Monday, April 11, 2016

கக்கக்கா கிக்கீ கீக்கி கெக்கேகே குக்குக்குக்குக்கூ கேக்கே !!!!!!!!


சீனாவில் பரதேசி -7

இதன் முதல் 6 பகுதிகளைப்படிக்க கீழே சுட்டவும்

        பகுதி  1 :  http://paradesiatnewyork.blogspot.com/2016/02/blog-post_22.html
       பகுதி  4: http://paradesiatnewyork.blogspot.com/2016/03/blog-post_14.html
       பகுதி  5: http://paradesiatnewyork.blogspot.com/2016/03/blog-post_21.html
       பகுதி  6: http://paradesiatnewyork.blogspot.com/2016/04/blog-post.html

அந்த மஞ்சள் முகப்பெண்ணை நான் இதுவரை பார்த்ததில்லை. எனக்கு ஜோஹன்னாவையும் அவள் அம்மாவையும் தவிர இங்கே சீனப்பெண்கள் யாரையும் தெரியாது. இவள் யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே நின்றேன். "ஐ கீக்கி, நைஸ் மீட்," என்றாள். கீக்கியா எந்தக்கீக்கி? ."கக்கக்கா கிக்கீ கீக்கி கெக்கேகே குக்குக்கூ கெக்கே" என்ற பாடல் வேறு அசந்தர்ப்பமாக ஞாபகத்திற்கு வந்தது. ஒருவேளை அப்படி இருக்குமோ, ஃபீல் இன் என்று பெயர் பார்த்தும் இங்கு வந்தது தப்போ என்று பல  யோசனைகள் போய்க் கொண்டிருக்கும்போது, அவள் சொன்னாள், "ஐ நைடூட்டி" என்று. எனக்கு மேலும் தூக்கி வாரிப்போட்டது. “ஜோஹன்னா எங்கே?”, என்று கேட்டதற்கு அவள் டூட்டி முடிந்துவிட்டதாகவும் இவள்தான் ரிஷப்சன் நைட்டூட்டி என்று எனக்கு விளங்குவதற்கு சில நேரம் பிடித்தது. அப்போதுதான் எனக்கு நிம்மதி வந்தது. "ஹீட் சரியாக வேலை செய்கிறதா?", என்று கேட்டாள். அப்போதுதான் ஞாபகம் வந்தது. நேற்றிரவு ஹீட்டர் சரியாக வேலை செய்யவில்லை. ஜோஹன்னா சொல்லியிருந்தாள், சரி செய்து விடுவதாக. ஹீட்டர் செக் பண்ணதில் சரியாக வேலை செய்யவில்லை. அதனை மாற்ற வேண்டும் என்றும் வேறு ரூம் கொடுப்பதாகவும், அப்போதுதான் ஒருவர் காலி செய்ததாகவும் சொன்னாள்.
Feel INN  by night
கீக்கிக்கு நன்றி சொல்லி அனுப்பிவிட்டு ஒரு ஐந்து நிமிடத்தில் பேக் செய்து ரிஷப்சனுக்குச் சென்றேன். அவள் என்னை அழைத்துக் கொண்டு ஒரு சூட் கேஸை தரதரவென்று இழுத்துக் கொண்டு முன்னால் சென்றாள். அவள் பின்னால் நானும் செல்ல ஒரு சாவிக் கொத்தை எடுத்து ஒரு ரூமைத்திறந்து, கதவைப் பிடித்துக் கொண்டு உள்ளே போகச் சொன்னாள். உள்ளே போனால், அங்கே நம்ம மங்களூர் தேவதை மிதுளா மேக வண்ண இரவு உடையில் படுக்கையில் சாய்ந்திருந்தாள். நான் அவளைப் பார்த்து திடுக்கிட்டு மிரள, அவள் என்னைப் பார்த்து மிரள, முதலில் சமாளித்தது அவள்தான். "ஹாய் ஆல்ஃபி, வாட் ஹேப்பண்ட்?" என்றாள்.  ஒருவேளை அவள் ரூமில்தான் தங்க வேண்டுமோ என்று யோசித்து திகைத்து நிற்க.
