Monday, May 19, 2014

இஸ்தான்புல்லில் பரதேசி -பகுதி 2.ஓரமான சீட்டும் ஈரமான பேன்ட்டும் !!!!!!

இயற்கையின் அழைப்பு (Natures call) வந்ததும், "எக்ஸ்கியூஸ் மீ", என்று சொல்லி எழுந்தேன். "நோ நோ, சிட்டவுன்", என்று ஹோஸ்டஸ் சொன்னாள். "அட முட்டாளே கீழே  விடுவாய்", என்ற வசவு அந்த நோ நோவில் ஒளிந்திருந்தது. எமர்ஜென்சி லைட் எரிந்து கொண்டிருந்தது. எனக்கும் எமர்ஜென்சிதான் என்று எப்படிச் சொல்வது என்று தவித்துக் கொண்டிருக்கும்போது, கேப்டனின் அறிவிப்பு வந்தது. விமானம் கடினமான சூழ்நிலையில் இருப்பதால் (Turbulence weather) அவரவர் இருக்கையில் அமர்ந்து சீட்பெல்ட்டை போட்டுக் கொள்ளச் சொல்லி.

விமானம் பயங்கரமாக அதிர்ந்து தடதடக்க, என் நெஞ்சு படபடத்து, என் இதயம், தொண்டைக்கு வந்தது போலத் தெரிந்தது. இருமலும் வந்தது. பாத்ரூமில் நம்பர் 1 அவசரமாக போக காத்திருக்கும்போது,  இருமுவது எத்தனை கஷ்டம்/ஆபத்து  என்பதை அனுபவித்தவர்கள்தான்   சொல்ல முடியும் .
காணாமல் போன மலேசிய விமானம் வேற ஞாபகத்தில் வந்து தொலைத்தது. அதோடு மறந்து போன இயேசு நாதர் ஞாபகத்துக்கு வந்தார். என் மனைவி பிள்ளைகளின் முகங்கள் வந்து வந்து போயின. இந்த சேப்ஃடி இன்ஸ்ட்க்க்ஷன்ஸ் வேற  பார்க்கல. இதற்கிடையில் ஆடின  தண்ணி கப் தவறி பேன்டில் விழுந்து கொட்டி நனைந்துவிட்டது.   

ஒரு பதினைந்து நிமிடங்கள் உலு உலு என்று உலுக்கியெடுத்துவிட்டு விமானம் சரியானது. எனக்கு வேர்த்துக் கொட்டியிருந்தது. அதே அப்சரஸ்  ஒண்ணுமே நடக்காத மாதிரி நளின நடையில் வந்து மெனு கார்டுகளை கொடுத்து புன்னகைத்தாள். "இப்போது பாத்ரூம் செல்லலாமா?”, என்று கேட்டேன். "ஷ்யூர்", என்றாள். "அப்பாடா", என்று எழுந்தேன். என் பேண்ட் அந்த இடத்தில்  நனைந்திருந்ததைப் பார்த்து, அவள் சந்தேகமாய்ப் பார்த்தாள். "நோ நோ ஆடிய ஆட்டத்தில் தண்ணீர் கொட்டிவிட்டது", என்றேன். சந்தேகம் தீராமலேயே நகர்ந்து சென்றுவிட்டாள். அதன்பின் எனக்கே ஒரு சந்தேகம் வந்துவிட்டது, ஒரு வேளை ??????????.
சரி விடு, இதயெல்லாம் புரூவ் பண்ணமுடியாதுன்னு நினத்து ரெஸ்ட் ரூமுக்கு சென்றேன். அதற்குள் பலபேர் என்னை மாதிரி எழுந்து வர, பெரிய லைன் அங்கு உருவாகியது. நல்ல வேளை நான் தான் முதலில். "ரெஸ்ட் ரூமில்", ஆக்குபைட்" என்று தெரிந்தது. சிறிது நேரத்தில் உள்ளே கொஞ்சம் வித்தியாச சப்தங்கள் கேட்டன. இப்பதான் தடதடப்பு குறைஞ்சு போச்சே, இதென்ன ரெஸ்ட் ரூமின் உள்ளே டப்பாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நம்ம ஊர் போல தட்டிக்கொட்டி? சீய் சும்மாரு விவஸ்தையில்லை?.
லைன் நீளமாகிக் கொண்டிருக்க, உள்ளே போன அவளோ அவனோ வெளியே வரவில்லை. பொறுமையை இழந்த என் பின்னாலிருந்து ஒரு வஸ்தாது, ரெஸ்ட் ரூம் கதவை எட்டித் தட்டினார். என்னால் தட்டமுடியாது, ஏன்னா ரெண்டு கையிலும்  பேண்டின் ஈரத்தை மறைத்துக் கொண்டிருந்தேன்.
எனக்கு ஒரு சந்தேகம், உள்ளே ரெண்டு பேர் இருப்பது போல் தெரியுது. கற்பனை விரிந்ததில் ஒருவேளை ஒரு ஆணும் பெண்ணும், அல்லது இரண்டு ஆண்கள் அல்லது இரண்டு பெண்கள். இந்தக் கற்பனைக்கு அளவேயில்லை என்று அதட்டிவிட்டு நிமிர்ந்து பார்த்தால் வெளியே வந்தது இரண்டு ஆண்கள்.
ஏய் நிறுத்துங்க நிறுத்துங்க, நீங்க நினைப்பது போலில்லை. ஒரு அப்பாவும் அவரின் சிறு பையனும் வெளியே வந்தார்கள். அதன் பின்னர் நான் உள்ளே போய்விட்டு வந்தேன். உஷ் அப்பாடா என்ன ஒரு விடுதலை. இதனால் தான், நான் நிறைய தண்ணீர் குடிப்பதில்லை, அடிக்கடி வந்து அவஸ்தையைக் கொடுக்கும்.
வந்து மிச்சப் படத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். மெனு கார்டில் இருந்த ஐட்டங்களின் பேர் ஒன்னும் புரியலை.

