Tuesday, June 7, 2016

மேலோகமும் பூலோகமும் இணையும் இடம் !!!!!!!!!!

சீனாவில் பரதேசி -10



முதல் மண்பத்திலிருந்து பின்புறம் இறங்கும் போதும் சரி, அடுத்த வந்த இரண்டு சிறிய மண்பத்திலிருந்து முன்புறம் ஏறும் போதும், படிகளுக்கு நடுவே கீழிருந்து மேல் வரை ஒரு பெரிய பளிங்குப்பலகை இருந்தது. மிகவும் நுண்ணிய வேலைப்பாடுடைய அந்தப் பளிங்கு கிட்டத்தட்ட 200 டன் எடை என்று சம்மர் சொன்னாள். ஏறக்குறைய 55 அடி உயரம் 10 அடி அகலம், 6 அடி திக்னெஸ் உள்ள இந்தக்கல்தான் சீனாவிலேயே மிகப்பெரியதாம். ஒரே கல்லில் இருந்த சிற்ப வேலைப்பாடுகள் ஆச்சரியமூட்டின. அது எப்படி உடையாமல் புதைக்கப்பட்டதோ தெரியவில்லை.
The carved Marble stone 


"ஹால் ஆஃப் சுப்ரீம் ஹார்மனி"க்குப்பின் வந்த மண்டபத்தின் பெயர் "ஹால் ஆஃப் சென்ட்ரல்  ஹார்மனி". முன் மண்டபத்துக்குப் போகும்முன் பேரரசர் இங்கு சிறிது நேரம் உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு பின்னர்தான் முன் ஹாலுக்குப் போவாராம். இதிலும் நடுவாந்திரமாக ஒரு சிம்மாசனம் இருந்தது.


இதன் பின் வந்த மண்டபத்தின் பெயர் 'ஹால் ஆஃப்' பிரசர்விங் (Preserving) ஹார்மனி" என்பது. இந்த மண்டபத்தில் தான் முன் ஹாலில் நடக்கப்போகும் சடங்குகளுக்கு ஒத்திகை நடக்குமாம். இங்கும் ஒரு சிம்மாசனம் இருந்தது. ஆனால் இந்த மூன்றில் மிகப்பெரியது முன் மண்டபமான "ஹால் ஆஃப் சுப்ரீம் ஹார்மனியில்” இருப்பதுதான்.   
Add caption


மண்டபத்தின் ஒருபுறம் சீன மொழியிலும் மறுபுறம்  ஆங்கில மொழியிலும் அந்த இடத்தின் விவரங்களை எழுதி வைத்திருந்தார்கள். ஆனால் முழுதும் படிக்கவிடாமல் சம்மர் அவசரப்படுத்தியதால், அதனை செல்போனில் படம் எடுத்துக் கொண்டு நகர்ந்தேன்.

இந்த மூன்று மண்டபங்களின் இடதுபுறமும் வலது புறமும் சிறிது இடைவெளிவிட்டு இரண்டு பெரிய மண்டபங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்று ராணுவத்தலைவர்களின் பயன்பாட்டுக்கும் மற்றொன்று கலை நிகழ்வுகளுக்கும் பயன்பட்டனவாம். ராணுவ மண்டபத்தில்தான் பேரரசர் தமது அமைச்சர்களையும் மற்ற அதிகாரிகளையும் சந்தித்து  நாட்டு நடப்புகளைக் கவனிக்கும் நிகழ்வுகள் நடக்கும். மற்றொன்றில் அரண்மனையின் அச்சகம் செயல்பட்டது. அதோடு “கன்பியூசிஸ்” போன்ற தத்துவ மேதைகளின் சீடர்களும் படித்தவர்களும் வந்து சொற்பொழிவு ஆற்றுவார்களாம். அதன் பின்னர் அதுவே தலைமைச் செயலகம் ஆனதாம். உலகின் மூத்த மிகச் சிறந்த நாகரிகத்தை உடையவர்கள் சீனர்கள்.


அங்கிருந்து வடகிழக்குப் பகுதியில் மூன்று அரண்மனைகள் இருக்கின்றன. அங்குதான் பட்டத்து இளவரசன் தங்கியிருப்பானாம்.  அவனுக்கு தனிப்பட்ட முறையில் பலவித வசதிகள், மரியாதைகள் உண்டு. அதோடு அவுட்டர் கோர்ட் என்று சொல்லப்படும் வெளி மண்டபங்கள்  முடிந்துபோக, இன்னும் உள்ளே போனால் இன்னர் கோர்ட் என்று சொல்லக் கூடிய உள் மண்டபங்கள் வந்தன. இந்த இரண்டையும் பிரிக்க மிகப்பெரிய வெட்ட வெளி இருந்தது. இன்னர் கோர்ட்டில்தான் பேரரசரும் அவருடைய குடும்பங்களும் தங்கிய பலவித மாளிகைகள் இருந்தன. ஷிங்  (Qing) பரம்பரையின் பேரரசர்கள் இங்கு தங்கிஇருந்ததோடு எல்லா அரசாங்க அலுவல்களையும் இன்னர் கோர்ட்டிலிருந்தே கவனித்துக் கொண்டார்களாம்.  அவுட்டர் கோர்ட் முக்கிய நிகழ்வுகளுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டது.

