Thursday, February 23, 2017

'கலைஞரின் ரோமாபுரிப் பாண்டியன்'

Image result for Karunanidhi writing
படித்ததில் பிடித்தது

'ஆடி அடங்கும் வாழ்க்கை' இது என்பதற்கு சிறந்த உதாரணம் கருணாநிதி, அதிகமான படிப்பு இல்லை. திடகாத்திரமான உருவம் இல்லை, இள வயதில் வழுக்கை, பாரம்பர்யமில்லாத குடும்பம், தென் பகுதியில் ஒரு சிறிய ஊர், இவையெல்லாவற்றையும் மீறி அதீத திறமை. தமிழறிவும், இலக்கிய அறிவும், பேச்சுத்திறமையும், இலக்கியத்திறமையும் எங்கிருந்து வந்தது என்று நினைத்தால் ஆச்சரியம். தமிழ் மக்களை ஈர்த்த அவருடைய கனல் பறக்கும் வசனங்கள், திராவிட இயக்கத்தின் பகுத்தறிவுப் பாதையில் இறுதி வரை பிடிப்பு, அண்ணாவின் தளபதிகளில் ஒருவர் ஆகியவை இருந்தாலும் அண்ணாவின் காலத்தில் அவரை அண்ணாவின்  ஒரே வாரிசு அல்லது அண்ணாவுக்கடுத்து இரண்டாமிடம் என்று அவர் நினைக்கவில்லை, ஏன் அண்ணாவே நினைக்கவில்லை என்பதே உண்மை. ஆனாலும் அண்ணாவின் மறைவுக்குப்பின் நெடுஞ்செழியன், அன்பழகன் போன்ற பலர் இருந்தாலும் அவரே முன்னிலைப்படுத்தப்பட்டு முதல்வர் ஆனது வரலாறு. ஆனால் ஒத்துக்கொள்ள வேண்டிய பேருண்மை என்ன என்றால் திமுக வேறு யாரிடம் போயிருந்தாலும் இவ்வளவு நாள் நிலைத்திருக்குமா என்பது சந்தேகம்தான்.
Image result for ரோம் நகரத்தில்  கலைஞர் கருணாநிதி
Add caption
பொது நலம். சுயநலமாகி ஊழலில் சிக்கி, பதவியிழந்து, எம்ஜியாரையும் சமாளிக்க முடியாமல் ஏன் ஜெயலலிதாவையும் சமாளிக்க முடியாமல் திணறி, தன்னுடைய வாரிசாக தன் மகனையே கொண்டு வந்துஅறிக்கைகளால் மட்டும் வாழ்ந்து மூன்று தலைமுறையாக ஆதிக்கம் செய்த மாபெரும் சகாப்தம் இப்போது அமைதியாக அடங்கிவிட்டது. மு.க ஸ்டாலின் செயல் தலைவராக இயங்க, செயல்படாத தலைவராக வீட்டில் முடங்கிவிட்டார் கருணாநிதி.

இந்தச் சூழ்நிலையில் அவருடைய அரசியல் முகம் மறைந்து விட்டாலும் அவரின் இலக்கிய முகத்தைப்பற்றி கொஞ்சம் அறிந்து  கொள்ளும் ஆர்வத்தில் தொடர்ந்து அவருடைய படைப்புகளை வாங்கிப் படித்து வருகிறேன். அதில் ஒன்றுதான் "ரோமாபுரிப் பாண்டியன்.

1974-ல் முதன்முதலில் இந்தப் புத்தகம் வெளிவந்த போது  கலைஞர் முதல்வராய் அமர்ந்திருக்கிறார். அரசியல் அழுத்தங்கள் ஆயிரம் இருந்தாலும் எழுத்துப்பணியை எப்படித்தான் தொடர்ந்து செய்தாரோ என்ற  ஆச்சரியம் எழுகிறது. இப்போது 2014ல் ஆறாவது பதிப்பாக "பாரதி பதிப்பகத்தில்" வெளியிடப்பட்டிருக்கும் புத்தகத்தை கடந்த வருடம் சென்னை வந்திருக்கும்போது "புத்தகவிழாவில் வாங்கினேன்.

இது, முதலில் முரசொலியிலும் அதன்பின் குமுதம் இதழிலும் தொடராக வந்திருக்கிறது. புத்தகமாக வெளியிட்ட போது தலைமையேற்றவர் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர். நூலை வெளியிட்டது தலைமை நீதிபதி அனந்த நாராயணன், முதற்படியைப் பெற்றுக் கொண்டது, கவிஞர் கண்ணதாசன். அவர்கள் ஆற்றிய உரைகளும் புத்தகத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றன.
Image result for Karunadhi in suit
With Kannadasan 

