பார்த்ததில் பிடித்தது
சேன்ட் கேஸில்

"மனக்கோட்டை கட்டாதே" என்று சொற்றொடரை பலமுறை கேட்டிருக்கின்றேன்.
"மணல் கோட்டை நிற்காது" என்று சொல்வதையும் கவனித்திருக்கிறோம். Sand
Castle அதாவது "மணற் கோட்டை" என்ற பெயர் கொண்ட
இந்தத்திரைப்படம் என் ஆர்வத்தைத் தூண்டியதால் நெட்பிலிக்சில் இதனை சமீபத்தில்
பார்த்தேன்.
எனக்குப்
பிடித்த திரைப்படங்கள் மற்றும்
புதினங்களில் முதலிடம் பிடித்திருப்பது வரலாறு, மற்றும்
வரலாற்றைத் தழுவிய நவீனங்கள். இரண்டாவது இடம் பீரியட் படங்கள் மற்றும் வார் மூவீஸ்
என்றழைக்கப்படும் போர் சார்ந்து எடுக்கப்பட்டவை. மூன்றாவது வகையில்
திரில்லர் என்று சொல்லப்படும் திகில் கதைகள் (பேய்ப்படங்களைத் தவிர்த்து). இதுதவிர,
காதல், சென்டடிமென்ட் என்று வேறு எதையும்
எனக்குப் பிடிப்பதில்லை. ஏலேய் (பரதேசி உனக்கு வயசாகிப் போச்சுடோய்) அதனால்தானோ என்னவோ எந்தத் தமிழ்ப் படத்தையும்
என்னால் முழுதாகப்பார்க்க முடியாமல் 5-10 நிமிடங்களில் “தூக்கமும்
கண்களைத் தழுவட்டுமே" என்ற நிலைக்குப் போய் விடுகிறேன். ஒன்றிரண்டு படங்கள்
விதிவிலக்கு.
அப்படிப்
பார்த்த ஒரு படம் தான் Sand Castle. ஈராக்கில்
நடந்த யுத்தத்தைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வையும் கருத்து
வேறுபாடுகளும் உண்டு. அமெரிக்காவுக்கு இது தேவையில்லாத வேலை என்று பலர் சொல்லலாம்.
நான் அதற்குள் போக விரும்பவில்லை. ஆனால் ஈராக்கில் அமைதி திரும்புவதற்காக பல
அமெரிக்க வீரர்கள் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்திருக்கிறார்கள். அந்த நிகழ்வை எடுத்துக்காட்டுவதே இந்தப்படம்.
தன்னுடைய
படிப்புக்குப் பணம் தேவைப்படுவதால் ஆர்மி ரிசர்வில் சேர்ந்த மேட் என்ற ஒருவனை
மையப்புள்ளியாக வைத்து திரைப்படம் ஆரம்பிக்கிறது. இவனுக்கு ஒரு வருமானம்
தேவைப்பட்டது. ஆனால் போர்முனைக்குச் செல்வதில் விருப்பமில்லை ஏனென்றால் உயிர் மீது
பயம். தலையில் தானே காயத்தை ஏற்படுத்திக் கொண்டும், கையில் கட்டுப் போட்டுக் கொண்டு நடித்து போர் முனைக்குப் போவதில் இருந்து விலக்குப் பெற முயன்றும் ஒன்றும் உதவவில்லை. அவன் எங்கே போக மிகவும் பயந்தானோ அங்கேயே அதாவது
ஈராக்கின் தலைநகர் பாக்தாத்துக்கு
அனுப்பப்பட்டான். வந்து இறங்கியவுடனே யுத்தத்தின் நடுவில் மாட்டிக் கொண்டு
ஆனால் தப்பித்துவிடுகிறான்.
சில
நாட்கள் கழித்து பாக்குபா என்ற ஊருக்கு இவனுடைய குழு அனுப்பப்படுகிறது. அங்கே
சமீபத்தில் நடந்த போரில் ஊரின் தண்ணீர்
டேங்க் உடைந்துவிட அந்தப் பாலைவன ஊர் நீரில்லாமல் தவித்து வந்தது. பொதுமக்களிடம்
நற்பெயரைப் பெற, அமெரிக்க ராணுவ அதிகாரிகள் ஒரு குழுவை அங்கே அனுப்பினார்கள்.
அங்கே இயங்கிய ஒரு இஞ்சினியர் குழுவோடு வேலை செய்வதும் அவர்களுக்கு
பாதுகாப்பளிப்பதும் இவர்களின் வேலை. அதோடு அங்கிருந்த நீரை லாரி டேங்க்களில்
நிரப்பி பக்கத்து ஊருக்கு குடிநீரும் வழங்க வேண்டும்.
இவர்கள்
முயற்சியை தடுக்க நினைத்த உள்ளூர் தீவிரவாதிகளின் தொல்லை ஒருபுறம். ஊரிலிருந்து
இவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டியவர்களை அவர்கள் கொல்ல இந்தப்பணி மேலும்
கடினமாகிறது.
பின்னர்
இதையெல்லாம் எப்படி சமாளித்தாள், நீர் டேங்கை சரி
பண்ண முடிந்ததா? எவ்வளவு உயிர்பலி நடந்தது? கதாநாயகன் தப்பித்தானா போன்ற கேள்விகளுக்கான விடைகளை
வெள்ளித்திரையில் அல்லது சின்னத்திரையில் காண்க.
![]() |
Chris Roessner |
ஏப்ரல்
2017-ல் நெட்பிலிக்சில் வெளிவந்த
இந்தப் படத்தை இயக்கியவர் ஃபெர்னான்டோ
கொய்ம்பரா (Fernando Coimbra). எழுதியவர் கிறிஸ் ரோஸ்னர்
(Chris Roessner) ,அருமையான இசையைக் கொடுத்தவர் ஆடம்
பீட்டர்ஸ்.
![]() |
Nicholas Hoult |
அப்பாவி
சோல்ஜராக நிக்கலஸ் ஹொல்ட் சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அவருடைய
சார்ஜன்ட்டாக கிளன் பாவல் நடித்திருக்கிறார்.. இது தவிர லோகன் மார்ஷல் கிரீன்
மற்றும் ஹென்ரி காவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இதில்
முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இதை எழுதிய கிரிஸ் ராஸ்னர்
அவர்களின் சொந்த அனுபவம் இது. ஆமாம் அவர் ஈராக் போரின் போது அங்கிருந்த ஒரு
கிராமத்திற்கு நீர் கொடுக்கும் விதத்தில் ஈடுபட்ட நடந்த நிகழ்வுகளை எழுத அந்த
தனிப்பட்ட அனுபவம் தான் இந்தப் படத்தின் கருவாக அமைந்தது.
பெரிதாக
பாராட்டப்படவில்லை யென்றாலும் இதுபோல்
போர் சம்பந்தப்பட்ட (War movie) திரைப்படங்களில்
ஆர்வமுள்ளவர்களும், போரின் போது ஈராக்கில் நடந்த உண்மை
நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களும் இதனைப் பார்க்கலாம்.
முற்றும்
முக்கிய அறிவுப்பு :
கீர்த்தனை பாடும் நிகழ்ச்சிக்காக மூன்று நாள் பயணமாக கனடா செல்கிறேன் .கனடா நண்பர்கள் வாருங்களேன் சந்திக்கலாம் .
முக்கிய அறிவுப்பு :
கீர்த்தனை பாடும் நிகழ்ச்சிக்காக மூன்று நாள் பயணமாக கனடா செல்கிறேன் .கனடா நண்பர்கள் வாருங்களேன் சந்திக்கலாம் .