Thursday, April 5, 2018

பரதேசி சாப்பிட்ட கிழவி வெல்லம் !!!


வேர்களைத்தேடி பகுதி: 12

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post_27.html

            நண்பர்கள் தோட்டம் மட்டுமல்ல, யார் தோட்டத்துக்குப் போனாலும் பெரும்பாலும் என்னை அவர்களுக்குத் தெரியும். அப்படியே தெரியாவிட்டாலும் எங்கப்பா பேரைச் சொன்னால் போதும்.
          ஒரு நாள் நண்பன் சீனிவாசன் தோட்டத்துக்குச் சென்றிருந்தேன். நான் போகும் போது வயலுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்கள். ரெண்டு மாட்டு வண்டிகள் பூட்டி ஏற்றம் இறைக்க, தண்ணீர் சிறு வாய்க்கால்கள் மூலம் வரப்புகளினூடே பாய்ந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு புறம் தக்காளி பயிரிட்டிருந்தார்கள். சிவப்பும் பச்சையுமாக தக்காளிகள் காய்த்துத் தொங்கின. என்னை கூப்பிட்டுப் போய் நன்கு செடியில் பழுத்த  அழகிய சிவப்பு நிறத்தக்காளி  ஒன்றைப் பறித்து தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்த சிறு வாய்க்காலில் கழுவி விட்டு மேலே காம்புப் பகுதியில் ஓட்டை போட்டான். கல் உப்புக்களை ஒவ்வொன்றாக திணித்து, "அப்படியே சாப்பிடு சேகர்", என்றான். வாய் கொள்ளாத அளவுக்கு பெரிய சைஸில் இருந்த தக்காளிப் பழத்தை அப்படியே கடித்த போது அதன் சாறு என் மேலெல்லாம் ஆகிவிட்டது. ஆனால் அதன் இனிப்பும், புளிப்பும், உப்பும் சேர்ந்து ஆஹா என்ன சுவை. அதன் மறுபுறம் நாட்டுக் கத்திரிக்காய்கள் விளைந்திருந்தன.
                    பிறகு கிளம்பும் போது, "டீச்சர்ட்ட  கொடுப்பா" என்று சொல்லி ஒரு துணிப்பை நிறைய கத்தரிக்காய்களை பறித்து அவங்கப்பா என்னிடம் கொடுத்தார்.
Image result for கத்தரிக்காய்த் தோட்டம்

          எங்கம்மாவிடம் படித்த பிள்ளைகள்  போட்டி போட்டுக் கொண்டு, தக்காளி, கத்தரிக்காய், முருங்கை, வெண்டை, போன்றவற்றை கொண்டு வந்து தருவார்கள். வேர்க்கடலை சீசனில் சிலசமயம் ஒரு மூட்டை கூட சேர்ந்துவிடும். வேர்க்கடலைகள் மூணு கொட்டைகள் நான்கு கொட்டைகள் கொண்டதாக நல்ல திறமாக இருக்கும். மாம்பழங்களும் ஏராளமாக சேர்ந்துவிடும். வேண்டாம் என்றாலோ போதும் என்றாலோகூட விடமாட்டர்கள் .சண்டை போட்டுக்கொண்டு ஒருவரை முந்தி ஒருவர் கொண்டு வந்து தருவார்கள் .சில சமயங்களில் வேர்க்கடலை நிறைய சேர்ந்து போய் திண்டுக்கல்லில் உள்ள மாமா வீட்டுக்கு அனுப்பியுள்ளோம். 
          என்னவாயிற்று என்று தெரியவில்லை இப்போதெல்லாம் சூம்பிப்போன வேர்க்கடலைகள் தான் கிடைக்கின்றன. அளவும் மிகவும் சுருங்கிப்போய் இருக்கின்றன.
Image result for நுங்கு
நொங்கு
          அதே போல தென்னந்தோப்புக்கும் போவேன்.  இளநீரும் வழுக்கையும் சாப்பிட்டால் நாள் பூராவும் பசிக்காது. பனைமரத்தில் கிடைக்கும் நொங்குக்காய்களை அப்படியே மேலே சீவி விட்டு கையால் நோண்டி நோண்டிச் சாப்பிடுவோம். பனம்பழமும் நார் இருந்தாலும் சுவையாக இருக்கும்.
கரும்புத் தோட்டத்திற்குச் சென்றால், அவர்கள் நல்ல திறமான கரும்பை அப்படியே வெட்டி சோகை நீக்கித்தருவார்கள். வாயெல்லாம் புண்ணாகும் அளவுக்கு சாப்பிடுவோம். கரும்பு தின்றால் உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது. வாய் வெந்துவிடும்.
Image result for கரும்பு ஆலை
Courtesy Dinamalar.com
          கரும்புகளில் பலவகை உண்டு. பீச்சிக் கரும்பு இது கருப்பாக இருக்கும். சந்தையில் விற்பதற்காக மட்டும்தான் இது பயிரிடப்படும். குறிப்பாக பொங்கல் சமயத்தில் நிறையக் கிடைக்கும். இரண்டாவது ராமர் கரும்பு. இலேசான வெளிர் நிறத்தில் இருக்கும் கடித்துச் சாப்பிடுவதற்கு மிகவும் எளிதாக இருக்கும். சுவை பீச்சிக்கரும்பை விட வித்தியாசமாக இருக்கும். மூன்றாவது வகை ஆலைக்கரும்பு அல்லது கம்பெனிக்கரும்பு என்று சொல்வார்கள். இது கடித்துச் சாப்பிடக் கஷ்டமாயிருக்கும். ஆனால் சுவை மற்ற இரண்டையும் மிஞ்சி விடும்.
Image result for கரும்பு

