![]() |
"அத்தான், இன்னிக்கு ராத்திரிக்கு தோசை வேணுமா?
சப்பாத்தி வேணுமா?”
"அத்தானா உண்மையிலேயே உன் மனைவி உன்னை அப்படிக் கூப்பிடுவாங்களா ?" என்று நீங்கள்
கேட்கும் குரல் காதில் விழுது. உண்மைதாங்க, அப்படித்தான் அவள் என்னைக்
கூப்பிடுவாள். "அப்படின்னா உன் மனைவி உனக்கு சொந்தமா?
என்று கேட்டால், "திருமணத்திற்குப் பிறகுதான்
சொந்தமானாள்னு சொல்வேன். “அப்ப எப்படி அத்தான்னு கூப்பிடுறாங்க ?". சொல்றேன்
சொல்றேன். கல்யாணமான புதுசுல நடந்த உரையாடலை இங்கே தர்றேன்.
"ஏங்க நான் உங்களை எப்படிக் கூப்பிடுறது".
"ஏன் ஆல்ஃபின்னே கூப்பிடு
இல்லை சேகர்னு கூப்பிடு".
“பேர் சொல்லிக் கூப்பிடக் கூடாதுன்னு எங்கம்மா சொன்னாங்க” (சத்தியமா
நம்புங்க, இது 19ஆவது நூற்றாண்டில நடக்கல 90களில் நடந்தது)
“உங்கம்மா உங்கப்பாவை எப்படிக்கூப்பிடுவாங்க?”
"அத்தான்னு கூப்பிடுவாங்க ஏன்னா அவங்க மாமன் மகன் அத்தை
மகள்னு உறவு".
“நானும் அப்படியே கூப்பிடட்டுமா?”
“
சரி அப்படியே கூப்பிடு”.
ஆனால் அத்தான்னா என்னன்னு இன்னிக்கு வரைக்கும் அவளுக்குத் தெரியாது. அது
ஒரு பேர் போல கூப்பிடுவா. அவள் அத்தான்னு என்னைக் கூப்பிடுவதைப் பார்த்து அவளைக்
கேலி செய்யாத ஆட்களே இல்லை. சரி கிளைக்கதைக்கு போயிட்டேன், மெயின் கதைக்கு வருவோம்.
"அத்தான், இன்னிக்கு ராத்திரிக்கு தோசை வேணுமா?
சப்பாத்தி வேணுமா?”
“இது என்ன கேள்வி, தோசைதான் வேணும்”.
இந்தக் கேள்வியை உங்கள்ட்ட கேட்டாலும் பெரும்பாலானோர் தோசைன்னுதான் பதில்
சொல்வீங்கன்னு எனக்குத் தெரியும்.
நமக்குன்னு சில ஸ்டாண்டர்டு பதில் இருக்கில்லியா?
இட்லியா தோசையா?ன்னா தோசை. சப்பாத்தியா பூரியா?ன்னா பூரி,
மட்டன் பிரியாணியா சிக்கன் பிரியாணியா?ன்னு கேட்டா மட்டன்
பிரியாணி. சட்னியா சாம்பாரான்னு கேட்டா மட்டும் ரெண்டும்னு சொல்வோம். வடையும்
இருந்தா உத்தமம்னு நெனப்போமா இல்லியா?
நாக்கு வளர்ந்த சமூகம் நம்ம தமிழ்ச்சமூகம். சுகர் வளர்த்த சமூகமும்
நாம்தான்.
![]() |
Podi Dosai |
“தோசை வேணுமா சப்பாத்தி வேணுமா?”ன்னு
கேட்டா,
“இது என்ன கேள்வி தோசைதான்
வேணும்”,னு சொன்னேன். “அப்படியே முடிஞ்சா, நீ மனசு வச்சா நீயே பக்குவமா அரைச்ச மிளகாய்ப் பொடியை தோசை
வேகும்போதே அப்படியே மேலே தூவி முருகலா போட்டுரு”,ன்னு சொன்னேன்.
“நாக்கு வக்கனையா கேட்குமே”, என்று முனகிலும்,
நான் சொன்னபடியே போட்டுக் கொண்டு வந்தாள்.
முதல் விள்ளவிலேயே நீளமாய் ஒரு முடி வந்தது. எனக்கு உடனே கோபம் வந்தாலும்,
அதை அடக்கிக் கொண்டே, “ரூத், பொடி தோசை கேட்டா முடி தோசை தர்றயே", ன்னேன். “எடுத்துப்
போட்டுட்டு சாப்பிடு”,ங்கன்னாள்.