வேறொரு பெண் வந்து," என்ன மீல் வேண்டும்", எனக்கேட்ட போது நான் சேஃபாக வெஜிடேரியன் மீல்ஸ் என்றேன். "ஹீண்டு மீல்?" என்றாள் நானும் ஏதோ ஞாபகத்தில் "இல்லை கிறிஸ்டியன் மீல்" என்று சொல்லி நாக்கைக் கடித்துவிட்டு, ஆமாம், என்றேன். வெஜிடேரியன் சாப்பாட்டைத்தான் விமானங்களில் ஹிண்டு மீல் என்கிறார்கள். நினைத்தால் சிரிப்பு வந்தது. ஒரு முஸ்லீம் நாட்டுக்குச் செல்லும் ஃபிளைட்டில் ஒரு கிறிஸ்தவன் ஹிண்டு மீலைச் சாப்பிடுகிறான். சாப்பாட்டுக்குப்பின் "பேசாம தூங்குங்க” என்று சொல்வது போல், எல்லா லைட்டையும் ஆஃப் செய்து விட்டார்கள்.
எப்போது அசந்தேன் என்று தெரியவில்லை. விமானம் இறங்கும் அறிவிப்பு வந்தது. இன்னும் அரை மணி நேரத்தில் இஸ்தான் புலில் விமானம் தரையிரங்கும் என்றார்கள். மீண்டும் அழகாக வெட்டிய பழங்களுடன் ஒரு சிற்றுண்டி வந்தது. கச்சிதமாக  தரையிறங்கிய விமானத்துக்கு, பயணிகள் அனைவரும் கைதட்டி தம் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். ஏப்ரல் 25, 2014 , மதியம் 12 மணியளவில் இறங்கியது. நியூயார்க்குக்கும் இதற்கும் 7 மணி நேரம் வித்தியாசம் .
இஸ்தான்புல் "ஆட்டடுர்க் ஹவில் மணி" (Ataturk Havilmani) ஏர்போர்ட்டில் காலை வைத்தேன். யாரிந்த ஹவில்மணி என்று பக்கத்தில் கேட்ட போது அவர்களுக்குத் தெரியவில்லை. சரி விடு நம்மூர் கவுண்டமணி போல இங்கு ஒரு ஹவில்மணி என்று நினைத்துக் கொண்டு இமிக்ரேஷன் பக்கம் சென்றேன். 
ஏராளமானவர் லைனில் இருந்தனர். ஏற்கனவே ஆன்லைனில் விசா வாங்கியிருந்தேன் என்பதால் ஓரிறு கேள்விகளுடன், "வெல்கம் டு இஸ்தான்புல்", என்று சொல்லி பாஸ்போர்ட்டில் ஒரு சாப்பா குத்தி அனுப்பினார்கள்.
லக்கேஜை பொறுக்கிக்கொண்டு முன்பகுதிக்கு வந்தேன். "ஹேன்ஸ் ஹாஸ்டல்" போகவேண்டும் என்று ஒரு கார் கம்பெனியில் கேட்டேன், 110 லிரா என்றான். அதிகம் என்று நினைத்து இன்னொரு இடத்தில் கேட்டேன் 70 லிரா ஆகும் என்றான். நேராக வெளியே வந்தால், நியூயார்க் போலவே டாக்சி ஸ்டாண்ட் இருந்தது. வரவர ஒவ்வொருவராய் ஏற்றிவிட்டார்கள். ஃபியட் காரில் TAKSI என்று எழுதி வந்த வண்டியில் ஏறி உட்கார்ந்தேன். அவன் கேட்டது ஒன்றும் புரியாமல், ஃபைலை எடுத்து அட்ரஸைக் காண்பித்தேன். ப்ச் என்று அலுத்துக் கொண்டான். பக்கம் என்பதாலோ, என்னவோ தெரியவில்லை. ஆனால் மீட்டர் போட்டான்.
பத்து நிமிடத்தில் ஹோட்டல் வந்துவிட்டது. 12.50  என்று காண்பித்தது. 20 லிராவை எடுத்துக் கொடுத்தேன். மீதம் சில்லறையை எடுக்கப்போன போது தடுத்து மீதியை வைத்துக் கொள்ளச் சொன்னேன். அதன்பின்தான் அவன் நார்மலுக்கு வந்து சிரித்தான். போனால் போகிறது ,டூர் கம்பெனியில் 100 லிரா அல்லவா கேட்டார்கள். 20 லிரா என்பது 10 டாலருக்குச் சமம்.
ரூமில் போய் ஒரு குளியலைப்போட்டு உடைமாற்றி வெளியே வந்தேன். மாலை மணி நான்கு. பக்கத்தில் ஒரு  மால் இருந்ததாகச் சொன்னாள் ரிஷப்ஷன் பெண். ஏறியும் இறங்கியும் போன தெருக்களில் போய் "Star city" என்ற மாலுக்குச் சென்றேன். US போலவே மிகப்பெரிய மால். US-ன் எல்லா பிராண்டு கடைகளும் இருந்தன.


