![]() |
Nagoor hanifa |
"டேய் சேகர் எந்திரிப்பா மணி 5 ஆயிருச்சு",
என்றார் அம்மா. "பரீட்சைக்குப் படிக்கனும் காலையில எழுப்பி
விட்டுறுங்கம்மா", என்று இரவு சொல்லும்போது
இருக்கும் உற்சாகம் காலையில் அம்மா எழுப்பிவிடும்போது இருப்பதில்லை. மிகுந்த
பிரயத்தனமுடன் எழுந்து வாய் கொப்பளித்து, முகம் கழுவி,
புத்தகத்தை திறந்தேன்.
தூரத்தில்
கரகரவென்று ஒலிபெருக்கியின் சப்தம் கேட்க, கூர்ந்து கவனித்தேன்.
"அதிகாலை நேரம் சுபுஹூக்குப் பின்னே, அண்ணல் நபி வரும் வேளை, இன்னல் செய்தாள் ஒரு
மாது", என்று கம்பீரக் குரலில் நாகூர் ஹனிஃபாவின்
பாடல் காற்றில் மிதந்து வந்து காதில் ஒலித்தது. அந்த நிர்மலமான அதிகாலை நேரத்தில், எனக்கே எனக்காக போட்டது போல் ஒலித்த பாடலைத்
தவிர்த்துவிட்டு பாடத்தை என்னால் படிக்க முடியவில்லை. என்ன ஒரு ஆகர்ஷம் அந்தக்குரலில். ஓங்கி
ஒலித்த குரலிலும் என்ன ஒரு உணர்ச்சிப் பிரவாகம். அதனைத் தொடர்ந்து வந்த பாடல்களில்
புரியாத வரிகளாய் இருந்தாலும் எளிய இசையிலும், குரலிலும் அசந்து போய் இருந்த
நான் எங்கு படிப்பது?. பக்கத்துத் தெருவில் இருந்த பட்டாணியரின் (பத்தான்கள்
என்பதுதான் இப்படி மருவிவிட்டது) குடியிருப்பில் சந்தனக்கூடு திருவிழாவுக்காகத்தான் அந்த பாடல்கள்
இசைத்தட்டுகளிலிருந்து போடப்பட்டன.
அடுத்த
நாள், கிராம
போனில் (அப்ப டவுன் போன்னு தனியா இருக்குமோ ?) LP ரெக்கார்டில் ஊசி நெருடும் ஓசை கேட்டவுடனே,
அம்மா எழுப்பாமலேயே எழுந்துவிட்டேன். மீண்டும் மீண்டும் கேட்க
கேட்க, அந்தக் குரலுக்கு அப்படியே மயங்கி
ரசிகனாகிவிட்டேன்.
காலை
நேரத்தில் 7 மணிக்கு திருச்சி வானொலி
நிலையத்தில் பக்திப் பாடல்கள் வரிசையில், LR ஈஸ்வரி,
சாராள் நெளரோஜி பாடல்களுக்குப் பிறகு ஹனிஃபாவின் பாடல்
ஒலிக்கும். அதனைக் கேட்டுவிட்டுத்தான் காலைக்கடனுக்கு போவேன். மற்ற
மதப்பாடல்களுக்குப் பலபேர் இருந்தாலும் இஸ்லாத்துக்கென்று இருந்த ஒரே பாடகர்
நாகூர் ஹனிபா மட்டும் தான்.
1975ல் என்று
நினைக்கிறேன். தேவதானப்பட்டி, கீழத்தெருவில் உள்ள பெரிய
பள்ளிவாசலை புதிப்பித்து, கட்டி முடித்து ரம்ஜான் அன்று திறப்புவிழா செய்தனர். நாகூர்
ஹனிபா கச்சேரி என்று கேள்விப்பட்டு, அம்மாவிடம் கேட்டேன்,
அப்பாவிடம் கேட்கச் சொன்னார்கள்.
வேறொரு நிகழ்ச்சி என்றால் அவரிடம் கேட்டிருக்கவே மாட்டேன். நாகூர் ஹனிபா என்பதால்
பயத்தையும் தயக்கத்தையும் விட்டுக் கேட்டேன். ஆச்சரியமாக உடனே சரியென்று
சொல்லிவிட்டார் என் அப்பா. என் முஸ்லிம் நண்பர்கள் என்னை வரவேற்று நல்ல இடத்தில்
(மண் தரையில்தான்) முன்னால் உட்கார வைத்தார்கள்.
“திக்குத்திகந்தமும்
கொண்டாடியே தீன் கூறி நிற்பர் கோடி” என்ற கணீர்க் குரலில் கச்சேரி ஆரம்பிக்க கூட்டம்
முழுவதும் கப்சிப். சுமார் 10 மணிக்கு
ஆரம்பித்த கச்சேரி 1 மணிக்குத்தான் முடிந்தது. கொஞ்சம்
கூட போர் அடிக்காத மூன்று மணி நேர இசை மழை என்னை பரவசத்தின் உச்சத்திற்கே அழைத்துச்
சென்றது நன்றாக ஞாபகமிருக்கிறது. ஒரு ஹார்மோனியம், புல்புல்தாரா ஒன்று, ஒரு புல்லாங்குழல்
அவரே ஷெனாயும் வாசித்தார். ஒரு தப்பு, பேங்கோஸ்
மற்றும் effects ஒரு தபலா. கொஞ்சம் கூட இசைவெளியில்லாத இசை.
