Monday, April 14, 2014

அப்பன் சொரியன் ஆத்தா சடைச்சி, பிள்ளை சக்கரைக்கட்டி

முக்கனிச்சுவையே வருக.


மா, பலா, வாழையினைத்தான் முக்கனி என்று சொல்வார்கள். மூன்றும் மூன்று விதம். விருந்தோம்பலில் சிறந்த (இப்ப எப்படின்னு தெரியல) தமிழக விருந்துகளில் இந்த மூன்று பழங்களும் பரிமாறுவது மிக தொன்மையான பழக்கம்.
இந்தியாவில் கோடை காலத்தில் இந்த மூன்றும் கிடைக்கும். ஆனால் நியூயார்க்கில் மற்ற இரண்டு கிடைத்தாலும் பலாப்பழம் கிடைப்பது அரிது. டின்னில் வரும் பலாச்சுளைகளையே சுவைத்து நொந்து போயிருந்த எனக்கு ஒரு சனிக்கிழமையன்று அப்னா பஜாரில் முழுப்பழத்தை பார்த்து மனம் துள்ளிக்குதித்தது. எவ்வளவு என்று கேட்டால், நிறுத்துப்பார்க்க வேண்டும் என்றார்கள். என்னது பலாப்பழத்தை நிறுக்க வேண்டுமா? என்று நினைத்து ஆச்சரியப்பட்டேன். இங்கே எல்லாவற்றையும் நிறுத்துத்தானே தருகிறார்கள் என நினைத்துக்கொண்டு, எவ்வளவு என்று பார்க்கச் சொன்னேன். $62 டாலர் வந்தது. ஐயையோ 3720 ரூபாய் கக்கல்லவா வருகிறது என்று சீச்சீ இந்தப்பழம் புளிக்கும் என்று நினைத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன்.
எங்கப்பா பண்ணைக்காட்டிலிருந்து வரும் மலைப்பலாப்பழத்தை 10 ரூபாய் கொடுத்து வாங்கி வருவார். நான்தான் வெட்டுவேன். பலாச்சுளையில் தேன் ஒழுகும். வெட்ட ஆரம்பித்து ஒரு அரைமணி நேரம் கழித்து வந்து அம்மா பார்ப்பார்கள். ஒரு சுளையும் இருக்காது. ஏனென்றால் சுளைகளை வெட்டி எடுக்க எடுக்க என் வயிற்றுக்குள் போய்க் கொண்டே இருக்கும்.
டிரைவ் செய்து வரும்போதும் சரி, மாலையிலும் சரி, பலாச்சுளை நினைப்பே வந்து வந்து போனது. இரவில் கனவிலும் பலாச்சுளைகள் கால்முளைத்து வந்து என் முன்னால் நடனம் ஆடி  கடுப்பூட்டின.
காலையில் சர்ச் போய்விட்டு வரும் வழியில் என் மனைவி கேட்டாள், "ஏன்  நேற்றிலிருந்து ஒரு மாதிரியாய் இருக்கிறீர்கள் ?" என்று.
நான் பலாப்பழ பிரச்சனையை சொன்னேன். "அவ்வளவுதானே இதுக்குப்போய் ஏன் தயங்கறீங்க, காசு போனா போகுது, வாங்க போய் வாங்கலாம்," என்று காரை அப்னா பஜார் விடச்சொன்னாள். என் மனைவி முழுப்பழத்தையும் $60 டாலர் கொடுத்து வாங்க ரெடியாய் வந்தாள். எனக்குதான் மனசு கேக்கல.அங்குள்ள மேனேஜர் சுரேஷ் தமிழ்தான். அவரைப்பார்த்து தயங்கி தயங்கி ,"பாதி பழம் கிடைக்குமா", என்று கேட்டேன். "இதுக்கு ஏன் சார் தயங்கறீங்க, வாங்க வெட்டித்தரச் சொல்றேன்," என்றார்.  அப்படியே கொஞ்சம் மாம்பழங்களையும் வாங்கி வந்தோம்.

