Monday, May 6, 2019

பிராமணாள் கடையில் சாப்பிட்ட பரதேசி !!!!!


Related image
வேர்களைத்தேடி பகுதி 42
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும். 
            தேவி விலாஸ் கடையில் எங்கப்பாவுக்கு மரியாதை கிடைத்ததற்கு இன்னொரு காரணமும் இருந்தது. தேவிவிலாஸ் கடையின் உரிமையாளரான நாயரின் இரண்டு மகன்களும் என் அப்பாவிடம் படித்தவர்கள்தான். ஒருவர் பெயர் சோமன், இன்னொருவர் பெயர் மறந்துவிட்டது. என் அப்பாவுடன் அங்கு சாப்பிட்ட போது எவ்வளவு கட்டாயப்படுத்தியும் சாப்பிட்ட கட்டணத்தை வாங்குவதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர். என் அப்பாவும் அதுவரையிலோ, அதற்கும் பின்னரோ அங்கு சாப்பிட்டதில்லை. ஓசியில் கிடைப்பதற்காக ஒவ்வொரு நாளும் செல்லமுடியாதல்லவா? அதனால் தான் அவருக்கு அப்படி ஒரு மரியாதை.
          தேர்வு சமயத்தில் ஒரு ரூபாய் பணத்தோடு முதல் நாள் செல்லும்போது, என்னை அவர்கள் தியாகு வாத்தியார் பையன் என்று கண்டுகொண்டு கூப்பிட்டு அன்போடு உபசரித்தார்கள். எனக்கு ஒரு நப்பாசை. அப்பாவிடம் வாங்காதது போல் என்னிடமும் வாங்க மறுத்தால் என்ன செய்வது என்று யோசித்தாலும் மறுபுறம் அப்படி வாங்காவிட்டால் அந்தப் பணத்தை எப்படிச் செலவு செய்வது என்று கனவுக் குதிரைகளைக் தட்டி ஓடவிட்டேன்.  மாணிக்கம்பிள்ளை கடையில் கோகுலம், கல்கண்டு அல்லது முத்துகாமிக்ஸ் வாங்கிவிடலாம் என்று முடிவு காட்டினேன். குமுதம் மற்றும் ஆனந்தவிகடன் படிக்க அப்போது என் வீட்டில் அனுமதியில்லை. குறிப்பாக குமுதம் ம்ஹும் என்னவென்று தெரியவில்லை. ஆனால் பெண்கள் குமுதத்தை ஆர்வமாக வாங்கிப் படிப்பார்கள். அதுவும் ஏனென்று தெரியவில்லை.
Image result for பிராமணாள் கடை

