Thursday, February 2, 2017

காட்டுப்பன்றி சொல்லும் ஜோசியம் ( ஒரு மீள் பதிவு )

பெப்ரவரி 2  கிரௌண்ட் ஹாக் நாள் பதிவு   




அமெரிக்கா  மெத்தப்படித்த மேதாவிகள் அதிகம் நிறைந்த நாடென்றாலும்,மூடநம்பிக்கைகள் அதிகம் கொண்டமூதேவிகள் நிறைந்த நாடும் கூட.
நம்ம ஊரில் எட்டு எப்படி கெட்ட நம்பரோஅதே போல் 13 இவர்களுக்கு துஷ்ட நம்பர்.  இங்குள்ள பல கட்டடங்களில் , 12க்கு அப்புறம்  14 ஆகவோ, 12 ’ வாகவோ இருக்கும்.

பல நாடுகளிலிருந்து வந்தவர்கள் தமது  மூடநம்பிக்கைகளையும் மூட்டைகட்டிக்கொண்டு வந்து விட்டார்கள் . நம் இந்தியர்களும் அமெரிக்காவுக்கு பேண்ட்-சர்ட்களை பேக் அப் பண்ணுவதற்கு முன் பில்லி சூன்யங்களை பிக்-அப் பண்ணியவர்கள்ஜோசியர்கள்தான் இங்கு குடியேறிய முதல் இந்தியர்களோ  என்ற சந்தேகம் எனக்கு வருவதுண்டு .இங்கே வெளியாகும் இந்தியப் பத்திரிகைகளில் கல்யாணம் முதல் கட்டையில போற சமாச்சாரம் வரை அத்தனைக்கும் இவர்களிடம் பரிகாரம் இருக்கும்.
இந்த மூடநம்பிக்கைகளில் ஒன்றுதான் கிரவுண்ட் ஹாக் டே[ground hog day].ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் 2-ம் தேதி இது கொண்டாடப்படுகிறது.குறிப்பாக பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள ஜெர்மானிய மக்கள் இதை அதிகம் அனுபவித்து கொண்டாடுகிறார்கள்.
அன்றைய தினம் அதிகாலை அணில் போன்ற தோற்றமுடைய அந்த மிருகம் தன் கூட்டைவிட்டு வெளியே வருவதற்காக பல்லாயிரக்கணக்கில் மக்கள் குழுமியிருப்பார்கள்அது வெளியே வந்து தன் நிழலைப் பார்த்துவிட்டு மீண்டும் உள்ளே ஓடிவிட்டால்குளிர்காலம் இன்னும் குறைந்த பட்சம் ஆறுவாரங்களுக்காவது நீடிக்கும் என்று அர்த்தமாம்தன் நிழலைப்பார்க்காமலே திரும்பிவிட்டால்விரைவிலேயே வசந்தகாலம் வரப்போகிறது என்று அர்த்தமாம்.
நம்ம ஊர் வானிலை அறிக்கை ரமணனே வெட்கித் தலைகுனியும் அளவுக்கு, ’பூவா தலையா’ போட்டு வருடந்தோறும் நடைபெறுகிறது  இந்த காமெடி கலாட்டா நிகழ்ச்சி .
சீதோஷண ஜாதகம் சொல்லப்போகும் அந்த அணிலின் வரவுக்காக கொஞ்சநஞ்சமல்ல சுமார் முப்பதாயிரம் பேர் காத்திருந்தார்கள்.கூட்டத்தினரின் குதூகலத்தை அதிகரிக்கும்  செவிக்கு உணவாக பேண்டு முழக்கங்களும்,வயிற்றுக்கு வாகாக பல்வேறு உணவு அயிட்டங்களும் நிரம்பி வழிந்தன.
கி.பி 1800லிருந்தே நடைபெற்று வருவதாகக் கூறப்படும் அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுபவர்கள் கண்டிப்பாக ஜெர்மன் மொழியில் மட்டுமே பேசவேண்டுமென்பது ஒரு செல்ல உத்தரவுஅப்படி பேசாமல் ஆங்கிலத்திலோ வேறுமொழியிலோ பேசினால் சின்னதாய் ஒரு அபராதமும் விதிக்கிறார்கள்.
காத்திருந்த கொஞ்ச நேரத்திலேயே சோம்பலாய் அந்த அணில் போன்ற ஒன்று வெளியே வந்துவிட்டு, ‘ஏம்பா ஒங்களுக்கெல்லாம் வேற வேலைவெட்டி இல்லையா?என்பதுபோல் பார்த்துவிட்டு தன் நிழலைப்பார்க்காமல் விடுக்கென உள்ளே சென்றது.அங்கிருந்த அனைவருக்கும் அத்தனை மகிழ்ச்சிஅணிலின் ஐதீகப்படிஅவர்களுக்குத்தான் சீக்கிரமே வசந்த காலம் வரப்போகிறதேநாங்கள் இங்கே அனுபவிக்கும் குளிரை அனுபவிக்காதவர்கள் இதைப்படிக்கும்போது ‘அட மூடர்களே’ என்று கமெண்ட் அடிக்கத்தான் தோன்றும்.ஆனால் உடலில் நுழைந்துஉயிரில் கலந்து உலுக்கி எடுக்கும் குளிரில் ஒருமுறை மாட்டினால்நீங்களும் அணில் ஜோஸியத்துக்கு ஆஜராவீர்கள்.
