Monday, June 13, 2016

சொர்க்கத்தின் பிரதிநிதியான சீனப் பேரரசர் !!!!!!!!!!!!!!



சீனாவில் பரதேசி -11


பேரரசர்களின் அரண்மனை வாழ்வில், மதம் ஒரு முக்கிய இடத்தைக் கொண்டிருந்தது. ஸிங் (Qing) டைனாஸ்டியில் மஞ்சூரியன் 'ஷாமனிசம்' கடைப் பிடிக்கப்பட்டது. 'பேலஸ் ஆஃப் எர்த்லி ஹார்மனி யில் '( The palace of Earthly Harmony) இந்த வழிபாடுகள் அடிக்கடி நடந்தனவாம். அது மட்டுமல்லாமல் அரண்மனை வளாகத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வாழ்ந்ததால் சீனாவின் பழைய மதமான 'டாவோயிசமு'ம்  முக்கிய மதமாக இருந்தது. இரண்டு டாவோயிஸ்ட் ஆலயங்கள் உள்ளே இருக்கின்றன.

இவ்விரண்டு மதங்கள் தவிர இந்தியாவிலிருந்து வந்த புத்த மதமும் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்தது. இது ஸிங் டைனாஸ்டியிலிருந்துதான் ஆதிக்கம் பெற்றது. இன்னர் கோர்ட்டில் புத்தர் ஆலயங்கள் பல இருந்தன. திபெத்தின் புத்த மதமான "லாமாயிசம்" மும் அங்கே இருந்தன. புத்தரின் சிலைகளையும், ஓவியங்களையும் பல இடங்களில் பார்த்தேன்.
Incense Burner Imperial Garden

அதன்பின் வந்தது, பேரரசின் நந்தவனம் (Imperial Garden). இதுபோன்று மூன்று பகுதிகளில் நந்தவனங்கள் இருக்கின்றன. குளிர் காலமாகையால் அதன் அழகு முழுவதும் தெரியவில்லை.

மேற்குப் பகுதியில் இரண்டு ஏரிகள் இணையும் பகுதியில் ஒரு பெரிய தோட்டம் இருந்ததாம். அதில்தான் சீன கம்யூனிஸ்ட் பார்ட்டியின் தலைமையகமும், சீனக்குடியரசின் ஸ்டேட் கவுன்சில் கூடும் இடமும் இருக்கின்றன.

விலக்கப்பட்ட நகரின் கிழக்குப் பகுதியில் இரண்டு முக்கிய ஆலயங்கள் இருந்தன. ஒன்று பேரரசின் குடும்ப முன்னோர்கள் ஆலயம், இன்னொன்று பேரரசின் முன்னேற்ற ஆலயம். பேரரசர் இங்கு வந்து முன்னோரின் ஆவிகளுக்கு பூஜை போடுவாராம்.


அதோடு சம்மர், அரண்மனைக் கட்டிடங்களின் மேலே காணப்பட்ட உருவங்களையும் அதன் அர்த்தங்களையும் சொன்னதோடு, அதில் காணப்பட்ட வண்ணங்களுக்கு வெவ்வேறு அர்த்தம் இருப்பதாகச் சொன்னபோது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவள் சொன்னாள், மஞ்சள் என்பது பேரரசரின் வண்ணமாம். எனவே விலக்கப்பட்ட நகரின் பெரும்பாலான கட்டிடங்களிலும் மேற்புறத்தில் மஞ்சள் வண்ண டைல்கள் பதிக்கப்பட்டிருந்தன.

நான் சம்மரைக் கேட்டேன், "மஞ்சள் என்பது ஒருவேளை தங்கத்தையும், அதிகாரத்தையும் குறிக்கிறதோ ?" என்று. அவள் புன்னகைத்தவாறே என்னை ஆச்சரியமாய்ப் பார்த்து, "அப்படித்தான் இருக்க வேண்டும்", என்றாள்.

அப்போது வந்த ஒரு கட்டடத்தின் மேலே கறுப்பு டைல்கள் இருந்தன. அது ஏன் என்று கேட்டபோது சம்மர் சொன்னாள், "இது நூலகம் மற்றும் ஆவணக்காப்பகம்", கறுப்பு என்பது நீரோடு சம்மந்தப்பட்ட படியால் நெருப்புக்கு எதிரி. நெருப்பு அண்டக் கூடாதென்றுதான் இந்தக் கறுப்புக் கலர் இங்கு பதிக்கப்பட்டுள்ளது.

