Monday, April 4, 2016

சீனப்பெருஞ்சுவரில் பிரிந்த ஜோடி!!!!!!!


சீனாவில் பரதேசி -6


இதன் முதல் ஐந்து பகுதிகளைப்படிக்க கீழே சுட்டவும்
பகுதி  1 :  http://paradesiatnewyork.blogspot.com/2016/02/blog-post_22.html
       பகுதி  4: http://paradesiatnewyork.blogspot.com/2016/03/blog-post_14.html
       பகுதி  5: http://paradesiatnewyork.blogspot.com/2016/03/blog-post_21.html

       கோவா குடும்பம் எங்களை  தப்பாக நினைத்துவிட்டது போல் இருக்கிறது. என்னை அப்பாவாகவும், என் மகள் மருமகனோடு சீனாவுக்கு சுற்றுலா வந்திருப்பதாக நினைத்துக் கொண்டார்கள். ஆமாம் இவ்வளவு வெள்ளையான அழகான பெண்ணை எப்படி என் மகளாக என்று எண்ணிக் கொண்டிருக்கும்போது, மிதுளா வந்து சேர, அப்போது கோவா பெண்மணி "ஆஹா உங்கள் மருமகள் வந்தாச்சு", என்றார்கள். அப்போதுதான் எனக்கு உரைத்தது. அந்த திராவிடப் பையனைத்தான் எனக்கு மகன் என்று நினைத்து விட்டார்கள். உடனடியாக மறுத்தேன். அதற்குள் முகேஷும் வந்துவிட, அந்தப் பெண்மணி, "நல்ல ஜோடி" (Nice Couple) என்றார். அந்தப்பையன் சும்மா இருந்தான்.உள்ளுக்குள் ரசித்திருப்பான் போல. அவனுக்கு ஒரு எண்ணம் இருப்பது அவனுடைய முகத்தில் பிரதிபலித்தது. ஆனால் மிதுளாவுக்கு சுர்ரென கோபம் வந்தது. நானும் முதலில் அப்படித்தான் அந்தப்பெண்மணியிடம் சொன்னேன். அதற்கு அந்தப் பெண், "அதனால் என்னஇருவரும் நல்ல ஜோடி, ஒரு வேளை அப்படி ஒரு விருப்பம் இருந்தால், இங்கே இத்தனை இந்தியர் இருக்கிறோம். திருமணத்தை சீனப்பெருஞ்சுவரில் வைத்து முடித்துவிடலாம்" என்றாள்.  
அப்போது மிதுளாவுக்கு மிகுந்த கோபம் வந்துவிட, அவள் எங்களை விட்டு விலகி தனியே போய்விட்டாள். அவள் அப்படிப்போனது எனக்கென்னவோ ஆறுதலாக இருந்தது, ஏனென்று புரியவில்லை. ஒருவேளை அவளுக்கு இன்னும் நல்ல மாப்பிள்ளை கிடைப்பான் என்று நினைத்தேனோ என்னவோ, ஆனால் முகேஷ் முகத்தைப் பார்க்க சகிக்கவில்லை.  

