Monday, April 21, 2014

வாடி என் கப்பங்கிழங்கே !!!!!!!!!!!!!


"டேய் ஆறுமுகம், கப்பக்கிழங்கு வேட்டைக்குப் போகலாமா?
"கொஞ்சம் இருடா ஓடைக்குப் போயிட்டு வந்துர்றேன்.வயிறு கொஞ்சம் கடமுடாங்குது".
“உனக்கு ஏன்டா எப்பவும் நேரங்  கேட்ட நேரத்தில வருது”.  
தம்பித் தோட்டம் மேல் நிலைப்பள்ளி, காந்திகிராமத்தில் பள்ளியைச் சுற்றிலும் பள்ளிக்குச் சொந்தமான வயல்களும் தோப்புகளும் உண்டு. தம்பித்தோட்டம் ஹாஸ்டலைச் சுற்றிலும் இடதுபுறம் தென்னந்தோப்பும், வலதுபுறம் வயல்வெளியில் கப்பக்கிழங்கும் போடுவார்கள்.

கப்பக்கிழங்குக்கு பல பெயர்கள் உண்டு. மதுரைப்பக்கம்தான் இதை கப்பக்கிழங்கு என்று சொல்வார்கள். திண்டுக்கல்லில் இதற்குப் பேர் குச்சிக்கிழங்கு அல்லது ஆழிவள்ளிக் கிழங்கு. சென்னையில் மரவள்ளிக்கிழங்கு.
நாற்சத்து அதிகம் உள்ளதால் இது உருளைக் கிழங்கை விட நல்லது. மலையாளிகளுக்கு இது திடமான காலை உணவு. நமது நாட்டில் பஞ்சம் வந்தபோது, பலபேர் உயிரை இந்தக் கிழங்குதான் காப்பாற்றியதாம்.
தேவதானப்பட்டியில் புதன்கிழமை நடக்கும் வாரச் சந்தையில்  எங்கம்மா தவறாது கப்பக்கிழங்கு வாங்கி வருவார்கள். நன்கு விளைந்த கிழங்கை செம்மண்ணுடன் வாங்குவார்கள். வீட்டில் அதனை நான்தான் கழுவிவிட்டு, அருவா மனையில் சிறிய துண்டுகளாக நறுக்கி பாத்திரத்தில் உள்ள நீரில் போடுவேன். பின்னர் கத்தியில் தோலை லேசாக கீறி உறித்தால் தோல் அப்படியே பெயர்ந்து வந்துவிடும். வெட்டும்போது ஒன்றிரண்டை பச்சையாக சாப்பிடுவேன். பின்னர் மீண்டும் கழுவி அம்மாவிடம் கொடுத்தால் வேகவைத்து கொடுப்பார்கள். நன்கு விளைந்த கிழங்கு பூவாய் மலர்ந்து மிகுந்த சுவையாயிருக்கும். ஆனால் என் வீட்டில் அப்பாவும் தம்பிகளும் தொட மாட்டார்கள். நானும் என் அம்மாவும் மட்டும் தான் ரசித்து ருசித்துச் சாப்பிடுவோம்.கப்பக்கிழங்கு பிடிக்கும்   என்பதால்  கப்பக்கிழங்கு சிப்சும் ரொம்ப பிடிக்கும்.