இன்னும் வெறு என்னென்ன ரகசியங்கள் சீன நாகரிகத்தில் இருக்கிறதோ என்று எண்ணியபடி நகர்ந்தபோது பட்டத்து இளவரசனின் அரண்மனைகள் மேல் பச்சை டைல்களைப் பார்த்தேன். அவள் கேட்காமலேயே சொன்னாள், "பச்சை நிறம் மரத்தோடு தொடர்புடையதால் வளர்ச்சியைக் குறிக்கிறது." பட்டத்து இளவரசன் நன்கு வளர்ந்து ஒரு நாள் பேரரசர் ஆக வேண்டும் என்ற அடிப்படையில் இந்தப் பச்சை வண்ணம் பயன்படுத்தப் பட்டது" என்றாள். ஆனால் நம்மூரில் கருணாநிதியின் மஞ்சள் துண்டுக்கோ , ஜெயலலிதா அணியும் பச்சை வண்ணத்திற்கோதான் அர்த்தம் தெரியவில்லை.

இதுவரை இந்த மாதிரி விஷயங்களில் யாரும் ஆர்வம் காட்டியதில்லை என்று சொன்ன சம்மர், இன்னொரு விஷயத்தையும் சொன்னாள். முக்கிய கட்டடங்களான வெளிப்புற மற்றும் உட்புற கட்டடங்கள் (Outer & Inner Courts) மூன்று மூன்றாக உள்ளது. இது 'சியன் டிரையகிராம்' (Qian Triagram) வடிவத்தில் இருப்பதால் சொர்க்கத்தைக் குறிக்கிறது. உள்ளே வாழுகின்ற இடங்கள் ஆறு ஆறாய் அமைந்திருப்பது குன் டிரையகிராம் (Kun Triagram) வடிவத்தில் பூமியைக் குறிக்கிறது" என்றாள்.

அதோடு சீனப் பேரரசர் மேலோகம் அல்லது சொர்க்கத்தின் நேரடி வாரிசாகக் கருதப்படுவதால் கடவுளுக்குச் சமமாக மதிக்கப்பட்டாராம்.

அங்கிருந்து அந்தப்புர இடங்களுக்குச் சென்று பலவித மாளிகைகளைப் பார்த்தோம். பேரரசரின் மனைவிகள் மற்றும் துணைவிகளுக்கு (Concubine) வேறுவேறு பதவிகள் இருந்தன. உதாரணமாக பட்டத்து ராணி முதலிடம் வகிக்க அவளுக்கு கீழே உள்ளவர்கள் அவர்களுடைய இடத்திற்குத் தகுந்தாற்போல இருப்பிடங்களும், தோழிகளும் வேலைக் காரர்களும் இருந்தனர்.

ஆனால் விலக்கப்பட்ட நகரின் அந்தப்புரத்தில் வசித்த ஒரே ஆண், பேரரசர் மட்டும்தான். மற்ற எல்லோரும் பெண்கள், விதை நீக்கப்பட்ட அலிகள் மற்றும்  திருநங்கைகள்  மட்டுமே.

அப்போது பாதி எரிந்து போன கட்டடம் ஒன்று வந்தது. அது முன்னாள் அரசிகளும், முன்னாள் துணைவிகளும் வாழும் இடம். அழகு அந்தஸ்து என்று அனைத்தையும் இழந்த அவர்கள் ஒரே இடத்தில் கூட்டமாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் கூட நெருங்கி வாழாமல் அரைப் பைத்தியமாக இருப்பார்களாம். பாவம் முழு நேரமும் முகட்டைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டியதுதான்.

அதுதவிர எல்லாக் கட்டடங்களிலேயும் பேரரசர் மற்றும் அவர் குடும்பங்கள் பயன்படுத்திய பலவித அரிய பொருட்கள் இருந்தன.

போர்சலின், பீங்கான் பாத்திரங்கள், செராமிக்ஸ் ஓவியங்கள், பலவித கடிகாரங்கள், தந்தங்கள், வெங்கலம், ஜேட் என்று சொல்லக் கூடிய விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றால் ஆன கலை வடிவங்கள் என்று எல்லா இடங்களிலும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.  

சம்மர் விடை பெற்றுப் போன பின் பல இடங்களில் அலைந்து திரிந்து பார்த்துக் களைத்துவிட்டு, மணியைப் பார்த்தால் 5 மணி ஆகியிருந்தது. கால்களில் வலி பின்ணிப் பெடலெடுத்தது. அப்படியே தள்ளாடி தள்ளாடி நடந்து, வெளியே வரும் வழியில் நுழைந்தேன். ஸ்டென்கன் ஏந்திய ராணுவவீரன் ஒருவன் என்னை நோக்கி ஓடி வந்தான். என்ன செய்வது  என்று அறியாமல் திகைத்து அப்படியே நின்றேன்.  


-தொடரும்.

6 comments:

  1. புத்தகங்களுக்கான குறியீடு அருமை .... http://ethilumpudhumai.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. எதைச் சொல்கிறீர்கள் என்று புரியவில்லை ஸ்ரீராம்

      Delete
  2. How are you remembering these Chinese names? Great!

    ReplyDelete