Tuesday, April 28, 2015

பரதேசி, தொழில் அதிபர் ஆன கதை: பகுதி 1

Thambithottam Higher secondary School
Thambithottam School, Gandhigram
 "டேய் ஆல்ஃபி நீதாண்டா என் பார்ட்னர்" என்றான் கருப்பையா. எதில் பார்ட்னர் கறதைச் சொல்வதற்கு முன்னே கருப்பையாவைப் பத்தி கொஞ்சம் சொல்லிர்றேன்.  கருப்பையா எங்கூட தம்பித்தோட்டம் ஹாஸ்டல்ல தங்கியிருந்தவன். காரைக்குடி அவன் சொந்த ஊரு. தம்பித்தோட்டத்தைப்பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கேன். மறந்து போனவங்களுக்கு சொல்றேன் அது காந்தி கிராமம் தம்பித்தோட்டம் மேல்நிலைப்பள்ளியோட மாணவர் தங்கும் ஹாஸ்டல். அங்குதான் நான் +1 மற்றும் +2 படித்தேன். கருப்பையா, செட்டியார்தானேன்னு நீங்க கேக்கறது காதுல விழுகுது. கரெக்டு அவன் செட்டியார்தான். அத அவனே பலதடவை சொல்லியிருக்கான். பயபுள்ளைக்கு பெரிய தொழிலதிபராக வரணும்னு ரொம்ப ஆசை. அதனாலதான் அவன் காமெர்ஸ் குரூப் எடுத்திருந்தான். நான் மேத்ஸ் குரூப். வேறு வேறு குரூப் மட்டுமல்ல ஹாஸ்டலில் வேற வேற ரூம். அப்புறம் எப்படி நண்பனானான் அதுவும் பார்ட்னராகன்னு நீங்க நினைக்கறீங்க. அட நினைச்சாலும் நினைக்காட்டியும், சொல்றது என் கடமையில்ல. அவன் பார்ட்னருக்கு ஆள் சேர்க்க பல பேர் கூட பழகியிருக்கான். என்னோட பால்வடியுற (?) அப்பாவி முகத்தைப் பாத்து, இவன்தான் லாயக்குன்னு என்ட்ட வந்தான். எதுக்குடா பார்ட்னருன்னு கேட்டேன்.
“டேய் என் கூட சேர்ந்து தொழிலதிபர் ஆக ஒனக்கு விருப்பமா? நான் உன்னை ஆக்கிக் காண்பிக்கிறேன். செட்டியார்ங்கறதால என் ரத்தத்திலே அது ஊறியிருக்கு".
"சர்ரா நல்லா ஆகு, யாரு வேணும்ணா, ஆனா அதுக்கு படிச்சு முடிக்கணுமேண்டா".
“அட நீ வேற, தொழிலுக்கு படிப்பெல்லாம் அவசியமில்லை திறமை இருந்தா போதும். அட பணம் எண்ணத்தெரிஞ்ச்சா போதும்டா. அதோட என்ட்ட ஒரு நல்ல திட்டம் இருக்கு”          “சரி சொல்லு”
“ஒரு பெட்டிக்கடை ஆரம்பிக்கலாம். நீயும் நானும் கூட்டாளிகள் ஆளுக்குப்பாதி முதல் போடலாம்.”
“பொட்டிக்கடையா? என்ன விளையாடுரியா, அதுக்கு நிறைய பணம் வேணும்ல”.
“அதெல்லாம் தேவையில்ல? உன்ட்ட எவ்வளவு பணம் இருக்கு? “
“நீவேற எங்கப்பா மாசத்துக்கு 20 ரூபாய்தான் தருவாரு.”
“அப்படியா? அதில பத்து ரூபா மட்டும் நீ போடு”,
“பத்து ரூபாவா? பாக்கெட் மணியில் பாதியாச்சேடா அதுக்கு நிறைய தியாகம் பண்ணனுமே?.”
“என்ன தியாகம்?”
மீதம் 10 ரூபாய்ல சின்னாப்பட்டி 2 படம் பார்க்கத்தான் சரியா இருக்கும் .முருக்கு, சோன்பப்டி, மாங்காய், கடலைமிட்டாய்னு எதுவுமே வாங்க முடியாதே”.
“டே முதல் போடாம எந்தத் தொழிலும் செய்ய முடியாது. 10 ரூபா போட்டா உனக்கு 15 ரூபாய் கிடைக்கும்ரா. கிடைக்கிற லாபத்துல ஆளுக்குப் பாதி”.
“அது சரி பத்து ரூபாய்க்கு எப்படிரா பொட்டிக் கடை வைக்கிறது, அதோட நம்ம இப்ப ஹாஸ்டல்ல இல்ல தங்கி இருக்கோம்”.
“பொட்டி என்ட்ட இருக்குன்னு” சொல்லிட்டு ப்ரீப்கேஸ் சைஸீல இருக்குமே ஒரு சின்ன தகரப்பெட்டி, அத தூக்கிட்டு வந்து காண்பிச்சான்.  இதாண்டா பொட்டிக் கடைன்னு சொன்னான்.

