என்னுடைய முதல் பள்ளியும் ஆசிரியர்களும் !!!
வேர்களைத் தேடிய பயணம்: பகுதி 3
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/01/blog-post_22.html
இந்து நடுநிலைப்பள்ளி தற்போது |
காரை மெதுவாக ஒட்டிச் செல்லும்படி கூறினேன். முபாரக் அவர்
தம்பி இஸ்மாயில் கடையைத் தாண்டி கார் சென்றது. அவர்கள் இருவரும் என்னுடன் படித்தவர்கள் . ஒருவரையும் அங்கு
காணவில்லை. இரவு உணவு முடித்து சில நிமிடங்கள் என் அப்பா சென்று
உட்காரும் கமால் அவர்களின் ஜவுளிக்கடையில் அவர் இல்லை. கமால் கடையில் துணி எடுத்து முத்து டெய்லர் தைத்த
உடைகளைத்தான் நான் என் தம்பிகள் மற்றும் என் அப்பா ஆகியோர் அணிவோம்.
அடுத்து வந்த
அப்பாஸ் கடை, அவர் தம்பி ரஹீம் கடைகளும் அடையாளம் தெரியவில்லை. இங்குதான் பல ஆண்டுகளாக பலசரக்கு வாங்குவோம்.
ரஹீம் சின்ன வயதிலேயே இறந்துவிட்டார். அவரது மகன் இப்ராகீம் இப்போது துபாயில்
இருக்கிறார். அவ்வப்போது முகநூலில் வருவார். அடுத்து மூக்கையா மரக்கடை அவர்
கடையில் வேலை பார்த்த மலையான் கொண்டு வந்து கொடுக்கும் மா இஞ்சி
ஆகியவை ஞாபகத்துக்கு வந்தன. மூக்கையா நாடார்
இறந்தபின் அவர் மகன் கண்ணதாசன் பொறுப்பேற்றார் .
போஜராஜா
ஜவுளிக்கடையைக் காணோம். சுரேஷ், ஆனந்த் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. NVS
கடையும் இல்லை. அடுத்தமுறை இன்னும் அதிக நேரம் செலவழிக்க
வேண்டும். அடுத்த வலதுபுறம் திரும்பச் சொன்னேன். மூலைச் செட்டியார் கடை,
கண்ணாடித்தாத்தா கடை எல்லாம் ஒன்றுமேயில்லை. வலதுபுறம் RP
சைக்கிள் கடை என்று பல கடைகளைக் காணோம். இடதுபுறம் TAS கடையும் இல்லை. அதன்பின் இந்து நடுநிலைப்பள்ளி வந்தது. போடி ஜமீன்தாரின்
அந்தக் கட்டடம் பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து கிடந்தது. ஒன்று முதல் எட்டாம்
வகுப்பு வரை நான் படித்த இடம் பல பழைய நினைவுகளைக் கண்முன் நிறுத்தியது.
என்னுடைய ஆசிரியர்களின் பெயர்கள்
எனக்கு நினைவு இருக்கிறதா என்று பார்ப்போம்.
கம்பீரமான எட்டாம் வகுப்பு வாத்தியார் என் அப்பா,
ஏழாம் வகுப்பு ஆசிரியரும் என் தமிழாசிரியருமான புலவர்
தேவகுரு,
ஆறாம் வகுப்பு ஜொஹரா டீச்சர், ஐந்தாம் வகுப்பு ரஹீம் வாத்தியார்,
நான்காம் வகுப்பு வீரசின்னன் வாத்தியார்,
மூன்றாம் வகுப்பு குட்டை
வாத்தியார் ஜேம்ஸ், இரண்டாம் வகுப்பு முத்துலட்சுமி டீச்சர், என் ஒன்றாம் வகுப்பு
ஆசிரியர் என் அம்மா சுசிலா டீச்சர் ஆகியோர் வேலை பார்த்த இடம் . இவர்கள் தவிர தலைமை ஆசிரியர் ராமு வாத்தியார், சந்திரன் வாத்தியார், என் சித்தப்பா ஜீவா வாத்தியார் அம்மா பொண்ணு டீச்சர், கோவிந்தராஜன் வாத்தியார், கைத்தொழில் ராஜு வாத்தியார் என்று எல்லோரும் சிறந்த ஆசிரியர்கள். ஆண் ஆசிரியர்களை வாத்தியார் என்றும் பெண் ஆசிரியைகளை
டீச்சர் என்றும் கூப்பிடுவது எப்போது ஆரம்பித்தது என்று தெரியவில்லை ஆனால் இன்றும்
தொடர்கிறது என்றுதான் நினைக்கிறன் . வாத்தியார் பிள்ளை அதுவும்
அம்மா அப்பா இருவரும் வேலை பார்க்கும் பள்ளி என்பதால் என்
மேல் எத்தனை கட்டுப்பாடுகள், எதிர்பார்ப்புகள் இருந்தன என்பதை நினைத்தால் மலைப்பாக
இருந்தது.
கட்டிடத்தின்
இடதுபுறம் ஒரு சிறு மண்டபம் போல இருந்தது கிருஷ்ணன் கோவிலுக்கு அப்படி ஒரு இடம்
இருக்கிறது என்று நினைக்கிறேன். கிருஷ்ண விக்கிரகம்
பள்ளியின் உள்ளேதான் இருக்கும்.ஒரு ட்ரம்மில்
எண்ணெய் ஊற்றி அதில் போட்டு வைத்திருப்பார்கள் .கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடக்கும்
போதுதான் அதனை வெளியே எடுப்பார்கள். அந்த விழாவைப்பற்றி அப்புறம் சொல்கிறேன். பள்ளியின் உள்ளே நான் வளர்த்த முருங்கை,
புங்கமரம் என்று ஒன்றும் இல்லை.
அதன் நேர்
எதிரே உள்ள சின்னப்ப நாடார் தெருவில் நுழைந்தேன். இடதுபுறம் இருந்த பாப்பான் கிணறு
தூர்ந்து போய் இருந்தது. வலதுபுறம் இங்கே
குப்பை போடக்கூடாது என்று எழுதப்பட்டிருந்த போர்டின் கீழே இருந்த பெரிய சாம்பல்
நிற குப்பை மேடு அங்கில்லை. தெரு முழுதும் சிமிண்ட் போடப்பட்டிருந்தது
மகிழ்ச்சியாக இருந்தது. சந்தானம் ஹெட்மாஸ்டர் இருந்த வீடு , டாக்டர் பரமசிவம்
கிளினிக், நாங்கள் முதலில் குடியிருந்த வத்தலக்குண்டு ராவுத்தர் வீடு இதிலெல்லாம்
யார் இருக்காங்க என்று தெரியவில்லை.
அதுக்கு நேர்
எதிரில் பவுனம்மா வீடு இருந்தது. அது
எனக்கு சொந்த வீடு போல, பவுனம்மா, அத்தா, நன்னா, நன்னி, சேட்டு மாமா, பஷீரா காளா,
அப்பாஸ் மாமா, அக்கீம் என் நண்பன் அப்துல்லா ஆகிய பலபேர் இருந்து வளர்ந்த வீடு அது.
உள்ளே
நுழைந்தேன், என்ன ஆச்சரியம் பவுனம்மா வெளியே வந்ததோடு என்னை அடையாளமும்
கண்டு கொண்டார். "சேகரு வாப்பா, அமெரிக்காவிலிருந்து எப்ப வந்த ?" என்றார்கள்.
தொடரும்>>>>>>>>
அழைக்கிறேன் :
அடியேன் பங்கு கொள்ளும் "கவிதை பாடு குயிலே" என்ற கவிதை அரங்கமும் இருக்கிறது .நண்பர்கள் அனைவரும்
வந்து கலந்து கொள்ளும்படி அழைக்கிறேன். வாருங்கள் சந்திப்போம்.
![]() |