போர்க் குதிரையின் சாகசங்கள் !
பார்த்ததில் பிடித்தது.
வார் ஹார்ஸ் -2011

சமீபத்தில்
நெட்ஃபிலிக்சில் பார்த்த அருமையான ஒரு படம் இது. என்னுடைய பதிவுகளைத் தொடர்ந்து படித்து
வரும் நண்பர்களுக்கு என்னுடைய ரசனை பிடிபட்டிருக்கும். வரலாற்று சம்பந்தமான படங்கள், பீரியட் படங்கள், போர் பற்றிய படங்கள்/ ஸ்பை மற்றும்
திரில்லர் படங்கள் ஆகியவை எனக்கு மிகவும் பிடித்தவை. எல்லாமே இதற்குள் அடங்கி விட்டது
என்றே நினைக்காதீர்கள். இதனுள் அடங்காத எத்தனையோ உண்டு. ரொமான்ஸ், ஃபேண்டஸி, தற்காலிக டிராமா, ஹாரர், காமடி, குடும்ப சென்ட்டிமெண்ட் படங்கள் சுத்தமாக பிடிப்பதில்லை. அதனால் தான் தமிழ்
படங்கள் பார்ப்பது நின்று போனது. எப்போதாவது கிரிட்டிக்கள் அக்கெளைம்ய்டு படங்கள் வந்தால் பார்ப்பது மட்டும் தான் தொடர்கிறது.
மிருகங்களை வைத்து இராம நாராயணன் டைரக்ட்
செய்து வெளிவந்த பல படங்களை சிறு வயதில் பார்த்து நொந்து நூலாகியிருக்கிறேன். ஆனால்
வார் ஹார்ஸ் என்ற இந்தப் படம் அவற்றுள் மிக மாறுபட்டது. அதோடு இயக்கியது ஸ்டீபன் ஸ்பீல்பர்க்
என்றால் பார்க்காமல் விடுவேனா? அதுவும் முதலாம்
உலகப்போர் நடந்த சமயம் என்பது மேலும் ஆர்வத்தைத் தூண்டியது.
வார் ஹார்ஸ் என்ற இந்தப்படம் 1982ல் மைக்கேல்
மார்பர்கோ (Michael Morpurgo) என்பவர் இதே தலைப்பில் எழுதிய நாவலின் திரை வடிவம். டிரீம் வொர்க்ஸ் பிக்சர்ஸ் இந்த நாவலைப் படமாக்கும்
உரிமையை டிசம்பர் 2009ல் வாங்கியபின் மே
2010ல் இதனை ஸ்பீல்பெர்க் இயக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. இவர் இரண்டாம் உலகப்போரின்
பின்னனியில் நிறையப்படம் இயக்கியிருந்தாலும், முதலாம் உலகப் போரின்
பின்னனியில் இயக்கிய முதற்படம் இதுதான்.
![]() |
தேவான், இங்கிலாந்தில் 1912ல் பிறக்கும் இந்தக்குதிரை
வளர்ந்து ஏலத்திற்கு வரும்போது டெட் நர்ரகாட்
என்ற விவசாயியும் அங்கே இருக்கிறார்.
தன்னுடைய நிலச் சொந்தக்காரரும் அங்கு வர ஏற்கனவே நல்ல உறவில் இல்லாத இருவருக்கும் போட்டி
ஏறபட்டு அந்த விவசாயி அதிக விலை கொடுத்து அந்தக்
குதிரையை வாங்கி விட நேர்கிறது. மனைவியிடம் அதற்காக திட்டும் விழுகிறது. ஆனால் அவர்களுடைய ஒரே பையன் ஆல்பர்ட் அந்தக் குதிரையின்
மேல் பிரியமாகி அதற்கு ஜோயி என்று பெயரிட்டு பராமரிக்கிறான். ஆனால் விவசாயத்தில் நஷ்ட மடைந்த நர்ரகோட், போர்
காலத்தில் குதிரையை விற்றுவிடுகிறார். ஆல்பர்ட் மனமுடைந்து போகிறான். அந்தக்குதிரை
எங்கெல்லாம் போய் போரிலிருந்து எப்படியெல்லாம்
தப்பித்து மீண்டும் எந்த ஒரு சந்தர்ப்பத்தில் ஆல்பர்ட்டிடம் வந்து சேர்கிறது என்பது
தான் கதை. மீதியை சின்னத்திரையில் காண்க.
