Thursday, December 14, 2017

சைட் எ∴பக்ட்டும் மெயின் எ∴பக்ட்டும் !!!!!!!!!!

Image result for Doctor and patient

கடந்த வாரமொரு நாள் வேலை முடித்து வீடு திரும்பி, வழக்கம் போல் என்னுடைய தபால்களை எடுத்துப் பார்த்தேன். இப்போது என் வீட்டில் ஒரு ஆன்ட்டிக் மாடல் மெயில் பாக்ஸ் உள்ளது. போன கோடைகாலத்தில் தான் பொருத்தினேன். அதில் மேல் புறத்தில் வலது பக்கத்தில் ஒரு சிவப்பு நிற மெட்டல் கொடி ஒன்று இருக்கும். அந்தக் கொடியை பறப்பதுபோல் உயர்த்தி வைப்போம். தபால்காரர் அந்தப் பெட்டியில் தபாலைப் போட்டவுடன் உயர்த்தி இருந்த கொடியை கீழ்நோக்கி சாய்த்துவிடுவார். கொடி சாய்ந்திருந்தால் உள்ளே தபால் இருக்கிறதென்று அர்த்தம். நாம் தபாலை எடுத்தவுடன் கொடியை உயர்த்தி வைத்துவிட வேண்டும். இது பழங்கால சிஸ்டம் ஆனாலும் இப்போதும் உதவுகிறது. என்னுடைய வீட்டில் மூன்று குடித்தனக் காரர்கள் இருப்பதோடு எனக்கும் அனுதினம் ஏதாவது தபால் வருமென்பதால், இந்த தபால்களை பிரித்து வைப்பது என்னுடைய அனுதின வேலை.

My Mail Box

அந்தப்படியே பிரித்துப் பார்க்கும் போது அதில் ஒரு பழுப்பு நிற போஸ்ட் கார்டு இருந்தது. அதைப் பார்த்தவுடன் அது என்னவென்று தெரிந்துவிட்டது. ரிஜிஸ்டர்டு பார்சல் அல்லது கடிதம் அல்லது செர்ட்டி∴பைட் தபால் ஏதாவது வந்து அதை வாங்குவதற்கு வீட்டில் யாருமில்லை என்றால் இந்த ஸ்லிப்பை தபால்காரர் விட்டுச்செல்வார் . தகுந்த ஐடியுடன் நாம் அடுத்த நாள் அல்லது குறிப்பிட்ட சில நாள்களுக்குள் தபால் அலுவலகம் சென்று வாங்கிக் கொள்ள வேண்டும். யாரிடமிருந்து தபால் என்று ஸ்லிப்பில்  பார்த்தால் தெரியும். அது என்னுடைய டாக்டர் அலுவலகத்திலிருந்து வந்திருந்தது.
அடுத்த நாள் அலுவலகத்திற்கு சிறிது தாமதமாக வருவேன் என்று சொல்லிவிட்டு என்னுடைய VW ரூட்டான் மினிவேனை எடுத்துக் கொண்டு தபால் ஆபிஸ் சென்று வாங்கி வந்தேன். காரில் உட்கார்ந்து உடனே பிரித்துப் பார்த்தேன். ரத்தப்பரிசோதனையின் ரிசல்ட்டில் கோளாறு இருப்பதாகவும் உடனே டாக்டரை வந்து சந்திக்கும் படியும் எழுதியிருந்தது. என்னடாது பரதேசிக்கு வந்த சோதனை என்று சிறிது கவலையாக இருந்தது.
போன் செய்தால் ரீக்கால் கடிதம் என்பதால் அடுத்த நாள் காலையே வரச் சொன்னார்கள். இல்லாவிட்டால் என்னுடைய டாக்டரிடம் அப்பாய்ன்ட் மென்ட் கிடைக்க குறைந்த பட்சம் ஒரு மாதமாவது வெயிட் பண்ண வேண்டும்.
Image result for Jamaica Medisys