          தேவி விலாஸ் கடையைப் பற்றிச் சொல்லும்போது இன்னொரு விஷயத்தைச் சொல்ல மறந்துவிட்டேன்.  முதன் முதலாக என்னுடைய அப்பா அங்கு கூப்பிட்டுக் கொண்டு செல்லும்போது நடந்த உரையாடலை இங்கு தருகிறேன். 
          "அப்பா எந்தக் கடைக்குப் போகிறோம்"
          "ஏன் தேவி விலாசுக்கே போகலாம்"
          "ஆனால் நாம் கிறிஸ்தவர்கள் தானே"
          "ஆமாம் அதற்கென்ன?"
          "பிராமணாள் சாப்பிடுமிடம் என்றல்லவா போட்டிருக்கிறது"
          சிரித்துவிட்டு, "பிராமணாள் சாப்பிடுமிடம் என்பதற்கு வேறு அர்த்தம் இருக்கிறது".
          "அது என்ன அர்த்தம்ப்பா?"
          "பிராமணர் சாப்பிடுமிடம் என்றால், பிராமணர்கள் மட்டும் சாப்பிடுமிடம் என்று அர்த்தம் இல்லை. இங்கு சைவ உணவு மட்டும் கிடைக்கும் என்று அர்த்தம்"
          அப்போதுதான் அதற்கு அர்த்தம் விளங்கியது. ஏனென்றால் எனக்குத் தெரிந்து அப்போது எங்கள் ஊரில் இருந்த ஒரே பிராமணக்குடும்பம், மேனேஜர் அய்யர் என்று அழைக்கப்பட்ட பரமசிவம் அய்யர் குடும்பம்தான். இந்து நடுநிலைப்பள்ளியை நிறுவிய அவர், அவருடைய இரு மகள்களான அம்மாப்பொண்ணு டீச்சர், முத்து டீச்சர் ஆகியோர்கள் அதே பள்ளியில் வேலை செய்தனர். இதில் முத்து டீச்சர் என்னுடைய இரண்டாம் வகுப்பு ஆசிரியை.  இது தவிர இவர்களுடைய சகோதரன் வெங்கடராமனும் பின்னர் இங்கு ஆசிரியராகி தன் தந்தைக்குப்பின் பள்ளியின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 
          இவர்கள் மட்டும் தான் தேவி விலாசில் சாப்பிடமுடியுமென்றால் கடை நடத்துவதெப்படி? அல்லது எனக்குத் தெரியாமல் வேற யாராவது நிறைய பிராமணர்கள் இருக்கிறார்களா என்று குழம்பியபோது  அப்பாவின் பதில் சந்தேகத்தைப் போக்கியது. இது தவிர இன்னொரு போர்டும் இருக்கும், "பெரு வியாதியுள்ளவர்கள் உள்ளே நுழையக்கூடாது" என்று.  பின்னர்தான் தெரிந்தது அது தொழு நோயாளிகளைக் குறிக்கிறது என்று. இப்போதும் அதே போர்டுகள் இருக்கிறதா என்று தெரியவில்லை.
          தேவி விலாசுக்கு அருகில் இருந்த புதிய கட்டிடத்தில் ஸ்டேட் பேங்க் செயல்பட்டது. அந்தக் கட்டிடத்தின் சொந்தக்காரர் மாணிக்கம்பிள்ளை. அவருடைய ஸ்டேஷனரி மற்றும் புத்தகக்கடையும் அதனருகில் இருந்தது. இங்குதான் தினத்தந்தி போன்ற  பத்திரிக்கைகளும் கிடைக்கும். அதில் தேவதானப்பட்டி பற்றிய செய்திகள் எதுவும் இருக்குமென்றால் அதனை தினத்தந்தி போன்ற பத்திரிக்கைகளுக்கு எழுதியனுப்புவதும் மாணிக்கம்பிள்ளைதான்.
        இங்குதான் நான் முத்து காமிக்ஸ், கல்கண்டு ஆகிய பத்திரிக்கைகளை வாங்குவேன். மாதந்தோறும் முதலாவது வெள்ளிக்கிழமைகளில் வரும் முத்து காமிக்சை மாலையில் சீக்கிரம் சென்று வாங்காவிட்டால் கிடைக்காது, விற்றுப்போய்விடும். எனவே முந்தின நாளே போய்ச சொல்லி வைத்துவிடுவேன். அப்படியிருந்தும் சில நாட்கள் கிடைக்காது. அப்போதெல்லாம் கோபமும், அழுகையும் முட்டிக்கொண்டு வரும். மாணிக்கம்பிள்ளையையும் மனதில் திட்டுவேன். எங்கப்பாவை பெயர் சொல்லி அழைக்கும் சிலரில் மாணிக்கம்பிள்ளையும் ஒருவர்.
          அதற்கடுத்த கட்டிடத்தில் நான் சொன்ன அசைவைக்கடை இருந்தது. அங்கே வேறு என்னவெல்லாம் இருந்தது நான் பார்த்ததில்லை. ஆனால் பரோட்டா சால்னாதான் அங்கு ஸ்பெஷல். அங்கே போகும்போது சிறிதுநேரம் நின்று புரோட்டா தட்டுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன்.
          பொதுவாகச் சொல்வார்கள், ஓயாத கடலின் அலைகள், மலையின் அருவி, குழந்தை, யானையின் அசைவு ஆகியவற்றை எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும் சலிக்காது என்பார்கள். அதேபோல் இந்தப்புரோட்டா, தட்டுவதையும்  பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
          இந்த உணவு நம் உணவு இல்லையென்றாலும், எங்கிருந்து வந்தது, இதைச் சாப்பிடுவதால் நன்மையா தீமையா என்பதையெல்லாம் மறந்துபோக வைப்பது இதன் சுவைதான்.
          முதலில் மைதா மாவை எண்ணெயும் தண்ணியும் விட்டு நன்றாகப் பிசைவார்கள். பிசைந்து முடிந்தவுடன் அதனை சிறிய உருண்டைகளாக பிடித்து வைப்பார்கள். பார்ப்பதற்கு வெள்ளை வெளேரென்று பளபளப்பாக இருக்கும். பெரும்பாலும் புரோட்டோ தட்டுபவர்கள் நல்ல பலசாலியாக இருப்பார்கள்.         அதன்பின் அதனை எடுத்து உள்ளங்ககையில் தட்டையாக்கி, பிரட்டி பிரட்டி பிரட்டிப்போட அதை அப்படியே பரவி மெலிதாக அகலமாக  ஆகிவிடும். பின்னர் அதனை அப்படியே சுருட்டி வைப்பார்கள். அதன்பின் அதனை தட்டையான சட்டியில் வைத்து பொன்நிறமாகும் வரை சுற்றிலும் எண்ணெய் ஊற்றி பொறிப்பார்கள். விருதுநகரில் இதனையே அப்படியே எண்ணெய்ச் சட்டியில் பொரித்து எடுப்பார்கள்.
          இதில் கொத்துப் பரோட்டோ, வீச்சுப்பரோட்டா, சிலோன் பரோட்டா, முட்டைப் பரோட்டா, போன்ற பல வகைகள் இருக்கின்றன.
          வட இந்தியாவில் லேயராகச் செய்யும் எதையும் பராத்தா என்றுதான் சொல்கிறார்கள். நம் பரோட்டா என்பது முற்றிலும் வேறு வகை. மதுரைப் பகுதியில் இதனை புரோட்டா என்று தான் சொல்வோம். இதனை எப்படிச்சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என அடுத்த பகுதியில் சொல்கிறேன்.
- தொடரும்.



