ஆகஸ்ட்
4, 2013 ஞாயிற்றுக்கிழமை
காலையில் கொஞ்சம் லேட்டாக எழுந்து, ஓசி பிரேக்ஃபாஸ்ட்
10 மணிக்குள் முடிந்துவிடும் என நினைவு வந்து வேகமாக இறங்கினோம். எளிமையான இங்கிலிஷ்
பிரேக்ஃபாஸ்ட்டை விரைவில் முடித்து, காரை எடுத்துக் கொண்டு, பக்கத்து நகரான "பான்சே"
(Ponce)க்கு கிளம்பினோம். ஒரு இரண்டு மணி நேரப்பயணத்தில், குறிஞ்சி, முல்லை, மருதம்,
பாலை ஆகிய அனைத்தையும் பார்த்து அதிசயத்த வண்ணம் நகருக்குள் நுழைந்தோம்.
பான்சே
ஒரு அழகான சிறிய கடற்கரை நகரம். அதன் சிகரத்தில் உள்ள "குருசெட்டா எல் விஜியா" (cruseta El Vigia) என்ற இடத்திற்குச்சென்றோம்.
(நண்பர்களே, ஏற்கனவே சொல்லியது போல் ஸ்பானிஷ் உச்சரிப்பு முற்றிலும் வேறாக இருக்கிறது.
ஆங்கிலத்தில் வாசித்த இடங்களை அப்படியே தமிழில் எழுதியிருக்கிறேன். ஆங்கிலத்திலும்
இனிமேல் பிராக்கெட்டில் எழுதுகிறேன்.)
போர்ட்டரிக்கோவில் இருக்கும் எல்லாத்துறைமுகங்களுக்கும்
முதலில் கடல் வழி வரும் எதிரிகள் மற்றும் கடற்கொள்ளைக்காரர்கள் மூலமாக எந்நேரமும் ஆபத்து
வரும் என்பதால் பான்சே நகர தலைவர்கள், இந்த உயரமான சிகரத்தில் எப்போதும் இருக்கும்படி
ஆட்களை நியமித்தனர். இவர்கள் வேலை என்னவென்றால்,
மேலிருந்து கடலை உன்னிப்பாக கவனித்துக் கொண்டே இருக்கவேண்டும். எதிரிகள் அல்லது கொள்ளைக்கார
கப்பல்கள் எதையாவது பார்த்தால், சிலுவை வடிவத்தில் இருக்கும் உயர்ந்த கம்பத்தில் கொடியேற்ற
வேண்டும். அந்தக் கொடியின் கலரை பார்த்து தலைவர்கள் தங்கள் காவல்படையை உஷார்ப்படுத்துவர்.
கி.பி.17 முதல் 19-ஆம் நூற்றாண்டு வரை இது பயன்பட்டிருக்கிறது.
அதன் நினைவாக இப்போது உள்ள அரசாங்கம், அங்கு
சிலுவை வடிவத்தில் கான்கிரீட்டில் உயரமான வாச் டவர் ஒன்றைக்கட்டியுள்ளனர். எலிவேட்டர் மூலமாக மேலே போனால், முழு நகரமும் கடலும் நன்றாக
தெரிந்தது.
அதன்
அருகில் சற்று மேட்டுச்சரிவில் "ஜப்பானியத் தோட்டத்தை அமைத்து, போன்சேக்கள், சிறுசிறு
ஓடைகள் மண்டபங்கள்
மற்றும் நீரூற்றுகளை அமைத்துள்ளனர். நாங்கள் போன நாள் மாலை, அங்கு
திருமணம் ஒன்று நடக்கவிருந்ததால், அதற்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
அதனை முடித்து, மலைச்சிகரத்தில் இன்னும் மேலேறிச்
சென்றால் கேஸ்டில்லோ செர்ராலெஸ் (Castillo Serralles) என்ற 1930ல் கட்டப்பட்ட கோட்டை
வீடு(Castle House) வருகிறது. அதிலே ஹுவான் செர்ராலெஸ் (Juan Serralles) குடும்பத்தினர்
வசித்து வந்தனர். “ஸ்பானிய மொராக்கன்” கட்டிடக்கலையில் கட்டப்பட்டது. மிகப்பெரிய வயலில்
கரும்புத்தோட்டம் போட்டு, அதனருகில் சர்க்கரை ஆலை மற்றும் ரம் தொழிற்சாலை அமைத்து பெரும்
பொருள் ஈட்டி வாழ்ந்த பணக்காரக் குடும்பம். 2.5 ஏக்கரில் வீடு அமைப்பு, பூந்தோட்டம்,
வண்ணத்துப்பூச்சி தோட்டம், அலங்காரங்கள் வழக்கம்போல் ஆச்சரியமூட்டியது.
பெருமூச்சு
விடுவதைவிட வேறென்ன செய்ய முடியும். அவர்கள் வாழ்க்கையின் சிறு திரைப்படமும் காட்டப்பட்டது.
பார்த்து முடித்து, சாப்பிடச் சென்றோம்.
