இலங்கையில்
பரதேசி -19
Pathiripuwa : Dalada Maligawa |
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/07/blog-post_17.html
பல்லுப்போனா
சொல்லு போகும்னு ஒரு சொலவடை இருக்கு. இங்க இலங்கையில பல்லு போனா பதவி போச்சுங்கிற
நிலைமைதான் அப்ப இருந்திருக்கு.
அனுநாதபுர மன்னர்கள்
செய்தது போலவே, பொலனருவா ராஜ்யமும், டாம்படேனிய ராஜ்யமும் பல்லைக் கைப்பற்றி தங்கள்
அருகில் கோவில் கட்டி வைத்துக் கொண்டனர். கம்போலா ராஜ்ஜியம் வலுவடைந்தபோது அவர்கள்
புனிதப்பல்லைக் கைப்பற்றி "நியம் கம்பயா விஹாரா" என்ற கோவிலில் வைத்தனர்.
அதன்பின் அது கோட்டே ராஜ்ஜியத்தின் ஸ்ரீ ஜெயவர்தனபுற கோட்டை என்ற ஊரில் அமைக்கப்பட்ட
கோவிலில் சில காலம் இருந்ததை அக்காலத்திய செய்யுள்களான ஹம்சா, கிரா மற்றும் செலாலிகினி
ஆகியவற்றுள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
கோட்டே ராஜ்யத்தை
ஆண்ட தர்மபாலா காலத்தில் பாதுகாப்புக்கருதி ரத்தினபுரியில் உள்ள 'டெல்கமுவா விஹாரையில்
ஒரு அரவைக்கல்லின் உள்ளே பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாம். அது பின் ஹிரிபிட்டியே தியாவடனா
ராலா மற்றும் தேவநாகலா ரத்னாலங்காரா தேரா ஆகிய புத்த துறவிகளால் பத்திரமாய் கண்டிக்கு
கொண்டு வரப்பட்டது. கண்டியின் அப்போதைய அரசன் முதலாவது விமலதர்மசூரியா ஒரு இரண்டு அடுக்குக் கோவில் கட்டி
அதில் புனிதப்பல்லை பிரதிஷ்டை செய்தான். ஆனால்
1603ல் படையெடுத்து வந்த போர்த்துக்கீசியர் தேவையில்லாமல் அதனைக் கைப்பற்றி தும்பராவில்
உள்ள மேட மகானுவாராவுக்கு எடுத்துச் சென்றனர். அது பின்னர் ஆட்சிக்கு வந்த இரண்டாம்
ராஜசின்ஹாவின் காலத்தில் மறுபடியும் கைப்பற்றப்பட்டு புதுப்பிக்கப்பட்ட கோவிலில் வைக்கப்பட்டது.
அதன்பின் தொடர்ந்து ஆண்ட மன்னர்கள் கோவிலை விரிவுபடுத்திக் கட்டினர்.
உள்ளே கோவில்
வளாகம் மரங்கள் சூழ்ந்து ஒரு மாபெரும் சோலைபோல் காட்சியளித்தது. அதில் நிறைய சன்னிதிகள்
இருந்தன. அதில் ஒரு இடத்தில் 'பத்தினி சன்னிதி' ஒன்றிருந்தது உள்ளே நுழைந்தேன். கண்ணகிக்
கோவில்தான் அது என்று நினைத்தேன். அநேகமாக மதுரை நாயக்க மன்னர்களால் ஏற்படுத்தப் பட்டிருக்குமென
நினைக்கிறேன்.
Thank you Trip Adviser |
அதன் பின் முக்கிய
தலமான புனிதப் பற்கோவிலுக்குள் நுழைந்தேன். அங்கேயே கோவில் சார்பில் வழிகாட்டிகள் இருந்தனர்.
உள்ளே போய் கட்டணம் கட்ட, ஒரு தமிழ் பேசும் கைடு ஒருவர் என் கூட வந்து ஒவ்வொன்றையும்
விளக்கிச் சொன்னார். முக்கியமாக எண் கோண வடிவ (Octagonal) பில்டிங் ஒன்றைப்பார்த்தோம். மிக அழகிய அந்தக் கட்டிடத்தை
வடிவமைத்தவர் கண்டியின் மிகப் பிரபலமான ஆர்க்கிடெக்டான தேவேந்திர முலாசரின் என்பவர்.
அதன் பெயர் பத்திரிப்புவா. இது கட்டப்பட்டது ஸ்ரீ விக்ரம ராஜசின்ஹாவின் ஆட்சியின் போது
. முதலில் ராஜாக்களின் பொழுதுபோக்கு மண்டபமாக இருந்ததை புனிதப்பல் வைக்க விட்டுக் கொடுத்தனர்.
ஆனால் தற்போது இது நூலகமாக செயல்படுகிறது. கோவில் கிட்டத்தட்ட நம்நாட்டு இந்துக் கோவில்களின்
வடிவமைப்பில் கற்தூண்கள் அமைக்கப்பட்ட மண்டபங்களுடன் காணப்பட்டது.
ஒருபுறம் இருந்த
ஏரியின் அலைகள் சுவர்களை மோதிக் கொண்டு இருந்தன. அந்த ஏரியின் பெயர் போகம்பரா ஏரி.