கீக்கி உள்ளே வந்து அவளும் மிதுளாவைப் பார்த்து ஜெர்க் ஆகி, சாரி சாரி என்று ஒரு பத்துமுறை சொல்லியிருப்பாள். இந்த கீக்கி என்ற கிறுக்கி, சப்பை மூக்கி, ரூம் மாதிரி வந்து திறந்து கோக்கு மாக்கி ஆக்கிவிட்டாள். நானும் மிதுளாவிடம் சாரி சொல்லிவிட்டு வெளியே வந்தோம்.
அடுத்த ரூமைத்திறக்கப்போன கீக்கியை, “கொஞ்சம் இருடி”, என்று தடுத்துவிட்டு கதவைப் பலமாகத்தட்ட ஒன்னும் பதிலில்லை. ஆனால் அந்த பக்கத்தில் இருந்த ஸ்பானிய பெண் கதவைத்திறந்து, "வாட்ஸ் ர்ர்ராங்?" என்றாள். உள்ளே ஒருவரும் இல்லையென நன்றாகத் தெரிந்த பின்னர்தான் கீக்கியை திறக்க விட்டேன். திறந்துவிட்டு, ஒரு கீயை எனக்குக் கொடுத்துவிட்டு, இன்னொரு கீயை அவள் எடுத்துக் கொண்டு போய்விட்டாள் கீக்கி. புது ரூமின் அமைப்பு பழைய ரூம் மாதிரி இருந்தாலும், அந்த ரூம் நல்ல சூடாக இருந்தது.
சூட்டில் நிம்மதியாக கிறங்கி,உறங்கி,கனவில் ஜோஹன்னா, மிதுளா, ஸ்பானிய பெண், கீக்கி புடை சூழ “கக்கக்கா கிக்கிக்கீக்கி கெக்கக்கே குக்குக்குக்கூ கேக்கே”, என்று பாடினேன்.
 காலையில் எழுந்து இறங்கி நடந்தேன். ஒரு 5 நிமிடம் நடந்த பின் பெரிய கோட்டைச் சுவர் வந்தது. குறைந்தது 30 அடி உயரம் இருக்கும். எதிரே வந்த ஒருவரிடம் கையில் சீனமொழியில் எழுதியிருந்த விலக்கப்பட்ட நகரத்தின் முகவரியைக் காண்பிக்க, அவர் அந்தச் சுவரைக் காண்பித்து இதுதான் என்றார்.
Outside wall 
சுவரைச் சுற்றி நடக்க நடக்க போய்க் கொண்டேயிருந்தது. ஆனால் நுழைவாயில் வரவில்லை. சுமார் 20 நிமிடங்கள் வேகநடை நடந்ததும் அலங்கார நுழைவாயில் வந்தது. அதன் நடுவாந்திரத்தில் ‘மாவோ’ என்று அழைக்கப்படும் ‘மா சேதுங்’ படம் மாட்டப் பட்டிருந்தது. ஆங்காங்கே  மிடுக்கான சீன ராணுவத்தினர் நவீன ஸ்டென்கன் ஏந்தி விழிப்புடன் நின்றிருந்தனர். நான் ஒருவனைப் பார்த்து சிரித்ததற்கு, அவன் பதிலுக்குச் சிரிக்கவில்லை. “போட்டோ எடுக்கலாமா?”, என்று கேட்டதற்கு துப்பாக்கியால் இல்லை என்று ஆட்டினன். அதன் பிறகு நான் ஏன் அங்கே நிற்கிறேன். அந்த நுழைவாயிலில் இருந்த மெட்டல் டிடெக்டர் வழியாக உள்ளே நுழைந்தேன். உள்ளே தூரத்தில் இன்னொரு அலங்கார நுழைவாயில் தெரிந்தது. அதன் இருபுறமும் நுழைவுச்சீட்டு வாங்குமிடம் தெரிந்தது. அந்த மிகப்பெரிய மைதானத்தில் ஏகப்பட்ட டூரிஸ்ட்கள் இருந்தார்கள். நுழைவுச் சீட்டை வாங்கிவிட்டு வரும் வழியில் கைட் சர்வீஸ் என்று போட்டிருந்தது. ஆஹா என்று உள்ளே நுழைந்தேன். ஒரு மணி நேரத்திற்கு 200 யுவான் என்றும் ஆனால் சுற்றிப் பார்க்க பல மணிநேரம் ஆகும் என்று சொன்னார்கள். அதற்குள் அந்தப்பெண் கைட் வந்து, “முக்கிய இடங்களை 2 மணி நேரத்திற்குள் பார்க்கலாம்”, என்றாள். சம்மதித்து 400 யுவான் கொடுத்து ரசீது வாங்கிக் கொண்டதுதான் தாமதம், விறு விறுவென உள்ளே நடந்தாள். நான் ஓட்டமும் நடையுமாக பின் தொடர்ந்தேன். “நமக்கு நேரமில்லை சீக்கிரம் வா”, என்று சொல்லிவிட்டு வெகுவேகமாக நடந்தாள்.

