Monday, July 15, 2013

நியூயார்க்கில் பிச்சைக்காரர்கள் Part 3 : “பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்"

Jackson Heights
          நியூயார்க்  உலகத்தின் உன்னத நகரம். பொருளாதார உலகின் தலைநகரம். பல சிறப்புகள் உண்டு. ஆனாலும் இங்கே  பலவித பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியூட்டும் உண்மை.

ஹோம்லெஸ்

  அமெரிக்கா பணக்கார நாடாயினும், முதலாளித்துவ நாடு என்பது நம் அனைவர்க்கும் தெரியும், இங்குள்ளவருக்கு மூன்று கொள்கைகள் உண்டு (1) பணம், (2) பணம், (3) பணம்.  
       இந்தியாவிலிருக்கும் போதே, கிரடிட் கார்டினால் கஷ்டப்பட்டதால், இங்கே கிரெடிட் கார்டு வேண்டாம் என்று கொள்கை முடிவு எடுத்து ,பெருமையுடன் அலைந்து கொண்டிருந்தேன் . ஒரு நாள் வந்த புதுதில் , பெஸ்ட் பையில் (Best Buy),  டிவி, இன்ஸ்டால்மென்டில் வாங்கலாம் என்று சென்றிருந்தேன். (ஏலே சேகரு அங்கேயும் போய் இந்த இன்ஸ்டால்மென்டை விடலியாலே). முதல் கேள்வி, கிரடிட் கார்டு இருக்கிறதா? என்று. என்னான்னு கேட்டா, “No Credit is Bad Credit” என்கிறார்கள். எனக்கு தூக்கிவாரிப்போட்டது. நம்மூரில கடனில்லாட்டி நல்ல புள்ளன்னுல சொல்லுவாக. ஆனா இங்கே கிரடிட் ஹிஸ்டரி இல்லாட்டா, இன்ஸ்டால்மென்ட்ல பொருள் வாங்க முடியாது, கார் வாங்கமுடியாது, வீடு வாசல் வாங்க முடியாது என்று தெரிந்து அதிர்ச்சியடைந்தேன். அப்புறம் என்னதேன் செய்யுறதுன்னு கேட்டா, கடனும் வாங்கனும், கரெக்டாவும் கட்டனும்கிராய்ங்க. அட மொள்ளைமாறிகளாஎன்று நினைத்துக்கொண்டு, அப்புறம் பாஸ்டனில் 
உள்ள என்  நண்பன் ஜூடைக் கூப்பிட்டு அவனுடைய Best Buy கார்டில் டி.வி வாங்கினேன்.

இந்த மாதிரி, கடன் வாங்கி, கடன் வாங்கி, ரொம்ப சேர்ந்து போய் , அப்புறம் சோர்ந்து போய், அதுக்கப்புறம் வேலையும்  போய், பில்லை கட்ட முடியாம எல்லாத்தையும் இழந்து தெருவுக்கு வந்தவர்கள்தான் இந்த ஹோம்லெஸ் என்று அழைக்கப்படுகிறதில் முக்கால்வாசி பேர். அதனாலேயே, மனம் பிறழ்ந்து பைத்தியமாகிப் போனோர் இதில் அதிகம். குடும்பத்தாலும் கைவிடப்பட்ட இவர்கள் வேறெங்கு செல்வது, சப்வேயில்தான் தஞ்சம். வெயில் காலத்தில் வெளியே அலையும் இவர்கள், குளிர்காலத்தில் வேறெங்கும் போக முடியாது, குளிக்க முடியாது. சாப்பாட்டுக்கு மட்டும் பஞ்சமில்லை.

இங்குதான் ஒரு டாலர் இருந்தால் போதுமே, ஒரு பேகல் (Bagel) டோஸ்ட் வித் பட்டர், ஒரு பெரிய பிரட்சில் (Pretzel), ஒரு சூடான நாய் (அதாங்க Hot Dog), இதில் எதுவாங்கினாலும் 1 டாலர்தான். ஒன்னு சாப்பிட்டா போதும் இரண்டு வேளைக்கு ஒண்ணும் தேவையில்லை. மெக்டானால்ட்ஸ் போன்ற பல அமெரிக்க உணவகங்களில் டாலர் மெனு இருக்கிறது.
    அதனால் இந்தப்பிச்சைக்காரர்கள் நம்மூர் போல் எலும்பும் தோலுமாக இருக்கமாட்டாய்ங்க. ஒவ்வொருவரும் நல்ல பெரிய சைசில் தொப்பையும் குப்பையுமாக இருப்பார்கள். ஆமாங்க இவங்க சொத்து வெறும் குப்பைதேன். கண்ட கருமாந்திரங்களை எல்லாம் சேர்த்து சேர்த்து மலைபோல் வைத்திருப்பார்கள். சிறு சிறு பைகளில் ஏராளமாய் குவித்து வைத்திருப்பார்கள்.
34th Street, Midtown.

