Thursday, June 9, 2016

கல்லூரி ஹாஸ்டலில் கிருஷ்ண லீலா !!!!!!!!!!

Washburn Hall, a landmark building in American College with historical significance in Madurai. Photo: R. Ashok
Washburn Hall, The American College, Madurai.
'வாஷ்பர்ன் ஹால்' மெஸ்ஸின் தலைவர் நாயர் சுட்டுப்போடும் மொறு மொறு நீள் வட்ட தோசையும், அதனோடு கொடுக்கப்படும் தேங்காய் சட்னியும் சாம்பாரும் நினைவுக்கு வர சடாரென்று எழுந்தேன். காலையில் எழுவதற்கு அது நல்ல ஒரு மோட்டிவேஷன். மணி ஏழு இருக்கும். குளித்து ரெடியாகி, சாப்பிட்டுவிட்டு 8.30க்கு துவங்கும் முதல் கிளாசுக்குப்போக சரியாக இருக்கும். எழுந்து நெட்டி முறித்துக் கொண்டே, கைலியை சரியாகக் கட்டிவிட்டு திசை திரும்பிப்போன, டூத் பிரஸ்ஸின் குச்சங்களில் ரூம்மேட் ரவீந்திரனின் கோல்கேட் பேஸ்ட்டில் சிறிது பிதுக்கி எடுத்து பரப்பிவிட்டு என் ரூமைவிட்டு வெளியே வந்தேன். என் ரூம் மேட் எக்கனாமிக்ஸ் ரவீந்திரன் ஏற்கனவே எழுந்து ஹாஸ்டலின் நடுவிலிருந்த பார்களில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தான்.  அது தினமும் நடப்பதுதான். என்னை பல நாட்கள் கூப்பிட்டு ஒத்து வராததால் இப்போதெல்லாம் கூப்பிடுவதில்லை. (ரவீந்திரன் சேலத்தில் தற்பொழுது உதவிக்கமிஷனர்).

 10வது படிக்கும்போது ஜெய்சங்கர் படத்தைப் பார்த்துட்டு அடுத்த நாள் காலையில் உடற்பயிற்சி செய்ய முயன்றபோது வந்த என் அப்பா, "எலும்புக்கு என்னடா எக்சர்சைஸ் ?" என்று கிண்டலடித்ததால் அன்று விட்டதுதான். இன்று வரை எக்சர்சைஸ் என்பது என் வாழ்கையில் இல்லை.

 At Washburn Hall with Minisam and Vanaraj.

வெளியே வந்து, ரவீந்திரன் கையசைத்துச் சொன்ன குட்மார்னிங்கை ஏற்றுக்கொண்டு, வாயில் நுரையுடன் இருந்ததால் கையைத் தூக்கி சல்யூட் அடித்துவிட்டு பாத்ரூம் நோக்கி நகர்ந்தேன்.

என்னுடைய 2-ஆவது ரூம்மேட் பாலா தூங்கிக் கொண்டிருந்தான். அவன் எட்டு மணிக்கு எழுந்தாலும், 8.30-க்குள் கிளம்பி வகுப்புக்குப் போய்விடுவான். பாட்டனி  படித்தான். பிற்காலத்தில் வக்கீலுக்குப்படித்து, தேர்தல் சமயத்தில் சும்மா ஒரு அப்ளிகேஷனை தட்டிவிட, அம்மா சீட் கொடுத்ததில் ஒரு தடவை MLA  ஆனான். அவனைப்பற்றி இன்னும் விவரமாக இன்னொரு முறை சொல்கிறேன்.

'வாஷ்பர்ன் ஹால்' அமெரிக்கன் கல்லூரியில் நடுநாயகமாக இருந்த ஒரு அசைவ ஹாஸ்டல். சதுர வடிவில் இரண்டு அடுக்கில் இருக்கும் கம்பீரமான சிவப்புக் கட்டிடம். முன்புறமும் பின்புறமாக இரும்புக்கிராதிகளால் அமைந்த இரு நுழைவாயில்கள். பின்புறகேட்டைத் திறந்து சென்றால் நீள்வடிவ மெஸ் வரும். வெள்ளிக்கிழமை தவிர தினமும் ஆட்டுக்கறி. சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்ட ஆட்டுகறிக் குழம்பு அமிர்தமாக இருக்கும். அதோடு அங்கு செய்யும் ரசம் ஆஹா அது அதிரசம் தான். வெள்ளிக்கிழமை மட்டும் வடை பாயாசத்தோடு சைவ உணவு இருக்கும்.
Washburn Hall


மாலையில் வாரமிருமுறை குஸ்கா இருக்கும். அதனை அடித்துக் கொள்ள உலகில் எதுவுமில்லை. அந்த நாள் மட்டும் உடற்பயிற்சி பாரில் அதிக போட்டி இருக்கும். நல்ல உடற்பயிற்சி செய்துவிட்டு ஒருபிடி பிடித்து விடுவார்கள்.