இந்த நூலின் தலைப்புத்தான்  என்னை முதலில் படிக்கத் தூண்டியது. ரோமாபுரியில் ஒரு பாண்டியன் இருந்தானா ?  அல்லது சென்றானா? என்று. வரலாற்றுப் பின்னணியில் நாவலை எழுதும் போது வரலாற்று நிகழ்வுகளை மாற்றாமல் எழுத வேண்டும்.  அதில் சிறிது கற்பனையையும் வரலாற்றுக் கதாப்பாத்திரங்களோடு கற்பனைக் கதாப்பாத்திரங்களையும் இணைத்து எழுதப்படுவதுதான் ஹிஸ்டாரிக்கல்  ஃபிக்சன்  (Historical Fiction).
Image result for ரோமாபுரி பாண்டியன்

அந்த வகையில் எழுதப்பட்ட இந்த நெடிய நாவலின் கதையின் காலம் கிமு.30 லிருந்து கி.மு.20 வரை ஆகும். கி.மு.20ல்  பாண்டியப்பேரரசன் ஒருவன் தனது தூதுவனை ரோமாபுரிக்கு அனுப்பினான் என்ற வரலாற்றுக் குறிப்பினை எடுத்துக் கொண்டு அதனைச் சுற்றி இந்த நாவல் பின்னப்பட்டிருக்கிறது.  இதில் வரும் வரலாற்றுப் பாத்திரங்கள், சோழப்பேரரசன் கரிகால் பெருவளத்தான், பாண்டியப்பேரரசன் பெருவழுதி, வேளிர்குடி அரசன் இருங்கோவேள், ரோமப்பேரரசர் அகஸ்டஸ் சீசர், கடியலூர் உருத்திரங்கண்ணனார் ஆகியோர் (பட்டினப் பாலை பொருநராற்றுப்படை)

கற்பனைப் பாத்திரங்கள் தாமரை, முத்துநகை, களிக்கண்ணனார் செழியன், நெடுமாறன் ஆகியோரும் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிண்றனர்.

நாவல் முழுவதும் அந்தக்கால நாகரிகம், ஆடை அணி கலன்கள் சமூகப்பொருளாதார நிலை என்று பலவற்றைத் தெரிந்து கொள்ள முடிகிறது.கரிகால் பெருவளத்தான் காலத்தில் பூம்புகார் எவ்வளவு சீரும் சிறப்புமாக இருந்தது என்பதில் பெரிதும் ஆர்வம் கொண்ட கலைஞர் அங்கு ஒரு நினைவகம் அமைத்தது குறிப்பிடத்தக்கது. அதன் இப்போதைய நிலைமை என்னவென்று தெரியவில்லை. அதே மாதிரி மதுரை மற்றும் அதன் துறைமுகம் கொற்கையும் விளக்கப்பட்டிருக்கிறது. கொற்கையின் முத்துக்களின் உலகளாவிய புகழ் மற்றும் முத்து அணிகலன்களாக, முத்துக்கடுக்கண், முத்துக்கண்டி, முத்துச்சல்லி ஆகியவற்றை குறிப்பிடுவதோடு முத்துவால் செய்யப்பட்ட மருந்துகளான, முத்துக்கற்கம், முத்துச் சுண்ணம், மணப்பந்தலில் தூவக்கூடிய முத்து மணலையும் குறிப்பிடுகிறார்.

அதோடு அங்கு கிடைக்கும் சிப்பிகளான இடம்புரி, வலம்புரி, சலஞ்சலங் சங்கு, பாஞ்ச சண்ணியம் ஆகியவற்றையும் விளக்குகிறார். கொற்கையின் அங்காடியில் பலவித மொழிகள் பேசும் வணிகர்கள் வந்து சென்றதையும் கடைகள் அமைத்து வியாபாரம் செய்ததையும் எழுதுகிறார்.

பாண்டியனின் இன்னொரு பெயர் 'பஞ்சவர்' என்றும் பாண்டிய நாட்டிலே, குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை போன்ற ஐவகை நிலப்பகுதிகளையும் ஆண்டவர் என்பதால் அந்தப் பெயர் என்று சொல்லியிருப்பது எனக்கு புதிய செய்தி.

அதைத்தவிர ஆங்காங்கே அரசியலும் வெளிப்பட்டது. குறிப்பாக, "மூதறிஞர், பெருந்தலைவர் என்று மரியாதை செய்வது வேறு, அவர்களின் கொள்கைகளை ஏற்றுக் கொள்வது வேறு", "மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி", என்று அக்கால கட்டத்தில் சொல்வது போல் அமைத்திருக்கிறார்.

அதுபோல கரிகாலன் இமயத்தில் புலிச்சின்னம் பொறித்து தன் பெயரைச் சூட்டியதைச் சொல்லும் போது சிலைகள் வைப்பது எதிர்காலத்திற்கு வரலாற்றைச் சொல்லுவதற்குத்தான் என்று நியாயப்படுத்துகிறார்.
அவரின் வீரவசனங்களும் ஆங்காங்கே வெளிப்பட்டன. "நாங்கள் வாள் பிடித்துப் பழகியவர்கள் தவிர தாள் பிடித்துப் பழகவில்லை" போன்றவற்றைச் சொல்லலாம்.

