படித்ததில் பிடித்தது.
டெக்ஸ் வில்லரின் தீபாவளி ஸ்பெஷல்
மரண தேசம் மெக்ஸிகோ
சன்ஷைன் வைப்ரரி - சிவகாசி.
என்னுடைய
சிறுவயது கதா நாயகர்களான, இரும்புக்கை மாயாவி,
லாரன்ஸ் & டேவிட், ஜானி
- நீரோ வரிசையில் அடுத்து வருபவர் டெக்ஸ் வில்லர். ஏனோ அன்று முதல் இன்று வரை,
வேறு எந்தச் சினிமா கதாநாயகர்களும் என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை.
வைல்ட் வெஸ்ட் என்று சொல்லக்கூடிய அமெரிக்காவின்
மேற்குப்பகுதியில் வாழ்ந்த செவ்விந்தியர்கள், கெளபாய்
ஆகியோர் உலவிய பகுதியின் அடிப்படையில் அந்தக்கால கட்டத்திலேயே வாழ்ந்த விதத்தில்
கற்பனையாக அமைக்கப்பட்ட ஒரு கதா நாயகன்தான் டெக்ஸ் வில்லர். நவஜோ (ஆங்கிலத்தில்
நவஹோ-Navajo) என்று அழைக்கப்பட்ட செவ்விந்தியர்களின் தலைவரான
'இரவுக்கழுகார்' என்று சொல்லப்படும்
திறமை வாய்ந்த டெக்சஸ் ரேஞ்சர்தான் டெக்ஸ் வில்லர். இவரது கூட்டாளி சற்றே வயதான
கிட் கார்சன். இவர்களுடைய சாகசங்கள் அன்று தொடங்கி இன்று வரை ஐரோப்பாவின்
புகழ்பெற்ற காமிக்ஸ் கதைகள்.
டெக்ஸ் வில்லர்” |
'டெக்ஸ் வில்லர்” என்ற கதாபாத்திரத்தைப் படைத்தவர் இத்தாலியின் 'மிலன் ' நகரில் 1908ல்
பிறந்தவரான ஜியோவனி லுயிஜி பானெலி ( Giovanni Luigi Bonelli)
என்பவர். 1937ல் காமிக்ஸ் தொடர்களை ஆரம்பித்த இவர் 1948ல் கெளபாய் சார்ந்த காமிக்ஸ் கதைகளை படைக்க எண்ணிய சமயத்தில் உருவானதுதான்
டெக்ஸ் வில்லர் பாத்திரம். இவர் 2001ல் இறந்து போனாலும் இவரைத் தொடர்ந்து வந்த பல
எழுத்தாளர் அதன் உயிர்ப்பை இன்றுவரை சுவாரஷ்யமாக வைத்திருக்கிறார்கள். டெக்ஸ் வில்லர்
உருவானவுடனே இது மற்ற கதாநாயகர்களை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பெற்றது.
Giovanni Luigi Bonelli |
பானெலியின்
கதைகளுக்கு ஓவியராக அமைந்தவர் 1917ல் பிறந்த
அரேலியோ காலெப்பினி. டெக்ஸ் வில்லரின் இதழ் 1 முதல் 400 வரை அனைத்து அட்டைப் படங்களையும் இவர் தான் வரைந்ததாகவும் 1994ல் இவர் மரணமடையும் வரை இவரே டெக்ஸ் வில்லருக்கு ஓவியராக
இருந்திருக்கிறார். இன்றும் இத்தாலியில் பானெலி குழுமத்தின் மூலமாக நம்பர் 1 ஆகத் திகழ்ந்து சுமார் 2 லட்சம் பிரதிகள்
விற்கின்றன என்று சொல்கிறார் பானெலி நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளர் டேவிட்.
இவர் நிறுவனரின் பேரன். இதுதவிர ஃபின்லாந்த், நார்வே,
பிரேசில், ஸ்பெயின், துருக்கி,
பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி,
ரஷ்யா, ஹாலந்து ஆகிய பல நாடுகளில் அவரவர்
மொழிகளில் இது வெளிப்படுகிறது. (தகவல்கள் S.