அந்த சுவரில் சிறுசிறு ஓட்டைகள் இருந்தன. அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றப்பட்ட விளக்குகளை
இரவில் ஏற்றுவார்களாம். பெரிய முக்கிய நுழைவு வாயிலின் பெயர் "மஹா வஹல்கடா"
என்பது. மேலே இறங்கும் வழியில் பெரிய ரத்தினக் கற்களில் ஒன்றான மூன்ஸ்டோன் இருந்தது.
அதன் இரண்டு புறமும் இரண்டு கல்யானைகளின் சிற்பங்கள் இருந்தன. அதற்கு மேலே இருந்த மகரதோரண
வாயிலை இரண்டு கிங்கரர்கள் சிலைகள் பாதுகாப்பது போல் வடிவமைக்கப்பட்டிருந்தன.
முக்கிய கற்பக்கிரகம் போன்ற அமைப்பு இரண்டு மாடிகளாக அமைக்கப்பட்டிருக்கிறது.
மேலே இருந்த 2ஆவது மாடியின் கதவுகள் தந்தத்தால் கடையப்பட்டிருந்தன. அதற்கு உள்ளே புனிதப்பல்
பூட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. பார்ப்பதற்கு அனுமதியில்லை. கதவுக்குத்தான் பூஜை
போலும் ஏதாவது திருவிழா சமயங்களில்தான் வெளியே எடுப்பார்கள்.
அதற்கு மேலே ஒரு
விதானம் போன்ற அமைப்பு பளபளத்தது. "தங்கம் போலத் தெரிகிறதே" என்று கேட்டபோது தங்கமேதான். தங்கத் தகடுகளால் அமைக்கப்
பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல். அந்த அறை முழுவதும் தங்கத்தகடுகளால் மூடப்பட்டு இருந்தன.
உள்ளே புத்தரின் புனிதப் பல் ஏழு அடுக்குகளைக் கொண்ட தங்கப் பெட்டிகளின் உள்ளே வைக்கப்பட்டிருக்கிறதாம்.
ஒன்றின் ஒன்றாக அமைக்கப்பட்ட அந்தப் பெட்டிகள் ஸ்தூப வடிவில் அமைக்கப்பட்டிருந்தன.
அது தவிர வெளியே உற்சவத்திற்கு எடுத்துச் செல்ல ஒரு தனி தங்கப் பெட்டியும் உள்ளே இருக்கிறதாம்.
குறிப்பிட்ட சமயங்களில் மட்டும் கதவைத் திறந்து பூஜைகள் நடக்கும். அப்படியே திறந்தாலும்
உள்ளேயுள்ள பெட்டிகளை மட்டும்தான் பார்க்க முடியும்.
ஒரு இடத்தின்
மேலே ஏறி தங்க விதானத்தை அருகில் பார்த்தேன்.
நம் ஊரில் கல்யாணத்திற்கு பந்தல்போட்டு மேலே வெள்ளைத்துணி கட்டி பூவேலைப்பாடு செய்திருப்பார்கள்
அல்லவா அது போலவே இருந்தது. கட்டம் கட்டமாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு கட்டத்தின் உள்ளும்
தங்கத்தில் பூ வேலைப்பாடுகள் செய்திருந்தார்கள். அந்த விதானம் மேற்புறக் கூரையிலிருந்து
தொங்கிக் கொண்டு இருந்தது.
ஒரு நாளைக்கு
மூன்று முறை பூஜைகள் நடக்குமாம். மல்வெத்தே மற்றும் அசுகிரியா என்ற இரண்டு பகுதிகளைச்
சேர்ந்த புத்த பிக்குகள் இதனைச் செய்கிறார்கள். விடியும் வேளையிலும் மதிய நேரத்திலும்
மாலை நேரத்திலும் ஆக மூன்று முறை இந்த சம்பிரதாய வழிபாடு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு
புதன் கிழமையும் வாசனை மிகுந்த மலர்களான நன்னுமுரா
மங்கல்லயா என்ற பூக்களை பண்ணிரீல் போட்டு பல மூலிகைகளுடன் தயாரிக்கப்பட்ட நீரில் புனிதப்பலுக்கு
அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த நீர் புனிதப்பல்லில்
பட்டதால் புனித நிராக மாறுவதோடு பலவித நோய்களையும் சரிப்படுத்தும் ஹீலிங் நீர்
என நம்பப்படுகிறது. அபிஷேகம் முடிந்ததும் அந்த நீரை அப்போது அங்குள்ளவர்களுக்கு பகிர்ந்து
தீர்த்தமாகக் கொடுப்பார்களாம்.
சிறிய பாதைகளில்
ஏராளமான ஜனங்கள் முண்டியடித்துக் கொண்டு அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தார்கள். அப்போதுதான்
தமிழ் வழிகாட்டி சொன்னார், “அந்தக் கோவில் இரண்டு முறை தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டதாக”.
யார் அப்படிச் செய்தது என்றால் விடுதலைப்புலிகள் என்று சொன்னதும் எனக்கு பகீரென்றது.
- தொடரும்.
அந்த புத்த பகவானின் சிலை கண்ணாடியினால் ஆனதா? புத்தர் சிலைதானே? கால்கள் டிரான்ஸ்பாரண்டாக தெரிகிறதே..
ReplyDeleteDear Shriram, No thats just the reflection in the glass.The shadow that you see there is me.
Delete