
வேர்களைத்தேடி
பகுதி –33
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.
ஸ்லூஸ் என்பது
என்னவென்றால் நீண்ட வாய்க்காலில் நீர் செல்லும்போது சாலை ஏதாவது குறிக்கிட்டால் அதனைத்தாண்டி
நீர் செல்வதற்கு பாதாள வாய்க்கால் அமைத்திருப்பார்கள். ஒருபுறம் நீர் திடீரென்று வேகம்
கூடி சுழன்று கீழிறிங்கி மறுபுறம் சுழன்று கொப்பளித்து வந்து வாய்க்காலில் தொடர்ந்து
செல்லும். இதில் வெளியே வரும் பகுதியில் சிறிது ஆழம் இருக்குமென்பதால் அதில் மேலிருந்து
கீழே குதித்து விளையாடுவார்கள். வேகமாக உள்ளே குதித்தாலும் நீர் வேகமாக சுழன்று மேலே
வருவதால் குதித்தவர்களை அப்படியே மேலே கொண்டுவந்து தள்ளிவிடும். எனவே இது உற்சாகம்
கொடுக்கும் விளையாட்டு. ஆனாலும் நீச்சல் தெரிய வேண்டும். மூச்சடக்கவும் வேண்டும். அதே
சமயம் நீர் உள்ளே போகும் வழியில் குதித்தால் உயிருக்கே ஆபத்தாக முடியும். பாதாளத்தில்
உள்ள அடர்ந்த பாசிகளில் போய் செருகிவிடும்.
உயிர் போகவும் அதிகபட்ச வாய்ப்பு உண்டு.
நானெல்லாம் இவற்றை
ஆர்வத்தோடு வேடிக்கை பார்ப்பதோடு சரி. எனக்குத்தான்
தண்ணீர் இருந்தால் நீச்சலடிக்கத் தெரியாதே(?)
அதோடு வாய்க்காலுக்கோ ஆற்றுக்கோ குளிக்கப்போனாலும் கையில் ஒரு மக்கை (Mug) எடுத்துப்
போகும் ஆள் நான்.

சரி டாம்டாம்
பாறை அல்லது டம்டம் பாறை வரும்போது அதனைப் பற்றித் தெரிந்த டிரைவர்கள் அங்கு இறங்கி
அங்கிருக்கும் பாறையையும் மரத்தையும் கும்பிட்டுவிட்டு திருநீறு குங்குமம் வைத்துவிட்டுத்தான்
நகர்வார்கள். ஏனென்றால் அந்த இடம் ஒரு ஹேர்பின் பெண்ட் என்பதனால் கட்டுப்பாட்டை இழந்த
எத்தனையோ வண்டிகள் அங்கிருந்து கீழ்நோக்கிப் பாய்ந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால்
அந்த இடத்தில் சுற்றுச்சுவர் எழுப்பட்டு இருக்கிறது. இருந்தாலும் சுற்றுச்சுவரை இடித்துக்கொண்டு
எத்தனையோ வாகனங்கள் கீழே விழுந்து உயிர்ச்சேதம் ஆகியிருக்கின்றன. அதனால் அங்கு பல ஆவிகள்
குடியிருக்கிறதாகவும், அவைகளைக் கும்பிட்டுக் கடக்கவில்லையென்றால், திரும்பி வரும்போது
தள்ளிவிட்டுவிடும் என்று ஒரு பயம் அங்கு நிலவுகிறது. அதோடு அந்தப்பாறையில் பழங்காலத்தில்
உயிரைப்பலி கொடுப்பார்கள் அல்லது நிறைய தண்டனைகள், கொலைகள் அங்கே நடந்திருக்கின்றன
என்றும் சொல்லுகிறார்கள்.
![]() |
அந்த இடத்திலிருந்து
கீழே விழுந்தால் உயிர் தப்புவது அரிதுதான். ஆண்டிற்கு ஓரிறு முறை விபத்து நடந்ததென
கேள்விப்படுவோம். இப்போது எப்படி என்று தெரிவில்லை.
எத்தனையோ சமயங்களில்
பஸ்கள் அங்கிருந்து உருண்டு விழுந்து நேரே மஞ்சாறு அணையில் விழுந்திருக்கின்றன. பக்கத்தில்
இருக்கும் மஞ்சளாறு ஊரில் வசிப்பவர்கள் வந்து
பலபேரைக் காப்பாற்றியிருக்கிறார்களாம். அதோடு ஒரு சிலர் இறந்தவர்களின் அல்லது காயம்பட்டவர்களை
காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று அவர்களின் ஆபரணங்கள் பொருட்கள் ஆகியவற்றை கவர்ந்து
சென்றதாகவும் கதைகள் இருக்கின்றன.
![]() |
Thanks to Dinakaran |
மஞ்சளாறின் மேலே
உள்ள மலைப்பகுதிகளில் அதிகமாக தேக்கு மரங்கள் இருப்பதால் இது வனத்துறையால் பாதுகாக்கப்பட்ட
பகுதி. எனக்குத் தெரிந்து சந்தன மரங்கள் இங்கு அதிகமில்லை. தேக்கு மரங்கள் தவிர தைல
மரங்கள் என்று சொல்லக்கூடிய யூக்கலிப்டஸ் மரங்கள் அதிகம் உண்டு. அந்தப்பக்கம் வாகனங்கள்
செல்லும்போது தைல வாசனை மூக்கைத்துளைக்கும்.