விஜயன் -லயன் காமிக்ஸ்)
இந்த
வெளிநாட்டுக் கதா நாயகர்களுக்கு தமிழ் வடிவம் கொடுத்து மொழிபெயர்ப்பில் புதுமை
படைத்து தமிழகத்தில் வெளியிட்டவர்கள் முத்து காமிக்ஸ்,
லயன் காமிக்ஸ் குழுமத்தின் தந்தையின் வழியில் வந்த தனயனான விஜயன் அவர்கள். தன்னுடைய தனிப்பட்ட காமிக்ஸ் ஆர்வத்தினால்
இந்தக்குழுமத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார். உலகின் தலை சிறந்த காமிக்ஸ்களை
தமிழில் அறிமுகபடுத்தி எங்களையெல்லாம் லண்டனுக்கும் பாரிசுக்கும்
நியூயார்க்குக்கும் அழைத்து சென்றது இந்த நிறுவனம்தான். அந்தக் கதைகளில்
ஈர்க்கப்பட்டுத்தான் நான் உலகப் பயணம் செய்கிறேன். நியூயார்க்கில் வந்து வாழ்கிறேன். நியூயார்க்கிலிருந்து மதுரை சென்ற
போது சிலமுறை முத்து காமிக்ஸ் நிறுவனத்திற்குச் சென்று வந்திருக்கிறேன். ஒரு முறை
விஜயனைப் பார்க்கவும் எனக்கு வாய்ப்புக்கிட்டியது .
இந்தத் தீபாவளி மலர்
எந்தத் தீபாவளிக்கு வந்தது என்று எனக்கு ஞாபகமில்லை. ஆனால் இப்போதுதான்
படிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. இரண்டு நெடுங்கதைகள் இதில் உள்ளன.
ஒன்று மரணதேசம் மெக்சிகோ, இரண்டாவது நீதியின் நிழலில்.
மரணதேசம் மெக்சிகோ :
இந்த
டெக்ஸ் வில்லர் கதையை எழுதியவர் கிளாடியோ நிஸ்ஸி 1938ல் அல்ஜீரியாவில் 1981 முதல் பானெலி குழுமத்தில்
இணைந்த இவர் 1983 முதல் 225 டெக்ஸ்
கதைகளை எழுதியிருக்கிறார். CID ராபினை உருவாக்கியவரும்
இவரே. (தகவல் S .விஜயன்
)
Paradesi with Vijayan |
இந்தக்
கதையின் ஓவியர் மேன்ஃபிரட் சமர். 1933-ல்
ஸ்பெயினில் பிறந்த இவர் ஐரோப்பாவின் பல முன்னணி நிறுவனங்களில்
பணியாற்றியிருக்கிறார். டெக்ஸ் கதைகளுக்கு இவர் முதன் முதலில் வரைந்தது இந்தக்
கதைக்குத்தான்.
மெக்சிகோ
பார்டரில் கடத்தப்பட்ட குழந்தைகளை டெக்ஸ் வில்லரும் கிட் கார்சனும் எப்படிக்
கண்டுபிடித்து மீட்கின்றனர் என்பதுதான் கதை. கடினமான குதிரைப் பயணம்,
சாவின் விளிம்பில் எப்போதும் இருப்பது, திட்டமிட்ட
சாகசங்கள், மிகப்பெரிய கொடூரமான நிறுவனத்தை இருவராய்
நின்று வீழ்த்துவது என்று பரபரப்புக்கு
பஞ்சமில்லாத கதை. ஆரம்ப முதல் இறுதிவரை விறுவிறுப்பு சற்றுக்கூட குறையவில்லை.
