Thursday, April 3, 2014

நானொரு முட்டாளுங்க !!!!!!!!!!

ஏப்ரல் 1, அதிகாலை ஐந்து மணியிருக்கும். என்னுடைய செல்போன் அழைத்தது. நேற்று முதலே நண்பர்கள் முக நூலில் வாழ்த்துச் சொல்ல ஆரம்பித்துவிட்டனர். என்னுடைய பிறந்த நாளை யாரும் மறப்பதில்லை. முட்டாள்கள் தினமான ஏப்ரல் 1-ல் பிறந்தால் யார்தான் மறக்க முடியும். நேற்று இரவு 11 மணிக்குள் சுமார் 400 பேர் வாழ்த்திவிட்டனர். டெக்ஸ்ட் மேசெஜ்களும் குவிந்தன. அறிந்தவர் அறியாதவர், தெரிந்தவர் , தெரியாதவர் , புரிந்தவர் புரியாதவர்  எல்லோரும்  வாழ்த்தினர்.

நான் எதிர்பார்த்த வண்ணம் இன்று முழுவதும் ஃபோன் கால்கள் இருக்கும். ஆனால் காலை ஐந்து மணி கொஞ்சம் ஏர்லிதான். யாராக இருக்குமென என் போனை எடுத்தேன்.

சின்னவயதில் ஏப்ரல் 1 அன்று முழுவதும் பள்ளியில் ஒரே கலாட்டாவாக இருக்கும். சோப்பின் ஒரு பகுதியை எடுத்து ஏப்ரல் ஃபூல் என்று வெட்டி, மையில் தோய்த்து சட்டைகளில் குத்துவார்கள். அப்படியே அச்சு போல விழும். பாதி அறுத்த கத்திரிக்காய்கள் மற்றும் உருளைக் கிழங்குகளும் பயன்படுத்தப்படும். அப்போது இங்க் பேனாக்கள்தான். மசியை நிரப்பி சட்டைகளில் அடித்து விடுவார்கள். பலரை ஏமாற்ற முயல்வார்கள். எனவே அன்றைய நாளில் யாரும் நல்ல சட்டையை போடமாட்டார்கள்.

பிறந்த நாளுக்கு சாக்லெட் கொடுத்தால் நம்ப மாட்டார்கள். ஏமாற்றுகிறேன் என நினைப்பார்கள். நான் என் அப்பா வாங்கிக் கொடுத்த பாரிஸ் எக்லர்ஸ் (Parry's Eclairs) சாக்லெட்களை பாதி தின்றுவிட்டு, அதன் பிளாஸ்டிக் காகிதங்களுக்குள் சிறு கற்களைப் போட்டு நல்ல சாக்லெட்களுடன் கலந்து விடுவேன்.  

ஏமாற்றுகிறேன் என நினைப்பார்கள். முதலில் நம்பி எடுப்பவர்களுக்கு நல்ல சாக்லெட் கொடுப்பேன். டேய் உண்மையான சாக்லெட்தாண்டா என்று அவர்கள் மற்றவர்களுக்கு சொன்னவுடன் முதலில் மறுத்து பின் வருபவர்களுக்கு கல்லைக் கொடுப்பேன் ஏமாந்து போயிருவாங்க.

"சரிடா பழைய கதையை விடு,  போன்ல வந்தது யாருன்னு சொல்லு".

"இர்ரா அதான் சொல்றேன்ல, அதுக்கு முன்னால நேற்று ஒரு அதிசயம் நடந்தது. அதைச் சொல்லிட்டு போன்ல யாருன்னு சொல்றேன். நேற்று என்னோட பாஸ் கூப்பிட்டார். அவர் கூப்பிடுவாருன்னு நான் எதிர்பார்க்கல. எங்கள் கம்பெனி குழுமத்தின் பிரசிடென்ட். அவர் இங்கே நியூயார்க்கில் எப்போதும் இருப்பதில்லை. வருடத்திற்கு ஒரு மூன்று நான்கு மாதங்கள் மட்டுமே இங்கிருப்பார். பல பிஸினஸ் இருப்பதால் எப்போதும் பறந்து கொண்டே இருப்பவர்.

என்னைக் கூப்பிட்டு, "அட்வான்ஸ் விஷ்ஸஸ் ஃபார் யுவர் பர்த்டே" என்றார். "தேங்க் யு முகமட்" என்றேன். "பிறந்த நாள் பரிசு ஒன்று வைத்திருக்கிறேன்", என்றார். "நீங்கள் நம் கம்பெனியில் பல வருடங்கள் உண்மையாக உழைத்து கம்பெனியை இந்த அளவுக்கு வளர்த்ததால், உங்களை கம்பெனியின் ஒரு டைரக்டராக பதவி உயர்வு கொடுத்து, கம்பெனியின் லாபத்தில் இருபது சதவிகிதத்தை ஷேர்களாக கொடுக்கிறேன்" என்றார்.

நான் அப்படியே ஆடிப்போனேன். வருடத்துக்கு லாபம் மட்டும் 10 மில்லியன் ஈட்டும் இந்த அமெரிக்க நியூயார்க் பிராஞ்சில், 20 சதவிகிதம் என்பது 2 மில்லியன் டாலர். அம்மாடியோவ். "ரொம்ப தேங்க்ஸ் முகமட்”, என்று முகமதுவின் கையைப்பிடித்து நன்றி சொன்னேன்.

