Monday, July 15, 2019

பரோட்டாவின் கதை !!!!!!!!



வேர்களைத்தேடி பகுதி 43
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
          
           மதுரைப்பக்கம் பரோட்டாவை புரோட்டா என்றுதான் சொல்வார்கள் என்பதால் நானும் அப்படியே சொல்கிறேன் .

Image result for புரோட்டா
              பொதுவாக புரோட்டாவை மைதா மாவில்தான் செய்வார்கள். சமீபமாக கோதுமை புரோட்டாக்களும் வந்துவிட்டன. முக்கியமாக என்னைப்போன்ற  நடுத்தர மற்றும் ஏழை மக்கள் புரோட்டாவை விரும்பிச் சாப்பிடுவதற்கான காரணம் விலை குறைவு மற்றும் மதியம் 2 புரோட்டா சாப்பிட்டால் இரவு வரை பசி தாங்கும். வயிறு கல்லைத்தின்றது போல் கம்மென்று இருக்கும். மதுரையிலும் அதனருகில் இருக்கும் மற்ற பகுதிகளிலும், புரோட்டா ஆர்டர் செய்தால், அதனைக் கொண்டு வரும் சர்வர்கள் பிய்த்துப்போட வேண்டும். சூடான கல்லிலிருந்து எடுக்கும் போதே புரோட்டா மாஸ்டர்கள் அதனை செங்குத்தாக நிறுத்தி மேலும் கீழும் தட்டி அதனை லூஸாக ஆக்கித்தான் தருவார்கள். அது மிகுந்த சூடாக இருக்கும். எனவே பெரும்பாலும் அப்போதெல்லாம்  எவ்வளவு அழுக்காக இருக்கிறது, கைகள் சுத்தமாக இருக்கிறதா இல்லையா என்று எப்போதும் பார்த்ததில்லை. அவர்களும் இரு கைகளுக்கு நடுவில் வைத்து மேலும் கீழும் இரண்டு தட்டுதட்டி பிய்த்துப் போடுவார்கள். அது இலையில் பல பகுதிகளாய் பிரிந்து கீழே விழும். ஆனால் நாங்கள் அதனையும் இன்னும் சிறிது சிறிதாக பிய்த்துவிடுவோம். அதன்பின் சூடாக அதன் மேல் சால்னாவை ஊத்தி புரோட்டாவின்   விள்ளல்களை நனைய விடவேண்டும். அது நனைந்து ஊறி சால்னாவை விழுங்கிவிடும். இப்போது திரும்பவும் சால்னாவை ஊற்றி கலகலவென்று பிரட்டி அப்படியே சால்னா சொட்ட வாயில் போட்டால் திவ்யமாக இருக்கும்.
          தொட்டுக்கொள்ள காசு இருந்தால் ,வெங்காயம் சேர்த்த மட்டன் சுக்கா வருவல், அல்லது கோழி 65 அல்லது காசு கொஞ்சம் குறைவாக இருந்தால் முட்டைப்பொரியல் ஆகியவை சிறந்த காம்பினேஷன்.
Related image

          இதில் முக்கியமாக நிதானமாக நன்றாக மென்று சாப்பிட  வேண்டும். அப்படியே விழுங்கக்கூடாது. ஆறிப்போனாலும் நன்றாக இருக்காது. ரொம்ப சூடாக இருந்தாலும் ருசி தெரியாது. எனவே இளஞ்சூட்டில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இலையில் இருக்கும்போது ஆறிவிட்டால் தயங்காமல் சர்வரைக் கூப்பிட்டு சூடாக சிறிது சால்னாவை மேலே ஊற்றினால் போதும் திரும்பவும் சூடு கிடைத்துவிடும்.
          நன்றாக இருக்கிறது என்பதற்காக நிறைய சாப்பிடக் கூடாது அதோடு புரோட்டா சாப்பிடுகிற நாளில் கொஞ்சம் சீக்கிரமாக சாப்பிட்டு விடவேண்டும். இரவு 10 மணிக்குச் சாப்பிட்டுவிட்டு 10.30 க்கெல்லாம் படுக்கைக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும். சாப்பிட்டு முடித்து குறைந்தது மூன்று மணிநேரம் கழித்துத்தான் தூங்கச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் செமிக்காது அடுத்த நாள் படுத்திவிடும். 
          இந்த பரோட்டா தமிழ்நாட்டுக்கு எப்படி வந்ததுன்னு சொல்கிறேன். உண்மையைச் சொன்னா இது தமிழ் நாட்டிலிருந்து தான் மற்ற ஊர்களுக்குப் போயிருக்கிறது.
          தமிழ் நாட்டின் தூத்துக்குடியின் துறைமுகத்தில் இலங்கையைச் சேர்ந்த மூர் என்று சொல்லக்கூடிய தமிழ் பேசும் இஸ்லாமிய சகோதர்கள் தான் இந்தப் பரோட்டோவை அறிமுகம் செய்தனர். பின்னர் இங்கிருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய  பகுதிகளுக்குச் சென்றது. இங்கிருந்துதான் மலேசியாவுக்குச் சென்றது. அவர்கள் அறிமுகம் செய்து வைத்ததுதான் சால்னா என்று சொல்லக்கூடிய எலும்புக்குழம்பு. சர்வர் நன்கு தெரிந்தவராக இருந்தாலோ அல்லது டிப்ஸ் அதிகம் கொடுத்தால் மட்டும்தான் சால்னாவின் அடியில் இருக்கும் சில எலும்புத்துண்டுகள் கிடைக்கும். இல்லையென்றால் வெறும் குழம்புதான்.

