Thursday, July 25, 2013

கவிஞர் வாலி :மெய்யென்று மேனியை யார் சொன்னது ?

     

தமிழக திரைப்பட இசைக்குடும்பத்திற்கு 
இப்போது கெட்ட காலம். மெல்லிசை மன்னர் ராமமூர்த்தி, மலேசியா வாசுதேவன், PB ஸ்ரீனிவாஸ், டி.எம்.செளந்தர்ராஜன் பின் இப்போது வாலி.

தமிழக திரைப்பட இசையில், இப்பொழுது 
நான்காவது சகாப்தம் அல்லது தலைமுறை நடந்து கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.

முதல் தலைமுறை: சுப்பையா நாயுடு, கே.வி.மகாதேவன் போன்றோர்.
இரண்டாம் தலைமுறை: MS. விஸ்வநாதன், சங்கர் கணேஷ்
மூன்றாம் தலைமுறை : இளையராஜா, இளையராஜா மற்றும் இளையராஜா
நான்காம் தலைமுறை : AR. ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன்சங்கர் ராஜா.

இப்போது ஐந்தாம் தலைமுறை எட்டிப்பார்க்கும்போது, இரண்டாம் தலைமுறை துவங்கி, ஐந்தாம் தலைமுறை வரை இடைவிடாது பாடல் எழுதிய கவிஞர் வாலி மறைந்துவிட்டார். 

கடந்த காலத்தில் ஆரம்பித்து, நிகழ்காலம் வரை நீண்டு, இறுதி மூச்சு வரை எழுதிக்கொண்டிருந்த வாலி இப்போது இறந்த காலம்.
பாட்டுலகை கண்ணதாசன், முடிசூடா மன்னராக ஆளும்போது, உள்ளே நுழைந்து, கண்ணதாசனுக்கும், எம்ஜியாருக்கும் இருந்த மனஸ்தாபத்தினால், எம்ஜியாருக்கு எழுத ஆரம்பித்து, தமக்கென தனியிடம் பிடித்து, அந்த இடத்தை நேற்றுவரை தக்க வைப்பதென்பது ஒரு தனிப்பெரும் சாதனை என்பதில் சந்தேகமில்லை.

மேலே குறிப்பிட்ட 2ஆம், 3ஆம்  தலைமுறை இசையமைப்பாளர்கள் உயிரோடு இருந்தும், கடந்தகாலமாகிப்போன சமயத்தில், நிகழ்காலத்திலும் பிஸியாக இருந்த  ஒரே மூத்த கவிஞர் ,வாலி.
அதற்கு காரணங்கள் என நான் நினைப்பது :
1) வாலியிடம் சென்றால் ஒரு நல்ல பாட்டு உடனே கிடைக்கும் என்ற நம்பிக்கை.


2) நிகழ்காலத்தின் தேவைக்கென தம் எழுத்தை நவீனமாக்கிக் கொண்டதுடன், தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் என்ன தேவையென்றாலும் தருவேன் என்ற  சர்வைவல் டெக்னிக்.

3) எல்லோரிடமும் முடிந்த அளவுக்கு ஒத்துப்போகும் குணம்.
4) வாலி எழுதினால் அந்தப்படம் நிச்சயம் வெற்றியடையும் என்ற திரைப்பட உலகின் சென்டிமென்ட்.
அவருடைய தனித்திறமைகள்:
1) கர்நாடக இசையை நன்கு அறிந்தவர் என்பதால், இவர் வரிகள் சந்தத்திற்கு பந்தமாகும்.
2) பல தலைமுறை பார்த்ததால் எழுத்தில் வந்த சரளத்தன்மை.
3) 15,000 பாடல்கள் எழுதிய ஒரே கவிஞர்.
4) எழுத்து, வசனம், நடிப்பு என்று சில முயற்சிகள் இருந்தாலும் பாட்டை  அவர் விடவில்லை. பாட்டும் அவரை விடவில்லை.
5) அபாரமான ஞாபக சக்தி.
6) என்றும் நன்றி மறவாத தன்மையும், பிறர் திறமைகளுக்கு மதிப்புக்கொடுக்கும் மனமும்.
7) எப்போதும் எதிலும் வெளிப்படையாக இருந்தது.
8) அண்ணா, கருணாநிதி, எம்ஜியார் என்று நெருங்கிய தொடர்பு இருந்தும் எப்போதும் தொட்டும் தொடாமலும் அரசியலுக்கு அப்பாற்பட்டே இருந்தது.
9) சக கவிஞர்களால் கடைசி வரை மதிக்கப்பட்டது. 