உங்களுக்கு இந்நேரம் ஒரு கேள்வி வந்திருக்கும், காலைக்கடன்களுக்கு என்ன செய்வார்கள் என்று? 
அதேன் உங்களுக்குத் தெரியுமே, இங்கே கழுபுபவர்கள் இல்லை. துடைப்பவர்கள்தான். துண்டு பேப்பர் போதுமே, பக்கத்தில் உள்ள குப்பைத் தொட்டிகள்தான் பாவம். அந்தக் குப்பைகளை அள்ளும் ஊழியர்கள் அதைவிடப் பாவம்.

அரசாங்கம் இவர்களை அழைத்துக்கொண்டு போய், குளிக்கவைத்து, உடுத்தி பராமரித்தாலும், எப்படியாவது திரும்பவும் தப்பி வெளியே வந்துவிடுவார்களாம். என்னத்தைச் சொல்றது.
இவர்களை ஒளிந்து ஒளிந்து   படம் எடுத்ததில் என் அல்லு என்னிடத்திலில்லை. எனவே படங்கள் சரியில்லைன்னு சொல்லாதீங்க.

ஹோம்லெஸ் சங்கத்தினர்:
"காட் பிளஸ்" என்று சொல்லிக்கொண்டு, வீடிழந்தோர் சங்கம் என்று சொல்லிக்கொள்வார்கள். எங்களிடத்தில் பழங்களும் பண்டங்களும் இருக்கிறது. பசியாயிருக்கும் யாரும் வாங்கிக்கொள்ளலாம் என்பார்கள். பையில் உள்ளே என்ன இருக்கிறது என நான் பார்த்ததேயில்லை, யாரு வாங்கப்போகிறார்கள்? சங்கத்திற்காக வசூல் என்பார்கள். எனக்குத்தெரிந்து அவர்கள் பைக்குள் அல்லது வயிற்றுக்குள் அவை போய்விடும்.

ஊனமுற்றவர்:
சப்வே மற்றும் டிராஃபிக் சிக்னல்களில் இவர்களைப் பார்க்கலாம். இருகால் அல்லது ஒரு கால் அல்லது கை இழந்தவர்கள், கண் இல்லாதவர்கள் பிச்சை எடுக்கும்  இவர்களில் சிலர் பழைய ராணுவத்தின் (Veterans) என்று சொல்வதை நம்புவதா இல்லையா என்று தெரியாது. இவர்கள் நல்ல மனநிலையில் இருப்பவர்கள். இவர்கள் காலையில் ஆரம்பித்து மாலைக்குள் சில சமயங்களில் நூறு டாலருக்கு மேல் சம்பாதித்து விடுவார்கள்.


கழைக்கூத்தாடிகள்:


இவர்களில் படிக்கின்ற அல்லது ஸ்கூல் டிராப் அவுட்டுகளைப் பார்க்கிறேன். நான்கைந்து பேர் வந்து, டேப்ரிகார்டரை போட்டுவிட்டு, பிரேக் டான்ஸ் அல்லது சில சாகச நிகழ்ச்சிகளை செய்து காண்பிப்பர். சப்வேயின் குறுகிய இடத்தில் அவர்கள் வெகு வேகமாக சர்க்கஸ் வேலை செய்யும்போது நம்மேல் விழுந்துவிடுவார்களோ  எனப்பயமாக இருக்கும்.

 பெரும்பாலும் இளைஞர்கள். இவர்களுக்கு நல்ல வருமானம். சம்மரில் முக்கிய முச்சந்திகளிலும் இவர்களைப் பார்க்கலாம்.
இது தவிர  சில அழகுராணிகளும் பிச்சை எடுக்கிறார்கள்.


அதைப்பற்றி  அடுத்த வாரம் சொல்கிறேன்.

9 comments:

 1. இனிய உளவாக இன்னாத கூறல்
  கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. நண்பா, சில நாட்களாகவே தம் எழுத்தை படிக்கும் போது மனதில் ஒரு நெருடல். நானும் தம் ரசிகன் என்ற திமிரில் என் மனதில் உள்ளதை கொட்டிவிடுகிறேன். தவறு இருந்தால் என் எழுத்தை அளிக்கும் உரிமை தமக்கு உண்டு என்ற அறிவேன். நல்ல காரியம் நிறைய உள்ளபோது என் இந்த தலைப்பு. காலையில் எழுந்து படிக்கும் போது ஏதோ மங்கள வீட்டில் இழவுகேட்பது போல் உள்ளது. மீண்டும் தங்களின் நகைச்சுவை மிக்க நல்ல தலைப்புக்காக நான் மட்டும் இல்லை, தமது மற்ற நண்பர்களும் இருக்கின்றார்கள் என்பதே என் கருத்து. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நண்பர் விசுவுக்கு ,

   விமர்சனங்களை எடுத்துவைப்பதற்கு உங்களுக்கு தகுதியும் உண்டு , உரிமையும் உண்டு .