தியேட்டரில்
2 ஆவது ஷோவுக்குக் கூட விடாத என் அப்பா இதற்கு அனுமதித்தது
ஆச்சரியம்தான். ஒருவேளை அவரும் ரசிகராக இருந்திருப்பாரோ. என் வீட்டுச் சூழ்நிலையில்,
இது இந்துப்பாடல் இது முஸ்லிம் பாடல் என்ற வித்தியாசமும்
பாராட்டாமல், நான் வளர்ந்தது எனக்கே ஆசசரியமாகத்தான்
இருக்கிறது. இசைக்கு, மொழி, மதம், என்றெல்லாம் இருக்கிறதா என்ன?
அவர்
வெறும் பாடகர் மட்டுமல்ல, அவர் பாடிய
பெரும்பாலான பாடல்களுக்கு இசையமைத்ததும் அவரே.
இசைமுரசின்
ஓயாத இசையொலி 90-ஆவது வயதில் நிரந்தர ஓய்வு
எடுத்துக் கொண்டது, இஸ்லாத்துக்கு மட்டுமல்ல இசையுலகிற்கே
பெரும் இழப்புதான்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்.
அவர் பாடிய
எனக்குப் பிடித்த பாடல்கள்:
1.
மக்கத்து மலரே
மாணிக்கச்சுடரே யாரசூலல்லா
2.
உம்மை ஒருபோதும்
நான் மறவேன் மீரான்
3.
ஹஸ்பி ரஸ்பி
ஜல்லல்லா
4.
பாத்திமா வாழ்ந்த
கதை
5.
லாயில்லா ஹா இல்லல்லா ஹூ
6.
இறைவனிடம்
கையேந்துங்கள்.
7.
தக்குப்பீர்
முழக்கம்
8.
தீன்குலப்பெண்ணு
எங்கள் திருமறைக் கண்ணு.
9.
அருள் மழை பொழிவாய் ரஹுமானே .
10. கண்கள்
குளம் ஆகுதம்மா கர்பலாவை நினைக்கையிலே
என்று சொல்லிக்கொண்டே போகலாம்
நாகூர்
ஹனிபா பற்றிய சிறுகுறிப்பு:
1.
1925-ல்
பிறந்தார்.
2.
கலைஞரின் பால்ய
நண்பர். அண்ணா காலத்திலிருந்து கடைசிவரை திமுகவில் இருந்தவர்.
3.
1955-ல் இவர் பாடிய “அழைக்கிறார் அண்ணா”,
என்ற HMV மூலம் வெளியிட்ட பாடல் அதிகம் விற்று விற்பனையில் சாதனை படைத்தது.
4.
கலைஞர், அன்பழகன் ஆகியோரை பெயர் சொல்லி
அழைக்குமளவுக்கு நெருக்கமானவர்.
5.
திராவிட இயக்க மாநாடுகள் இவருடைய இசைக்கச்சேரியுடன்
தான் ஆரம்பிக்குமாம்.
6.
MGR க்கும் நெருங்கிய நண்பர் எனினும்,
MGR திமுகவிலிருந்து பிரிந்தபோது, கூப்பிட்டுவிட்டு, தன்னோடு வரச்சொல்லி அழைக்கும்போது
மறுத்து, எனக்கு ஒரே இறைவன், ஒரே கட்சி என்று சொன்னவர்.
7.
நாகூர்,
வாணியம்பாடி தொகுதிகளில் MLA க்கு
நின்று தோற்றாலும், கலைஞர் இவருக்கு MLC பதவி மற்றும் வக்ஃப் போர்டு தலைவர் ஆகிய பதவிகளைக் கொடுத்து அழகு
பார்த்தார்.
8.
1600 கோடி
மதிப்புள்ள வக்ஃப் வாரியத் தலைவராய் இருந்தாலும் இறுதிவரை நேர்மையாக இருந்தார்.
அவர் பாடிய
வெகுசில திரைப்படப் பாடல்கள்:
1.
எல்லோரும்
கொண்டாடுவோம் - பாவ மன்னிப்பு
2.
நட்ட நடு கடல்
மீதில் - செம்பருத்தி
3.
உன்மதமா என் மதமா?-
ராமன் அப்துல்லா
அருமையான தகவல்கள்.. எனக்கு மிக மிக பிடித்த குரல்.. மிக கணீர் என்று இருக்கும்.. இசைக்கு கண்டிப்பாக மதம் கிடையாது என்பதை நிரூபித்து வாழ்தவர்..
