Thursday, April 17, 2014

வெள்ளை யானை - ஜெயமோகன்


சாரு நிவேதிதா அவர்களின் தீவிர வாசகனாய் இருந்ததால் ஜெயமோகன் பக்கம் போகாமலே இருந்தேன். ஆனால் பல இடங்களில், பல நேரங்களில், பலர் ஜெயமோகன் படைப்புகளை மிகவும் சிலாகித்துச் சொல்லும்போது, சந்தர்ப்பம் கிடைத்தால் படிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.
Jeyamohan
அச்சமயத்தில்தான் நண்பர் பேராசிரியர் பிரபாகர் வெள்ளை யானையைப் பற்றிப் பாராட்டிச் சொல்லி, மிகுந்த பொருட் செலவில் அதனை மதுரையிலிருந்து நியூயார்க்குக்கு அனுப்பித் தந்தார்.
வெள்ளையர் நம்மை ஆண்ட காலகட்டத்தினை ஒட்டி இந்த நாவல் படைக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சமயத்தில் (1810) ஒரு பெரிய பஞ்சம் வந்து, இந்தியாவில் கால்வாசிப்பேர் இறந்து போயினர்.

அந்தப்பஞ்சத்தின் கொடுமைகளை விளக்கும் இந்த நாவலின் மையப்பொருள், சென்னை ஐஸ்ஹவுசில் நடந்த வேலை நிறுத்தம். இந்தியாவிலேயே இதுதான் முதல் வேலை நிறுத்தமாம். இந்தியாவில் விளைந்த தானியங்கள் எல்லாம் உலகத்தின் பல இடங்களில் சண்டையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பிரிட்டிஷ் ராணுவத்திற்கும், இங்கிலாந்திற்கும் அனுப்பப்பட, இந்தியாவில் மக்கள், குறிப்பாக கடைநிலையில் இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் எவ்வாறு இறந்துபட்டார்கள் என்பதனை மிகவும் உருக்கத்துடன் நாவல் விவரிக்கிறது. பல இடங்களில் நம் மக்கள் இப்படியும் இழிநிலையில் இருந்தார்கள் என்பதை கற்பனையிலும் கொடுக்கப்பட்ட படங்களிலும் பார்க்கும் போது மனம் பதைபதைக்கிறது.

ஐஸ் கட்டிகளை அமெரிக்காவின் நியூ இங்லேண்ட் பகுதியிலிருந்து பாளம் பாளமாய் வெட்டிக் கப்பலில் கொண்டு வந்து கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்த அமெரிக்க நிறுவனம் “டியூடர் கம்பெனி" தான் ஐஸ் ஹவுசை கட்டிப் பராமரித்தது என்பது ஆச்சரிய செய்தி.
 சென்னை நகரம் வெள்ளையர் நகரம் மற்றும் கறுப்பர் நகரம் என்று பிரிக்கப்பட்டு இருந்தது நமக்குத் தெரிந்தாலும், வெளிவந்த சொற்ப நாவல்களில் அதிகமாக வெள்ளை நகரத்தைப் பற்றிதான் அறிந்துகொண்டோம். ஆனால் இந்த நாவலில் கறுப்பர் நகரத்தின் அன்றைய மோசமான நிலை வெகுவாக விளக்கப்பட்டிருக்கிறது.

ஜார்ஜ் கோட்டை அந்தச் சூழ்நிலையில் எப்படி இருந்தது, அங்குள்ள கவர்னராக இருந்த டியூக் ஆப் பக்கிங்ஹாம், டியூக் சாண்டோஸ் எவ்வாறு அதிகாரம் செலுத்தினர். பிரிட்டிஷ்  அரசாங்கத்தின் அமைப்பு முறைகள் அங்கு எப்படி என்பதை மிகவும் விரிவாக  விளக்குகிறது இந்த நாவல்.  
Richard Temple Nugent Brydges Chandos Grenville, Governor of Madras Presidency
Duke of Buckingham
வெள்ளையர் மனதிலும்  ஈரமிருந்ததையும்,  அவர்கள் எப்படி இந்திய இடை மற்றும்   மேல்தட்டு வர்க்கத்தால் தடுக்கப்பட்டதையும் கேப்டன் ஏய்டன் குறித்து வரும்போது அறிகிறோம்.
மேல்தட்டு வர்க்கத்திற்கும் கீழ்த்தட்டுக்கும் இருந்த வர்க்கபேதம், சாதிபேதம் எவ்வளவு நீண்ட இடைவெளியைக் கொடுத்தது என்பது மட்டுமல்லாமல், தாழ்த்தப்பட்ட மக்கள் பொருளாதாரத்தில் தாழ்ந்து அடிமைகளாய் ஒரு புழுவைப்போல வாழ்ந்தார்கள் என நினைக்கும் போது, மனிதாபிமானம் என்பது அந்தக் காலத்தில் கிஞ்சித்தும்  இல்லாதது தெரிந்தது.
சில இடங்களில் வரும் உரையாடல்கள் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது போல அமைந்திருந்தது கொஞ்சம் உறுத்தியது. அது தவிர உருவகங்களும் உவமானங்களும் இதுவரை நான் எதிலும் படிக்காத கற்பனையாய் இருந்தது ஆச்சரியமூட்டியது. இவரை நான் இவ்வளவு நாள் தவிர்த்தது பெரிய முட்டாள்தனம்.
பிரிட்டிஷ் மேலாட்சி, முதல் வேலைநிறுத்தம், தலித் வரலாறு, அந்தக்காலக் கட்டத்தில் இருந்த தமிழகம் ஆகியவற்றை அறிய ஆவலுள்ளவர்கள் இந்த நாவலை கண்டிப்பாக படிக்க வேண்டும்.


6 comments:

  1. படிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருக்கும் நாவல்களில் இதுவும் ஒன்று.
    இன்னும் கொஞ்சம் விரிவாக அலசி இருக்கலாம்,

    ReplyDelete
    Replies
    1. இதற்கு மேல் சொன்னால் கதையை சொல்லவேண்டியிருக்கும்
      என்பதால்தான் ஜாக்கிரதையாக எழுதினேன் .

      Delete
  2. படிக்க ஆவலைத் தூண்டும் "சுருக்" விமர்சனம்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  3. படிக்கும் ஆவலைத் தூண்டியது உங்கள் விமர்சனம்.... நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி வெங்கட் நாகராஜ்.

      Delete