   விமர்சனங்களை தவறாக எடுக்கும் அளவுக்கு நான் தரம் தாழ்ந்தவனல்ல என்று உங்களுக்கும் தெரியும் .எனவே தயங்காமல் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் .

   அதே போல், நான் எழுதும் எல்லாமே எல்லோருக்கும் பிடிக்கும் என்று நினைத்தால் என்னை விட மடையன் வேறு யாருமில்லை.

   அமெரிக்கா மற்றும் நியூயார்க்கின் அருமை பெருமைகளை மட்டுமல்ல , அதன் குறைகளையும் எழுதுவதற்காகவும் , இந்த சமுக அவல நிலைக்கு யார் காரணம் என்ற கேள்வியையும் , படிப்பவர்கள் மனதில் எழுப்புவதுதான் இந்த கட்டுரையின் நோக்கம் .

   Delete
 2. ஒழிந்து ‍ அல்ல "ஒளிந்து"

  ReplyDelete
  Replies
  1. திருத்தியாகிவிட்டது .தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி

   Delete
 3. நீயூயார்க் நகரில் நடப்பவைகளை எளிமையாகவும் அழகாகவும் படங்களுடன் நீங்கள் வழங்குவது நன்றாக இருக்கிறது...இது ரயில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு கிடைக்கும் அனுபவங்களில் இதுவும் ஒன்று

  ReplyDelete
 4. மிக அருமையான பதிவு. நீங்கள் பல விடயங்களை தெளிவாக்கி உள்ளீர்கள். குறிப்பாக அமெரிக்கமயமான குழம்பிய இந்தியவாசிகளுக்கு உரைக்க வேண்டும். முதலில் நாம் புரிந்து கொள்ளவேண்டும், அமெரிக்கா ஒன்றும் தேனும் பாலும் ஓடும் நாடல்ல, இங்கும் பிச்சைக்காரர்கள், பித்தலாட்டங்கள் என எல்லாமுண்டு. இங்கும் உழைக்கவில்லை எனில் பிச்சை தான் எடுக்க வேண்டும், மரத்தில் பணம் காய்ப்பதில்லை. முதலாளித்துவ மயமாக்கல், அமெரிக்க மயமாக்கலை அப்படியே வாய் மூடி ஏற்றுக் கொள்ளும் இந்தியாவுக்கு ஒரு எச்சரிக்கு மணி முதலாளித்துவம் மேம்போக்கான வளர்ச்சியே தரும், அதன் பக்கவிளைவுகள், எதிர்விளைவுகள் மிக மோசமானவைகள், குறிப்பாக கிரடிட் கடன் அட்டைகளை அளவாகவும், அறிவுப் பூர்வமாகவும் பயன்படுத்த வேண்டும். இல்லை எனில் குடி மூழ்கி நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும், முதலாளித்துவம் கையில் கடனட்டையும் கொடுத்து, வித வித பொருட்களையும், சவுகரியங்களையும் கொடுத்து ஆசைக் காட்டி நம்மை கடனாளி ஆக்கும். இது மிக ஆபத்தான ஒரு வலை, இந்தியர்கள் இதே வலையில் சிக்கிக் கொள்ளாமல் சுதாகரித்துக் கொள்ளல் வேண்டைம். இல்லை எனில் மக்டோணால்ட் இருக்கும் 10 ரூபாய் சாப்பாடு கிடைக்கும் ஆனால் வாழ்விருக்காது.

  ReplyDelete
  Replies
  1. சரியாகச்சொன்னீ ர்கள் நிரஞ்சன் தம்பி .நான் இலை மறை காயாக சொன்னவற்றை, நீங்கள் தெள்ளத்தெளிவாக சொல்லியுள்ளீ ர்கள் .

   நன்றி .

   Delete
 5. ஓரளவு இந்த ஊர் பிச்சைக்காரர்கள் குறித்து
  இந்த்ப் பதிவின் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது

  மூன்று கொள்கைகள் சொல்லிப்போனவிதம்
  மிகவும் இரசித்தேன்

  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி ரமணி

   Delete