அதோடு அவர் சொல்லும் ஒப்புவமைகள் ஆச்சர்யப்  படுத்துகின்றன. பனம் பழம் போன்ற கறுத்த மேனி, குன்றுகள் போன்ற மதில்கள், அத்திக்காய் நிறம், நட்டுவாக்காலி மீசை, களிற்றின் வயிறு போல் நிலைக்கதவுகள், கொன்றைக்காய் விரல்கள், வற்றிய பீர்க்கங்காய் போன்ற உடல் போன்றவை சில உதாரணம்.

ரோம் நகரின் அழகு, வரலாறு, அகஸ்டஸ் கால அறிஞர்கள் ஆகியவற்றைச் சொல்லும் போது அவர் நேரில் பார்த்த அனுபவம் வெளிப்படுகிறது. கிளேடியட்டர் சதுக்கத்தில் நம் பாண்டியன் காண்டாமிருகத்தை அடக்குவது கொஞ்சம் ஓவர்.


கல்கியின்  சிவகாமியின்  சபதம், பொன்னியின் செல்வன் போன்ற காவியங்களோடு  ஒப்பிட்டமுடியாதென்றாலும், கலைஞரின் நடைக்கென கண்டிப்பாய்படிக்கலாம்.
முற்றும்

14 comments:

  1. நல்ல அவதானிப்பு. அவர் ஒரு ஆச்சர்யம். என்றும் வியந்துபார்க்கும் உயரத்திலிருப்பார்.

    கலைஞரின் இலக்கிய அறிமுகத்துக்கும் நன்றி. அவர் திரைப்படங்களுக்கு எழுதிய வசனங்களே இலக்கியம். அது வரும் தலைமுறைக்குப் பாடமென்பேன்.

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாஸ்கர் , எல்லா இலக்கியவாதிகளுக்கும் அவரை மிகவும் பிடிக்கும்.ஆனால் எல்லா அரசியல்வாதிகளுக்கும் அவரைப்பிடிக்கும் என்று சொல்ல முடியாது .

      Delete
  2. அவர் நினைவாற்றல் மீண்டும் பெற்று, மீண்டு வர வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. அவர் இனிமேல் புதிதாக எதையும் சாதிக்கப்போவதில்லை , எதையும் சாதிக்கத்தேவையுமில்லை .சாதிக்க ஒன்றுமேயில்லை .

      Delete

  3. பூம்புகார் இன்றும் கண்காட்சி உள்ளது
    "ஏழைகளின் ஏந்தல்" என கலைஞரை
    அடைமொழி இடப்பட்டு உள்ளது

    ReplyDelete
    Replies
    1. சிறுபான்மை மக்களுக்கும் அவர் ஒருவர்தான் இருந்தார் .

      Delete
  4. "ஏன் ஜெயலலிதாவையும் சமாளிக்க முடியாமல் திணறி" anna...ithu konjam over aa theriyalai....JJ was defeated twice...even in her own constituency once!

    ReplyDelete
    Replies
    1. தம்பி பெப்பின், அவர் செய்த சாதனைகளைப்பேசுவதோடு , எதிர்கொண்ட சோதனைகளையும் பேசுவதுதான் நடுநிலைமை வகிக்கும் என்னைப்போன்ற மக்களுக்கு அழகு .

      Delete

  5. ஜெ வை ஒட்டு மொத்தமாக அரசியலை
    விட்டு அனுப்பியுள்ளார் கலைஞர்.இது
    போதாது

    ReplyDelete
    Replies
    1. ஜெ கூடா நட்பால் தனக்குத்தானே அழிவைத்தேடிக்கொண்டார் என்றுதான் சொல்லமுடியும் .ஒரே சமயத்தில் இருவர் சகாப்தமும் முடிந்து போனதுதான் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது .

      Delete
  6. ஊழலை அறிவியல் ரீதியாகச் செய்திடும் கலையையும் அறிமுகப்படுத்தியவர் கலைஞரே என்ற கரும்புள்ளிதான் இன்றுவரை நீங்காமல் நிற்கிறது. ஆனால், அவரது தமிழ்ப்பற்றும், பேச்சாற்றலும் பத்திரிகை நடத்தும் அனுபவமும், நிர்வாகத்திறமையும், 'கடிதோச்சி மெல்ல எறியும்' பாங்கும், தொண்ணூற்று இரண்டு வயதிலும் ராமானுஜருக்கு வசனம் எழுதும் அகலாத நினைவாற்றலும், இந்திய அரசியல்வாதிகளில் வேறு யாருக்குமே இல்லாத பண்புகளாகும். அதற்காகக் அவரை எவ்வளவு போற்றினாலும் தகும். நீங்கள் சொன்னதுபோல, அறிஞர் அண்ணா மறைவிற்குப் பிறகு கலைஞர் மட்டும் பதவிக்கும் கட்சிப்பொறுப்பிற்கும் வந்திராவிட்டால் திமுக என்ற கட்சி என்றோ அழிந்துபோயிருக்கும் என்பது உறுதி.

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
  7. ரே ாமின் முடி சூடாமன்னன் ஸீஸர்.
    தமிழகத்தின் முடிசூடா மன்னன் கலைஞர்.

    ReplyDelete
  8. தென்னகம் கண்ட மன்னவன்..

    ReplyDelete