
வேர்களைத்தேடி
பகுதி –31
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/10/blog-post_29.html
காமக்காள் திவசம் ( நன்றி தினமலர்)
பூசாரி நாயக்கர் பரம்பரையில் வந்த
கடைசி ஜமீந்தார் மனைவி காமக்காள் என்பவர் தனது ஒரே மகனான பொம்முலிங்கசாமி என்ற மகனுடன்
கோயிலுக்குள் இருக்கும் காமக்காள் அரண்மனை எனும் கட்டிடத்தில் வசித்து வந்தார். காமக்காள்
தன் பக்தியின் வலிமையால் அம்மனுடன் நேரடியாகப் பேசும் பேறு பெற்றாள். இரவில் தன் தாயார்
தனியாகச் சென்று வருவதில் சந்தேகமடைந்த மகன் தாயைக் கோபித்துக் கொண்டார். அவன் அம்மா
உண்மையைக் கூறிய நிலையிலும் நம்பாமல் தானும் அம்மனைக் காண வேண்டுமென்று பிடிவாதம் செய்தான்.
அன்றிரவு காமக்காள் மகனை அழைத்துக் கொண்டு சென்றார். காமாட்சியம்மனை நேரில் கண்ட அவன்
மண்டை வெடித்துச் சிதறி இறந்தான்.
![]() |
தன்
ஒரே மகன் தலை வெடித்து இறந்ததைக் கண்ட காமக்காள் அம்மனிடம், “ எனக்கு இருந்த ஒரு மகனையும்
எடுத்துக் கொண்டாயே. இனி நான் இறந்த பிறகு எனக்குச் செய்ய வேண்டிய திவசக் காரியங்களை யார் செய்வார்?” என வருந்திக் கேட்டாள். உடனே அம்மன்,
“ வருத்தமடையாதே, நீ இறந்த பின் நாயக்கர் சமுதாயத்தவரைக்
கொண்டே உனக்கு திவசமிடச் செய்கிறேன்” என்று வாக்களித்தாள். காமக்காள் தை மாதம் இரத
சப்தமியில் மரணமடைந்தாள்.
அம்மனின் வாக்குப்படி ராஜகம்பளம் நாயக்கர்கள் திவசமிட்டனர்.
காமக்காள் மற்றும் அவள் மகன் சமாதிகள் இங்கிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளன.
மகா சிவராத்திரி விழா
ஒவ்வொரு
ஆண்டும் தை மாத இரத சப்தமியில் கோயிலில் காமக்காள் திவசம் கொடுக்கப்படுகிறது. திவசம்
முடிந்த அன்றே கோயிலின் ஆண்டுத் திருவிழாவிற்கு முகூர்த்தக்கால் நடப்படுகிறது. மகா
சிவராத்திரியை முதல் தினமாகக் கொண்டு எட்டு நாட்கள் திருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு
வருகிறது. இந்தத் திருவிழா தேனி மாவட்டத்திலுள்ள கோயில்களில் கொண்டாடப்படும் திருவிழாக்களில்
முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இத்திருவிழாக் காலமான எட்டு நாட்களும் கோயிலுக்கு தனிப்
பேருந்து வசதிகள் செய்யப்படுகின்றன.
ஆடிப்பள்ளயம் திருவிழா
ஒவ்வொரு
ஆண்டும் ஆடித்திங்களில் முதல் மூன்று நாட்கள் ஆடிப்பள்ளயத் திருவிழா நடைபெறுகிறது.
இவ்விழாவில் ராஜகம்பளம் நாயக்கர்
சமுதாயத்தின் “தேவராட்டம்” நிகழ்வு சிறப்பாக இருக்கும். இது தவிர சித்திரை வருடப் பிறப்பு,
விஜயதசமி, கார்த்திகைத் திருநாள், தைப்பொங்கல் போன்ற பிற விழாக்காலங்களிலும் சிறப்பு
வழிபாடுகள் செய்யப்படுகின்றன. பிற நாட்களில் இந்தக் கோயிலில் தினசரி பூசைகள் நடைபெற்று
வருகின்றன.
சிறப்புகள்
·
கோயிலில் அடைத்த கதவிற்கு முன்பாகவே பூசை செய்யப்படுகிறது.
·
கோயிலின் குச்சுவீடு கலசம் (கர்ப்பகிருக கலசம்) தரிசனம் சிறப்பான ஒன்றாக
உள்ளது.
·
அம்மனுக்கு நைவேத்தியம் செய்யப்படும் தேங்காய் உடைக்கப்படுவதில்லை.
பழம் உரிக்கப்படுவதில்லை.
·
அன்ன நைவேத்தியம் செய்யப்படுவதில்லை.
·
கோயிலில் நெய்விளக்கு தீபம் மட்டுமே ஏற்றப்படுகிறது.
·
கோயிலில் விளக்குக்காகப் பக்தர்களிடம் காணிக்கையாகப் பெறப்படும் நெய்
இங்குள்ள மண்பானைகளில் ஊற்றி வைக்கப்படுகின்றன. இந்த நெய்யிற்கு எறும்பு, ஈ, வண்டு
என்று எதுவும் வருவதுமில்லை, மொய்ப்பதும் இல்லை.
·
திருவிழாக் காலத்தில் கோயிலில் அம்மனுக்குக் காணிக்கையாகச் செலுத்தப்படும்
நெய் சேகரிப்புக்காக சுமார் ஐம்பது மண்பானைகள் வைக்கப்படுகின்றன. இவையனைத்தும் எட்டு
நாட்கள் திருவிழாவில் நிரம்பி விடுகின்றன.
·
தேவதானப்பட்டியைச் சுற்றிலுமுள்ள சில கோயில்களுக்கு இங்கிருந்து நெய்
மற்றும் நைவேத்தியப் பொருட்கள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன.
·
வருடத்திற்கு ஒருமுறை கோயிலின் குச்சு வீடு கலசத்திற்குக் கூரை வேயப்படும்
போது ராஜகம்பளம் சாதியினர்
தங்கள் கண்களைத் துணியால் கட்டிக் கொண்டுதான் காமாட்சிப் புல்லால் கூரை வேய்கின்றனர்.
·
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் போன்றே இங்கும் பூசை மண்டபத்தின்
முன்பு கௌளி சின்னம் (பல்லியின் சின்னம்) பொறிக்கப்பட்டுள்ளது. இங்கும் கௌளி குறி கேட்டல்
முக்கியமான ஒன்றாக உள்ளது.
இத்தோடு காமாட்சியம்மன்
புராணம் முடிகிறது .அடுத்த பகுதியில் மஞ்சளாற்றைக்குறித்துப் பார்ப்போம்.
தொடரும்
நல்ல பகிர்வு. எழுத்தின் பல்வேறு பரிமாணங்களைத் தொடுவது மகிழ்ச்சி சார்!.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி பாஸ்கர்.
Deleteராஜகம்பளத்து நாயக்கர்களின் குலதெய்வமான மூங்கிலனை காமாட்சியம்மன் கோவில் தொடர்புடைய கதைகளை சுவையாகப் பகிர்ந்து வருகிறீர்கள். காமக்காள் கதையை சிறப்பாகச் சொல்லியுள்ளீர்கள். nanri
ReplyDelete