குளிர்காலத்தில் நாங்கள் எப்படி அவஸ்தைப்படுகிறோம் என்பதை அட்லீஸ்ட் நீங்க படித்தாவது அனுபவிக்கவேண்டுமென்று விரும்புகிறேன்.
காலை எழுந்ததும் கொதிக்கும் தண்ணீரில் குளித்தோ அல்லது குளித்தது போல் நடித்தோ முதலில் உடம்பு முழுக்க பாடி லோஷன் தடவ வேண்டும்அப்படி தடவா விட்டால் தோலெல்லாம் செதில் செதிலாக வெடித்துப் பாம்புத்தோல் போல் ஆகிவிடும்.அதன் பிறகு தெர்மல் என்று சொல்லப்படுகிற உள்ளாடைகளை[பாகிஸ்தானில் தயாரானது - வேற வழி?] ஜட்டி மேல் அணியவேண்டும். ஏறத்தாழ பரிதாபத்துக்குரிய ஸ்பைடர்மேன் எஃபெக்ட்தான் என்று வைத்துக்கொள்ளுங்களேன். அதுவும் சமீபத்தில் திருப்பூரில் வாங்கி வந்த பனியன்கள் மீது சனியன் பாகிஸ்தானியர்களின் தெர்மல்களை அணியவேண்டிவந்தபோது அவமானமாகத்தான் இருந்தது. அதன்பிறகு எப்போதும் அணியும் சட்டைபேண்ட்முழங்கால் வரை முரட்டு சாக்ஸ்பூட்ஸ் அணிந்து ஏதோ போருக்குப் புறப்படுவது போல் வீட்டை விட்டு புறப்படுவோம். இதில் பிரஸ்டீஜ் எதுவும் பார்த்து ஸ்டைலுக்காக சாதாரண ஷூ அணிந்து ஐஸ்கட்டிகளில் வழுக்கி விழுந்தால் நம்ம ஊர் தர்ம அடிகளுக்கு கொஞ்சமும் குறைச்சல் இல்லாத வர்ம அடிகள் கிடைக்கும்.
கெட்டப் இன்னும் முடியவில்லை. இவ்வளவுக்கு அப்புறமும் ஒரு லாங் கோட் அணிந்துகாதுகளுக்கு ஒரு மினி ஹீட்டர்தலைக்கு ஒரு க்ரிப்பான குல்லாய் அணிந்து முடிக்கிறபோது நம்மை நாமே நலம் விசாரிக்கிற பரிதாப நிலைக்கு வந்துவிடுவோம்.
இவ்வளவு பகீரத பிரயத்தனங்களுடன் கிளம்பினாலும் வெளியே வந்தவுடன் ஒரு காற்று அடிக்கும் பாருங்கள். உடுப்புகள் அத்தனைக்குள்ளும் ஊடுருவிஎலும்பைப் பதம் பார்த்துஉயிரை ஒரு கணம் ஊசலாடவிட்டுச்செல்லும். அந்த சமயங்களில் எல்லாம் பேசாம ஊருக்கே ஓடிப்போய் ஊறுகாய் வித்தாவது பொழச்சிக்குவோமா?என்று தோணும். அடுத்த கணமே இந்தப் புலிவால் விளையாட்டைவிட்டுப்போகமுடியாது என்கிற பிராக்டிகல் புத்தி வந்து தொலைக்கும்.
இங்கு பெய்கிற பனி எப்போதும் பார்க்க அழகாக இருக்குமே ஒழியஅதனால் அடைகிற இம்சைகள் அளவிட முடியாதது. வீட்டுமுன்னால் சேர்கிற பனிக்கட்டிகளை உடனுக்குடன் மெல்டிங் சால்ட் போட்டு அப்புறப்படுத்திவிட வேண்டும். இல்லாவிட்டால்நம்ம ஊர்ப்பக்கம் ரோட்டில் குறுக்கேஆட்டுக்குட்டிகளைத்தூக்கிப் போட்டுவிட்டுஅடிபட்டதற்கு நஷ்ட ஈடு கேட்பார்களே,அதுபோலவேநம் வீட்டுமுன்னால் உள்ள பனியில் வழுக்கி விழுந்துவிட்டுகேஸ்போடுவார்கள் சில அல்பைகள்.
இந்த குளிர்காலத்தின் உச்சக்கட்ட கோரம் ஷவ்லிங் [shoveling] தள்ளி முடிப்பதற்குள் நாக்கு தள்ளி ,ரெக்கைகள் பிஞ்சுறும்  .உறைந்தும் உறையாமலும் இருக்கிற பனிக்கட்டிகளுக்கு மத்தியில் விழுந்துவிடாமல் வீடு திரும்புவதென்பது ஒரு அட்வென்சருக்கு சமம். சில சமயம் பூட்ஸ் வழியாக சாக்ஸுக்குள் தண்ணீர் புகுந்து கால் எலும்பு சில்லிடுமே,. அந்த வேதனையை சொல்லிட வார்த்தைகள் இல்லை.
இப்போது புரிந்திருக்கும் அந்த அணில் ஐதீகத்தை அவ்வளவு ஆர்வமாக நம்பியதற்கான காரணத்தை.