வருகின்ற வழியில் சில டி ஷர்ட்டுகளை விற்றுக் கொண்டிருந்தார்கள். உன்னிப்பாகப்  பார்த்தால், அட நம்ம ஒபாமா படம், ஆனால் தொப்பியெல்லாம் வைத்து வேறு மாதிரியாக இருக்கிறார் என்று பார்த்தேன். அதோடு ஸ்பெல்லிங் obamao என்று தப்பாக எழுதியிருந்தது. அப்போதுதான் சட்டென விளங்கியது, ஒபாமாவையும் சீன மாவோயையும் இணைத்து 'ஒபாமாவோ' (Obamao) என்று எழுதி தொப்பி போட்டு ஒரு சீன கம்யூனிஸ்ட் போல காட்டியிருந்தனர். எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் கடந்து வந்தேன்.
மலையின் கீழுள்ள ஒரு ரெஸ்டாரண்ட்டில் மதிய உணவு இருந்தது. மிதுளா ஏற்கனவே உட்கார்ந்திருந்த கோவா குடும்பத்தை தவிர்த்துவிட்டு, வெறு ஒரு டேபிளில் அமர்ந்தாள். வட்ட மேஜை, அதன்பின் நாங்கள் மூவர் தவிர, ஹவாயிலிருந்து வந்திருந்த ஒரு குடும்பம் அமர்ந்தது.
Foreign visitors are having meal at a farmhouse near the Mutianyu Great Wall.
The Fugui Hong Farmhouse Restaurent 
மேலேறி இறங்கி வந்ததால் பசி வயிற்றைக் கிள்ளியது. “சீக்கிரம் கொண்டு வாருங்கள்”, என்றேன். உங்கள் நேரம் 2 மணிக்குதான், இன்னும் 20 நிமிடம் இருக்கிறது என்றார்கள். மிதுளாவிடம் இருந்த ஒரு சாக்லெட் பட்டையை வாங்கிச் சாப்பிட்டேன். ஆனால் அதன்பின், ஒரு பத்து நிமிடத்தில் பண்டங்கள் வரத்துவங்கின. வட்ட மேஜையின் நடுவில் உள்ள பகுதியை சுழற்ற முடியும். கிட்டத்தட்ட 20 விதமான உணவு வகைகள் வந்து கொண்டே இருந்தன. வந்த வெஜ் உணவுகளையெல்லாம் ஒரு கை இல்லை இல்லை இருகை பார்த்தேன். நன்கு உண்டுவிட்டு எங்கள் பஸ்ஸில் கிளம்பினோம்.  வரும் வழியில் ஒரு நீர்வீழ்ச்சி  அப்படியே உறைந்து தொங்கிக் கொண்டிருந்தது.
முகேஷை விட்டு மீண்டும் என் பக்கத்தில் அமர்ந்து சாசுவதமாக என் தோளில் சாய்ந்து நன்றாக தூங்கினாள் மிதுளா . டிராஃபிக் அதிகமாக இருந்ததால், மாலை சுமார் 6 மணிக்கு ரூம் வந்து சேர்ந்தோம்.
ரூமுக்கு போகும் வழியில் ஒரு பழக்கடை இருந்தது. விலை மிகவும் மலிவாக இருந்ததால்  நிறைய வாங்கிவிட்டேன். பிரித்தெடுக்கப்பட்டு பேக் செய்யப்பட்ட பலாச்சுளைகள், வலைப்பையில் இருந்த இலந்தைப்பழங்கள் (ஜூஜிபி) வால் பேரிக்காய்கள், சிறு வாழைப்பழங்கள்  ஆகியவற்றை வாங்கிக் கொண்டு ரூமுக்கு வந்தேன். மதிய உணவு தாமதமாக சாப்பிட்டதால் பசியெடுக்கவேயில்லை. இன்று  இரவுக்கு பழங்கள் சாப்பிட்டால் போதும் என்று முடிவு செய்து புத்தகத்தை எடுத்துவிட்டு படுக்கையில் போய் சாய்ந்தேன்.
அப்போது ஜோஹன்னா வந்து கதவைத்தட்டி எனக்கு ஒரு போன்கால் வந்திருப்பதாகச் சொன்னாள். வந்து பேசினால், ஸ்டீவ் தாமஸ் என்று ஒருவர் லைனில் இருந்தார். எனது நண்பன் சையது அபுதாஹீர், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் MA  படிக்கும்போது, அங்கு MA ஆங்கில இலக்கியம் படித்த ஜூனியர். பீஜிங் அருகில் ஏதோ ஒரு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலை பார்க்கிறாராம். ஐயோ பாவம், இந்த சீனர்களிடம் மாட்டிக் கொண்டு ஆங்கிலம் கற்றுக் கொடுக்க எவ்வளவு சிரமப்படுகிறாரோ என்று நினைத்தேன்.
அவர் நான் தங்குமிடம், வசதி எப்படி என்று விசாரித்துவிட்டு, அட்ரஸை  பார்த்துவிட்டு, "மிக அருமையான இடத்தில் ரூம் போட்டிருக்கிறீர்கள். விலக்கப்பட்ட நகரம்  (Forbidden City), டியன்மின் ஸ்கொயர், பீஜிங் மியூசியம், பீஜிங் கேட், மாவோ டெம்ப்பிள் எல்லாம் நடைதூரம்தான்" என்றார். தினமும் இரவில் ஃபோன் செய்து பேசி கைட் பண்ணுவதாகச் சொன்னார்.  
அடுத்த நாள் பக்கத்தில் உள்ள விலக்கப்பட்ட நகரம் போகச்சொல்லி சில ஆலோசனைகள் வழங்கினார். விலக்கப்பட்ட நகரத்தைப் பார்ப்பது என்பது என் கனவு. 'Last Emperor' படத்தை இங்கு வருவதற்கு முன்னால் மீண்டும் பார்த்துவிட்டுத்தான் வந்தேன்.

சீனப்பேரரசு எவ்வளவு பழமையானது எவ்வளவு பெரியது, வலியது என்பதை எண்ணி ஆச்சரியப்பட்டுக்கொண்டே ரூமுக்கு வந்து உட்கார்ந்த சில நிமிடங்களில் கதவை யாரோ தட்டினார்கள். திறந்து பார்த்தால்  யாரோ ஒரு மஞ்சள் முகப்பெண்  சிரித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள்.  

- தொடரும்.

10 comments:

  1. நானும் தொடர்கிறேன்

    ReplyDelete
  2. நானும்! தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம்,மதுரைத்தமிழன்,வெங்கட் நாகராஜ். நானும் தொடர்வேன் !!!!!!!!

      Delete
  3. உள்ளேன் ஐயா.. :)

    ReplyDelete
    Replies
    1. பதிவேட்டில் ஆஜர் போட்டுவிட்டேன் நண்பா.

      Delete
  4. Nice...

    அங்கு கிடைத்த பழங்களாவது ஒரிஜினலா, இல்ல அதுவும் GMO ஆ?

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் அந்த பயம் இருந்தது .ஆனால் பழங்கள் சுவையாகவே இருந்தன ஏலியன்.

      Delete
  5. //சாக்லெட் பட்டையை வாங்கிச் சாப்பிட்டேன்// அது என்ன சாக்லெட் பட்டை?

    ReplyDelete
    Replies
    1. சாக்லெட் பாரைத்தான் சாக்லெட் பட்டை என்று சொல்லியிருந்தேன்.உங்களுக்கு வேற பட்டை நியாபகம் வந்துருச்சா பாஸ்கர் .

      Delete