எனக்கு சிரிப்பு வந்துருச்சு. பொட்டிக் கடைக்கு ஒரு சின்ன பெட்டியை தூக்கிட்டு வருவான்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.
“இதுல எப்படிரா? கடை வைக்கிறது? சும்மா கிண்டல் பண்ணாதே”. 
“அவசரப்படாதரா, ன் பத்து ரூபாயைக் கொடு, சனிக்கிழமை 'ஃப்ரீ டைம்' விடுவாங்கள்ல அப்ப வெளியே போய் 'கொள்முதல்' பண்ணிட்டு வந்துரலாம்.
"கொள்முதலா என்னடா பெரிய வார்த்தையெல்லாம் சொல்ற, ஆமா என்ன பொருள் வாங்கப்போற".
“ எங்கயும் போடத்தேவையில்ல, சாயந்திரம் ஸ்கூல் முடிஞ்சவுடனே, ஹாஸ்டல்ல பெட்டியை ஒவ்வொரு ரூமா தூக்கிட்டு போய் விக்கலாம்”.
இதைக் கேட்டதும் எனக்கு ஒரே ஆச்சரியமா போயிருச்சு. செட்டியார் மூளை எப்படியெல்லாம் யோசிக்குதுன்னு நெனைச்சு பிரமிப்பா இருந்துச்சு.
“என்னடா யோசிக்கிற, வியாபாரத்துக்கு நான் பொறுப்பு .சும்மா நீ கூட வந்தா போதும்”.
“சர்ரா வர்ற சனிக்கிழமை போலாம்”னு சொன்னேன். சொன்னபடியே ரெண்டு பேரும் சனிக்கிழமை மதியம் 2-6 எங்களுக்கு விடும் ஃப்ரீ டைமில், சின்னாபட்டி வந்து  வாங்கினோம். ஸாரி, கருப்பையா பாஷையில 'கொள்முதல்' பண்ணோம். மொத்தம் 10 ரூபாய் 50 பைசா ஆச்சு. அந்த 50 காசையும் என்னிடமே வாங்குனான்.
“சர்ரா எப்படா ரூமு ரூமா போறதுன்னேன்
"இன்னக்கி வேணாம், இன்னைக்கி எல்லாரும் வெளியில போயிட்டு வருவாய்ங்கல்ல. ஒரு நாள் விட்டு திங்கக்கிழமை சாயந்திரம் போலாம்னு," சொன்னான்.
ஞாயித்துக்கிழமை சர்ச்சுல காணிக்கை போடக்கூட காசில்ல, எல்லாத்தையும் பயபுள்ள கருப்பையா வாங்கிட்டான். சும்மாங்காச்சுக்கும் வெறும் கையை காணிக்கைப் பையில்விட்டு எடுத்தேன். கர்த்தர் மன்னிப்பாராக.
ஹாஸ்டலுக்கு வந்தபிறகு அவனைப் பாத்து, "டே ஒரு கடுக்கு மிட்டாய் கொடுன்னேன்."
“போடா அதெல்லாம் கொடுக்க முடியாது. வியாபாரம் ஆரம்பிக்கும் முன்னால நாமே தொடக்கூடாது". என்றான்.
“அட என் லாபத்துல கழிச்சுக்கடான்னு” சொல்லியும் அவன் கேட்கல. அப்புறம் ஆறுமுகம்கிட்ட 5 பைசா கடன் வாங்கி, கருப்பையாவிடம் கடுக்கு மிட்டாய் வாங்கினேன்.
திங்கள் கிழமை சாயந்திரம் ஸ்கூல் விட்டு வந்து யூனிபார்மை கழட்டிபோட்டு முகம் கைகால் கழுவிட்டு கருப்பையா ரூமுக்குப் போனேன். மனசெல்லாம் படபடன்னு இருந்துச்சு. நானும் தொழிலதிபர்தான்னு நெனைக்கும்போது ரொம்பப் பெருமையா இருந்துச்சு.
கருப்பையா வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டை போட்டு நெத்தியில திருநீரு போட்டு அம்சமாக இருந்தான். அவனைப் பார்த்தா அச்சு அசல் வியாபாரி மாதிரியே இருந்தான். அதைப் பார்க்கும் போது அடடா என்னைப் பார்த்தா தொழிலதிபர்னு சத்தியம் செஞ்சாலும் நம்ப மாட்டாய்ங்களேன்னு  தோனுச்சு. அவனோட சின்ன தகரப்பெட்டியை திறந்து காண்பிச்சான். சும்மா சொல்லக் கூடாது அழகா அடுக்கி வச்சிருந்தான். பெட்டியை மூடும்போது பார்த்தேன். பெட்டி மேல் "கருப்பையா பல்பொருள் அங்காடி"-ன்னு  எழுதி ஒட்டி, கலர் பென்சில்ல சுத்திலும் கோடு போட்டு பூவெல்லாம் வரைஞ்சு வச்சிருந்தான்.
"என்னடா ஒன்பேர் மட்டும் எழுதியிருக்கன்னு”, கேட்டதுக்கு, "பெட்டி என்னதுதானன்னு " சொன்னான். நானும் பரவாயில்லன்னு விட்டுட்டேன்.
அப்புறம் பெட்டியைத் தூக்கிட்டு முத ரூமுக்குப் போனோம்.

