Tuesday, February 21, 2017

போர்த்துக்கீசியரின் சதியில் சிக்கிய கொழும்பு !!!!!


இலங்கையில் பரதேசி பகுதி-3

Image result for Fort in Colombo
Colombo Fort Area
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/02/blog-post_6.html

"அம்ரி என்ற பெயரைப் பார்த்ததும் தமிழ் இல்லை என்றுதான் நினைத்தேன்". "இல்லை சார் நான் தமிழ்தான்", என்று சொன்னபடி அம்ரி என் பைகளை எடுத்துப்பின்னால் போட்டுவிட்டு, காரின் பின்னால் உள்ள கதவைத் திறக்க, "இல்லை அம்ரி நான் முன்னாலேயே உட்கார்ந்து கொள்கிறேன்" என்றேன். மெலிதான ஆச்சரியத்துடனும் சிறு புன்னகையுடன் அம்ரி காரில் ஏறிக்கொள்ள நானும் முன்னால் அமர்ந்து கொண்டு சீட் பெல்ட்டைப் போட்டவுடன் கார் வேகமெடுத்தது. ஒரு சில மணித்துளியில் அந்த சிறிய ஏர்போட்டிலிருந்து வெளியே வந்து அழகான சாலையில் விர்ரிட்டது. இருபுறமும் பச்சைப் பசேலென்று இருக்க சாலை மிகவும் நேர்த்தியாக இருந்தது.  

அம்ரி இளைஞன், திருமணமாகி இரு சிறு குழந்தைகள் இருக்கின்றன. கொழும்பில் பல தலைமுறைகள் வாழும் தமிழ் முஸ்லீம். ETA குழுமத்தின் சில வியாபாரங்களைக் கவனித்துக் கொள்ளும் அம்ரி, எனது நண்பனின் வேண்டுகோளுக்கிணங்க என்னை பிக்கப் செய்வதற்காக வந்திருந்தார்.

கொழும்பு நகரில் நுழைவதற்கு முன்னர் அதனைப் பற்றிச் சில விவரங்களைத் தெரிந்து கொள்வோம்.

இலங்கையின் தலைநகரமான கொழும்புதான் இலங்கையிலேயே பெரிய நகரம். சுமார் 6 மில்லியன் அதாவது அறுபது லட்சம் மக்கள் இங்கு வசிக்கிறார்கள். மைய நகரப்பகுதியில் மட்டும் சுமார் 8 லட்சம் பேர் குடியுள்ளார்கள். இலங்கையின் மேற்குக் கடற்கரைப்பகுதியில் இந்த ஊர் அமைந்துள்ளது.

இங்கு நல்ல பெரிய துறைமுகம் இருப்பதாலும், கிழமேற்கு கடல் வழியின் முக்கிய இடத்தில் அமைந்திருப்பதால் கடல் வாணிபர்களுக்கு 2000 ஆண்டுகளாக நன்கு அறிமுகமான ஊர் இது.

கிபி.1815ல் ஆங்கிலேயரிடம் பிடிபட்ட நாள் முதல் கொழும்புதான் இலங்கையின் தலைநகராக இருக்கிறது. 1948-ஆம் ஆண்டு இதற்கு சுதந்திரம் கிடைத்தது. 1978ல் ஸ்ரீ ஜெயவர்த்தன் புரக்கோட்டே என்ற ஊர் தலைநகரமாக மாற்றப்பட்டது. ஆனால் அந்த ஊரும் இப்போது இலங்கை மெட்ரோவுக்குள் அடங்கியிருப்பதால் இரண்டையும் யாரும் பிரித்துப் பார்ப்பதில்லை.

அதுபோல லாவினியா, கொலனாவா, கருவெளா, கொடிக்காவட்டே முல்லெரியாவா ஆகிய சிறிய பல முனிசிபல் கவுன்சிலும் இதில் அடங்கியிருக்கின்றன.

நான் ஏற்கனவே சொன்னபடி கொழும்பு ஒரு இயற்கையாக அமைந்த துறைமுகம் என்பதால் இது 2000 வருடங்களுக்கு மேலாகவே, இந்தியர்கள், கிரேக்கர்கள், பெர்சியர், ரோமர், அரேபியர் மற்றும் சீனர்கள் ஆகியோர் வர்த்தகத்திற்காக வந்துபோகும் இடமாக இருந்திருக்கிறது.