நாட்டு நிலமை இப்படி இருக்க வீட்டு நிலைமையும் விபரீதம் தான். என் வீட்டுத்தோட்டம் ஒரே பழுப்பு நிறமாக்க் காட்சியளிக்கிறது. ரோஜாச் செடிகளில் வெறும் குச்சிகள் மட்டும் குடியமர்ந்து கொண்டிருக்க,புதினாஸ்ட்ராபெர்ரி,அத்தி,மற்றும் ஆப்பிள் செடிகள் அத்தனையும் கதம் கதம் ஹோ கயா தான். ஆனால் வசந்த காலம் வந்ததும் புத்தெழிலுடன் இவர்கள் அனைவருமே ஆஜராகிவிடுவார்கள்.
இத்தனை களேபரங்களுக்கும் மத்தியில் என் மனைவியின் மல்லிகைச்செடிகள் மட்டும் தோட்டத்திலிருந்து கிச்சனுக்கு இடம் சிஃப்ட் ஆகி சில்லென்று பூத்திருக்கும். கிச்சனில் சமையல் வாசனையை விடமல்லி வாசனை தூக்கலாக மணக்கும். இதில் ஒவ்வொன்றாக பூக்க பூக்கஅதை ஃபிரிட்ஜில் எடுத்து சேர்த்து வைத்துஞாயிறன்று அதைக் கோர்த்துஎன் மனைவி தலையில் சூடிக்கொள்வதைப் பார்த்து நாங்கள் ஆச்சர்யம் அடைவோம். [அடடா  ஒரு மல்லிகையே இன்னொரு மல்லிகையை சூடிக்கொள்கிறதே,.. மூனு புள்ளிஒரு ஆச்சர்யக்குறி!]
இவ்வளவையும் நான் எழுதிக்கொண்டிருந்த பிப்-அன்றுதான்அணிலின் ஆருடத்தை மீறிஇந்த ஆண்டு பெரும் பனிப்புயல் வீச இருப்பதாக அபாய அறிவிப்பு வெளியிட்டார்கள். பொதுவாக சூறாவளிப் புயலுக்கு மட்டுமே  பெயர் சூட்டி அழைப்பவர்கள்இந்த முறை வரவிருக்கும் பனிப்புயலுக்கு ‘நிமோ’ என்று பெயர் சூட்டிஎல்லா சானல்கள் வழியாகவும் ஏடாகூடமாக எச்சரித்தார்கள். அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் நான் வழக்கம்போல் இயங்கிக்கொண்டிருக்க,சுமார் மூனு மணி அளவில் உறைபனி  கொட்டோ கொட்டென்று கொட்டித்தீர்க்க ஆரம்பித்தது. சரி நம்ம பொழப்பு இனி நிமோ நாராயணாதான் என்று முடிவு பண்ணிநண்பன் ஜூடுக்கு போன் செய்தால்அவன் ஷவ்லிங் செய்வதற்காக ட்ரெட் மில்லில் ஓடிக்கொண்டிருந்தான்.
நாமளும் எக்சர்சைஸில் இறங்கி நிமோவுக்கு ஒரு மெமோ கொடுக்கத்தயாரானால் என்ன என்று யோசித்த கணமே வெறும் எலும்புக்கெல்லாம் எதுக்குடா எக்சர்சைஸு?’ என்று அப்பா ஒரு முறை கேட்டது  ஞாபகம் வந்ததும்நேற்றுதான் இந்தியாவிலிருந்து திரும்பியிருந்த டெனண்ட் பின்னி  தந்த நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ டி.வி.டி.யை ஆன் பண்ணிவிட்டு அமர்ந்தேன்.பார்த்தா நடுவில கொஞ்சம் படத்தை காணோம் .திருட்டு DVD போல இருக்கு .