இன்சுயூரன்ஸ், டிஸ்கிளைமர் போன்ற சம்பிரதாயங்களை முடித்துக் காத்திருந்தேன். முதலில் நர்ஸ் கூப்பிட்டு எடை, BP, டெம்பரேச்சர் ஆகியவற்றைப் பார்த்துவிட்டு ஒரு ரூமில் உட்கார வைத்தார். அதுபோல பல எக்ஸாமினேஷன் ரூம் இருக்கும். டாக்டருக்கென்று ஒரு ரூம் கிடையாது. பல எக்ஸாம் ரூமில் காத்திருக்கும் நோயாளிகளிடம் ஒவ்வொருவராக முடித்துவிட்டு வருவார். எல்லா ரூமிலும் இருக்கும் கம்ப்யூட்டரில் லாகின் பண்ணி அவர்களால் நம்முடைய வரலாற்றை அலச முடியும். டாக்டரின் பெயர் பியாலி ரெய்சென் எனக்கு 15வருடமாக இவர்தான் டாக்டர் கல்கத்தாவைச் சேர்ந்தவர். பெங்காலி என்பதால் எனக்குப் பங்காளி.
 பல கிளையன்ட்ஸ் காத்திருந்தாலும், ஒவ்வொரு வரையும் சிரித்த முகத்தோடு பொறுமையாகப் பார்ப்பார். அதனாலேயே அவரைத் தேடிவருபவர் அநேகம். ஏராளமான கிளையன்ட்ஸ் இருப்பதால் இப்போது புதிதாக அவர் யாரையும் சேர்த்துக் கொள்வதில்லை. ஜமைக்கா ஹாஸ்பிட்டல் என்ற பெரிய   மருத்துவமனையின் ஒரு அங்கம் இது, ஜமைக்கா மெடிசிஸ் என்று சொல்வார்கள். அவர்கள் ரெபர் பண்ணுகிற டாக்டர்களும் அதே குழுமத்தில் இருப்பதால் எல்லா ரிசல்ட்களும் பகிரப்பட்டு நம்முடைய அக்கவுன்ட்டில் இருக்கும். அதனை நாம் போகும் மற்ற ஸ்பெஷலிஸ்ட்டுகளும் பார்க்க முடியும். டாக்டர் உள்ளே நுழைந்தார். எனக்கு திக் திக் கென்று பல்சு எகிறியது.