          இந்த வகை கரும்பு, வயல்களில் அறுவடை சமயத்தில் அவர்களே சொந்த ஆலைகள் அமைத்து வெல்லம் செய்வார்கள். எனக்கு சிறப்பு அழைப்பு வரும். ஒரு நாள் முழுதும் அங்கே செலவிடுவேன். கரும்பை ஜூஸ்  பிழிவார்கள். நுரை ததும்ப ஒரு எலுமிச்சம்பழம் பிழிந்து சாப்பிட்டால் தேவாமிர்தமாக இருக்கும். அந்தச் சாறைப் பிழிந்து பிரமாண்டமான கொப்பரைகளில் ஊற்றி  துடுப்புகள் போன்ற பெரிய கழிகளில் கிண்டிக் கொண்டே இருப்பார்கள். 
Related image
ஆலைக்கரும்பு
      பதமாக பாகுபோல வரும்போது எடுத்து கொஞ்சம் சாப்பிடக் கொடுப்பார்கள். அது ஜவ்வுமிட்டாய் போல இருக்கும். நாங்கள் அதை கிழவி வெல்லம் என்று சொல்லுவோம். அது அற்புதமாக இருக்கும். மிகவும் மெலிதாக   கொழ கொழவென்று இருப்பதால் அதனை கிழவி வெல்லம் என்று சொல்லுகிறார்கள் என்று நினைக்கிறன் .அல்லது பல் இல்லாக் கிழவிகள் சாப்பிட ஏதுவாக இருப்பதால் அதனை அப்படி சொல்லுகிறார்களோ என்று தெரியவில்லை .ஆனால் எங்களுக்கும் அது சுவையாகவே இருக்கும் .  பின்னர் அதை அப்படியே பெரிய மரப் பெட்டிகளில் ஊற்றி, சூடாக இருக்கும் போதே லாவகமாகப் பிடித்து வெல்லம் செய்வார்கள். அதனை மண்டை வெல்லம் என்று சொல்லுவோம். அதனையே அச்சில் ஊற்றி சிறிது சிறிதாகவும் செய்வார்கள். அதுதான் அச்சு வெல்லம்.
Image result for கரும்பு ஆலை
அச்சு வெல்லம்
          ஐந்தாவது படிக்கும் போதிலிருந்து புளியவிதை சேகரித்தல், ஒற்றையா ரெட்டையா போன்ற பலவிளையாட்டுகளை புளிய விதை வைத்து விளையாடுவோம், பல்லாங்குழியும் அவற்றில் ஒன்று.  அப்புறம் தீப்பெட்டிப் படங்களை வைத்து மங்காத்தா விளையாடுவோம். சிலேட்டுக் குச்சிகளை வைத்து விளையாடுவோம். மயிலிறகுகளை வைத்து புத்தகங்களில் வைத்து குட்டிபோடுகிறதா என்று பார்ப்போம்.
          ஆசிரியர்களின் கட்டளைக்கிணங்க, ஊமத்தங்காய்களைப் பறித்துக் கொண்டு வந்து அடுப்புக்கரி சேர்த்து அரைத்து வகுப்பறையின் போர்டில் பூச, காய்ந்தவுடன் அடுத்த நாள் ஆசிரியர் சாக்பீஸ் கொண்டு எழுதும்போது பளிச்சென்று தெரியும்.

          எட்டாவது படிக்கும்போது ஸ்டாம்புகள் சேகரித்து ஆல்பம் தயாரித்து பரிசுகள் பெற்றேன். அந்தப் பழக்கம் தான் இப்போது விரிவடைந்து, உலகக் காசுகள் கரன்சிகள், ஆன்டிக் கலெக்சனாக என்னிடம் பெருகியுள்ளது.
          அந்தச் சமயத்தில் தான் சாத்தானின் குழந்தை முடியில்லாமல் பிறந்ததாக ஒரு பெரிய புரளி எழுந்தது.
-தொடரும்.

13 comments:

 1. நாட்டுக்கத்தரிக்காய் படம் அழகு. தரமான கத்தரிக்காய் என்று தெரிகிறது!