இங்கு நியூயார்க் வந்ததும் கடைகளில் இதைப் பார்த்ததும் மகிழ்ச்சியடைந்தேன். மெக்சிகோ மக்களுக்கு இது முக்கிய உணவு. இங்கும் பல பெயர்கள் உண்டு. Tapioca, yuca, Casava என்று சொல்கிறார்கள். என் மனைவி சிறு துண்டுகளாக நறுக்கி, லேசாக மஞ்சள் தூவி தாளித்துக் கொடுப்பாள். அது வேறு சுவையாக இருக்கும்.
Add caption
பிஞ்சுக் கிழங்காய் இருந்தால் சரியாக மலராது. எவ்வளவு நேரம் வேக வைத்தாலும் மலராது. அது நன்றாகவும்  இருக்காது. ஆனால் தம்பித் தோட்டம் போன பின்னால் தான் கண்டுபிடித்தேன் பிஞ்சுக்கிழங்கை அப்படியே பச்சையாகச் சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்குமென்பதை.
ஆறுமுகம் வந்தவுடன், "டேய் நல்லாக்கழுவிட்டயா" என்று கேட்டேன். முறைத்த அவனை தோளில் கைவைத்து அழைத்துக்கொண்டு போனேன். கப்பக்கிழங்கு வயல் முற்றிலுமாக வேலி அடைக்கப்பட்டது. வேலை செய்யும் ஆட்களைத்தவிர வேறு யாருக்கும் அனுமதியில்லை. ஆறுமுகமும் நானும் நேராக வாட்மேன் தாத்தாவிடம் போனோம். "தாத்தா என்னமோ தெரியல, வயலுக்குள்ள போனாதான் நல்லா படிக்க முடியுது", என்றான் ஆறுமுகம்.
"தம்பி உள்ளே போகமுடியாது, கொஞ்ச நாளா எவனோ களவாணிப்பயக, பிஞ்சுச் செடியெல்லாம் பிடுங்கிப் போட்டுறாய்ங்க," என்றார் வாட்ச்மேன். ஆறுமுகம் என்னைப் பார்த்து கண்ணடித்தான்.
“ஒண்ணும் கவலப்படாதீங்க, நாங்க உள்ளே போனா, காவலும் இருப்போம்ல”, இது ஆறுமுகம். பாலுக்குக் காவல் பூனையா என்று நினைத்துக் கொண்டேன் .
"இல்லப்பா முடியாது, எனக்கு வேல போயிறும்", இது வாட்ச்மேன்.
"தாத்தா ஒண்ணும் கவலைப்படாத நாங்க பாத்துக்கிறோம்," என்று சொன்ன ஆறுமுகம், நைசாக வில்ஸ் ஃபில்டர் சிகரெட்டை எடுத்து வாவகமாக உள்ளங்கையில் மறைத்துக் கொடுத்தான்.
சொக்கலால் பீடி குடிக்கும் வாட்ச்மேனுக்கு  சிகரெட் அதுவும் ஃபில்டர் சிகரெட் கிடைத்தால் விடுவாரா. "சரிசரி யார்ட்டயும் சொல்லாம உள்ளே போங்க என்று கேட்டை திறந்துவிட்டதோடு, சாவியையும் எங்களிடம் கொடுத்தார்.
உள்ளே சென்றோம், "போதுமாடா ஆல்ஃபி," என்றான் ஆறுமுகம். "ரொம்ப தேங்க்ஸ்டா" என்றேன் நான். அவனுக்கு கப்பக்கிழங்கு அவ்வளவாய் பிடிக்காது.  எனக்காகத்தான் வந்தான்.
உள்ளே வயலில் கப்பக்கிழங்குச் செடிகள் தளதளவென்று வளர்ந்திருந்தன. மாலை வெயிலில் பச்சைப் பசேலென்று தலையாட்டின. அன்று தான் தண்ணீர் பாய்ச்சியிருந்தார்கள்.வாரமொருமுறை பாய்ச்சினால் போதும். அதிக தண்ணீர் தேவைப்படாது. அதனால் தான் அந்த நாளைத் தேர்ந்தெடுத்தேன். ஏனெனில் செடிகளை லேசாகப்பிடிங்கினாலே வந்துவிடும். ஈரமில்லாவிட்டால் செடிகளைப்பிடிங்கினாலும், வேரில் இருக்கும் கிழங்கு வராது.   
கொஞ்ச நேரம் படிப்பது போல பாவனை செய்தோம். அப்புறம் பதமாகப் பார்த்து ஒரு செடியைப் பிடிங்கினேன். ஈரப்பதத்துடன் இலகுவாக வந்தது. முற்றாத பிஞ்சுக் கிழங்குகள் நீள நீளமாய் வேரில் தொங்கின. இன்னும் ஒரு மாதத்தில் அறுவடைக்குத் தயாராகிவிடும். கையிலிருந்த நகவெட்டியில் இருந்த கத்தியால் கிழங்கை வெட்டியெடுத்து நுனியை  வெட்டிவிட்டு தோலை உரித்துவிட்டு மடக்கென்று கடித்தேன். நீரும் சாருமாக இனிப்பாய் தொண்டையில் இறங்கியது. கொள்ளை ருசி. இன்னொரு துண்டை உடைத்து ஆறுமுகத்திடம் கொடுத்தேன். அவனும் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, "நல்லாத்தேன் இருக்கு, திருட்டு மாங்காதான் இனிக்கும்பாய்ங்க, திருட்டு கிழங்கும் இனிப்பாய்த்தான்   இருக்கு” , என்றான் .
சூரியனும் சற்றே மறையத்துவங்கியது. தோலுரித்த சில கிழங்குகளை மடித்த கைலியில் (லுங்கி மற்றும் சாரம் என்றும் இதனை அழைப்பார்கள்) வைத்துக்கொண்டு வெளியே வந்தோம்.
ஆறுமுகம் ,"வாடா சாவியை வாட்ச்மேன் தாத்தாட்ட கொடுத்துட்டு வருவோம்".
"டேய் மடியில கிழங்கை வச்சிட்டு, வேணாம்டா நான் போறேன்." என்றான் .
"சும்மா வாடா, பொழுது சாய்ஞ்சிருச்சு, தாத்தாவுக்கு கண்ணு தெரியாது"
"ஆமா, நான்தான கிழங்கை எடுத்தேன், உன் கைலில என்னடா இருக்கு ?"
“வந்து வேடிக்கைய பாரு"
ஆறுமுகம் என்ன செய்யப்போகிறானோ என்று திகிலுடன் சென்றேன்.
வாட்ச்மேன் தாத்தா வீட்டு வாசலுக்குப் போய், கைலியை உதறி விட்டான். பிடுங்கிய செடிகளும், கிழங்கின் தோல்களும் அவர் வாசலில் விழுந்தன.
"ஏன்டா உனக்கு பைத்தியமா?’, என்றேன்.
“டேய் இதையெல்லாம் வயலுக்கு உள்ளேயே போட்டா, நாமதான் பிடுங்கினோம்னு தெரிஞ்சிறும்டா அதனால் தான் இப்படிச் செஞ்சேன்”.
வெளியே வந்த தாத்தாவிடம், “இந்தா சாவி, ஆமா இது என்ன உன் வாசல்ல செடியும் தோலுமா கிடக்கு, ஓரமாப் போடக் கூடாது?”, என்றானே பார்க்கனும் எனக்கு வாயடைச்சுப் போச்சு. 

