Monday, April 7, 2014

சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தில் அடியேன் !!!!!!!!! . பகுதி 2


தற்சமயம் சன் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும், பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் நியூஜெர்சி  தமிழ்ச்சங்கம் நடத்திய கல்யாணமாலை பட்டிமன்றத்தில் அடியேன் கலந்து கொண்டு “குடும்ப வாழ்வு  சுவைப்பது அமெரிக்காவில்தான்”, என்ற தலைப்பில் பேசிய முழு உரையின் இரண்டாவது பகுதியை இங்கு தருகிறேன்.
                                                   
                                                பகுதி 2

நான் மசக்கை வாந்தி என்று நினைத்தேன்.ஆனால்  நான் போட்டது சர்க்கரையில்ல, உப்பு.
பாடல்:
என் சமையலறையில் இருந்தது உப்பா சர்க்கரையா?
என் சமையலறையில் இருந்தது மிளகா சீரகமா?

ஒன்னும் தெரியாது ஐயா,
இதுல, து.பருப்பு, உ.பருப்பு, பா.பருப்பு என்று ஒரு வித்தியாசமும்  எனக்கு தெரியாது. வேற வேற இனிஷியல் இருக்கிறதால இந்த  பருப்புகளுக்கு வேற வேற அப்பான்னு நெனச்சேன்.ஆனால் இங்கே மனைவிக்கு சமையில் அறையில் உதவி செய்கிறேன். கடைக்குப்போய் காய் கறிகள் வாங்குகிறேன்.வெண்டைக்காயை ஒடித்துப்பார்க்க   வேண்டும் , கத்திரிக்காயை அமுக்கிப்பர்க்கவேண்டும் என்று எல்லாம் கற்றுக்கொண்டேன் ஐயா.  


ஐயா ஆண்களில் இரண்டு வகை.
ஒன்று மனைவிக்கு அடிமையாய் இருப்பார்கள்.ரொம்பப் பேர் இருப்பாங்க போல கைதட்டு   பலமா இருக்கு .
இல்லை மனைவியை அடிமைப்படுத்தி இருப்பார்கள். ரெண்டுமே தவறுதான்.
இதுல நீங்க எந்த வகைன்னு தெரியலை?
இதுல நான் ரெண்டாவது வகை. மனைவியை அடிமையாக நினைக்கும் ஆண் ஆதிக்க சமுதாயத்தின் மொத்த பிரதிநிதியாய் இருந்தேன். இங்கே வந்தபின்தான் அது தவறு என்று தெரிந்தது. ஏனென்றால் இங்கேதான் எந்த அழுத்தமும் இல்லாமல் அவளிடம் நெருங்கிப்பழக முடிந்தது.
இப்போது வண்டியின் சமமான இரு க்கரங்கள் போல் ஒருபுறம் என் மனைவியும் மறுபுறம் நானும் இருக்கிறோம். குடும்ப வண்டி சீராகப் பயணிக்கிறது.
பாடல்:
நான் என்றால் அது அவளும் நானும்
அவள் என்றால் அது நானும் அவளும்.

குடும்ப வாழ்வு அதனால் இங்குதான் சுவைக்கிறது ஐயா.

ஏப்ரல் மாதம் இருக்குமென நினைக்கிறேன். திடீரென்று ஒருநாள் மதியம் என் Friend டிடம் இருந்து phone வந்தது. பயந்தேவிட்டேன். ஏனென்றால் அது இந்தியாவில் நள்ளிரவுக்கு மேல். என்னடான்னு கேட்டா, application வாங்குவதற்கு லைனில் நிற்பதாகச் சொன்னான். “யாருக்குடா admission, மெடிக்கலா இஞ்சினியரிங்கா?”  என்று கேட்டதற்கு சொன்னான், “ டேய் விளையாடாதே, என் கடைசி மகளுக்கு LKG admission னுக்குத்தான் நிற்கிறேன் என்றான்.
“எந்த இடத்தில  நிக்கற?”
“St. Thomas Mount”
“St. Thomas Mount - ல் எந்த ஸ்கூல்?”
“டேய்  ஸ்கூல் இருக்கிறது T- நகரில், லைன்தான் இங்குவரை  இருக்குது”
“அடப்பாவி லைன் அவ்வளவு   நீளமா?”
        “அட நீ வேற , இதே ஸ்கூல்க்கு  என் மச்சான் ஸ்ரீ பெரும்புதூர் கிட்ட நிற்கிறான்”“டேய் டேய் , நான் ஏற்கனவே தமிழ்நாடு கவர்னர் ரெக்கமெண்டேஷன் வாங்கியாச்சு . நீதான் அமெரிக்காவில் இருக்கியே , கொஞ்சம் ஒபாமாவிடம்   ஒரு ரெக்கமெண்டேஷன் வாங்கி அனுப்புரியா”, என்று அப்பாவியாய் கேட்டான்
இந்தியாவில் ஒரு நல்லபள்ளியில் இடம் வாங்க, எவ்வளவு கஷ்டம் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். இங்கு  என் பிள்ளைகள் படித்தது public School தான். என் பிள்ளைகள் 2001-ல் வரும்போது பள்ளிக்கு அழைத்துச் சென்றேன். பத்து நிமிஷத்தில்   முடிந்தது அட்மிஷன்.