Image result for Ibn Battuta)

யாத்திரைகள் இபுன் பட்டுடா (Ibn Batuta) என்பவர் 14 ஆம் நூற்றாண்டில் இங்கு வந்திருந்ததை எழுதுகையில் இதனை 'கலன்பு' என்று குறிப்பிடுகிறார். அரேபியர்களின் தொழில், வர்த்தகம் என்பதால் அவர்கள் 8-ஆவது நூற்றாண்டிலேயே  இங்கு வந்து தங்க ஆரம்பித்தனர். இவர்கள் தான் சிங்கள ராஜ்யங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் வர்த்தகத் தொடர்ப்பைப் பார்த்துக் கொண்டார்கள். "மூர் சமூகம்" என்று அழைக்கப்படும்.  இவர்களின் பரம்பரையினர் இன்றும் கொழும்பில் வசிக்கிறார்கள்.

நமது தெற்காசிய பகுதிகளில், ஆங்கிலேயர் தவிர, போர்த்துக்கீசியர் மற்றும் டச்சுக்காரர்கள் அதற்கு முன்பே வந்து ஆக்ரமிக்கத் தொடங்கினர் என்று நமக்கெல்லாம் தெரியும்.
Related image
மன்னர் முதலாம் பராக்கிரமபாகு
அதுபோலவே போர்த்துக்கீசியர் கிபி.1505 -ல் இலங்கையை வந்தடைந்தனர். இந்தக் குழுவுக்கு தலைவராய் வந்தவரின் பெயர் டாம் லொரென்கோ டி அல்மெய்டா (Dom Lourenco de Almeida) என்பது. அப்போது இந்தப் பகுதியான 'கோட்டே' யை ஆண்ட மன்னர் எட்டாவது பராக்கிரமபாகு (1484-1528). அவரைச் சந்தித்து அங்கு விளையும் இலவங்கத்தை (Cinnamon ) வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஒப்பந்தத்தை செய்து கொண்டு கடற்கரைப் பகுதியை தம் கைக்குள் கொண்டுவந்தனர். கடல் வழிவரும் எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் மன்னர் பராக்கிரமபாகுவும் இதனை அனுமதித்தார்.கொழும்பிலே சுங்கச்சாவடியை அமைத்த இவர்கள் வெகுவிரைவிலேயே அங்கிருந்த முஸ்லீம் மக்களை வெளியேற்றிவிட்டு தங்களுக்கென ஒரு கோட்டையைக் கட்டிக் கொண்டனர். இது நடந்தது கிபி.1517-ல்.

கடல் பகுதியில் தங்கள் வாணிபம் சிறக்க வேண்டுமென்றால், இலங்கையின் முழுக்கடல் பகுதியும் தங்கள் கட்டுப் பாட்டில் வரவேண்டுமென நினைத்த போர்த்துக்கீசியர் மெதுவாக தங்கள் வேலையைக் காட்ட ஆரம்பித்தனர். கோட்டே ராஜ குடும்பத்தில் பதவிக்கு நிலவிய போட்டி பொறாமைகளை பயன்படுத்தி விரைவிலேயே கோட்டே நாட்டை இரண்டாகப் பிரிந்துவிட்டனர். கோட்டேவின் ஒரு பகுதியாக இருந்த சித்தவாகா என்பதனை தனியாகப் பிரித்து சிங்கள மன்னனான மாயாதுன்னே ஆள ஆரம்பித்தான். போர்த்துக்கீசியர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியை நன்கு அறிந்து கொண்ட அவன் அவர்களை தன் நாட்டைவிட்டு வெளியேற்றி கொழும்புவுக்கு ஓட வைத்தான்.

அதோடு கோட்டே நாட்டின் பெரும்பகுதியை கொஞ்சம் கொஞ்சமாக தன் நாட்டுடன் இணைத்துக் கொண்டான். கொழும்பிலும் அவர்களை நிம்மதியாக வாழவிடாது அடிக்கடி அவர்கள் கோட்டையை முற்றுகை இட்டான். அவன் வழி வந்த மற்ற மன்னர்களும் இதையே செய்ததால், போர்த்துக்கீசியர் கோவாவிலிருந்து அதிக படையினரை வரவழைக்க வேண்டியிருந்தது. ஆனால் சித்தவாகா நாடு 1593ல் விழுந்துபோக, போர்த்துக்கீசியர் முழுவதுமாக ஆக்கிரமித்து கொழும்புவை தங்கள் தலைநகராக ஆக்கிக் கொண்டனர். இந்தப் பகுதிதான் ஃபோர்ட் (FORT) என்று அழைக்கப்படுகிறது.