நீதியின் நிழலில்:
இதனை
எழுதியவர் டி.ஆன்டோனியோ வரைந்தவர் ஃபிவிப்புச்சி. தான் சின்னவயதில் இருக்கும்போது
தங்கள் கிராமத்தில் நுழைந்த அமெரிக்கப்படை தங்கள் அன்னை,
தம்பி உட்பட மொத்த
கிராமத்தினரையும் கொன்று குவித்து விடுகிறார்கள். அந்த முழு தாக்குதலையும் வழிநடத்தியவன்
லாபார்ஜ் என்ற ஸ்கெனட் ஒருவன். இவன் நாய்களைப் பழக்கி மனிதர்களை குறிப்பாக
செவ்விந்தியர்களை வேட்டையாடுபவன். அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய ஒரு செவ்விந்தியன்
தான் வளர்ந்த பிறகும் தன் கிராமத்தலைவன் இட்ட கட்டளையை நிறைவேற்றி
தேடியலைந்து தன் நண்பனுடன் லாபார்ஜைக்
கொல்ல விளைகிறான். அவன் கண்டுபிடித்தானா? பழி வாங்கினானா,
இதில் வில்லர் எங்கே வருகிறார்? அடிபட்ட
கார்சன் உயிர்பிழைப்பாரா? என்று சென்றும் கெளபாய் திரில்லர்
இது.
வாங்கித்தான்
படித்துப் பாருங்களேன். காமிக்ஸ் பிரியர்களுக்கு இது களிப்பான விருந்து.
மற்றவர்கள் ஒருமுறை படித்தால் டெக்ஸ் வில்லருக்கு வாசகராய் விடுவீர்கள்.
பானெலி
குழுமம் வாழ்க, முத்து / லயன் காமிக்ஸ் குழுமம்
வாழ்க, உங்கள் பணி தொடரட்டும், சிறக்கட்டும்.
-முற்றும்.
நமக்கு என்னமோ இந்த வெஸ்டர்ன் கதைகளை படிப்பதை விட படம் பார்ப்பதில் தான் பிரியம். அதன் பின்னணி இசை ஒரு முக்கிய கரணம்.
ReplyDeleteநல்ல பதிவு.
காமிக்ஸ் படித்துப்பார் தம்பி, படிக்கும்போதே உன்னுடைய மனதில் கற்பனையில் எல்லா சத்தமும் இசையும் கேட்கும்.
Deleteபரதேசி ஆல்ஃபி அவர்களே, உங்களுக்கே உரிய பாணியில், காமிக்ஸ் கதைகளை விளக்காமல் விளக்கி ஆர்வத்தைத் தூண்டும் விதம் வர்ணித்திருக்கிறீர்கள்! படமும் அருமை! எமக்கும் காமிக்ஸ் படிக்க வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ந்து படிப்போம்!!!
ReplyDeleteநன்றி ரங்கா, எல்லாப்புத்தகங்களும் நான் படித்து முடித்தவுடன் உங்களிடம்தானே வந்து சேர்கின்றன. நம்முடைய நியூயார்க் தமிழ்ச்சங்க நூலகம் அமைவதை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
Deleteஅன்றும் இன்றும் என்றும், நமக்கு காமிக்கிஸ் கதைகள் ஒரு மகிழ்ச்சி.. உற்சாகம்.. :)
ReplyDeleteஇதில் ராணி காமிக்கிஸ் அடங்கும்.
ஆமாம் நண்பா , நன்றி
Deleteடெக்ஸ் கதைகள் அதிகம் படித்ததில்லை. படத்தைப் பார்த்தால் ஒன்றிரண்டு படித்திருக்கக் கூடும் என்று தோன்றுகிறது.
ReplyDeleteஉங்கள் ரசனை எனக்குத்தெரியும் , படித்துப்பாருங்கள் உங்களுக்குப்பிடிக்கும் ஸ்ரீராம்.
Deleteபடித்த மாதிரி ஞாபகம்...!
ReplyDeleteமீண்டும் படிக்கலாம் தனபாலன்
Deleteஎனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச காமிக்ஸ் பற்றிய பதிவு அருமை
ReplyDeleteநன்றி அன்பு
Delete