அவளை ஓடிப்பிடிப்பதற்குள் விலக்கப்பட்ட நகரத்தின் சில குறிப்புகளை சொல்லி விடுகிறேன்.
1.   Forbidden City என்றழைக்கப்படும் விலக்கப்பட்ட நகரம் சீனப்பேரரசின் மையமாகவும் பேரரசர் தங்கும் அரன்மனையாகவும் பல நூறு ஆண்டுகள் இருந்தது.
2.   மிங் வம்சம் தொடங்கி (Ming) ஷிங் (Qing) வம்சம் வரை கி.பி. 1420 முதல் 1912 வரை இது பேரரசர்களின் (Emperor) இருப்பிடமாக இருந்தது.
3.   கி.பி.1406-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்நகரம் 1420ல் கட்டி முடிக்கப்பட்டது.
4.   இதில் மொத்தம் 980 கட்டிடங்கள் உள்ளன. மொத்த பரப்பளவு 180 ஏக்கர்.அம்மாடி அம்மாடி அம்மாடி, இதைக் கேட்டவுடனே முட்டி லேசாக வலிக்க ஆரம்பித்துவிட்டது.
5.   1925ல் இது அரண்மணை மியூசியமாக மாற்றப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடப்பட்டது.
6.   இங்கு குறைந்தபட்சம் ஒரு ஆண்டுக்கு 14 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) சுற்றுலாப்பயணிகள் வருகின்றனராம்.
7.   இந்த அரண்மனை மியூசியம்தான் உலகத்தின் அதிக நபர்கள் பார்த்த இடமாகும்.
8.   1987ல் யுனெஸ்கோ நிறுவனம் இதனை World Heritage Site ஆக அங்கீகரித்தது . வாருங்கள் நண்பர்களே, உள்ளே போவோம்.

தொடரும்.  

6 comments:

  1. விலக்கப்பட்ட நகரம் என்பதே ஆவலைத் தூண்டுகிறது. அப்படி உள்ளே என்னதான் இருக்கிறது என்று பார்க்க நானும் கூட வருகிறேன். எந்த யுவானும் கொடுக்காமலேயே...!!

    ReplyDelete
  2. பயணக்கட்டுரை(கள்) துப்பறியும் கதைகளாய் மாறும் ரசவாதம் கண்டேன்.. அருமை நண்பர் ஆல்பி! முந்திய கட்டுரைகளைப் படித்துவிட்டு மீண்டும் வருகிறேன்..நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ஐயா .தவறுகள் இருந்தால் மன்னிக்கவும் .

      Delete
  3. //கக்கக்கா கிக்கீ கீக்கி கெக்கேகே குக்குக்குக்குக்கூ கேக்கே// பாடலில் இவை தமிழின் மெய் எழுத்துக்களில் ஜாலம் என கவனிக்கத் தவறியவர்கள் பலர்.

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் உங்களைப்போன்ற கவிஞர்களுக்குத்தானே தெரியும், அட்லாண்டா பாஸ்கர் .

      Delete