இலங்கையில்
பரதேசி -18
At the Kandy Entrance |
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/07/blog-post_11.html
எங்களுடைய கார் மெதுவாக
மலைப்பகுதிகளில் ஏறி முன்னேறியது. முனை
சந்திப்பில் ஒரு மாபெரும் புத்தர் சிலை இருந்தது.
"என்ன இது எதுவும் முக்கிய இடமா அம்ரி
?"
“இல்லை சார் இங்கெல்லாம் நிறைய
இடங்களில் புத்தர் சிலை இருக்கும்”.
ஊருக்கு வெளியே இருப்பதால்
எல்லைக்காவல் புத்தராக இருக்குமா என்று நினைத்தேன் ( ?). உருவ வழிபாடு இல்லாமல்
முக்திக்கு வேறு ஒரு வழியைச் சொன்ன புத்தரையே சிலையாக வடித்துக் கும்பிடுகிறார்களே
என்று நினைத்தபடியே கடந்தேன். புத்தர் தங்க நிற வண்ணத்தில் பளபளவென்று இருந்தார்.
இந்து மதத்தில் கூட ஆதி வேதங்களில் இல்லாத உருவ வழிபாடு இடையில் செருகப்பட்டது.
இஸ்லாம் சமயத்தில் தர்காக்கள் அமைத்து இறந்தவர்களை வழிபட ஆரம்பித்தார்கள். ஏன்
உருவ வழிபாட்டை முற்றிலும் எதிர்க்கும் பத்துக் கட்டளைகளைக் (Ten
Commandments) கொண்ட கிறித்துவ மதத்திலும் தும்பைவிட்டு
வாலைப்பிடித்த கதையாக அன்னை மேரியை கடவுளாக்கியதோடு இயேசுவின் சீடர்களையும்
சிலையமைத்து வணங்க ஆரம்பித்ததை என்னவென்று சொல்வது?
மனிதமனம் பல சமயங்களில் தனக்கேற்ப
மதம் உட்பட பல காரியங்களைத் தானே உருவாக்கி வந்ததோடு அதில் மற்றவர்களை இழிவாகப்
பார்ப்பது எவ்வளவு வேடிக்கை. அதுதவிர
மதங்களுக்குள் துவேஷத்தை ஏற்படுத்தி ஒருவருக்கொருவர் சண்டை ஏற்படுத்துவதோடு ஒரே
மதத்திற்குள் பிரிவினைகளை ஏற்படுத்தி அதனால் எவ்வளவு பேர் செத்து மடிகிறார்கள் என
நினைத்தால் வேதனையாகத்தான் இருக்கிறது.
உதாரணமாக வரலாற்றில் ஏற்பட்ட சைவம்
வைஷ்ணவம் பிரிவினை. இது அநேகமாக முடிந்துவிட்டது எனலாம். ஒரே கோவிலில்
இப்போதெல்லாம் இரண்டும் காணப்படுகிறது.
கிறிஸ்தவத்தில் கத்தோலிக்கருக்கும் பிராட்டஸ்டண்டுகளுக்கும் ஏற்பட்ட பிரிவினையில்
எவ்வளவுபேர் கொல்லப்பட்டார்கள் என்று தோண்டிப்பார்த்தால் தலையே சுற்றுகிறது.
இப்போது இது நின்றுவிட்டது என்று சொல்லாம். ஆனால் இஸ்லாம் சமயத்தில்
சுன்னி மற்றும் ஷியா முஸ்லிம்களுக்கு இடையில் குரோதமும் ஒருவரையொருவர் கொல்லுவதும்
இன்று வரை தொடர்கிறது.. இதற்கிடையில் இனம் மொழி, நிறம்,
என்று வேறு பிரிவினைகள். மதங்கள் , பிரிவினையை ஒழிப்பதைவிட்டு
மேலும் பிளவுபடுத்தினால் அதனால் மனுக்குலத்திற்கு தீமையே தவிர நன்மையில்லை. கடவுள்
நிச்சயம் அதனை விரும்பமாட்டார். இப்படிச் செய்வதால் சொர்க்கம் கிடைக்கும் என்று
எண்ணினால் அவர்கள் நிச்சயமாய் ஏமாந்து போவார்கள். இவர்களை மூளைச் சலவை செய்து
கொடுமைகளை அரங்கேற்றுபவர்களுக்கு இன்னும் கொடிய நரகம் காத்திருக்கும் என்பதில்
சந்தேகமில்லை.
