Thursday, November 7, 2013

சூப்பர் சிங்கர்களுடன் பரதேசி


        
வடஅமெரிக்காவின் முதல் தமிழ்ச்சங்கமான "நியூயார்க் தமிழ்ச்சங்கம்" தீபாவளித்திருநாளை கொண்டாடும் வண்ணமாக "சூப்பர்சிங்கர்" மெல்லிசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். அக்டோபர் 26, சனிக்கிழமை மாலை 4 மணிக்கு ஃபிளஷிங்-ல் உள்ள ஹிண்டு  டெம்பிள் ஆடிட்டோரியத்தில் வைத்து நடத்தது. 3.30 மணிக்கே நான் சென்றாலும் வழக்கத்திற்கு மாறாக அரங்கு நிறைந்திருந்தது.
        விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சூப்பர்சிங்கர்' இசைப்போட்டி உலகமெங்கும் உள்ள தமிழ் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட ஒன்று.
        அதனுடைய முதல் சீசனில் வென்ற 'நிகில் மேத்யூ' இரண்டாம் சீசனில் வென்ற "சாய் சரண்" மற்றும் ஜூனியரின் இரண்டாவது சீசனில் முதல் ஐந்து இடங்களில் வந்த பிரகதி மற்றும் யாழினியும் வந்திருந்தனர். இவர்களோடு தன்யஸ்ரீயும் வந்திருந்தாள். இசைக்கு உறுதுணையாக, சென்னையிலிருந்து "கணேஷ் கிருபா" இசைக்குழுவினர் நான்குபேர் வந்திருந்தனர்.
        உள்ளே நுழையும்போதே மங்களமான மஞ்சள் நிறத்தில் நிகழ்ச்சி நிரலை நீட்டினார்கள். அதிலே ஆச்சரியமாக ஒவ்வொரு நிகழ்வுக்கும் நேரம் போடப்பட்டிருந்தது. அதோடு ஒவொரு நிகழ்வுக்கும்  கால அளவும் போடப்பட்டிருந்தது.ஆஹா சூப்பர்!!!!! என்று பெருமிதத்துடன் உட்கார்ந்தோம். எவ்வளவு முயன்றும் 3.30 மணிக்கு ஆரம்பிக்க வேண்டியது, பல்வேறு காரணங்களால் 4.45 மணிக்குத்தான் ஆரம்பிக்க முடிந்தது. அட்லீஸ்ட் நிகழ்ச்சி நிரலில் நேரம் போடாமலிருந்திருக்கலாம் என்று நினைத்தேன்.
        ஆரம்ப நிகழ்வாக தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட, முடி கலைந்து வந்தவர், சுதிகலைந்து பாடினார். பாட்டுக்குத் தேவையான ஆதார சுதி, சேதார சுதி ஆகி நாராசமாய் ஒலித்தது. "வாழ்த்துதுமே"-வின் அவரோகணம் ஆரோகணமாகி தேய்ந்து ஒலித்து ஓய்ந்து போனது.
        அதன்பின் அமெரிக்க தேசிய கீதத்தைப் பாடிய "லாரன் ஜோசப்" 

எனும் சிறு பெண் சிறப்பாகப்பாடி கைதட்டதல்களை   அள்ளினாள். அமெரிக்க தேசிய கீதத்தை இவ்வளவு இனிமையாக நான் எங்கும் கேட்டதில்லை. அந்தப் பெண்ணே பின்னர் நடந்த பாட்டுப் போட்டியின் பைனல்சில், “மெலடி சிங்கர்” பட்டம் வென்றாள்.