பீரியட் படம் அதுவும் வார் படம் என்பதால்
ஏகப்பட்ட நடிகர்கள். லீட் கேரக்டரில் நடித்துள்ள அனைவரும் குறிப்பாக குதிரையும் அநாயசமாக
நடித்திருக்கிறார்கள்.
66 மில்லியன் அமெரிக்க
டாலர்கள் செலவு செய்து எடுக்கப்பட்ட இந்தப்படம் பாக்ஸ் ஆபீசில் 178 மில்லியன் கல்லாக்
கட்டியது.
146 நிமிடங்கள் ஓடும் இந்தப்படம் டச்ஸ்டோன்
பிக்சர்ஸ், டிரீம் வொர்க்ஸ் பிக்சர்ஸ், ரிலையன்ஸ் என்டர் டெய்ன் மென்ட், ஆம்பிலின்
என்டர் டெய்ன்மென்ட், தி கென்னடி/ மார்ஷல் கம்பெனி ஆகியோர்
தயாரிக்க, வால்ட் டிஸ்னி ஸ்டூடியோ மோஷன் பிக்சர்ஸ் டிஸ்ட்ரிபுயூட்
செய்ய கிறிஸ்மஸ் தினமான டிசம்பர் 25, 2011-ல் ரிலீஸ் செய்யப்பட்டது.
லீ ஹால் மற்றும் ரிச்சர்ட் கர்ட்டிஸ், திரைக்கதை எழுத ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கியிருக்கிறார். ஜனுஸ் காமின்ஸ்கி
ஒளிப்பதிவு செய்து, மைக்கேல் கான் எடிட் செய்திருக்க ஜான் வில்லியம்ஸ்
இசையமைத்திருக்கிறார்.
எமிலி வாட்சன், டேவிட் தூலிஸ், பீட்டர் முலன் ஆகியோர் சிறந்த நடிப்பை
வெளிபடுத்தியிருக்கிறார்கள்.
மூன்று மாதங்க்களுக்கு மேல் பயிற்சி கொடுக்கப்பட்டு
14 வெவ்வேறு குதிரைகளில் வெவ்வேறு பருவ வயதாக ஜோயி என்ற கேரக்டராக நடித்திருக்கின்றன.
இது தவிர போரில் 280 குதிரைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
இந்தப் படத்தின் மேல்
வெளிவந்த 218 விமர்சனங்களில் 76% இதனைப் பாராட்டித்தள்ளி விட்டன.
ஸ்பீல்பெர்க் படமென்றாலே விருதுகளுக்குப்
பஞ்சமிருக்குமா என்ன? அவற்றைக் கீழே குறிப்பிடுகிறேன்.
ஆஸ்கார் உள்ளிட்ட பல விருதுகளுக்கு நாமினேட்
செய்யப்பட்டது. ஆனால் வென்ற விருதுகளை மட்டும் குறிப்பிடுகிறேன்.
1)
2011 அமெரிக்கன் பிலிம்
இன்ஸ்டியூட் அவார்ட்ஸ் – 2011ன் சிறந்த படம்.
2)
2012 BMI
பிலிம் 2டி அவார்ட்ஸ் – சிறந்த இசையமைப்பு சிறந்த ஒளிப்பதிவு.
3)
59வது மோனன் செளன்ட்
எடிட்டர்ஸ் கோல்டன் ரீல் அவார்ட்ஸ் – சிறந்த ஒலிக்கோர்வை
பீரியட் பிலிம், வார் பிலிம் போன்றவற்றில் ஆர்வமுள்ளவர்கள் இந்தப் படத்தைப் பார்த்து மகிழலாம்.
முற்றும்
நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.