நிச்சயம் சொல்ல வேண்டிய ஒன்று, மாதமொருமுறை நடக்கும் 'Feast' என்று அழைக்கப்படும் விருந்து. பிரியாணி சிக்கன் வகைகள் இருக்கும். அந்த மூன்று வருடங்களில் என்னுடைய ருசிக்கும் நாவுக்கும் சுவையறிவு கூடியது அப்போதுதான்.

வெள்ளிக்கிழமை ரசமும் மற்ற நாள் ரசமும் முழுக்க வேறுவேறு. வெள்ளிக்கிழமை பருப்பு ரசம். ஆனால் மற்ற நாள் ரசம் ஆஹா ஆஹா,  அதன் ருசியை எப்படி விவரிப்பது ?. ஒரு நாள் மாலையில், ஒரு ஓரமாக பீடி பிடித்துக் கொண்டிருந்த நாயரிடம் குசுகுசுன்னு கேட்டபோது கிடைத்த அந்த ரகசியத்தை  உங்களுக்குச்  சொல்கிறேன்.

மட்டன் வேகவைத்த சூப் தண்ணீரில் தயாரிக்கப்படும் ரசமாம் அது. என் மனைவியிடம் சொன்னபோது "உவ்வே" என்று சொல்லிவிட்டாள்.உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். நன்றாக அமைந்துவிட்டால் எனக்கும் சொல்லியனுப்புங்கள்.  

வாரம் ஒருமுறை ஞாயிற்றுக் கிழமைகளில் பொங்கலும் ஆமை வடையும் இருக்கும். அந்த காம்பினேஷன்  யார் கண்டுபிடித்தார்களோ அவர்கள் நீடூழி  வாழியவே. பொங்கலின் நடுவில் சிறு குழியிட்டு  தளதளவென்று சாம்பார் ஊற்றி, அதோடு சிறிது தேங்காய்ச் சட்னியும் சேர்த்து பொலபொலவென்று பிசைந்து வலதுகையால் ஒரு கவளம் வாயில் வைக்க, இடதுகையில் இருக்கும் ஆமை வடையில் ஒரு கடி கடித்துக் கொண்டே சாப்பிட்டால்மதியம் சாப்பிடவேண்டிய அவசியம் இருக்காது.

அமெரிக்கன் கல்லூரி ஆண்கள் கல்லூரி, முதுகலைப் படிப்பு மட்டும் கோ எஜீகேஷன். முதுகலைப் பெண்கள் தங்கும் ஹாஸ்டல், எங்கள் ஹாஸ்டலுக்கு எதிரில்தான் இருக்கும். முழுவதுமாக வேலி அடைத்து கோட்டை போல இருக்கும் .உள்ளே எப்படி இருக்கும் என்று எங்கள் யாருக்கும் தெரியாது. ஒருநாளாவது உள்ளே போய் பார்க்கவேண்டும் என்ற ஆசை இன்றுவரை நிறைவேறவே இல்லை . ஆனா அந்தப்பக்கம் நடந்து போனாலே அந்த மீசைக்கார வாட்ச்மேன் உஷாராகி குறுகுறுன்னு பார்ப்பான் . அட மெஸ்னாலும் ஒன்னா இருந்திருக்கலாம் .