  ஆலைக்குச் செல்லும் டிராக்ட்ர் பின்னாலேயே ஓடி அந்தக் கருமுகில் சிலவற்றை இழுத்துக் கீழே போட்டு விட்டு, பின்னாலேயே ஓடி வரும் நண்பர்கள் அதைப் பொறுக்கிச் சேர்ப்பார்கள், அதைச் சாப்பிட்டிருக்கிறோம். திருட்டு இனிப்பு! திட்டும் வாங்கி இருக்கிறோம். தஞ்சாவூர் நினைவுகள்.

  கிழவி வெல்லம் தகவல் புதுசு.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்ரீராம் உங்க அளவுக்கு எனக்கு தைரியம் இருந்ததில்லை .அதோடு கேட்டும் கிடைக்கவில்லை என்றால்தானே வேறு வழிகள் வேண்டும்,

   Delete
  2. வெல்லம் காய்ச்சும் போதே மேலே வருவது தான் தேன்பாகு தேன் போலவே இருக்கும். இட்டலிக்கு தோசை
   க்கு தொட்டுக் கொண்டு சாப்பிட ஆஹா தேவாமிர்தமாக இருக்கும்.

   Delete
 2. Replies
  1. நன்றி தனபாலன் வேர்க்கடலை சாப்பிடும்போது இதனை கட்டாயம் சாப்பிடச்சொல்வார்கள் , ஏனென்று தெரியவில்லை

   Delete
  2. வறுத்த கடலை வெல்லத்துடன் சாப்பிட்டால் 'பித்தம்' வராது என்று சொல்வார்கள்.

   Delete
  3. தக்காளியில் கல் உப்பை அழுத்தி சாப்பிடும் சுவை!!! நாஸ்டால்ஜியா கிளப்பிவிட்டீர்கள்!

   Delete
  4. நன்றி பந்து , கிராமத்தில் வளர்ந்த எல்லோருக்கும் ஒரே மாதிரி நினைவுகள் இருக்கும்தானே

   Delete
 3. இந்த‌ ஒரு இடுகை என் பல‌ ப‌ழைய‌ நினைவுகளை மீட்டுக் கொண்டு வந்தது.

  எங்கள் வீட்டுக்கும் ஒரு முறை கடலை வந்திருக்கிறது. :-) என் தாயாருக்கு குட்டி மாணவர்கள் அதிகம். அவர்கள் வீட்டில் அடம்பிடித்து எங்களுக்கு குச்சி ஐஸ், தேநீர் கூட‌ வந்திருக்கிறது. ;)

  முன்பு கிழக்கிலங்கையில் கந்தளாயில் சீனித் தொழிற்சாலையும் வாழைச்சேனையில் காகித‌ ஆலையும் இருந்தன‌. கருப்பஞ்சக்கையிலிருந்து காகிதம் தயாரித்தார்கள். காலப்போக்கில் சீனி உற்பத்தி கைவிடப்படுவிட்டு விட்டது. ;( //கருப்பாக இருக்கும்// அதைத்தான் செங்கரும்பு என்பார்கள் போல‌!

  //ஊமத்தங்காய்// நாங்கள் செவ்வரத்தம்பூக்களை கரும்பலகை சுத்தம் செய்யப் பயன்படுத்துவோம்.

  //உலகக் காசுகள் கரன்சிகள்// ஆஹா! எனக்கும் இவற்றில் ஈடுபாடு இருக்கிறது. பெரிய‌ சேகரிப்பு என்று இல்லாவிட்டாலும் ஓரளவு சேகரித்து வைத்திருக்கிறேன். எங்காவது ஏற்கனவே உங்கள் சேகரிப்பு தொடர்பான‌ இடுகைகள் இருந்தால் சொல்லுங்கள். படிக்க‌ ஆவலாக‌ இருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி இமா .நினைத்தாலே இனிக்கும் நினைவுகள்தான். என்னுடைய கலக்க்ஷன் குறித்து அதிகமாய் எழுதியதில்லை .அவ்வப்போது இந்த மாதிரி குறிப்பிட்டது மட்டும்தான் .எனக்கு ஈமெயில் அனுப்பினால் சில விவரங்களை அனுப்பி வைக்கிறேன் .

   Delete
 4. திண்டுக்கல் என் மாவட்டம். இங்கு கரும்பு பயிர் சாகுபடி முக்கியமானது. இந்தப் பகுதியில் தக்காளி, பச்சை மிளகாய் புகழ் பெற்றது. தற்போது முருங்கை சாகுபடி சக்கைப்போடு போடுகிறது,

  ReplyDelete
  Replies
  1. திண்டுக்கல் மாவட்டத்தில் எங்கே முத்துச்சாமி ?

   Delete
 5. சில பல பழைய நினைவுகளை மீட்டித்தரும் அருமையான பதிவு, வாழ்த்துக்கள்.

  வணக்கம்,

  www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

  உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

  நன்றி..
  தமிழ்US

  ReplyDelete