![]() |
வேர்களைத்தேடி
பகுதி -13
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/04/blog-post.html
சாத்தானின் குழந்தை
பிறந்திருக்கிறது. அதுவும் முடியில்லாமல் பிறந்திருக்கிறது. அதற்கு என்ன அடையாளம்?
என்ன சான்று? என்று கேட்டால், அந்தக்குழந்தையின் தலை முடி உலகத்தில் இருக்கிற எல்லாப்
புத்தகங்களிலும் ஏதாவது ஒரு பக்கத்தில் இருக்கிறதாம் என்று எவனோ புரளியைக் கிளப்ப
எனக்கு பெரிய திகிலாய் இருந்தது. காலை 4.30 மணிக்கு என் ஆயா
(அம்மாவின் தாய்) படிப்பதற்காக எழுப்பிவிட என்னுடைய படிப்பறையில் முகம்கழுவி வாய்
கொப்பளித்து உட்கார்ந்தேன். புத்தகத்தை விரித்ததும் எனக்கு சாத்தானின் குழந்தை
ஞாபகம் வந்தது. 5 மணியாகி இருக்கும், என்
அம்மா பத்துப்பாத்திரங்களை (பத்துக்கு மேல் இருக்கும் ஹி ஹி)எடுத்துப்போட்டு
முற்றத்தில் துலக்கும் சத்தம் மெலிதாகக் கேட்டது. என் அப்பா ரேடியோ அறையிலிருந்த கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார். என்
தம்பிகள் இருவரும் முன் ஹாலில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். என் ஆயா வீட்டின்
கடைசியில் இருந்த சமையலறையில் ஏதோ பண்ணிக் கொண்டிருந்தார்.
என் படிப்பறை, ஹாலுக்கும் ரேடியோ
அறைக்கும் நடுவில் இருந்தது. அதன் ஒரு ஓரத்தில் ஆண்டு முழுவதுக்குமாக வாங்கின நெல்
மூட்டைகள் (ஐ ஆர் 20) அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அதைப்
பார்த்தால் ஏதோ விவசாய வீடு மாதிரி இருக்கும்.
![]() |
எல்லோரும் பக்கத்து அறைகளில் இருந்தாலும்,
எனக்கு திகில் குறையவில்லை. முதலில் எனக்குப் பிடிக்காத அறிவியல்
புத்தகத்தை எடுத்து ஒவ்வொரு பக்கமாக புரட்டிப் பார்த்தேன். கால்வாசிப் புத்தகத்தை
புரட்டின பின், ஒரு பக்கத்தில் முடி ஒன்று சுருண்டு கிடந்தது.
நீளமானதாய் இல்லை மிகவும் சிறிய அளவில் இருந்தது. இது
நிச்சயமாய் சாத்தானின் குழந்தையின் முடிதான் என்று தீர்மானமாகத் தெரிந்தது. அந்தப்
புத்தகத்தை அப்படியே எடுத்துக் கொண்டு பூனைபோல் நடந்து என் அம்மாவிடம் சென்றேன்.
என் அப்பா தூங்கும்போது யாராவது சத்தம் போட்டால் அவருக்கு மிகுந்த கோபம்
வந்துவிடும். அதனால்தான் என் அம்மாவும் முடிந்த அளவுக்கு சத்தம் செய்யாமல்
பாத்திரங்களை துலக்கிக் கொண்டு இருந்தார். நேரத்துக்குள் துலக்கி முடித்து
முன்வாசலில் நீர் தெளித்து கோலம் போட்டு திரும்பவும் வந்து என் ஆயாவுக்கு சமையலில்
உதவி செய்வார். காலை இட்லி தோசைக்கு ஆட்டு உரலில் சட்னி அரைக்க வேண்டும். மதிய
சாம்பார், குழம்பு போன்றவற்றிக்கு அம்மியில் மசாலா அரைக்க வேண்டும். காலையில்
அவர்கள் இருவரும் மிகுந்த பிஸி.
அப்பா எழுந்து கொல்லைக்கு வெளியே போய் காலைக்
கடன் முடித்து திரும்ப வந்து ஆலங்குச்சியில் பல்துலக்கி பின்னர் எங்கள் மூவரையும்
குளிப்பாட்டி விட்டு, ஆடை உடுத்தி பின்னர் அவர் குளித்து ரெடியாகி அனைவரும்
பள்ளிக்குச் சென்றுவிடுவோம். சரியாக ஏழு மணிக்கு ரேடியோ சிலோன் இலங்கை ஒலிபரப்புக்
கூட்டுஸ்தாபனம் ஒலிக்க ஆரம்பித்தால் 8 மணிக்கு சாப்பிட
உட்காரும்வரை ஒலிக்கும். KS.ராஜா, BS. அப்துல்
ஹமீத் ஆகியோர் குரலில் அற்புதத் தகவல்களோடு பாடல்கள் ஒலிக்கும். நடுவில் ஏழரை
மணிக்கு திருச்சி வானொலியில் டெல்லியிலிருந்து தமிழ்ச் செய்திகள் மட்டும்
கேட்டுவிட்டு மறுபடியும் மாற்றிவிடுவார்.