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் :

 என்னுடைய ஒவ்வொரு பதிவையும் பலநூறு பேர் டிக்கிறீர்கள்.உங்களுடைய மேலான விமர்சனங்களை சுட்டிக்காட்டுங்கள். இன்னும் சிறப்பாக எழுத அது ஏதுவாக இருக்கும் .55000 ஹிட்களை தாண்டி வளர் நடை போடும் பரதேசியின் பதிவுகள் பற்றி உடனே அறிந்து கொள்ள உங்களின்  ஈமெயிலை  இணைத்து உறுப்பினர் ஆக கேட்டுக்கொள்கிறேன் அதற்கு  Join this site என்ற பகுதியில் சுட்டவும்.உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.

6 comments:

  1. எனக்கும் இந்த கிழங்கு மிகவும் பிடிக்கும்... கடந்த வாரம் இதை வாங்கி வைத்தேன் சமைக்க மறந்துவிட்டது. ஞாபக படுத்தியதற்கு நன்றி, நான் அதை வேகவைத்து கடுகு உளுந்தம் பருப்பு போட்டு தாளித்து கொட்டி அதில் தேங்காய் சீரகம் பச்சைமிளகாய் போட்டு கரகர என்று அரைத்து அதில் மிக்ஸ் பண்ணி சாப்பிட பிடிக்கும். சரி நான் வரேன் நான் போய் அதை சமைக்கனும்

    ReplyDelete
    Replies
    1. மதுரைக்காரர்கள் எல்லோருக்கும் பிடிக்குமோ ?

      Delete
  2. குச்சிக்கிழங்கு, கைலி, சொக்கலால் பீடி ஞாபகத்துடன், நம்ம ஊர் இனிய நினைவுகளை மறக்க முடியுமா...? ரசித்தேன்...

    55,000 ஹிட்ஸ் - வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  3. இனிமையான நினைவுகள். தில்லியிலும் கேரளக் கடைகளில் கிடைக்கிறது. ஆனால் பிஞ்சு கிடைப்பதில்லை.... நன்கு முற்றிய கிழங்குகள் மட்டுமே... சில சமயம் வேக வைத்து உண்பது வழக்கம்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி வெங்கட் நாகராஜ்.

      Delete