 பாவம்யா என் பிள்ளைகள் இந்தியாவிலிருக்கும் போது தூங்கவேயில்லை.ஏனென்றால் –
காலையில் tuition,
மாலையிலும் tuition,
இரவிலே confusion.
எப்படி தூக்கம் வரும்.
அவர்களோடு சேர்ந்து நாங்களுமல்லவா படிக்க வேண்டியதிருந்தது. இங்கே அவர்கள் தாங்களாகவே படிக்கிறார்கள். வீட்டிற்கு வந்தால் relax  ஆக இருக்கிறார்கள். Home Work -ஐ பள்ளியிலேயே முடித்து வருகிறார்கள். Exam என்றாலும் படிப்பதேயில்லை. ஏன் படிக்கவில்லை என்று  கேட்டால் ?சும்மா வளவளன்னு பேசாதே Report Card -பாரு என்கிறார்கள். பார்த்தால்  96-98 % Average. 5-ஆவது படிக்கும்போதே - நல்ல student என்று பெயரெடுத்து Scholar’s Academy   என்ற ஸ்பெஷல் ஸ்கூலுக்கு Select ஆகி- அரசாங்க செலவில் படித்து, National Scholar’s Society யில் Member ஆக செலக்ட் ஆகி தூள் கிளப்பினாள்   என் பெண்.
எங்கள் பிள்ளைகள் எங்கள் உதவி எதுவுமில்லாமல் படிக்கிறார்கள். எனவே குடும்ப வாழ்வு சுவையாகவே இருக்கிறது அமெரிக்காவில்.

ஐயா நான் கூட இந்தியாவிலிருக்கும் போது சரியா தூங்கினதில்லை. ஏன்னா, எல்லா சீரியலையும் பார்த்துவிட்டு வரும் என் மனைவி - கனவிலே ஒரே அரட்டை. சித்தி என்ன ஆவாளோ - சித்தப்பாவுக்கு என்ன ஆகுமோ. ஒரு வழியா இந்த அரட்டை முடிந்தவுடன், குறட்டை ஆரம்பிச்சுரும். பிறகு எங்க நான் தூங்குகிறது. ஆனா இங்க அந்தப்பிரச்சனை அதிகம் இல்லை.

 கடைசியாக உறவுகளை கைவிட்டுவிட்டோம் என்று சொல்கிறார்கள்.
அப்படியல்ல, அங்கே நாங்கள் சம்பாதித்து எங்களுக்கே பத்தாமல் - தாய் தந்தை மற்றும் உறவினர்களிடம் நாங்கள் எதிர்பார்த்து வாழ்ந்தோம். எங்களால் அவர்களுக்கு எந்தப் பயனுமில்லை. எங்களைப் பார்த்தால் உறவினர்கள் ஓடி ஒதுங்கினார்கள்.  
-னால் இங்கு வந்த போது அவர்களுக்கும் உதவி செய்யும்படியாக நாங்கள் உயர்ந்திருக்கிறோம். எங்கள் மதிப்பு உயர்ந்திருக்கிறது. பெற்றோர்களை விமானத்தில் அழைத்து வந்து நயாகராவையும், வெள்ளை மாளிகையையும் சுற்றிக்காண்பிக்கிறோம். உறவுகளை நாங்கள் விட்டுவிடவில்லை. ஐயா, குடும்ப வாழ்வும் உறவும் அமெரிக்காவில் நன்றாகவே இருக்கிறது.

ஒரு ஆதாரத்தோடு முடிக்கிறேன்.
நாட்டை மறந்துவிட்டோம், துறந்துவிட்டோம் என்ற குற்றச்சாட்டு எங்கள் மேல் இருக்கிறது. ஆனால் உலகத்திலேயே தாய்நாட்டுக்கு பணம் அனுப்புவதில் இந்தியர்தான் முதலிடம் வகிக்கிறோம்  என்று உலக வங்கி சொல்கிறது.
2013-ல் இதுவரை 71 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 4 லட்சத்து 40 ஆயிரம் கோடி அனுப்பியிருக்கிறோம்.
நாங்கள் எங்கள் குடும்பத்தோடு மகிழ்ச்சியோடு வாழ்ந்து, ஊரில் உள்ள எங்கள் உறவுகளுக்கு உதவி செய்வது மட்டுமல்ல, எங்கள் தாய் நாட்டுக்கும் அந்நியச் செலாவணி ஈட்டிக் கொடுக்கிறோம்.
எனவே குடும்பவாழ்வு சுவைப்பது அமெரிக்காவில் தான் என்பதை மனசாட்சியுள்ள எல்லா அமெரிக்க வாழ் இந்தியரும் தமிழரும் ஒத்துக் கொள்வார்கள் என்று கூறி, வாய்ப்பளித்த நியூஜெர்சி தமிழ்ச்சங்க நண்பர்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன், நன்றி வணக்கம்.

6 comments:

  1. அதானே... confusion இருந்தால் எப்படி தூக்கம் வரும்...?

    /// ஊரில் உள்ள எங்கள் உறவுகளுக்கு உதவி செய்வது.../// அதைச் சொல்லுங்க முதல்லே...!

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  2. இதுல நான் ரெண்டாவது வகை. மனைவியை அடிமையாக நினைக்கும் ஆண் ஆதிக்க சமுதாயத்தின் மொத்த பிரதிநிதியாய் இருந்தேன். .....எங்களை வச்சு காமெடி கீமெடி ஒன்னும் பன்னலதானே ...மனைவி குரல் கேட்டாலே நடுங்குவிகன்னு காதுல கேட்டது !!!!!!

    ReplyDelete
    Replies
    1. இருந்தேன் ஒரு காலத்தில் , இப்போது மாறிவிட்டேன் என்றுதானே சொல்லியிருக்கிறேன் Pon Pathar.

      Delete
  3. சிறப்பான உரை... பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி வெங்கட் நாகராஜ்.

      Delete