Monday, May 4, 2015

இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!

எழுபதுகளில் இளையராஜா பாடல் -21

1978ல் வெளிவந்த சிகப்பு ரோஜாக்கள் என்ற படத்திற்காக இளையராஜா இசையமைத்த பாடல் இது. பாடலைக் கேட்போம்.

பாடலின் சூழல்:
காதலன் மேல் போதை வயப்பட்ட பேதை ஒருத்தி, உண்மைக்காதலின்றி ஏதோ காரணத்திற்காக பல மலர்களைத்தேடும் வண்டு போன்ற ஆண், இருவரும் பாடும் உற்சாகப் பாடல் இது.
பாடலின் இசை:
          பறவை கத்துவது போன்ற மெல்லிசையுடன் ஆரம்பிக்கும் பாடல்,பெண்குரலில் வரும் ஹம்மிங்குடன் வேகம் பிடிக்கிறது. புல்லாங்குழல், டிரம்ஸ், வயலின் குழுவும் சேர்ந்து மகிழ, சடாரென்று ஆண்குரலில், "இந்த மின்மினிக்கு" என்று ஆரம்பமாகிறது. முழுவதுமான வெஸ்டர்ன் இசையில் வேகம் பிடித்து, செல்லும் பாடல் முழுவதும் ரிதம்  கிடாரின் ரிதமும், இடையிடையே BGM-ல் லீட்கிடாரும் வருகிறது. ஆண்குரலும், பெண்குரலும் கேள்வி பதில் போல மாறி மாறி வருகிறது. எனக்குத் தெரிந்து MSVக்குப் பிறகு, வயலின் குழுமத்தை அதிகமாகவும், சிறப்பாகவும் பயன்படுத்தியவர் இளையராஜா என்று சொல்லலாம்.
பாடலின் வரிகள்:
இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது
அடி கண்ணே அழகுப் பெண்ணே
காதல் ராஜாங்கப் பறவை தேடும் ஆனந்த உறவை
சொர்க்கம் என் கையிலே

இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது
என் மன்னா அழகு கண்ணா
காதல் ராஜாங்கப் பறவை தேடும் ஆனந்த உறவை
சொர்க்கம் என்கையிலே

இந்த மங்கை இவள் இன்ப கங்கை
எந்தன் மன்னன் எனைச் சேர்க்கும் கடல்
இந்த கடல் பல கங்கை நதி
வந்து சொந்தம் கொண்டாடும் இடம்
என்னுடல் உனக்கென்று சமர்ப்பணம்
அடி என்னடி உனக்கின்று அவசரம்


இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது
அடி கண்ணே அழகுப் பெண்ணே
காதல் ராஜாங்கப் பறவை தேடும் ஆனந்த உறவை
சொர்க்கம் என்கையிலே
இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது

தோட்டத்திலே பல பூக்கள் உண்டு
நீதானே என் சிகப்பு ரோஜா
இன்றும் என்றும் என்னை உன்னுடனே
நான் தந்தேன்  என் ஆசை ராஜா
மலர் உன்னை பறித்திட துடிக்கிறேன்
இனி தடையென்ன அருகினில் இருக்கிறேன்

இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது
என் மன்னா அழகு கண்ணா
காதல் ராஜாங்கப் பறவை தேடும் ஆனந்த உறவை
சொர்க்கம் என்கையிலே
இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது

பாடலை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன். சூழலுக்கு பாடல் எழுதுவதில் கண்ணதாசன் கில்லாடி, பாடலின் அழகுணர்ச்சி மாறாமல் சூழலை இடையிடையே உணர்த்துவதில் அவருக்கு இணை அவர்தான்.