            தோசை ஞாபகம் வர பசி வயிற்றைக் கிள்ளியது.  பாத்ரூம் போகும் வழியில் கிருஷ்ணன் வந்தான். அவன் ஒரு வித்யாசமான பேர்வழி. அவன் எப்ப எந்திரிக்கிறான்னு  யாருக்கும் தெரியாது. அவ்வளவு காலையிலே எங்க போறான்னு எங்க யாருக்குமே தெரியாது .நாங்க எந்திரிக்கும்போது அவன் வெளியே இருந்து வருவான். எங்கடா போயிட்டு வரேன்னு கேட்டா கோயிலுக்குன்னு சொல்வான்.ஆமா கோயிலுக்கு போயிட்டு வந்தா பல்லு விளக்குவான் , ஒண்ணுமே புரியலயே.  நான் பார்த்த போது வேப்பங்குச்சியை வச்சு பல்லு விளக்கிட்டிருந்தான். கறுப்பு நெற்றியில் துல்லியமாக இட்ட திரு நீறு  எடுப்பாக இருந்தது. “ஏண்டா வேப்பங்குச்சி”ன்னு கேட்டா , “ஆலும்  வேலும் பல்லுக்குறுதி”ன்னு சொல்லிட்டு, என்னைப்பார்த்துப்  புன்னகைத்தான். அவன் முகம் முழுக்க பருக்களால் நிறைந்திருக்கும். பசங்க சொல்வாங்க, அதிகமாக சைட் அடிக்கிறவங்களுக்கு பரு வரும்னு. அது உண்மையான்னு தெரியல. ஆனா எனக்கு மூணாவது ஆண்டு படிக்கும்போதுதான் பரு வந்தது. அதுவும் வலதுபுறத்தில் மட்டும். “டேய் ஆல்ஃபிக்கு ஒரு தலைக்காதல்ரா அதான் ஒருபுறம் மட்டும் வருது”ன்னு சொல்வாய்ங்க.

ஆனா இவன் காலைல எந்திரிச்சு குளித்து முடித்து தினமும் வெளியே கோயிலுக்குப் போய்ட்டு சாமி கும்பிட்டு வர்றவனாச்சே. ஏன் இவனுக்கு இவ்வளவு பரு என்று எனக்கு விளங்கவில்லை. நெத்தியிலே எப்பவும் திருநீறு இருக்கும். ஒரு நாள் கொஞ்சம் அதிகமா தூங்கிட்டேன் போல. எழுந்து பாத்தா ஹாஸ்டலே கொஞ்சம் பரபரன்னு இருந்தது. காலை வேளையிலயே,  ஹாஸ்டல் வார்டன் ஜான் சகாயம் வந்திருந்தார். மனுஷன் சஃபாரி போட்டு டக்டக்குனு நடந்து வந்தா ஹாஸ்டலே நடுங்கும். ரொம்ப கண்டிப்பானவர் அவரு. சிறு பிழைக்குக் கூட என்கொயரி ஸ்லிப் வந்துரும். காலையில எங்க ரூம் பக்கம் வாட்ச்மேன் குருசாமி வந்தா, ஐயையோ என்கொயரி வந்துருச்சோன்னு பயப்படுவோம். எதிரே எக்சர்சைஸ் முடித்து வேர்வை வழிய வந்த ரவீந்திரனைக் கேட்டேன்.

 "என்னா ரவி, இன்னக்கி யார் மாட்னான்னு"  
“நம்ப கிருஷ்ணன்தான்”
கிருஷ்ணனா,  என்னாச்ச?”'

"அவன் டெய்லி வேப்பங்குச்சில பல்விளக்கிறேன்னு சொல்லிட்டு, லேடீஸ் ஹாஸ்டல் பின்புறம் வேப்பமரத்தில் ஏறி பாத்ரூம்ல எட்டிப்பார்த்தானாம். டெய்லி  இது நடந்திருக்கு.  இன்னிக்கு வாட்ச்மேன் கையும் களவும பிடிச்சிட்டாரு. யாரை நம்புறதுன்னே தெரியல”,ன்னு சொன்னான்.

 அடப்பாவி காலையிலே கோயிலுக்குபோய் அம்மன்  தரிசனம் செய்றானு  நினைச்சா, இவன் அம்ம , சரி விடுங்க . என்ன பாத்துறுப்பான்னு நினைத்துக் கொண்டேநான் ரெடியாகி கிளாசுக்குப் போனபோது, எதிரே தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டே கிருஷ்ணன் வந்தான். “என்னடா என்னாச்சு?’ன்னு கேட்டேன். பதில் சொல்லாம விறு விறுன்னு நடந்து அவனோடு ரூமுக்குள்ளே போனான். அது தான் அவனை கடைசியா நான் பாத்தது. கிருஷ்ணா எங்கடா இருக்க , அப்படி என்னதாண்டா பார்த்த , சொல்லாமலேயே  போயிட்டியே? .


முற்றும் .

4 comments:

 1. இனி என்னத்த சொல்றது ...https://ethilumpudhumai.blogspot.in

  ReplyDelete
  Replies
  1. ஆமா அதான, என்னத்தைச்சொல்றது ஸ்ரீராம்.

   Delete
 2. அண்ணாமலையில் வருவது போல பாரரரரரரரம்பு :)

  ReplyDelete
  Replies
  1. நான் அண்ணாமலையையும் பார்க்கலை , பாம்பையும் பார்க்கலை பாஸ்கர் .

   Delete