"ஆல்பி 10 மில்லியன் லாபத்தை 20 மில்லியனாக ஒரு வருடத்தில் ஆக்குவது உங்கள் பொறுப்பு", என்று சொன்னதோடு, என்னைக் கையைப் பிடித்து அவருடைய சீட்டில் உட்கார வைத்து, அவர் எனக்கு முன்னாடி வந்து உட்கார்ந்தார்.
அந்த இன்ப அதிர்ச்சி தங்காமல் கனவுகளுடன் வந்து படுத்து அடுத்த நாள் காலைதான் அந்த போன் வந்தது.
போனை எடுத்து, "ஆல்ஃபி ஹியர்", என்றேன். "ஹாய் திஸ் இஸ் நீல்கேனி ஹியர்" என்றது செல்போன். "ஐஆம் சாரி, விச் நீல்கேனி ?", என்று கேட்டேன்.
Nandan Nilekeni 
அவர் சொன்னதும் அதிர்ந்துவிட்டேன். அவர்தான் நந்தன் நீல்கேனி. இன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவர். 7700 கோடிக்கு சொந்தக்காரர். மத்திய அரசின் "ஆதார் அட்டையை வடிவமைத்து இந்தியா முழுதும் அறிமுகப்படுத்திய டெக்னாலஜி ஜீனியஸ். அது மட்டுமல்லாமல் பெங்களூர் நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளர்.

"சொல்லுங்க நீல்கேனி, ஹவ் மே ஐ ஹெல்ப் யு", என்றேன்.  நான் என்ன அவருக்கு உதவி செய்து விடப்போகிறேன்   என்று எனக்கே அது அபத்தமாக ஒலித்தது.

அவர் சொன்னார்,"டிஐஜி சந்திரசேகர் உங்களைப்பற்றி பெருமையாகச் சொன்னார். சோனியா காந்தி அவர்களும் ராகுல் காந்தி அவர்களும் நமது நாட்டினை அடுத்த லெவலுக்கு இட்டுச் செல்ல மத்திய அரசின் I.T துறைக்கு தலைமைப் பெறுப்பு ஏற்பதற்கு ஒரு நல்ல எக்ஸ்பர்ட்டை பரிந்துரை செய்யச் சொல்லி என்னைக் கேட்டார்கள். எலெக்ஷன் முடிவதற்குள் இந்த அப்பாயின்மென்ட் பண்ணனுமாம். நான் உங்களைத் தான் சொல்லியிருக்கிறேன். சம்பளம் மட்டும் ஒரு கோடி. பார்லிமென்ட் செக்ரட்டேரியட்டில் ஒரு அலுவலகம், தங்குவதற்கு அமைச்சர்கள் தங்குமளவுக்கு பெரிய வீடு, வேலைக்காரர்கள் என்று சகல வசதியும் உண்டு. ஒரு மத்திய அமைச்சருக்கு இணையான பதவி இது.அடுத்த வாரத்தில் நடக்கும் மந்திரி சபையில் நீங்கள்  கலந்து கொண்டு ஒரு பிரசன்டேஷன் கொடுக்க வெண்டும். பயப்படவேண்டாம். பின்புலமாக நான் இருப்பேன்," என்றார்.

சாமி கொடுத்தால் கூரையைப் பிச்சுக் கொடுப்பார் என்பது இதுதானா ?
 இப்போது இந்த இரண்டில் எதனை நான் எடுப்பது என்று ஒரே குழப்பமாக இருக்கிறது.

நண்பர்களே உங்கள் ஆலோசனை தேவை, அதோடு என்னுடைய டீமில் சேர ஆட்களும் தேவை. உடனே தொடர்பு கொள்ளவும்.


பின்குறிப்பு: இப்ப ஏமாந்தது நானா அல்லது நீங்களா என்பது உங்களுக்கு மட்டும்தான் தெரியும்.

10 comments:

  1. \சாமி கொடுத்தால் கூரையைப் பிச்சுக் கொடுப்பார் என்பது இதுதானா ?/ பார்த்து அண்ணே, சுப்ரமணிசாமிக்கு மட்டும் இது தெரிஞ்சுது, உங்க கதை கிழிஞ்சிடும்.

    ReplyDelete
    Replies
    1. நான் ஏசாமிய சொன்ன நீ ஆசாமிய சொல்றியே தம்பி விசு ?

      Delete
  2. உங்கள் டீமில் சேருவதற்கு தயார் ! ஆனால், நீங்கள் அடுத்த ஏப்ரல் -1 வரை காத்திருக்க வேண்டும் ! பரவாயில்லையா ??

    ReplyDelete
    Replies
    1. காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி .

      Delete
  3. Replies
    1. தங்கள் வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  4. :)))))

    ஆஹா... இரண்டையுமே தேர்ந்தெடுக்கலாமே! :) ஏப்ரல் ஒன்று என்பதால் எதையும் செய்யலாம்!!

    AF என்று ரப்பரில் வெட்டி அதில் மை தடவி எத்தனை சட்டைகளை வீணாக்கி இருப்போம்! ம்ம்ம்ம் நினைவுகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி வெங்கட் நாகராஜ்.

      Delete
  5. எனக்கு கூட பில் கேட்ஸ் , ஒபாமாவெல்லாம் போன் பண்ணினாங்க . நான் என்ன உங்கள் மாதிரி பெருமையா பேசுறேன்? எவ்ளோ அடக்கமா இருக்கேன்! கத்துகோங்க ப்ரோ! ஹா...ஹ...;)

    ReplyDelete
    Replies
    1. ஏப்ரல் 1ஆம் தேதிதானே , கூப்பிடுவார்கள், கூப்பிடுவார்கள் .

      Delete