இந்த மலையில்
குரங்குகள், நரி, காட்டுப்பன்றி, மான்கள் காட்டெருமை, கழுதைப்புலி மற்றும் சிறுத்தைகள்
இருக்கின்றன. அவைகள் நீர் அருந்துவதற்கு அணைப்பக்கம் வரும். பெரும்பாலும் இரவு வேளைகளில்
வரும். கொடைக்கானல் மலையில் ஏறும்போதே அங்கே சுவர்களில் பலகுரங்குகள் அமர்ந்திருப்பதைப்
பார்க்கலாம்.
இந்த மலையில்
விளையும் தேக்கு மரங்கள் அதிகமாக கடததப்படுகின்றன. அதனை தடுத்து நிறுத்துவதற்கு வனத்துறையே
நான் சிறுவனாக இருந்தபோது புலிக்குட்டிகள் அல்லது சிறுத்தைக்குட்டிகளைவிட்டு ஊரில்
தண்டோரா போட்டது ஞாபகமிருக்கிறது.
மஞ்சளாறு அணை ஒரு சிறிய ஆனால் அழகான
அணை. அதனைச்சுற்றி ஒரு அழகிய பூங்காவும் அமைத்திருந்தார்கள். ஆனால் அப்போதே (1970களில்)
போதிய பராமரிப்பு இல்லாமல் பொம்மைகள் கைகளையும் கால்களையும் இழந்து காணப்படும். இப்போது
எப்படியென்று தெரியவில்லை. ஆனால் அணியின் மேலேறி நடந்தால் மிக ரம்மியமாக இருக்கும்.
ஒருபுறம் பரந்த வெளி. மறுபுறம் மாபெரும் நீர்த்தேக்கம். அதன் மறுபுறம் பசுமை சூழ்ந்த
ஆற்றில் மலைகள். கொஞ்சம் உற்றுப்பார்த்தால் மலைச்சாலை தெரியும். இன்னும் கொஞ்சம் உற்றுப்பார்த்தால்
அந்தச் சாலையில் எறும்பு ஊர்வது போல வாகனங்கள் செல்வது தெரியும். பின்புறம் தொலைவில்
தலையாறும் தெரியும். தேவதானப்பட்டி வழியாக பெரியகுளம் செல்லும் டவுன்பஸ்கள் மஞ்சளாரில்
இருந்து கிளம்புகின்றன. குறிப்பிட்ட இடைவெளியில் வந்து செல்லும். சாலை அப்போதெல்லாம்
படுமோசமாக இருக்கும். நாங்கள் நடந்தும் சென்றிருக்கிறோம். அப்படிச் செல்லும்போது சுவையான கோவைப்பழங்கள் கிடைக்கும்.
சாப்பிட்டால் வாயெல்லாம் சிவப்பாகிவிடும். முள்குத்தாமல் கவனமாக எடுக்க வேண்டும். முள்ளை
கவனிக்கத் தவறினாலும் வாய் சிவப்பாகிவிடும் ரத்தத்தால் .கத்தாழைப்பழங்கள்( Cactus
fruit) கேட்பாரின்றி இருக்கும்.
மஞ்சளாறில், பொதுப்பணித்துறையில்
வேலைபார்க்கும் இன்ஜினியர்கள் அலுவலர்களின் பிள்ளைகள் அங்கிருந்து காலை கிளம்பும் டவுன்பஸ்ஸில்
தேவதானப்பட்டிக்கு பள்ளிக்கு வருவார்கள். அவர்களுக்கு அங்கே குவார்ட்டர்ஸ் உண்டு.
அதுமட்டுமல்லாமல்
இலங்கையிலிருந்து வந்த அகதிகளுக்கும் அங்கே அரசு குடியிருப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
அங்கேயும் குடியிருந்து கொண்டு பல ஆண்டுகளாக இலங்கைத்தமிழர் வாழ்ந்து வருகிறார்கள்.
அவர்கள் தங்கள் ஊரில் எப்படியெல்லாம் வாழ்ந்தார்களோ ,இங்கு வந்து கஷ்டப்படுகிறார்கள்.
இந்தியா தமிழகம்
தவிர பிறநாடுகளான அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஃபிரான்சு, கனடா, இங்கிலாந்து, ஸ்விட்சர் லாந்து ஆகிய பல நாடுகளில் புலம்பெயர்ந்த
இலங்கைத்தமிழர்கள் பெரும் வசதி வாய்ப்புகளோடு சிறப்பாக வாழ்கிறார்கள். தமிழ்ச்சங்கங்கள்
போல அவர்களுக்கென தனி அமைப்புகளும் செயல்படுகின்றன.
வனத்திலிருந்து
தப்பி தேவதானப்பட்டி ஊருக்குள் வந்து வாழ்ந்து சாமியாகிப்போன ஒரு குரங்கைப் பற்றி அடுத்த
பகுதியில் சொல்கிறேன்.
- தொடரும்.
இப்போதும் மஞ்சள் ஆற்றுப்பகுதி செழிப்பாக இருக்கிறதா ? இருந்தால் என்னுடைய பட்டியலில் சேர்த்துவிடுகிறேன் சார்.
ReplyDeleteகண்டிப்பாய் பட்டியலில் சேர்க்கலாம் பாஸ்கர் .
Deleteஇங்குதான் ஈழ ஏதிலிகள் அவலமான வாழ்வு வாழ்கிறார்கள்.
ReplyDeleteநீங்கள் சொல்வது உண்மைதான் நண்பரே .
Deleteதகவல்கள் சுவாரசியம்...
ReplyDeleteசுவாரஸ்யமான தகவல்கள்.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம்.
Deleteநீச்சல் தெரியாமல் அவதிப் படுவோரில் நானும் ஒருவன். மஞ்சள் ஆறு பகுதி பற்றிய தகவல் சுவாரசியம் மிகுந்து இருந்தது.
ReplyDeleteமிக்க நன்றி முத்துச்சாமி .
Delete