எனக்கு மிகவும் பிடித்த அவரின் பாடல்கள்:
          1) இதோ எந்தன் தெய்வம்
          2) மாலையில் யாரோ மனதோடு பேச
3) தொட்டால் பூ மலரும்
4) கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
5) ராசி நல்ல ராசி.
6) எதற்கும் ஒரு காலம் உண்டு
7) காத்திருந்து காத்திருந்து -
8) கல்யாண மாலை
9) புதிய பூவிது பூத்தது.
10) ஆகாய வெண்ணிலாவே

எனக்குப் புரியாதவை:
1) இடத்தைத்தக்க வைக்கவோ, நிலைத்திருக்கவோ, தொடர்ந்து பணம் சம்பாதிக்கும் நிர்ப்பந்தத்திலோ, அவரின் தரத்திற்கு சில சமயங்களில் இறங்கி வந்தது.
2) வாலியா எழுதினார் என்று அதிர்ச்சியூட்டும் சில பாடல்களை எழுதியது.
3) கண்ணதாசனுக்கு அடுத்தபடியாக வரலாறு போற்றும் பெருங்கவிஞராக போற்றப்படும் வாய்ப்பை தவறவிட்டது.
எது எப்படியாயினும் தமிழக வெள்ளித்திரை சரித்திரத்தில்  வாலி நீங்கா இடம்பிடித்த ஒரு சகாப்தம் என்பதில் சந்தேகமில்லை.


கருவோடு வந்தது, தெருவோடு போனது. 

மெய்யென்று மேனியை யார் சொன்னது ?

5 comments:

 1. அருமை! ஆஹா அருமை!! , 'வாலி'யின் இறந்தகாலம் பற்றிய கட்டுரை. அன்று எல்லா டிவி நிகழ்ச்சியும் பார்த்தேன் உன் அளவு யாரும் 'வாலி'யின் இறந்தகாலம் பற்றி சொல்லவில்லை..அவர் பற்றிய கட்டுரை, அவருடைய வாழ்கைச் சந்தத்திற்கு பந்தமாகும்.

  ReplyDelete
  Replies
  1. அன்புக்கு நன்றி மினி .

   Delete
 2. நல்லா எழுதியிருக்கிங்க நண்பா, சில இடங்களில் முரண் படுகின்றேன். சில பாடல்கள் அவர்பெயர் தாங்கி வந்ததால் அவர்எழுதியதாக சினிமா உலகம் உட்பட ரசிகர் உலகம் வரை திட்டித்தீர்த்தது எழுதியவர்கள் வேறு இயக்குநர் மற்றும் உதவி இயக்குநராக இருந்து இன்று பிரமாண்டஇயக்குநராக உள்ள இயக்குநர்களால் வந்த கெட்ட பேரை வாலி தான் மட்டுமே சுமந்ந்த வாலியை நாம்போற்றவேண்டும்

  ReplyDelete
 3. நல்லா எழுதியிருக்கிங்க நண்பா, சில இடங்களில் முரண் படுகின்றேன். சில பாடல்கள் அவர்பெயர் தாங்கி வந்ததால் அவர்எழுதியதாக சினிமா உலகம் உட்பட ரசிகர் உலகம் வரை திட்டித்தீர்த்தது எழுதியவர்கள் வேறு இயக்குநர் மற்றும் உதவி இயக்குநராக இருந்து இன்று பிரமாண்டஇயக்குநராக உள்ள இயக்குநர்களால் வந்த கெட்ட பேரை வாலி தான் மட்டுமே சுமந்ந்த வாலியை நாம்போற்றவேண்டும்

  ReplyDelete
  Replies
  1. நன்றி கவிஞரே , அதனைப்பற்றி
   இன்னும் சில விளக்கங்கள் கொடுத்தால் நன்றாக இருக்கும்

   Delete