முன்னெல்லாம் சாரி சொல்லிட்டு வேற தோசை கொடுப்பாள்,
பயப்படுவாள். இப்பதான் 25 வருஷம் ஆயிருச்சே எல்லாமே மாறிப்போச்சு. அதோடு முடி
இருந்தா அன்பு அதிகம்னு ஒரு தடவை சொன்னாள். அட அன்புக்கு உயிரைக் கொடுப்பாங்கன்னு
சொல்வாங்க. நீ அன்புக்காக ______
கொடுக்கிறியேன்னு சொன்னதில் இருந்த அவள் அப்படிச் சொல்வதை நிறுத்திட்டா.
![]() |
ஆனாலும் சொன்னேன், “சீக்கிரமா கண்ணாடி போடணும் உனக்கு பாத்துச் செய்”,னு
சொன்னேன்.
அன்று இரவு
ஹீரோடாக்கீசில் தீபாவளி வெளியீடாக ஜோதிகா நடித்த "மகளிர் மட்டும்" படம்
பார்த்தோம். அதில் ஒரு சீன் வந்தது. ஹாஸ்டலில் இருந்து ஒண்ணாகப் படித்த மூன்று
தோழிகளை அவர்களில் ஒருவரின் மருமகளான ஜோதிகா ஒன்றிணைத்து ஒரு மூன்று நாள் ஒன்றாக
இருக்க விடுவார். அதில் பானுப்பிரியாவின் அரசியல் கணவனின் மகன் தன் கூட்டாளிகள்
மற்றும் ஆயுதங்களுடன் அவர்களை தேடும்போது, பார்டரில் இருக்கும் ராணுவத்தில் மாட்டிக் கொள்வான். பெண்கள் ராணுவப்பிரிவின் பொறுப்பில்
வைத்திருப்பார்கள்.
அப்போது அவனுக்கும் தோழர்களுக்கும் உணவு கொடுக்கும் போது பானுப்பிரியாவின் மகன் உணவில் ஒரு
முடி இருக்கும். இதுவே அவன் வீடாக இருந்திருந்தால் இந்நேரம்
தட்டுபறந்திருக்கும் என்பதையும் காண்பிப்பார்கள்.
அப்போது உயர் பெண் ராணுவ அதிகாரி, அவனிடத்தில் வந்து, “நீ நினைப்பதையும் வீட்டில் செய்ததையும் என்னால் ஊகிக்க முடிகிறது. வீட்டில் பெண்கள் இருந்தால் இது
சகஜம்தான். இனிமேல் உணவில் முடி இருந்தால் அதனை எடுத்துப்போட்டுவிட்டு சாப்பிடனும்
என்ன?”, என்று சொல்லி உணவில் முடியைப் பார்க்கும்போது இது
நினைவில் இருக்கட்டும் என்று சொல்லி தலையில் நறுக்கென்று ஒரு குட்டு வைப்பார். இதனை நாங்கள் இருவரும்
பார்த்துக் கொண்டிருந்தோம். உடனே நான் என் மனைவியைப் பார்க்க அவள் என்னை முறைக்க,நான்
உடனே என் கைகளால் தலையை மூடிக்கொள்ள அவள் அடக்க முடியாமல் சிரித்தாள்.
நல்லவேளை குட்டு எதுவும் விழவில்லை. வீட்டில் உணவில் முடியிருந்தால்
எடுத்துப் போட்டுவிட்டு சாப்பிட வேண்டியதுதான் வேறு வழியில்லை மக்களே.
-முற்றும்.
பின்குறிப்பு # 1:
நண்பர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்.
வரும் சனிக்கிழமை நியூயார்க் தமிழ்ச்சங்கம் நடத்தும் தீபாவளி விழாவுக்கு செல்கிறேன்
.நண்பர்கள் வந்தால் சந்திக்கலாம்.பின்குறிப்பு # 2 : நண்பர்களே நான் வரும் ரெண்டு வாரங்கள் ஜெர்மனி செல்ல விருப்பதால் அக்டோபர் 23 முதல் நவம்பர் 03 வரை பதிவுகள் வராது .தயை கூர்ந்து பொறுத்துக்கொள்ளுங்கள் . ஜெர்மனியில் இருக்கும் நண்பர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.பெர்லினில் சந்திக்கலாம் .(alfred_rajsek@yahoo.com) .உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கும் அன்புக்கும் என்றென்றும் கடமைபட்டிருக்கிறேன்.