          அப்போது தேவதானப்பட்டியில் ஒவ்வொரு கடையும்  வேறு வேறு பண்டங்களுக்கு பெயர் பெற்றிருந்தன.
          இட்லி சட்னி என்றால் ஆச்சி கடை அல்லது சுப்பையா கடை. மெயின் ரோட்டிலிருந்து காந்திமைதானம் போகும் வழியில் மூலையில் சாவடியின் அருகில் இருந்தது சுப்பையா கடை. இங்கு உட்கார்ந்து சாப்பிட முடியாதென்றாலும், ஆச்சி கடையில் இட்லி கிடைக்கவில்லை யென்றால் இங்குதான் பார்சல் வாங்குவோம்.
          தேவி விலாஸ் கடையில் தோசையும், பூரியும் நன்றாக இருக்கும். ராகவன் நாயர்  கடையில் போண்டா,  பஜ்ஜி, மற்றும் வடை 11 மணிக்கு சூடாகக் கிடைக்கும். எப்போதும் இங்குதான் வாங்குவோம். அதோடு மேட்டு வளைவிலிருந்து ஒருவர் தள்ளு வண்டியில் மாலை நேரத்தில் மிக்சர், ஓமப்பொடி, பக்கோடா ஆகியவற்றை விற்பார். பெயர் மறந்து விட்டது. நண்பர் கண்ணனுக்கு ஞாபகம் இருந்தால் கீழே குறிப்பிடவும். அவருடைய தள்ளுவண்டியில் வாங்கிச்சாப்பிட்ட பக்கோடாவுக்கு இணையாக வேறெங்கிலும் இதுவரை நான் வாங்கிச் சாப்பிட்டதில்லை.
அதுதவிர மாலை நேரங்களில் சுப்பையா கடையருகில் கிடைக்கும் பருத்திப் பால் பாயாசம். அங்கு சாப்பிட்டதோடு வேறெங்கும் அதன்பிறகு அதனை சாப்பிட்டதேயில்லை.
          புதன் கிழமை சந்தைகளில் கிடைக்கும் சீரணி. அதுவும் எங்கும் கிடைத்ததில்லை. சிறிது மணல் கலந்திருந்தாலும் கருப்பட்டியில் செய்யப்பட்ட இந்தப்பண்டம் மிகவும் சுவை மிகுந்தது.  இவையெதுவும் இப்போதும் இருக்கிறதா என்று தெரியவில்லை.
          இவை தவிர இந்து நடுநிலைப்பள்ளியில் முன்னால் விற்கும் கல்லாமை மாங்காய், கொடை க்கானலிலிருந்து வரும் புளிப்பான பீச்சஸ் பழங்கள், பேரிக்காய்கள், முருகமலைக் காட்டிலிருந்து வரும் இலந்தைப் பழங்கள், நாவற் பழங்கள், ஈச்சம்பழம், வெள்ளரிப் பழம், பனம்பழம், முந்திரி, கொடுக்காப்புளி, அரை நெல்லிக்காய், முழு நெல்லிக்காய், புளியம்பழம், கோவைப்பழம், பக்கத்தில் பெரியகுளம் தோட்டக்கலை நிறுவனத்திலிருந்து வரும் வெள்ளைக் கொய்யா, சிவப்புக் கொய்யா, ராவுத்தர் தோட்டத்திலிருந்து வரும் மணம்  மிகுந்த காசா லட்டு மாம்பழங்கள், வாடிப்பட்டியிலிருந்து வரும் திராட்சைப்பழங்கள், விளாம்பழம், நுங்கு என்று வாயில் எச்சிலை ஊறவைக்கும் பழங்களில் பலவற்றைச் சாப்பிட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன.
          இப்படி கிராமத்து நினைவுகளோடு அதன் மண்ணின் மணம், மண்ணின் சுவை இவையெல்லாமே நினைத்துப் பார்த்தால் என்றென்றும் இனிக்கும் நினைவுகளே.
          இந்த நினைவுகளைத் துறந்துவிட்டு நிறையப்பேர்வெளிநாடுகளில் வாழ முயல்கின்றனர். அவர்கள் தங்கள் அடையாளங்களை அழிக்க நினைப்பவர்கள். அவர்களை அப்படியே விட்டுவிடுவோம். நாம் நம் நாட்டை, நம் கிராமத்தை, நம் மக்களை, நம் மொழியை நம் சுவைகளைப் போற்றுவோம், மனமகிழ்வோம்.  
          மக்களே மேலே ஏதாவது விட்டுப் போயிருந்தால் பின்னூட்டத்தில்  தெரிவிக்க வேண்டுகிறேன். என் கிராமத்து நினைவுகளில் இன்னும் ஏதாவது இருக்கிறதா என மேலும் தோண்டிப் பார்த்து எடுத்துக் கொண்டு மீண்டும் வருகிறேன்.
-தொடரும்.