இன்னர் கோர்ட்டின் நடுவில் மூன்று அரண்மனை மண்டபங்கள் இருந்தன. அவை “பேலஸ் ஆஃப் ஹெவன்லி பியூரிட்டி” (Palace of Heavenly Purity), “ஹால் ஆஃப் யூனியன்”, பேலஸ் ஆஃப் எர்த்லி டிரான்குல்ட்டி” (Palace of Earthly Tranquility). இதில் யான்  ( Yan) மற்றும் சொர்க்கத்தின் பிரதிநிதியான பேரரசர் 'ஹெவன்லி பியூரிட்டி' என்ற அரண்மனையில் தான் தங்குவார். யின் ( Yin) மற்றும் உலகத்தின் பிரதிநிதியான பேரரசி தங்குவது 'எர்த்லி டிரான்குல்ட்டி' என்ற அரண்மனையில். பின்னர் மூன்றாவது அரண்மனையான 'ஹால் ஆஃப் யூனியன்" எதற்கென்று நீங்களே ஊசித்திருப்பீர்கள். அதுசரிதான். இருவரும் இணைந்து தாம்பத்யம் நடத்த இந்த ஹால் பயன்பட்டது. யின்னும் யானும் அதாவது மேலோகமும் பூலோகமும் இணையும் நிகழ்வு என்று அதனைச் சொல்கிறார்கள்.    

தற்சமயம் ஹால் ஆஃப் யூனியனில், ஸிங் டைனாஸ்டியைச் சேர்ந்த 25 பேரரசரின் முத்திரைச் சின்னங்கள் (Imperial seal) மற்றும் பலவித புனிதப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
Crown of Empress Cixi


இந்த மூன்று அரண்மணைகளின் பின்புறம், பேரரசின் நந்தவனம் இருக்கிறது (Imperial Garden). இது பலவித பழைய மரங்கள், ஓய்வெடுக்க  சிறுசிறு மண்டபங்கள், செடி கொடிகள், சிறுசிறு செயற்கைக் குன்றுகள் என்று சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட ஒன்றாகும். ஆனால் குளிர் காலம் என்பதால் அதன்  அழகு அவ்வளவாய்த் தெரியவில்லை.

அதன் பின்புறமும் பலவித அரண்மனைகள் இருந்தன. ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்பின் வந்த ஒரு முக்கிய அரண்மனை "ஹால் ஆஃப் மென்ட்டல் கல்ட்டிவேஷன்" என்பது. ஒரு காலத்தில் இது பேரரசர் தங்குவதற்கும் மற்றும் அலுவலகமாகவும் பயன்பட்டது. பேரரசி சிஸி (Cixi) யின் காலத்தில் இதுவே அரசாங்க அத்தானி மண்டபமாகவும் பயன்படுத்தப்பட்டதாம். இதனைச் சுற்றிலும் பேரரசின் கிராண்ட் கவுன்சிலின்  பல்வேறு அலுவலகங்கள் இருந்தன.

இதற்கப்புறம் வந்த முக்கியமான இடம் "பேலஸ் ஆஃப் டிரான்குயில் லாஞ்சிவிட்டி( Palace of Longivitty)என்பது. இது சிஸ்லாங் பேரரசர் தனது ஓய்வுக்குப்பின்னர் பயன்படுத்துவதற்காக கட்டப்பட்டது. அதன் உள்ளே தோட்டங்கள் ஆலயங்கள் என்று அமைக்கப்பட்டிருந்தன. அதன் நுழைவாயிலில் பளபளப்பான டைல்களால் ஒன்பது டிராகன்கள் அமைக்கப்பட்டிருந்தன.
Nine Dragon 


அதன் உள்ளே போக அனுமதியில்லை. ஏனென்றால் பேலஸ் மியூசியத்துடன் வேர்ல்ட் மானுமன்ஸ் பண்ட் (World Monuments Fund) என்ற நிறுவனம் இணைந்து மராமத்துப் பணிகள் உள்ளே நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்த நீண்ட கால புராஜக்ட் 2017ல் தான் முடியுமாம். ஒரு படத்தை எடுத்துவிட்டு உள்ளே மேலும் நகர்ந்தோம்.


- தொடரும்.

8 comments: