வேர்களைத்
தேடிய பயணம்: பகுதி 2
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/01/blog-post_15.html
ஆசிரியைகள் கலவரப்பட்டு வர , எனக்கு கொஞ்சம் சிரிப்பு வந்தாலும்
அவர்களை சங்கடப்படுத்தி விட்டோமே என்று வருத்தமாக
இருந்தது .என் அருகே வருவதற்கே தயங்கினார்கள் .அதன்பின் நான் கல்வி அதிகாரி
இல்லை என்று சொன்னபின்தான் அவர்களுக்கு நிதானம்
வந்தது .நான் யார் என்பதை சொல்லி முடித்ததும் கொஞ்சம் என் மேல் மரியாதையும் வந்தது
அவர்கள் முகத்தில் தெரிந்தது.அந்தளவுக்கு எங்களுக்குகெல்லாம் பெருமை சேர்த்த என் தாத்தாவின்
கதையை கொஞ்சம் கேட்கலாமா?
"செபா நீ
என் கூட வந்து விடு" என்று சந்தியாகுப் போதகர் சொன்னதைக் கேட்டு திடுக்கிட்டார்
செபஸ்டியன். செபஸ்டியனுக்கு வாலிப வயது பள்ளியிறுதியை பசுமலையில் முடித்து அங்கேயே
ஆசிரியப்பயிற்சியையும் அப்போதுதான் முடித்திருந்தார். திருமணம் ஆயிருந்தது. ஆனால் சந்தியாகுப் போதகர்
கூப்பிடும்போது தட்ட முடியுமா? பசுமலையில்
இருந்த அமெரிக்கன் கல்லூரியில் தான் பார்த்த கணக்குப் பேராசிரியர் என்ற பதவியை விட்டுவிட்டு
இறைப் பணியும் சமூகப்பணியும் செய்வதற்கு இடம்மாறி வத்தலக்குண்டு சென்றவர் அவர். வத்தலக்குண்டில்
இருந்த திருச்சபைக்கு ஆயராக அருட்பொழிவு பெற்றதோடு தான் அன்போடும் எதிர்பார்ப்பில்லாமலும்
செய்த அனேக மக்கள் பணியால் பொதுமக்களின் மரியாதையையும் ஒருங்கே பெற்றிருந்தார். எனவே
வத்தலக்குண்டு நகர்மன்றத்தலைவராக ஒருமித்த கருத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
மிகுந்த செல்வாக்குடன் விளங்கிய அவர் நல்ல கவிஞரும் கூட. அவர் எழுதிய கீர்த்தனைப் பாடல்கள்
தமிழ் பேசும் திருச்சபைகளில் பாடப்பட்டு மிகுந்த கீர்த்தியினைப் பெற்றவர். எல்லாவற்றுக்கும்
மேலாக செபஸ்டியனின் சொந்த தாய் மாமா. பெற்ற பிள்ளைகளை விட தன் தத்துப் பிள்ளை போன்ற
செபஸ்டியனினிடம் மிகுந்த அன்பு வைத்திருந்தார் சந்தியாகு போதகர் .
"செபா உனக்கு
ஒரு உன்னதமான வேலை காத்திருக்கிறது சீக்கிரம் வந்துவிடு”, என்று கூறிச்சென்றார். அவருடைய
வார்த்தையை யாரும் தட்டமுடியாது என்பதால் தன்
பெற்றார் உற்றாரைப் பிரிந்து மனைவியுடன் வத்தலக்குண்டு வந்து சேர்ந்தார் செபஸ்டியன்.
மதுரை விட்டு வர நேர்ந்தாலும் வத்தலக்குண்டும் நல்ல நகர்தான் என்று எண்ணி வந்தவர்க்கு
அங்கே அதிர்ச்சி காத்திருந்தது. ஆசிரியர் வேலை வத்தலக்குண்டில் அல்ல, அதனருகில் இருந்த
தேவதானப்பட்டி என்ற ஊரில். மனதைத் தேற்றிக்கொண்ட செபஸ்டியன், "எந்தப் பள்ளியில்?"
என்று கேட்டதற்கு “அங்கு நீதான் உருவாக்க வேண்டும்”, என்று அதிர்ச்சியினை மேலும் கூட்டினார்.
ஆனாலும் எந்த
மறுமொழியும் சொல்லாது மனைவியுடன் தேவதானப்பட்டி வந்து சேர்ந்தார் செபஸ்டியன். ஊரில்
ஒரு இந்து ஆரம்பப்பள்ளி இருந்தது ஆனால் அது பரமசிவம் அய்யர் என்ற உயர் ஜாதி அய்யர் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்டு சாதி பிள்ளைமார்களால்
ஆதரிக்கப்பட்டு இருந்தது. அந்த சிறிய அழகான ஊர் சாதியினால் பிளவுபட்டு இருந்தது. வடக்குத்தெருப்
பக்கம் தேவர்கள், நடுவில் பிள்ளைமார்கள், நாடார்கள்
மேலும் மேட்டுத்தெருவில் தாழ்த்தப்பட்ட அரிசன மக்கள் வசித்து வந்தனர். அவர்கள் பெரும்பாலும்
கூலிவேலை செய்யும் பண்ணைக்காரர்கள்.