"மின்மினி போல் வலம் வரும் பெண்ணுக்கு கண்ணில் மின்னல் தெரித்தது", ஆஹா என்ன அழகான கற்பனை. “காதல் ராஜாங்கத்தின் பறவை ஆனந்த உறவைத் தேடுகிறது”, என்று அடுத்த வரி அந்தப் பெண்ணின் மன நிலையைப் படம் பிடிக்கிறது.
முதல் சரணத்தில் அதிக ஆசையுடன் பெண் சொல்கிறாள், “இந்த மங்கை, இவள் இன்ப கங்கை, எந்தன் மன்னந்தான் என்னை சேர்க்கும் கடல்”, என்ற வரிகளில், எதுகை, மோனை, உவமானம், உவமேயம் என்று அனைத்தையும் கொடுக்கிறார். ஆனால் அடுத்துவரும் ஆண்குரலில் சூழலையும் உணர்த்துகிறார், "இந்தக் கடல் பல கங்கை நதி வந்து சொந்தம் கொண்டாடும் இடம்", என்று. அதற்கு பெண் சொல்கிறாள், "என்னுடல் உனக்கு சமர்ப்பணம்". "அடி என்னடி உனக்கின்று அவசரம்" என்று ஆண் கேட்கிறான்".
2-ஆவது சரணத்தில் "என் தோட்டத்தில் பல பூக்கள் இருந்தாலும், நீதானே என் சிகப்பு ரோஜா", என்ற வரியில் ஆணின் மன நிலை மட்டுமல்ல, படத்தின் தலைப்பையும் கொண்டுவந்து சேர்க்கிறார் கண்ணதாசன், யார் சொன்னது அவர் நிதானமில்லாதவர் என்று,என்ன ஒரு தெளிவான கற்பனை, சிந்தனை. கண்ணதாசனுக்கு இணை கண்ணதாசன்தான் .
பாடலின் குரல்:

பாடலைப் பாடியவர்கள் மலேசியா வாசுதேவனும், ஜானகியும். தன் மென்மையான வித்தியாசமான குரலில் காதலைக் குழைத்து மலேசியா வாசுதேவன் அவர்கள் பாடிய இந்தப் பாடல், அவர் பாடிய பாடல்களில் முக்கியமான ஒன்று. ஜானகியைப் பற்றி சொல்லவே வேண்டாம். முதலாவது வரும் ஹம்மிங்கிலும், முடியும்போது வரும் சிரிப்பிலும் அசத்தோ அசத்தென்று அசத்துகிறார். ஜானகியின் “குரல் நடிப்பு” ஒவ்வொரு வரியிலும் வெளிப்படுகிறது.
எப்போது கேட்டாலும் ரசிக்க வைக்கும் பாடல் இசை, வரிகள், குரல்கள் என்று எல்லாமே சூப்பர் ரகம். இளையராஜாவின் இசையில் வெளிவந்த பல  பாடல்களில் முத்திரை பதித்த, பதிக்கும் பாடல்களில் இது முக்கியமான ஒன்று என்று நிச்சயமாகச் சொல்லலாம்.


தொடரும்.>>>>>>>>>>>>>>>>>>

12 comments:

  1. அருமையான பாடல்..உங்கள் அழகான ரசனை மிகுந்த எழுத்து.
    "இந்தக் கடல் பல கங்கை நதி வந்து சொந்தம் கொண்டாடும் இடம்"..
    இந்த வரி கமலின் கதாப்பாத்திரத்தின் ரகசியத்தை சொல்லிவிடுகிறது, என நினைகிறேன்..

    ReplyDelete
    Replies
    1. உங்களின் ரசனை என்னுடைய ரசனையிலும் மேலானது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளீர்கள் நண்பா நன்றி .

      Delete
  2. Title for the blog is "இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு ஒரு மின்னல் !" ? There is a repeat of ஒரு

    ReplyDelete
    Replies
    1. மாற்றிவிட்டேன் பாஸ்கர். பிழையை சுட்டிக்காட்டியதற்கு நன்றி .

      Delete
  3. நல்வாழ்த்துக்கள் நண்பரே...
    உங்கள் பதிவை விகடன் வாசகர் பக்க செய்திகள் பகுதியில் கண்டேன்..
    வெறும் தலைப்பை பார்த்துவிட்டு.. எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே'ன்னு சட்டுன்னு கிளிக் பண்ணி பார்த்த.. நம்ப அருமை நண்பர்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்கு நன்றி நண்பா.

      Delete
  4. Replies
    1. மிகவும் சரி. நன்றி திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  5. பிரமாதம் சார் . இளையராஜாவிற்கு கிராமத்துப் பாடல் மட்டுமே வரும் என்ற முற்சாய்வை முறித்தப் பாடல் . வெஸ்டன் கிளாசிக் அதிகம் கலந்த மெல்லிசை. மறக்க முடியுமா இந்த மாதிரியான பாட்டுக்களை!?

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்லஸ்.

      Delete
  6. அருமையான பாடல்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் சரி. நன்றி தனிமரம்.

      Delete