வீட்டிற்கு வந்து, முக்கனிகளையும் ரெடி செய்தேன். என் பிள்ளைகளிடம் "அப்பன் சொரியன் ஆத்தா சடைச்சி பிள்ளை சக்கரைக்கட்டி" என்ற பலாப்பழ விடுகதையைச் சொல்லி விடை கேட்டேன். அவர்கள் யோசித்துக்கொண்டு இருக்கும்போது முக்கனிகளைப் பற்றிய நான் படித்த சிறு குறிப்புகளைச் சொல்லிறேன்.
இந்த முக்கனிகளின் பூர்வீகம் இந்தியாவாகும்.
 மாம்பழம் : ராஜகனியான ( King of Fruits) மாம்பழம் முக்கனிகளில் முதல் கனியாகும். மாம்பழத்தின் பூர்வீகம் தென்னிந்தியாதான். தமிழ்நாட்டில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகம் விளைகிறது. ஆந்திராவிலும் விளைகிறது.நன்கு கனிந்த மாம்பழத்தை உண்பது நல்லது. மாம்பழம் உடலுக்கு உஷ்ணம் தரும் பழம் தான்.ஆனால் சமையலுக்கு பயன்படுத்தும் புளியில் உள்ள உஷ்ணத்தை விட குறைவு.மாம்பழத்தை உணவோடு சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வெறும்வயிற்றில் சாப்பிடக் கூடாது. உணவு உண்டபின் 20 நிமிடம் கழித்துசாப்பிடுவது நல்லது.
பலாப்பழம்: பலாப்பழம் முக்கனிகளில் இரண்டாவது கனியாகும்.பலாப்பழத்தை நேரடியாக உண்பது நன்கு சுவையாக இருக்கும். ஆனால் அவ்வாறுஉண்ணாமல் பலாப்பழத்தை தேன், நெய், சர்க்கரை சேர்த்து உண்பது நல்லது.
வாழைப்பழம் : முக்கனிகளில் மூன்றாவது கனிதான் வாழை. எந்தக் காலத்திலும் கிடைக்கும் பழமாகும். உலக மக்கள் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் பழங்களில் வாழைப்பழத்திற்குத்தான் முதலிடம்.

 உடல் பருமன் உள்ளவர்கள் வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் அதாவது இரவு உணவுக்குப் பதில் (நன்றாக கவனிக்கவும் , இரவு உணவுக்குப் பதில், இரவு உணவுக்கு மேல் அல்ல) 3 பூவன் வாழைப்பழத்தை சாப்பிட்டு சிறிது நேரம்கழித்து வெந்நீர் அருந்தி வரவும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் தொப்பை குறையும்.( நம்ம போலீஸ் டிபார்ட்மெண்டுக்கு ஹோல் சேலில் வாழைப்பழங்களை   அனுப்புங்கப்பா)
   சரி விடுகதைக்கு வருவோம். பிள்ளைகளுக்கு புரியாததால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முயற்சி செய்து கைவிட்டுவிட்டேன். அப்பன் சொரியன் என்பதை எப்படிங்க ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முடியும். கடைசியில் "அப்பன் சொரியன்" என்பதை பிள்ளைகள் என்னைப்பற்றி தான் சொல்கிறேன் என தப்பாக நினைக்க ஒரே ரகளையாப் போச்சு. ஆத்தா சடைச்சி என்பதை  எப்படி பிள்ளைகளுக்கு விளக்குவது என்று எண்ணிக்கொண்டிருக்கும்போது, என் மனைவி அப்போதுதான் குளித்து முடித்து , தலை  விரி கோலமாய் வந்து கொண்டிருந்தாள். எதுக்கு வம்புன்னு பேசாம இருந்து விட்டேன்.

அப்புறம் தெரிந்தும் தெரியாமலும் நான் சாப்பிட்ட முக்கனிகளால் என் உடம்பு பழுத்த பழமாக, யாருக்கும் தெரியாமல் பாத்ரூம் சென்று சுகர் டெஸ்ட் செய்து பார்த்தேன். அம்மாடியோவ் அதில் வந்த நம்பரைப்பார்த்து தலை கிறுகிறுத்துப் போச்சு.
நீங்களே சொல்லுங்க, தலை கிறுகிறுத்துப்போனது சுகர்னாலயா இல்லை சுகர் மிஷின் காட்டிய நம்பர்னாலயா?


நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

7 comments:

  1. ஒரு முழு பலாப்பழம் அறுபது டாலரா, அம்மாடி.... முக்கனிகளுமே சுகருக்கு ஆகாதுன்னு பின்னூட்டத்துல சொல்லலாம்னு இருந்தேன். ஆனா நீங்களே செக் பண்ணி சொல்லிட்டீங்க சார்.....

    ReplyDelete
    Replies
    1. ஆசை யாரை விட்டது,
      தங்கள் வருகைக்கு நன்றி.

      Delete
  2. "இனிய" தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி.

      Delete
  3. இங்க இவ்ளோ ஈஸியா கிடைக்கிறவிசயம் உங்களுக்கு எவ்ளோ ரேர் !!!
    அமெரிக்காஆஆஆஆஆஆஆஆஆ !!! ரொம்ப சுவையா இருந்தது முக்கனி பதிவு!!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி.

      Delete
  4. சுவையான முக்கனி.

    நெய்வேலியில் பலா மரம் இல்லாத வீடில்லை. சீசனில் எல்லா வீட்டிலும் பலாப்பழம் தான். தில்லி வந்த பிறகு மொத்தமாய் போய்விட்டது. இங்கே பலாக்காய் சப்ஜி செய்வார்கள். பழுக்க விடுவதே இல்லை! :(

    ReplyDelete