Image result for groundhogs day
Add caption

6 comments:

  1. பலமுறை வந்து போயிருந்தாலும், டிசம்பர்-ஜனவரி-பிப்ரவரியின் பனிக்காலம் நியூஜெர்சியில் படுத்திவிட்டுத்தான் போகும் போல... காலம் காட்டும் காட்டுப்பன்றி பற்றி நான் எப்போதோ எழுதியது, இணைப்பில் உள்ளது. - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

    http://imayathalaivan.blogspot.com/2013/04/blog-post_8.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி இராய செல்லப்பா.

      Delete
  2. Replies
    1. எதைச்சொல்கிறீர்கள் பனியா கரடியா ?

      Delete
  3. அதிபயங்கர உங்கள் பனி விவரணம் எங்களுக்குப் பயத்தை விட நகைச்சுவையையே அள்ளித்தந்தது! தாங்கஸ் டு சோசியம் சொல்லும் க்ரவுண்ட் ஹாக்??!! ஹிஹிஹி...அங்க நீங்க இத வாசிச்சுட்டு நாங்க இங்க கஷ்டப்படுறோம் உங்களுக்கு என்னா சிரிப்புனு எங்களைத் திட்டுவது பனிப்புயல் புகை மாதிரி வெளிய வருது பாருங்க நீங்க திட்டத் திட்ட...பின்ன இப்படி எழுதினா பயமா வரும்!! சிரிப்புத்தான் வரும்...ரசித்தோம் இந்தப் பனியிலும் நீங்கள் ரசித்து!!! டைப்பிய பதிவை...

    ReplyDelete
    Replies
    1. இங்கே பனியும் பணியும் எப்போதுமே நாங்கள் பணியும் நிலையில்தான் இருக்கிறது .

      Delete