“ஹாய் ஆல்∴பி”
“குட்மார்னிங் டாக்டர்”.
“குட்மார்னிங் ஹவ் ஆர் யூ ?”
“அத நீங்கதான் சொல்லனும், லெட்டர் போட்டிருந்தீங்க?” 
“அதவிடு ஜெர்மனி எப்படி இருந்துச்சு?”
“ஜெர்மனி சூப்பரா இருந்துச்சு டாக்டர், அந்த லெட்டர்?”
“ஜெர்மனியில் எங்கெல்லாம் போனாய்?”
“போறவழியில் போர்ச்சுக்கலில் லிஸ்பன் அப்புறம் ஜெர்மனியில் பெர்லின், லைப்சிக், வார்ட் பர்க், விட்டன்பர்க், எர்∴பர்ட், டிரஸ்டன் போன்ற இடங்களுக்குப் போனேன்”.
“ஓ நான் போனது ∴பிராங்∴பர்ட் மற்றும் மியூனிக் பகுதி, ஆல்ப்ஸ் மலையை அங்கிருந்தும் பார்க்க முடியும்”.
“வெரிகுட் டாக்டர், உங்கள் லெட்டர் கிடைத்தது”.
“ஜெர்மனியில் கிளைமேட் எப்படி?”
“கொஞ்சம் குளிர்தான் டாக்டர், அவசரமா வரச் சொல்லிருந்தீர்கள்”
ஆல்∴பி சொல்ல மறந்துட்டேன், நீ கொடுத்த மதுரை சுங்கிடி சேலையை போனவாரம் ஒரு பார்ட்டிக்கு கட்டினேன். எல்லாரும் என்னை வந்து சூழ்ந்திட்டாங்க”.
“சந்தோஷம் டாக்டர், என்ன பிரச்சனை டாக்டர் எனக்கு?”
“ஓ நீ கொடுத்த ஜேட் மாலையையும் போட்டிருந்தேன். அந்தச் சேலையின் பச்சைக் கலருக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது”.
“டாக்டர் என் ஹெல்த்தைப் பத்திப் பேசலாமா?”
“ம் சொல்லு, ஆமா இப்ப என்ன புத்தகம் படிக்கிற?”  
“டாக்டர் முதல்ல இதப்பாருங்க” (லெட்டரைக் காட்டினேன்)
“ஓ இதுவா இது ஒரு புதிய ∴பார்மாலிட்டி ரத்தப் பரிசோதனை முடிஞ்சதும் போடுவாங்க, தேதியைப் பாரு அக்டோபர் 5 ஆம் தேதி. இப்ப டிசம்பர் ஆயிருச்சே”
“அப்ப ஒண்ணும் பிரச்சனை இல்லையா? “
“வழக்கம் போல கொஞ்சம் சுகர்தான் அதிகமாயிருக்கு”
“அதான் தெரியுமே டாக்டர், சுகர் கூடிப்போய் ∴பிகர் டிஸ்∴பிகர் ஆகி அது ஏன்னு கான் ∴பிகர் பண்ணிட்டு இருக்கேன்.
வாய்விட்டு சிரித்தார். இது மாதிரி நானும் வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்னு சொல்றாங்க. எங்க சிரிக்க முடியுது. இப்ப சினிமால கூட வர ஜோக்குக் கெல்லாம் சிரிப்பா வருது எரிச்சல்தான் வருது.
“சரி சரி மாத்திரை டோசை கொஞ்சம் கூட்ட வேண்டியதுதான்”
“டாக்டர் மறுபடியுமா? இப்பவே சாப்பிடும்போது கூட்டு பொரியல் மாதிரி ஏராளமான மாத்திரைகளை முழுங்கறேன்”.
“அதுக்கு என்ன செய்யறது?”
“அது சரி டாக்டர் இங்கிலீஸ் மருந்துக்கு சைட்  எ∴பக்ட் நிறைய இருக்கும்னு சொல்றாங்களே ?”    
“என்ன செய்யறது சைட்  எ∴பக்ட் இருக்கும்தான், ஆனால் அதப் பாத்தா மெயின் எ∴பக்ட் வந்துருமே”.
“மெயின் எ∴பக்ட்டா அது என்ன டாக்டர்?”
“வேற என்ன ஹார்ட் அட்டாக்தான்”
வாயை மூடிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.
முற்றும்
 


8 comments:

  1. மதுரை சுங்கிடி சேலைக்கு அம்புட்டு மவுசா?

    ReplyDelete
    Replies
    1. தருமி போன்ற அறிவு ஜீவிகள் வாழும் மதுரை என்றாலே மவுசுக்கு குறைவில்லை .பிரபாவின் மனைவிதான் என்னோடு வந்து சுங்குடி சேலை வாங்கித்தந்தார் .

      Delete
  2. இந்த தபால் பெட்டியை பற்றி நானும் ஒரு பதிவு எழுதி இருந்தேன். சுவாரஸ்யமான நடை, வழக்கம் போல். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா தம்பி விசு , பகிர்ந்து கொள்ளுங்களேன் , வருகைக்கு நன்றி.

      Delete
  3. டாக்டருக்கு சுங்கடி சேலை வாங்கி கொடுத்த ஆல்ஃபி கொரியன் பெண்ணுக்கு என்ன வாங்கி கொடுத்திருப்பாரு....???

    ReplyDelete
    Replies
    1. இதில என்ன சீக்ரட் , அந்த சீனப்பெண்ணுக்கு என்ன வாங்கிக்கொடுத்தேனோ அதேதான் .

      Delete
  4. டாக்டர் அனுபவம் சுவாரஸ்யம். உடல்நிலையைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம் , உடல் நிலை எப்படி இருந்தாலும் என் மன நிலையை இளமையாகவே வைத்துக்கொண்டிருக்கிறேன்

      Delete