ஊரில் நன்கு வரவேற்கப்பட்ட
செபஸ்டியன் அவர்களை ஒவ்வொரு சாதியினரும் தங்கள் பகுதியில் பள்ளியினை ஆரம்பிக்க வேண்டினர்.
ஆனால் செபஸ்டியன் தேர்ந்தெடுத்த இடம், தெற்குத்தெருவுக்கு எதிரே மெயின் ரோட்டுக்கு மறுபுறம். ஏனென்றால் அவர்களுடைய
வாழ்க்கை முறையினைப் பார்த்து அதிர்ந்து போனவர், மற்றவர் எப்படியும் முன்னேறி விடுவார்கள்
தாம் முன்னேற்ற வேண்டியது இவர்களைத்தான் என்று நினைத்துக் கொண்டார்.
ஊர் மக்கள் அதற்கு
பலத்த எதிர்ப்புத் தெரிவித்ததோடு மற்ற எந்த ஜாதியினரும் அங்கு வரமாட்டோம் என்று தெரிவித்தார்கள்.
எந்த உதவியினையும் செய்ய முடியாதென்றும் கையை விரித்தார்கள்.
ஆனால் தனியாக
நின்று, தன் நண்பரும் புரவலருமான கொடைக்கானல் ஜெயராஜ் நாடாரின் உதவியோடு ஒரு சிறு இடத்தை
வாங்கி ஒரு ஓட்டுப் போட்ட இடத்தில் பள்ளியினை ஆரம்பித்தார். அதற்குப் பின்னால் ஒரு
சிறு குடிசையினைப் போட்டு தங்கள் புதுக் குடித்தனத்தையும் அங்கே ஆரம்பித்தார்.
முதலில் ஊர் மக்கள்
அவரை வெறுத்தாலும் பின்னர் அவரைத் தேடி வர ஆரம்பித்தனர். ஏனென்றால் அவருடைய ஆங்கில
அறிவுக்கு இணையான ஒருவர் அந்த பதினெட்டுப் பட்டியில் ஒருவர் கூட இல்லை. பொதுமக்களுக்கு
எந்தப் பிரச்சனை வந்தாலும் தீர்த்து வைப்பதில் வல்லவராக இருந்தார். போலீஸ் வரை போனாலும்
வெள்ளைக்கார போலீஸ்காரர்களிடம் பேசி சரி செய்தார். கலெக்டர் போன்ற வெள்ளைக்கார துரைமார்களிடத்தில்
சரிசமமாக உட்கார்ந்து சரளமாகப் பேசி ஊருக்குத் தேவையான பல காரியங்களை செய்து கொடுத்தார்.
அந்தப்பகுதிக்கு
வரும் வெள்ளைக்காரர்கள் எல்லாக் காரியத்துக்கும் அவரையே கூப்பிட்டு அனுப்பினார்கள். உயரமான செபஸ்டியன் அவர்களுக்கு
கிட்டத்தட்ட இணையான நிறத்தில் எப்போதும் சூட் அணிந்து கம்பீரமாக காட்சியளிப்பார். எனவே
ஊர் விவகாரங்களில் பலமுறை அவரையே கேட்டு முடிவு செய்தனர். ஊர்க்காரர்கள் ‘பெரிய வாத்தியார்’,
என்று அவரைக் கொண்டாடினர்.
ஆனால் பள்ளி ஆரம்பிக்கப்
பட்டும் தெற்குத் தெருவிலிருந்து யாரும் பள்ளிக் கூடத்திற்கு வரவில்லை. அதனைப்பார்த்து
எந்தத் தயக்கமும் இல்லாமல் தெற்குத் தெருவில் நுழைந்து அங்குள்ள ஏழை மக்களிடம் மிகவும்
சகஜமாக பழகி, படிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி பிள்ளைகளை அவரே சென்று அனுதினமும்
அழைத்து வந்தார். கொஞ்சம் கொஞ்சமாக பள்ளிக்குப் பிள்ளைகள் வர ஆரம்பித்தனர். அங்கு படித்தவர்கள்
மட்டுமல்ல பிற பள்ளிக் கூடத்தில் படித்தவர்களும் மேற்படிப்புக்கு அவரிடம் வந்த போது
பலரையும் பசுமலையில் உள்ள உயர் நிலைப்பள்ளியில் சேர்த்துவிட்டார். அவர்களில் பலபேருக்கு
ஆசிரியப் பயிற்சியும் கொடுக்க வைத்து பல ஆசிரியர்களை உருவாக்கினார். அதுமட்டுமில்லாமல்
ஆசிரியப் பணியே சிறந்த பணியென்று எண்ணி தனக்குப் பிறந்த ஐந்து பெண்கள், மூன்று ஆண்கள்
என எட்டுப் பேரையும் ஆசிரியப் பணிக்கெனவே அர்ப்பணித்ததோடு அவர்களில் கடைசிப் பெண்ணைத்தவிர எல்லோருக்கும் ஆசிரியர்களையே திருமணமும்
செய்து கொடுத்தார். அத்தோடு பெண்பிள்ளைகளைத்தவிர, தன்னுடைய மூன்று ஆண் மகன்களும் தேவதானப்பட்டியிலேயே
இறுதிவரை பணியாற்ற வேண்டும் என்ற உத்தரவாதத்தையும் வாங்கிக் கொண்டார். ஊரில் உள்ள மக்கள்
புரிந்து கொள்ளவும் , இலகுவாக கூப்பிடவும் ஏதுவாக தம் பிள்ளைகளுக்கு ஆங்கிலப்பெயர்களை
தவிர்த்து ஜெபவதி, ரூபவதி, லீலாவதி , இந்திரா
, ஜெயராஜ் , தியாகராஜன் , ஜீவராஜ் என்ற பெயர்களைச் சூடினார் . தான் கட்டிய பள்ளியையையும் சி எஸ் ஐ நிறுவனத்திற்கு கொடுத்துவிட்டார்
.