கார் நகர்ந்து குறுகலான ஆனால்
நெருக்கமாக கடைகளைக் கொண்ட தெருக்களில் நுழைந்து சுற்றிச் சுற்றி வந்தது.
"அம்ரி பக்கத்தில் இறக்கிவிட்டுவிட்டு நீ போய் எங்கேயாவது பார்க்கிங் செய்து
கொள். நான் உள்ளே போய் விட்டு வருகிறேன்," என்றேன். தலையாட்டி அம்ரி என்னை இறக்கிவிட்டுச் சென்றான்.
Temple Entrance |
'தலதா மாளிகவா ' அல்லது “தலதா மாளிகை” என்ற அந்தக்கோவில் என் முன்னால் கம்பீரமாகத் தெரிந்தது.
காவலர்கள் வாயிலில் நின்றிருந்தாலும் அவ்வளவாய் செக் செய்யாமல் என்னை உள்ளே விட்டார்கள்.
"அப்பாவிப் பரதேசி” என்று நெற்றியில் எழுதியிருப்பதை அவர்களும்
படித்து விட்டார்கள் போலத்தெரிகிறது. நானும் என் முகத்தை முடிந்த அளவுக்கு பாவமாய்
வைத்துக் கொண்டேன். இந்த பாவம் எனக்கு இயற்கையாகவே அமைந்திருக்கிறது என
நினைக்கிறேன்.
‘தலதா என்றால் 'பல்' அல்லது தந்தம் என்று அர்த்தம். ரெலிக் என்று
சொல்லுகிறார்கள் .யாரோடுடைய பல் என்றால் நம்ம
கெளதம புத்தரின் பல்தானாம் அது. அதற்கு என்ன ஆதாரம் என்றால் நம்பிக்கைக்கு ஆதாரம்
தேவையில்லை என்கிறார்கள். நான் யோசித்துப் பார்த்தேன். புத்தரை முழுதாகப்
புதைக்கவில்லை போலிருக்கிறது. அல்லது எரித்திருந்தால் அவற்றில் மிஞ்சிய
எலும்புகளையும் மண்டை ஓட்டில் உள்ள பற்களையும் தட்டி எடுத்து அவனவன் வெவ்வேறு
நாடுகளுக்கு சூவனிர் போல எடுத்துச் சென்றிருக்கிறார்கள் என
நினைத்தால் ஆச்சரியமாக இருந்தது. இந்த நம்பிக்கை என்னவெல்லாம் விநோத காரியங்களைச்
செய்கிறது பாருங்கள். கத்தோலிக்க மதத்தில் கூட இந்த மூட நம்பிக்கைகள் இருக்கின்றன.
இயேசுவின் சீடர்களின் எலும்பை பத்திரப்படுத்தி சில ஆலயங்களில் வைத்து வணங்குவதும்
அதற்கு சக்தி இருக்கிறது என்று நம்புவதும் சுத்தப்பைத்தியக்காரத்தனமாக
இருக்கின்றன.
ஆனால் உள்ளே அந்த வளாகத்தில்
பலகோவில்கள் இருந்தன. அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்பதற்கு முன்னாள் இந்த தலதா மாளிகை
உருவான வரலாற்றைச் சுற்றிப்பார்ப்போம்.