சும்மா விண்டோ ஷாப்பிங் செய்துவிட்டு ஒரு சாண்ட்விச்சை சாப்பிட்டு முடித்து படுக்கச் சென்றேன். இஸ்தான்புல்லில் இருப்பதை  நம்ப முடியவில்லை. அடுத்த நாள் என்னவெல்லாம் அதிசயங்கள் காத்திருக்கிறதோ?

 தொடரும் >>>>>>>>>>>

அறிவிப்பு:
நண்பர் இசையமைப்பாளர் இரா. பிரபாகர் அவர்களும் அவர் மனைவியும் மதுரையிலிருந்து வந்திருப்பதால்   அடுத்த வாரம் , நம்ம ப்ளாகுக்கு விடுமுறை. இஸ்தான்புல்  ஜூனில் தொடரும்.
.

7 comments:

  1. //ஆடின தண்ணி கப் தவறி பேன்டில் விழுந்து கொட்டி நனைந்துவிட்டது. // நம்பிட்டோம் நம்பிட்டோம்ல

    ReplyDelete
    Replies
    1. எனக்கே ஒரு சந்தேகம்தான்

      Delete
  2. பாத்ரூம் போன விஷயமும் பாத்ரூமுக்குப் போன விஷயமும் சூப்பரா சொன்னீங்க.... ஒரு மரண பயத்தையும் அனுபவச்சிட்டீங்க...

    அட, அங்கயும் நம்ம ஊர் ஆட்டோக்காரங்க மாதிரி ஆட்கள் இருக்காங்களே....

    ReplyDelete
    Replies
    1. எந்த ஊருக்கு போனாலும் கொஞ்சம் உஷாராவே இருக்கணும் . அதான் படிப்பினை ஸ்கூல் பையன்.

      Delete
  3. படிக்கும்போது சுவையாக இருந்தாலும், அந்த நேர அவஸ்தை ரொம்பவே கஷ்டம்!....

    தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க வெங்கட் , தண்ணீர் குடிக்கவே இப்பெல்லாம் பயமா இருக்கு .
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  4. போட்ட பின்னூட்டம் என்ன ஆச்சு??


    ReplyDelete