        சம்பிரதாய வரவேற்பு மற்றும்  அறிமுகப்படலங்கள் முடிந்தவுடன், சாய்சரண் உள்ளே வந்து தன்னுடைய வெற்றிக்கு உதவி, 65 லட்சம் பெறுமான அபார்ட்மெண்டை வாங்கிக்கொடுத்த, "பாட்டும் நானே பாவமும் நானே" என்ற T.M செளந்தரராஜன் பாடிய திருவிளையாடல் பாட்டை கணீரென்று பாடினார். செளந்தரராஜனின் ஏழுகட்டை வெங்கலக்குரல் யாருக்கும் வராதென்றாலும், சாய்சரண் தன் சொந்தக்குரலில் அந்தப்பாடலை பாடி அப்ளாஸ்  அள்ளினார். அது ஒரு சிறப்பான ஆரம்பமாக அமைந்தது. 
      தொகுத்து வழங்கிய இலங்கைத்தமிழ் சகோதரர் அந்தக்கால இலங்கை வானொலியின் KS.ராஜா, BS.அப்துல்ஹமீது ஆகியோரை நினைவு படுத்தினார். இவர்களை அறியாதவர்கள், இதனை ரசிக்கவில்லை (நியோயோர்க்  த்த்தமிழ்ச்ச் சங்காம்)
        அடுத்துவந்த பிரகதி இன்னும் உயரமாய் வளர்ந்து இன்னும் அழகாக மின்னினார். "நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சிரிக்கேன்" என்ற A.R.ரஹ்மான் பாடலை அருமையாய்ப் பாடினார்.

 முகத்தில் ஒரு புன்முறுவல் கடைசிவரை உறைந்திருந்தது, மேடைக்கு அழகு சேர்த்தது .பிரகதி சிறிது உச்சரிப்பில் கவனம் செலுத்தினால், இன்னும் மேலே வர வாய்ப்பிருக்கிறது. என்ற
        அதற்குப்பின் வந்த "நிகில் மேத்யூ”, விழி மூடி யோசித்தால் முன்னே வருவேன் அங்கே அங்கே என்ற பாடலை பாடினார். மிகச்சிறந்த பாடகரான நிகில் மேத்யூவின் குரல் அன்று என்னவோ எடுபடவில்லை. காரணம் சவுண்ட் சிஸ்டம் ஆக இருக்கலாம். ஆரம்பித்தில் இருந்தே தகராறு பண்ணிக்கொண்டிருந்து முகம் சுளிக்க   வைத்தது.


        பலத்த கரதோஷத்துடன் யாழினி வந்து ஞானப்பழத்தை பிழிய, அவளுடைய வயதுக்கு அவளுக்கு அசாத்திய திறமைதான். ஒரு சில இடங்களில் ஹைபிட்ச் எட்டமுடியவில்லை என்றாலும், சிறு பிள்ளைகள் செய்யும் குறை எப்போதும் பெரிதாகத் தெரியாது என்பதால் கைதட்டை அள்ளினாள். அவள் அபிநயித்து பாடிய "பட்டத்துராணி"யும்  சூப்பர் ஹிட்.
        தன்  முதல்பாடலான மரங்கொத்திப் பறவையில் பாடிய "டங் டங் டிகடிக  டங் டங்" என்ற பாடலை சாய்சரண் யாழினியுடன் இணைந்து பாடியது சிறப்பாக அமைந்தது. கணேஷ் கிருபாவின் தபேலா வாசிப்பவர் தன் டேப்பை எடுத்துக்கொண்டு வாசித்துக்கொண்டே வலம்  வந்தது வேடிக்கையாக இருந்தது. அவரைச்சுற்றி பல சுதிகளில்  "கர்ணங்கள்" சூழ்ந்திருந்தாலும், அவர் சட்டைக்குள் இருந்தது கடமல்ல அவர் தொப்பை என்பது எழுந்த போதுதான் தெரிந்தது.