11 comments:

  1. கடந்தகால நினைவுகளை சம்பவங்களை நிகழ்காலத்தில் மட்டுமல்ல வருங்காலங்களிலும் ஆசையாக அசைபோட ஆனந்தம்தான்

    ReplyDelete
  2. பரோட்டா நினைவுகள் சுகம். கடைசியில் உங்கள் அப்பாவிடம் வாங்காமல் இருந்ததுபோல் உங்களிடம் வாங்காமல் இல்லாமல் உங்களிடம் பணம் வாங்கி விட்டார்கள் இல்லையா? முத்து காமிக்ஸ் நினைவுகள் எனக்கும் உண்டு! அப்போது அது 50 காசுகள் என்று நினைக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கிவிட்டார்கள் ஸ்ரீராம் ம்ம்ம் .நான் நினைத்தது நடக்கவில்லை.

      Delete
  3. ருசிக்கும் விதத்தை அறிய காத்திருக்கிறேன்...!

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாய் அடுத்த வாரம் திண்டுக்கல் தனபாலன்

      Delete
  4. கொத்து பரோட்டா பூர்வீகம்
    ஸ்ரீலங்கா மட்டகளப்பு பகுதிதான்

    ReplyDelete
    Replies
    1. நன்றி அதனைப்பற்றிய சில விவரங்களை அடுத்த வாரத்தில் சொல்கிறேன்

      Delete
    2. அடுத்த வாரம் இன்னும் வரலையா?

      Delete
  5. ||இன்னொருவர் பெயர் ‘மறந்துவிட்டது’| , பெயர் வித்தியாசமா இருக்கே சார். ? ��

    ReplyDelete
    Replies
    1. ஆரூர்னாலே கொஞ்சும் குசும்பு அதிகம்தான்.

      Delete
  6. இப்போது பிராமணாள் கபேயில் புரோட்டா வெஜ் சால்னாவும் சாப்பிட முடிகிறது.

    ReplyDelete