இந்தக்கோவில் 'வேர்ல்ட் ஹெரிட்டேஜ் சைட்' என்ற அங்கீகாரம்
பெற்றிருக்கிறது. புத்தரின் பல்
இலங்கைக்கு வந்த காலத்திலிருந்து அதனைச் சுற்றியிருந்த அரசியலும், அதிகாரமும் சூழ்ச்சிகளும் சொல்லி மாள முடியாதவை. ஏனென்றால் இந்தப் பல்
யார் கையில் இருந்ததோ அவர்கள் கையில்தான் ஆட்சி அதிகாரம் இருந்தது.
இளவரசி ஹேமமாலி( கொண்டையை கவனியுங்கள் ) |
கெளதம புத்தர் 'பரிநிர்வாண' நிலை அடைந்தபின் கலிங்க நாட்டில்
அவருடைய பல் பத்திரப் படுத்தப்பட்டது. அப்போதிருந்த கலிங்க மன்னன் குகசிவா என்பவனின்
ஆணைப்படி அவனுடைய மகள் இளவரசி ஹேமமாலி தன் கணவன் இளவரசன் தந்தாவுடன்(பெயர் பொருத்தத்தை கவனித்தீர்களா?)புத்தரின்
பல்லுடன் இலங்கைப் பட்டினத்திற்கு வந்தார்கள். அதன் காலம் கி.பி.301 முதல் 328 வரை.
அனுராதபுரத்தை ஆண்ட மன்னன் ஸ்ரீமேக வண்ணனின் அரசாட்சி இருந்த காலம். இளவரசி
ஹேமமாலி பாதுகாப்புக் காரணங்கள் கருதி தன் கொண்டையில் இந்தப் பல்லை மறைத்துக் (?)
கொண்டு வந்தாளாம். ஆனால் கொண்டையில் மறைத்து வைத்தாலும் இந்தப்
பல்லின் ஒளி வெளியே தெரிந்ததாம். ஸ்ரீமேக வண்ணன் மிகுந்த மரியாதையுடன் அதனைப்
பெற்றுக் கொண்டு 'மேககிரி விஹாரம்' என்ற
ஆலயத்தில் அதற்கு தனிக்கோவில் அமைத்தானாம். இப்பொழுது அந்த இடம் இசுறுமுனியா என்றழைக்கப்படுகிறது.
அந்தப்பல்லின் பாதுகாப்பு அந்த அரசனிடம் இருந்தது. காலப்போக்கில் யாருடைய
பாதுகாப்பில், அரவணைப்பில் அந்தப்பல் இருக்கிறதோ அவர்களே ஆளுவதற்கு உரிமை
பெற்றவர்கள் என்ற நிலைமையும் உருவானது. எனவே அப்போதிருந்த அனுராதபுர மன்னர்கள்
அந்தப் பற்கோவிலை தங்களுடைய அரண்மனைக்கு அருகிலேயே அமைத்தனர். அதனால் ராஜ்யங்களும்
அதிகாரங்களும் மாற மாற அந்தந்த ராஜாக்களின்
பொக்கிஷமாக இது மாறி மாறி இருந்தது. இதைக் கைப்பற்ற பெரும் போர்களும் நடந்தன.
-தொடரும்
சுவாரஸ்யமான கதை.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம்.
Deleteமூடநம்பிக்கை எங்கும்...
ReplyDeleteஉண்மைதான் திண்டுக்கல் தனபாலன்.
Deleteநிறைய தகவல்கள். படத்தில் பல்ஒளி பட்டொளிவீசுகிறதே! :)
ReplyDeleteபல் ஒளி பட்டொளி வீசியது சரி கவிஞரே , எதிலே பட்டு ஒளிவீசியது என்றுதான் தெரியலை .ஒரு வேளை இளவரசியின் பல்தான் அப்படி ஒளிவீசியதைப்பார்த்து மாத்தி சொல்லிட்டாய்ங்களோ ?
Delete