரவிடமாட்டார்...

    ReplyDelete
    Replies
    1. வேற எலும்பை கேட்டா சந்தோஷமா போட்டிரலாமே.
      அது எலும்பு மாறி இருக்கிற எனக்கல்லவா குறி வைக்குது .

      Delete
  2. ஹா... ஹா... ரொம்பவே மண்டையைப் பிச்சுக்கிட்டீங்க...

    ReplyDelete
    Replies
    1. இன்னைக்கி காலையும் அதே கதைதான் திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  3. ஆஹா.... நல்ல எலும்பு கிடைக்கும்னு தான் ஆர்வத்தோட குலைக்குதா.....

    ReplyDelete
    Replies
    1. .என்ன வெங்கட் , என் எலும்பு நல்ல எலும்புன்னு நாய்க்கு யார் சொன்னது ?

      Delete