 ஆனால் இரு தொடைகளையும் தொப்பையையும் பயன்படுத்தி வாசித்த கடல் படத்தில் வரும் 'மூங்கில் தோட்டம்' சூப்பர் ஹிட். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வழக்கமாக கீபோர்டு வாசிக்கும் விஜயன்தான் எல்லாப் பாடல்களுக்கும் எல்லாக் கருவிகளையும் கீபோர்டிலேயே வாசித்து அசத்தினார். அதோடு இடைவேளைக்குப்பின் தன் இரண்டு கீபோர்டுகளில் இரண்டு கைகளால் “பளிங்கினால் ஒரு மாளிகை”, “அவளுக்கென்ன  அழகிய முகம்” ஆகிய  இரண்டு பாட்டுகளை ஒரே நேரத்தில் வாசித்தது ஒரு ஆச்சரிய உண்மை.

        குள்ளஸ்ரீ என்று நாங்கள் செல்லமாக அழைக்கும் தன்யஸ்ரீயும் பல டூயட் பாடல்களில் இணைந்து பாடினார்.
 அவருடைய குரலும் எனக்குப் பிடித்த குரல்களில் ஒன்று.    என்ன காரணத்தாலோ கணேஷ் கிருபா இசைக்குழுவின் தலைவர் கணேஷின் முகத்தில் ஆரம்பம் முதல் இறுதிவரை ஈயாடவில்லை. ஜெட் லாகா அல்லது கான்ஸ்டிபேஷனா  என்று தெரியவில்லை.
        இறுதியில் ஐந்துபேரும் வந்து அதிவேக ஐட்டம் பாடல்களை மெட்லியாகத் தொகுத்துப்பாட, வந்த சிலர் ஆடுவதாக நினைத்துக்கொண்டு கைகால்களை அஷ்டகோணலாக அசைக்க,   இசை நிகழ்ச்சி இனிதே முடிவு பெற்றது.
        மொத்தத்தில் நியூயார்க் தமிழ்ச்சங்கம் நடத்திய நிகழ்ச்சிகளில் மனதில் நிறைந்த ஒரு பொன்மாலைப்பொழுது.


                உள்ளே நுழையும்போது மஞ்சள் நிறத்தில் நிகழ்ச்சி நிரல் கொடுத்து மங்களகரமாக வரவேற்றபடியே, வெளியே போகும்போது மஞ்சள் நிற லட்டு கொடுத்து வழி அனுப்பிவைத்தனர். அன்று போல் என்றும் தன்னலமற்ற சேவை செய்து வரும் M.N.கிருஷ்ணன், காஞ்சனா, ராதாகிருஷ்ணன், ஆல்பர்ட் செல்லத்துரை அவர் மனைவி இந்திரா ஆல்பர்ட், வனஜா பார்த்தசாரதி  இன்னும் பலரின் தமிழ்ச்சேவை மேன்மேலும் வளரவும், தொடரவும் இந்தப் பரதேசியின் வாழ்த்துக்கள். 

7 comments:

  1. சகல கலா வல்லவர் ஆன நீங்களும் இவர்களுடன் சேர்ந்து பாடினீங்களோ என்று நினைத்தேன்...

    ReplyDelete
    Replies
    1. ஐயா , மதுரைத்தமிழரே,இது பரதேசி ப்ளாக்,
      கமென்ட் மாறி வந்து விட்டதென்று நினைக்கிறேன் .

      Delete
  2. என்ன அண்ணே, அம்பிகாபதி அமர்வதி பாணில "பங்கஜ வள்ளி அம்புஜா நேதிரு" னு எடுத்து உடவேண்டியதுதானே.

    ReplyDelete
    Replies
    1. தம்பி, எனக்கு பங்கஜம், வள்ளி, அம்புஜா என்ற யாருமே தெரியாது. நான் ரொம்ப நல்லவன்.

      Delete
  3. விழாவினை ரசித்தது புரிகிறது.....

    தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே....

    ReplyDelete
  4. குறை நிறைகளை உள்ளதைஉள்ளபடி
    கூறிச் சென்றவிதம் மனம் கவர்ந்தது
    தொடர்கிறேன்...

    ReplyDelete