- தொடரும்.

17 comments:

  1. ஆரம்பம்மே சூப்பர் .. கடையே ஆரம்பிக்கல...அதுக்குள்ள உங்கள் லாபத்தில் இருந்து கழிக்க சொன்னா எப்படி ?

    ReplyDelete
    Replies
    1. நம்மதான் வரவுக்கு முன்னாலேயே செலவு செய்ற கோஷ்டி ஆச்சே.அச்சச்சோ நம்மன்னு உன்னையும் சேர்த்து தப்பா சொல்லிட்டேன் தம்பி , நாந்தான்னு திருத்தி படிக்கவும் .

      Delete
  2. நான் என்னவொஒ குறைந்த இண்வெஸ்ட்மெண்ட்ல அதிக ஈல்ட் கொடுக்கும் "கஞ்சா கிஞ்சா" வியாபாரம் பண்ணக் கூப்ப்ட்டாரானோ பயந்துட்டேன். நல்ல வேளை அப்படியெதுவும் நடக்கலை. எங்க ஊர்ல பேருக்கு பெட்டிக் கடை பேருக்கு இருக்கும் ஆனால் விக்கிற சரக்கு 300% ஈல்ட் கொடுக்கும்.

    ReplyDelete
    Replies
    1. அவ்வளவு தைரியம் இருந்தா நான் ஏன் இன்னும் இப்படி இருக்கேன் வருண் ?

      Delete
    2. Anyway, we are going to legalize. "pot" soon. I need a partner to sell legal "ganja". Will you be available then? Or you are still scared? Just kidding Alfy! :)

      Delete
  3. "என்னடா ஒன்பேர் மட்டும் எழுதியிருக்கன்னு”, கேட்டதுக்கு, "பெட்டி என்னதுதானன்னு "
    "கருப்பையா பல்பொருள் அங்காடி"..
    அங்க தான் இருக்கு பிசினஸ் பாடமே..
    அருமை..

    ReplyDelete
    Replies
    1. செலவு எல்லாம் உனது.. வரவு எல்லாம் எனது .. அடேங்கப்பா..இது எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே..பல கோடி செலவு எல்லாம் பொது மக்கள் பணம். பல லக்ச கோடி வருமானம் நமக்கு.. சூரிய நமஹ...

      Delete
    2. அது என்னமோ இந்த பிசினஸ் பாடம் எனக்கு இன்னைக்கு வரை விளங்கவே மாட்டேன்கிது நண்பா

      Delete
  4. ஆரம்பமே (கணக்கே) சுவாரஸ்யம்...

    ReplyDelete
    Replies
    1. இந்தக்கணக்கோட எனக்கு எப்பவும் பிணக்குதான் திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  5. Replies
    1. பின்குறிப்பு ;

      சிறிது சிறிதாக நலம் அடைந்து வருகிறேன் .இப்பவும் வீட்டில்தான் இருக்கிறேன் .ஒற்றைக்கைதான்.நன்றி மதுரைத்தமிழன்.

      Delete
  6. இரண்டு தமிழர்கள். கூட்டாக பெட்டிக்கடை வியாபாரம். ஆரம்பத்திலேயே, ஒருவர் மூளை ஒரு மாதிரியும், இன்னொருவர் மூளை இன்னொரு விதமாகவும் செல்கிறது. முடிவு என்ன ஆயிற்று? தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இன்னொடு மூளை அதுதான் என் மூளை எப்படி மந்தமாக இருந்தது என்று சொல்வதில் எனக்கொன்றும் தயக்கம் இல்லை உண்மையும் அதுதானே .வருகைக்கு நன்றி தமிழ் இளங்கோ

      Delete
  7. அன்பின் இனிய வலைப் பூ உறவே!
    அன்பு வணக்கம்
    உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
    இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
    நல்வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
  8. வருகைக்கு நன்றி யாதவன் நம்பி "உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உரித்தாகுக .

    ReplyDelete