ஜெயராஜ் நாடாரின்
நட்பினை மெச்சும் விதத்தில் தன் மூத்த மகனுக்கு ஜெயராஜ் என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
அந்த எளிய மனிதரின் காலடியில் நிலங்களையும்,
பணத்தையும் கொட்டுவதற்கு பலர் வந்த போதும் மறுத்து தன் இறுதிகாலம் வரையும் வாடகை வீட்டில்
இருந்து மறைந்தார் . தன்னுடைய இறுதிச் செலவுக்குக் கூட மாதா மாதம் என் வீட்டிற்கு வந்து
என் அப்பாவிடம் பணம் கொடுத்து வைத்தார். அத்தகைய மகானின் பேரன் என்று சொல்லிக்கொள்வதில்
எனக்கும் பெருமைதான் .
தாத்தா நினைவாக
பேரர்கள் யாருக்கும் அந்தப்பெயர் வைக்கப்படாவிட்டாலும் என் கடைசித்தம்பி ராஜபாஸ்கரன் அவனுடைய மூத்த மகனுக்கு செபஸ்டியன் என்ற
பெயரை சூட்டியிருக்கிறான் .அவனை நான் ஒவ்வொருமுறை செபா என்று கூப்பிடும்போதும் தாத்தா
நினைவு வந்து போகும் .
இப்போது பள்ளி முழுவதிலும் பிள்ளைகள் நிரம்பி இருந்ததை பார்க்க மகிழ்ச்சியாக
இருந்தது. இதற்கு முன் இருந்த பள்ளி இந்து நடுநிலைப்பள்ளி ஒன்றுதான். அதற்குப் பின்,
கள்ளர் துவக்கப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி ஆகியவை ஒவ்வொன்றாக வந்தன.ஆசிரியர்களிடம் விடை
பெற்று காரில் ஏறி அப்படியே மெதுவாக ஓட்டச்சொன்னேன். தேவதானப்பட்டி மெயின்
ரோட்டில் கார் சென்றது .
தொடரும்
தொடரும்
பெரிய ஆளுமையான உங்கள் பாட்டனாரைப் பற்றிய தகவல்கள்
ReplyDeleteவியக்கவைக்கின்றன. மேலும் எழுதுங்கள் சார்!!
மிக்க நன்றி பாஸ்கர்
Deleteஅர்ப்பணிப்பு என்பது வெகு சிலருக்கே வரும். உங்கள் பாட்டனார் பெருமைக்குரிய மனிதர்.
ReplyDeleteதொடர்ந்து வந்து படித்து தங்கள் கருத்துக்களை சொல்லும் சகோதரி
Deleteஇமாவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் .
நல்லவரான ஒரு வல்லவர் பற்றி படித்ததில் சந்தோஷம். அந்த ஊர் மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.
ReplyDeleteமிக்க நன்றி ஸ்ரீராம்.
Deleteஆலமரம் போல பரந்து விரிந்த நமது குடும்பத்தின் பெருமைக்குரிய வேர்களை தேடிய பயணத்தில் நாங்களும் பயணிப்பது பெரும் பேறு. நன்றி அண்ணன்
ReplyDeleteஅந்த வேரிலிருந்து தோன்றிய விருட்சங்களில் நீயும் ஒருவன் பாசு .
Deleteஅருமையாக இருந்தது பாதியில் நிறுத்தி விடடீர்களே
ReplyDeleteநன்றி அன்பு , அவரைப்பற்றி சொல்ல ஏராளமான விடயங்கள் இருந்தாலும் , இன்னும் வேறு பல காரியங்கள் சொல்லவிருப்பதால் நிறுத்திக்கொண்டேன் .
DeleteGreat.
ReplyDeleteThank you.
Delete