மறுபடியும் டிராக் மாறிவிட்டேன். புத்தகத்தை எடுத்துக் கொண்டு அம்மாவின் காதில் கிசுகிசுக்க,
பள்ளிக்குக் கிளம்பும் அவசரத்தில் அதனை கேட்க அவர்களுக்குப் பொறுமை
இல்லை. எனவே அப்புறம் மாலை பேசலாம் என்று சொல்லிவிட்டார்கள்.
நான் மறுபடியும் என் படிப்பறைக்குப் போய்
கணக்குப்புத்தகத்தை எடுத்து ஒவ்வொரு பக்கமாய்ப் புரட்ட, ஆரம்பத்திலேயே ஒரு சிறு
முடி இருந்தது. எனக்குப் பகீரென்றது, அதன்பின் நேரமாகிவிட
பள்ளிக்குப் போய் விட்டேன். மற்றப்
புத்தகங்களை சோதித்துவிட்டு நண்பர்களிடம்
சொல்லலாம் என்று முடிவு செய்ததால் ஒருவருக்கும் சொல்லவில்லை.
அன்றைய நாளில் என் அப்பாவின் அறிவியல்
வகுப்பில் வினாடிவினா இருந்தது (quiz) இரவும் பகலும்
சாத்தானின் முடியைத் தேடித் கொண்டிருந்ததால் நான் அதனை மறந்தே போய்விட்டேன். ஏற்கனவே
அறிவியலுக்கும் எனக்கும் ஆகாது. கடுமையாகப் படித்துத்தான் நல்ல மார்க்குகளை
வாங்குவேன். எங்கப்பாவுக்கு ஒரு அவமானம் ஆகிவிடக் கூடாதென்றுதான் அதுவும் .
முதல் ரவுண்டில் பதில் சொல்லாவிட்டால்
நின்று கொண்டு இருக்க வேண்டும். இரண்டாவது ரவுண்டில் பதில் சொன்னால் உட்கார்ந்து
விடலாம். ஆனால் பதில் சொல்லாவிட்டால் பெஞ்சின் மீது ஏறி நிற்க வேண்டும். மூன்று
ரவுண்டிலும்
நான் பதில்
சொல்லாததால் பெஞ்சின் மீது ஏறி நிற்க வெட்கம் பிடிங்கித்தின்றது. முகம் வெளுத்து
வேர்த்து வியர்த்துவிட்டது. ஏற்கனவே சொன்னார்கள் சாத்தானின் குழந்தை பிறந்து உலகில் பல துன்பங்கள்
வரப்போகிறதென்று. அதுல எனக்கு வந்ததுதான் முதல் துன்பம் என்று நினைத்தேன்.
![]() |
கடைசியில் மூன்றாம் ரவுண்ட் முடிவில், எப்போதும்
மிகுந்த முயற்சியெடுத்து வகுப்பில் முதல் ஒன்றிரண்டு இடங்களில் வரும் நான்
பெஞ்சில் ஏறி நின்றது அங்கிருந்த என் நண்பர்களுக்கு அதிர்ச்சி. என் பெண்
தோழிகளுக்கு ஆச்சர்யம்.சில பேருக்கு மகிழ்ச்சியாகக் கூட
இருந்திருக்கலாம். ஆனால் என் அப்பாவைப் பார்த்தால் அவர் முகத்தில்
ஈயாடவில்லை. என்னோடு சேர்ந்து கம்பெனிக்கு இன்னும் மூன்று பேர் அவரவர் இடங்களில்
பெஞ்சில் நின்று கொண்டிருந்தார்கள். நான் நின்ற இடம் என் அப்பாவின் டேபிளுக்கு
நேர் எதிரே. அவருடைய முகம் கோபத்தில் நன்றாக சிவந்திருந்தது எனக்கு மேலும் திகிலையூட்டியது.