ReplyDeleteஇறைவனிடம் கையேந்துங்கள்.. -- அனைத்து மதத்துக்கும் பொருந்தும் வண்ணம் இருக்கும்..
மிக்க நன்றி.. இந்த பதிவுக்கு..
மிக்க நன்றி நண்பா.
Deleteஉங்களைப் போலவே எனக்கும் இந்த அனுபவம் உண்டு. ஒரு மதத்திற்கான ஆன்மிக பாடல்கள் மற்ற மதத்தவர்களுக்கும் பிடித்துப்போனது என்றால் அது நாகூர் ஹனிபாவின் குரலால்தான்.
ReplyDeleteநான் சிறுவனாக இருக்கும் போது மதுரை காஜிமார் தெருவில் ஒருமுறை நாகூர் ஹனிபா கச்சேரி நடந்தது.
அப்போது என்னிடம் சைக்கிள் கூட இல்லை. இரவில் 5 கி.மீ. நடந்துதான் அங்கு போகவேண்டும் . என் தந்தையிடம் கேட்டேன் அதிசயமாக அனுமதி தந்தார். பஸ் வசதியும் இல்லாததால் இரவில் தனியாளாக நடந்து வந்து கச்சேரி கேட்டேன். முடிவதற்கு இரவு 2 மணி ஆகிவிட்டது. அதன் பிறகு இருட்டில் வீட்டுக்கு போக பயந்து விடியும் வரை அங்கேயே உட்கார்ந்திருந்த அனுபவத்தையெல்லாம் நினைத்தால் அந்த மாமனிதர் எவ்வளவு தூரம் இசையால் நம்மை வசியப்படுத்தியுள்ளார் என்பது தெரியும். விவரம் தெரிந்த பின் நாகூர் ஹனிபா முறைப்படி சங்கீதம் கற்கவில்லை. எல்லாம் கேள்வி ஞானத்தால் பாடுவது என்று அறிந்த போது பிரமித்துப் போனேன்.
தங்கள் அனுபவத்தை எங்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி செந்தில்குமார் .இசை என்பது இறைவன் கொடுக்கும் வரம் .
Deleteநான் கல்லூரியின் விடுதியில் (St. Josephj's Trichy) இருந்தபோது, தினமும் காலையில் மும்மதப் பாடல்கள் ஒலிக்கப்படும். பெரும்பான்மையான நாட்களில் இசை முரசு அவர்களின் பாடல்கள்தான் ஒலிக்கும். அன்றும் இன்றும் என்றும் கம்பீரமாக ஒலிக்கும் அவரது பாடல்கள்!
ReplyDeleteதாங்கள் குணமடைய வாழ்த்துகள் Alfi!
அந்தக்கால கட்டங்களில் அவரைத்தெரியாமல் வளர்ந்திருக்க வாய்ப்பில்லை.தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பெப்பின் .
Deleteமிக எளிமையான இசை நல்ல குரல் வளம்.
ReplyDeleteதமிழக இஸ்லாமியர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் அவர்.
I heard that you are feeling a little bit under the weather. I just wanted you to know that you are in my thoughts and prayers while you recover.
ReplyDeleteThe God that has so much love for you, will also be sure to bring your healing too! Get well very soon!
DeleteThank you Maduraithamilan.
Deleteதிரைப்படப் பாடல்கள் அதிகம் பாடவில்லையே எனும் ஏக்கம் உண்டு... பாடின பாடல்கள் அனைத்தும் சிறப்பானவை...
ReplyDeleteநன்றி திண்டுக்கல் தனபாலன்.
Deleteசிறப்பான பாடகர். அவரது பாடல்கள் அனைவராலும் ரசிக்கப் படுபவை....
ReplyDeleteGet Well Soon.....
நன்றிகள் வெங்கட் நாகராஜ்
Deleteஇறைவனிடம் கையேந்துங்கள் பாடலை கேட்கும் போதெல்லாம் கவலைகளை மறப்பேன்... get well soon
ReplyDeleteஇறைவனிடம் கையேந்துங்கள் பாடலை கேட்கும் போதெல்லாம் கவலைகளை மறப்பேன்... get well soon
ReplyDeleteThank you Kamaraj Pandian
Deleteபதிவுக்கு நன்றிகள்
ReplyDeleteநன்றி nagoreismail.
Deletedear paradesi, may the Providence bless you, Get well soon.
ReplyDeleteThank you chandrasekharan,just recuperating well.
Deleteநாகூர் ஹனீபாவின் கம்பீர குரலை ரசிக்காதவர்கள் இருக்க முடியுமோ ? நாம் எல்லோரும் ரசிகர்கள் தான் அண்ணே !
ReplyDeleteஉங்கள் நகைசுவை துண்டையும் ரசித்தோம் ...அடுத்த நாள், கிராம போனில் (அப்ப டவுன் போன்னு தனியா இருக்குமோ ?) பஞ்சாயத் போன் எல்லா போனும் வரும் ....தங்கள் surgery நல்ல படியாக முடிய பிரார்த்திக்கிறோம் ...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி .
Delete