Image result for The president's house in Colombo
President's house 
அந்த வழியாக நாங்கள் செல்லும் போது   அதனைப் பற்றிச் சொன்ன அம்ரி அங்கிருந்த பெரிய மாளிகையைக் காண்பித்தார். அதுதான் இப்போது இலங்கையின் குடியரசுத் தலைவர் தங்கும் மாளிகை. அந்த இடமும் சுற்றுப்புறமும் திடீரென்று ஐரோப்பிய நகருக்கு வந்தது போல இருந்தது. முற்றிலுமாக மரங்கள் சூழ்ந்து மிக அழகாக இருந்தது. சாலைகளும் புத்தம்புதியதாக இருந்தன. ஆங்காங்கு ராணுவப் பாதுகாப்பும் இருந்தன. இங்குதான் அதிகபட்ச ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள்  இருக்கின்றன என்ற அம்ரியுடன், "அம்ரி ஏற்கனவே நான் ஹோட்டல் புக் செய்துவிட்டேன்". அது லலீனியாவில் இருக்கிறது அதன் பெயர் 'சமன்க்கா கெஸ்ட் ஹவுஸ்' என்றேன். அப்படி ஒரு இடத்தை நான் கேள்விப்பட்டதில்லையே  என்று அம்ரி சொன்னதும் எனக்கு தூக்கிவாரிப் போட்டது.


-தொடரும்.

9 comments:

  1. எங்களுக்கும்தான் தூக்கி வாரிப் போடுகிறது
    கண்டுபிடித்துவிட்டீர்கள்தானே?

    ReplyDelete
    Replies
    1. பொறுத்திருந்து பாருங்கள் கரந்தையாரே.

      Delete
  2. கொழும்பு பற்றிய தகவல்களுக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  3. பராக்கிரமபாகு-இவர் தமிழ்ப் பரம்பரையில் வந்த தமிழ் மன்னர்.//
    பராக்கிரமபாகுவை தமிழ் மன்னராக மாற்றி அடித்துவிடுவதில் ஒரு பெருமை :)
    சிங்கள அரசன் Manabharana வுக்கும், சிங்கள அரசி Ratnavali க்கும் பிறந்தவர் பராக்கிரமபாகு.
    (சரித்திர நூல்களை பார்க்கவும்)

    ReplyDelete
    Replies
    1. சிலசமயம் சில நப்பாசைகள் தப்பாசைகள் ஆகிவிடுவது உண்டு வேகநரி. ஆனாலும் நீங்கள் சொல்வதற்கு ஆதாரங்களை ஈமெயிலில் பகிர்ந்தால் நன்றியுடையவனாக இருப்பேன் .

      Delete
    2. அப்படி நப்பாசைகள் தப்பாசைகளை வளர்த்து கொள்ள வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை என்றே நம்புகிறேன்.உங்களுக்கு தெரிந்த இலங்கையர் தமிழர்களை கேட்டு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் சார்.

      Delete
  4. அழகான விவரணம் அண்டைநாட்டை....கால் எட்டும் (?) தூரத்தில் இருக்கும் நாட்டைப் பற்றி சுவாரஸ்யமாக உள்ளது...தொடர்கிறோம்...

    கீதா: அட! எனக்குப் பல நினைவுகள் எழுகின்றன உங்களின் பதிவை வாசிக்கும் போது..இப்போதும் இலங்கை லவங்கம்/பட்டை என்று இங்கே சென்னையில் கிடைக்கிறது. நம்மூர் பட்டையை விட வாசனை அதிகமாக இருக்கும் பார்க்கவும் நன்றாக .சரித்திரத் தகவல்க புதிது. சுவாரஸ்யமாக இருக்கிறது..இதோ அடுத்த பகுதி....

    ReplyDelete
    Replies
    1. அப்படியா அடுத்த தடவை வரும்போது வாங்கிட வேண்டியதுதான்

      Delete