மற்றவர்களைக் கூப்பிட்ட என் அப்பா பிரம்பால் உள்ளங்கையில் ஒரு அடி அடித்து உட்காரச் சொல்லிவிட்டு தொடர்ந்து பாடம்
நடத்த ஆரம்பித்தார். நானோ தொடர்ந்து பெஞ்சில்நின்று கொண்டிருக்க , கால் முட்டியில் வேறு அரிப்பெடுத்து உடனே சொரிய வேண்டும் என்ற நிலை.
![]() |
A,S Thiagarajan |
ஒரு வழியாக வகுப்பு முடிய என்னை இறங்கச்
சொன்னார் என் அப்பா. அதன் பின்னர் நடந்த கொடுமையை இன்றைக்கு
நினைத்தாலும் குலை நடுங்குகிறது. அரைக்கால் சட்டை போட்டிருந்த என்ன கையைப் பிடித்துக்
கொண்டு பின் புறம் தொடைகளிலும் கால்களிலும் மூங்கில் பிரம்பால் விளாசி விட்டார்.
வகுப்பில் அவரை சார் என்றுதான் கூப்பிடவேண்டும்
என்று சொல்லியிருந்ததால் “வேண்டாம் சார் விட்டுருங்க, ஒழுங்கா படிப்பேன் சார்”,
என்று கதறி அழ அப்பா சொன்னார், “ஒழுங்கா படிப்பேன் அப்பான்னு சொல்றா”, என்று சொல்லியடித்த போதுதான் என்னை அடித்தது
என் வகுப்பு ஆசிரியர் அல்ல, என் முன்னேற்றத்தை நினைத்துப் பயந்த என் அப்பா என்பது.
என்னுடைய தற்போதைய முன்னேற்றத்தை பார்த்து
மகிழ அப்பா உயிருடன் இல்லையென்பதை நினைத்தால் என் நெஞ்சு கனக்கிறது
சாத்தானின் குழந்தையால் இன்னும்
என்னவெல்லாம் துன்பம் வந்தது என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.
-தொடரும்.
முக்கிய அறிவிப்பு :
வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று ( ஏப்ரல்
22,2018 ) நியூயார்க் தமிழ்ச்சங்கம் நடத்தும் சித்திரை விழாவில் அடியேன் கலந்துகொள்கிறேன்
, வாங்களேன் சந்திக்கலாம் .
![]() |
ஹா... ஹா... ஹா... கடைசியில் சாத்தானின் தலைமுடியைப் பற்றி மற்றவர்களுக்கு எப்போதுதான் எச்சரித்தீர்கள்?!!
ReplyDeleteநான் எங்க எச்சரிப்பது , பிறர்தான் என்னை தேற்றினார்கள்
Deleteமிக அருமையாக ஒரு குழந்தையின் பயத்தை சித்தரித்துள்ளீர்கள். நல்ல ரைட்டப். :)
ReplyDeleteமிக்க நன்றி தேனம்மை.
Deleteயம்மாடி....!
ReplyDeleteஆமாம் அம்மாடி அப்பாடி மொமெண்ட்தான் .
Delete//“ஒழுங்கா படிப்பேன் அப்பான்னு சொல்றா”// கண்களில் நீர்.
ReplyDeleteஅதிலும் கவித்துவத்தை பார்ப்பது நீர் மட்டும்தான் பாஸ்கர்
Delete“ஒழுங்கா படிப்பேன் அப்பான்னு சொல்றா”, என்று சொல்லியடித்த போதுதான் என்னை அடித்தது என் வகுப்பு ஆசிரியர் அல்ல, என் முன்னேற்றத்தை நினைத்துப் பயந்த என் அப்பா என்பது. என்னுடைய தற்போதைய முன்னேற்றத்தை பார்த்து மகிழ அப்பா உயிருடன் இல்லையென்பதை நினைத்தால் என் நெஞ்சு கனக்கிறது." நினைவுகள் தந்த நெகிழ்ச்சியான தருணம்.
ReplyDeleteபெரும்பாலான நெகிழ்ச்சியான தருணங்கள் மகிழ்ச்சியான தருணங்களாக இருப்பதில்லை முத்துச்சாமி .
Deleteஎன்னையும் அடிச்சு வளர்த்திருந்தா ஒருவேள உருப்பட்டிருந்திருப்பேனோ என்னவோ?!!!
ReplyDeleteஎன்னை அடித்ததால்தான் உருப்பட்டேன். உன்னை அடிக்கவேண்டிய அவசியம் வரவேயில்லை .
ReplyDeleteநீ எங்கள் எல்லோருக்கும் செல்லப்பிள்ளை மட்டுமல்ல நல்லபிள்ளையம் அல்லவா