பின்குறிப்பு :
நண்பர்களே அதிக வேலைப்பளு மற்றும் இன்னொரு  பட்டப்படிப்பு படிக்க வேண்டியது இருந்ததால் , உங்களை ரொம்ப நாள் சந்திக்கமுடியவில்லை .மன்னிக்கவும் .என்னை மறந்திருக்க மாட்டீர்கள்  என நினைக்கிறேன் .இனிமேல் முடிந்த அளவுக்கு அடிக்கடி வருவேன்.
பரதேசி & நியூயார்க்


10 comments:

  1. காத்திருக்கிறேன்...

    அப்புறம் இதே போல சமீபத்தில் :-


    http://sivamgss.blogspot.com/2019/07/bhurota-paratha.html?m=1

    ReplyDelete
    Replies
    1. பொறுமையுடன் கூடிய தங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி திண்டுக்கல்லார் அவர்களே

      Delete
  2. மதுரையில் கிங் மெட்ரோ (கோரிப்பாளையம்) முதலில் புரோட்டா எனக்கு அறிமுகம்! அவர்களிடம் நன்றாகவும் இருக்கும். புரோட்டா நினைவுகள் சுவை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம் நீங்கள் சைவம் என்று தெரிகிறது .நான் அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும்போது கிங் மெட்ரோவின் ஒரு பகுதியான ஜூஸ் சென்டரில் , மிக்ஸர் ஜூஸ் சாப்பிடுவேன் .

      Delete
  3. ஆமாம் நீங்க யாரு? கொரியப் பெண் விற்கும் பேகல் வாங்கி சாப்பிடும் நீங்கள் எங்க ஊரு அதுவும் எனக்கு பிடித்த புரோட்டவை பற்றி எழுதுறீங்க

    ReplyDelete
    Replies
    1. புரோட்டா பிடிக்காத தமிழன் இருக்க முடியுமா அதுவும் மதுரைத்தமிழன் .
      நீங்கள் என்னை மறந்து போனது நியாயம்தான் பாஸ்

      Delete
  4. உங்களை மறந்தாலும் உங்களின் கனவு கன்னி கொரியப் பெண்ணை இன்னும் மறக்க முடியவில்லையே

    ReplyDelete
    Replies
    1. அந்தக்கொரியப் பெண்ணுக்கும் வயசாகி எனக்கும் வயசாகி , ஹ்ம்ம் ரிட்டயர்டு ஆயாச்சு தமிழா

      Delete
  5. //.என்னை மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன் // மறக்க முடியுமா சார் ! ? :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாஸ்கர் உங்களைப்போன்ற அன்புள்ளம் கொண்டவர்கள் இருக்கும்வரை , இந்தப் பரதேசி தொடர்ந்து எழுதுவான்

      Delete