"பிட்சா ஹெவன்" என்ற உணவகத்தில் நன்றாக இருக்குமென்று சொன்னார்கள். பேர்தான்
பிட்சா என்றாலும் போர்ட்டரிக்கன் உணவு வகைகள் அங்கு கிடைக்குமென்றார்கள்.
பருத்த சரீரத்துடன் ஓடிவந்த 'லியோனார்டோ' வரவேற்று
உட்கார வைத்தான். ஆங்கிலம் சுத்தமாகத்தெரியவில்லை. நல்லவேளை மெனுகார்டில் ஸ்பானிஷ்
கீழ் ஆங்கிலத்திலும் எழுதியிருந்தது. ரைஸ் & பீன்ஸ் என்றதைப் பார்த்ததும், அதுதான்
வேண்டும் என்றாள் என் மனைவி, சோத்தைப் பார்த்தாள் விடுவாளா?. என் பெரிய மகள்,
"பீஃப் ஸ்டேக்கும்", சின்னவள், "சிக்கன் சம்திங்கும் ஆர்டர் பண்ணினார்கள்.
நான் கசாவா ஃபிரை (அதான் பாஸ் நம்மூர் கப்பக்கிழங்கு)
மற்றும் சாலட் ஆர்டர் பண்ணேன்.
விலை மிகவும் அதிகமென்றாலும் உணவு நன்றாகவே இருந்தது. ஒரு பண்டம் $18 முதல் $20 வரை.
எங்கள் பக்கத்தில் இருந்த ஒரு ஆரஞ்சு பிழியும் மெஷின் ஆச்சரிய மூட்டியது. ஆன்
செய்தால் ஸ்டாக் செய்து வைக்கப்பட்டிருக்கும் சாத்துக்குடிகளில் ஒன்றை மட்டும் லாவகமாக
உருட்டி எடுத்து கீழே கொண்டுவந்து, இரண்டாக நறுக்கி, இருபுறமும் அனுப்பி, பிழிந்து
சாரை கீழே அனுப்பிவிட்டு, தோலை இருபுறமும் துப்பியது. அதனைப்பார்க்கவே ஆரஞ்ச் ஜுஸ் ஆர்டர் பண்ணினோம்.
உண்டு முடித்து வெளியே வந்தால் தெருவில் நடமாட்டம்
எதுவும் இல்லை. நாங்கள் சாப்பிட்ட கடை தவிர்த்து எல்லாக்கடைகளும் அடைத்திருந்தன. எல்லாம்
எங்கே முடங்கினார்கள் என்று யோசித்தபடி அடுத்த ஸ்டாப்பான கத்தீட்ரலுக்குப்போனோம்.
ஊரின்
மொத்த ஜனமும் அங்குதான் இருந்தது. ஆலயம் நிரம்பி வழிய, வளாகம் முழுவதும் நடந்து கொண்டிருந்த
கார்னிவல் கொண்டாட்டங்களால் களை கட்டியிருந்தது.
நியோ கிளாசிக்கல் ஸ்டைலில் கட்டப்பட்ட இந்த
கத்தீட்ரல் 300 வருட வரலாறு கொண்டது. ஸ்பானிய காலனி மக்களுக்காக 1670ல் சிறிய சேப்பலாக
கட்டப்பட்ட இந்த ஆலயம், 1692ல் ஸ்பெய்ன் அரசர்,
கார்லஸ் II ( Carlos II) இட்ட அரசாணைப்படி
விரிவுபடுத்தப்பட்டது. பின்னர் 1835-ல் மேலும் பெரிதுபடுத்தப்பட்டு பேராலயமாக உருவாக்கப்பட்டது.
இங்கிருக்கும் மாபெரும் பைப் ஆர்கன் மிகப்பெரிய
இசைமேதை - Juan Morel Campos வாசித்த பெருமை பெற்றது. உள்ளே சென்று வழிபட்டுவிட்டு,
வழியில் இருந்த 100 வருட பழமையான ஃபயர் ஹவுசையும் பார்த்துவிட்டு காருக்குத் திரும்பினோம்.
அங்கிருந்து "லா குவாச்சா" (La Guacha)
என்ற கடற்கரைக்கு வழி கேட்டால் ஒருவருக்கும் விளங்கவில்லை.
பயணங்கள் முடிவதில்லை >>>>>>>
படங்களும் பகிர்வும் அருமை செலவில்லாமல் நாங்களும் அங்கு பயணம் செய்தது போல இருந்தது.
ReplyDelete"மதுரைதமிழன்" "அவர்கள் உண்மைகள்" மட்டுமே சொல்வார்கள் .
Deleteவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி .
அழகான படங்கள்.... எங்களையும் உடன் அழைத்துச் செல்வதற்கு நன்றி நண்பரே....
ReplyDeleteபடங்களுடன் பதிவு
ReplyDeleteஉடன் பய்ணிக்கும் அனுபவம் தருகிறது
தொடர்கிறேன்
வாழ்த்துக்களுடன்,,,