Monday, May 22, 2017

பரதேசி வாங்கின நவரத்தின மோதிரம் !!!!!!

இலங்கையில் பரதேசி-13


இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/05/blog-post_8.html

கடைக்காரர் சொன்ன விடயங்களோடு நான் கூகுள் செய்து தெரிந்து கொண்டவற்றையும் இணைத்து கீழே கொடுக்கிறேன்.
இந்த நவரத்தினங்கள் எப்போதிலிருந்து வந்தது என்று யாரும் சொல்லமுடியவில்லையாம். ஆனால் 'நவரத்தினா' என்ற சமஸ்கிருத வார்த்தை, இந்தி, கன்னடா, பர்மா, இந்தோனேசியா, நேப்பாலி ஆகிய மொழிகளில் அப்படியே பயன்படுத்தப்படுகிறது. தமிழிலும் மலையாளத்திலும் நவரத்தினம் என்றும் தெலுங்கில் நவரத்னலு என்றும் அழைக்கப்படுகிறது. அதுதான் நமக்குத் தெரியுமே தமிழின் இறுதியில் ஒரு 'லு' சேர்த்தால் அது தெலுங்கு. அதோடு பல நாடுகளில் மன்னர்களும் ராஜ குடும்பத்தினரும் இதனைப் பயன்படுத்தியுள்ளனர். இதில் இந்தியா, நேபாள், இலங்கை, சிங்கப்பூர், மியான்மர் அல்லது பர்மா, கம்போடியா, வியட்னாம், இந்தோனேசியா, தாய்லாந்து  மற்றும் மலேசியா நாடுகளில் மத, கலாச்சார வித்தியாசங்களை மீறி பலகாலமாக பயன்படுத்தி வருகின்றனர் என்பது ஆச்சரியமளிக்கிறது. இதிலே தாய்லாந்து நாட்டில் நவரத்தினம் என்பது தேசியச் சின்னமாக மட்டுமின்றி மன்னரின் ராஜ சின்னமாகவும் விளங்குகிறது. மன்னர் மக்களுக்கு அழிக்கும் உயர்ந்த விருதின் பெயர் "நொவரட் ரச்சாவரபோன்" (Noppharat Ratchawaraphon). அந்தப் பதக்கத்தில்  நவரத்தினங்கள் பதிக்கப்பட்டிருக்கும்.
“இந்து மத அல்லது இந்திய ஜோதிட நம்பிக்கையின்படி பூமியில் உள்ள ஜீவன்களை நவக்கிரகம் என்று சொல்லக்கூடிய ஒன்பது கிரகங்கள்  பாதிக்கின்றன. ஒரு மனிதனின் முழு வாழ்க்கையிலும் இவை தொடர்பு கொண்டிருக்கின்றன. எனவே இந்த ஒன்பது ரத்தினங்களை அணிவதின் மூலம் அவற்றிலிருந்து விலக்கும் பாதுகாப்பும் கிடைக்கிறது", என்றார் கடைக்காரர். “ஐயா அதிலெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் எனக்கு இறைவன் மேல் நம்பிக்கை உள்ளது. இறைவன் ஒருவன்தான் படைத்து, காத்து அழிப்பவன். இறைவனுக்கு மேலான அதிகாரம் ஒன்றுமில்லை. எனவே இறைவனை நம்பி வாழுபவர்கள் இந்த மாதிரி இடைப்பட்ட காரியங்களில் நம்பிக்கை வைக்காது, இறைவனை மட்டுமே சார்ந்து வாழவேண்டும்”, என்றேன். அவர் என்னை விநோதமாகப் பார்த்தார்.
"சரிசரி இவை ஒன்பதும் என்ன கற்கள் என்பதைச் சொல்லுங்கள்", மறுபடியும் விளக்க ஆரம்பித்தார்.
1)   மாணிக்கம் - (Ruby) என்பது சூரியனுக்கு (Sun)
2)   முத்து (Pearl) என்பது சந்திரனுக்கு (Moon)
3)   பவளம் (Red coral) என்பது செவ்வாய்க்கு (Mars)
4)   மரகதம் (Emerald) என்பது புதன் (Mercury)
5)   புஷ்பராகம் (Yellow Sapphire) என்பது வியாழன் (Jupiter)
6)   வைரம் (Diamond) என்பது வெள்ளி (Venus)
7)   நீலம் (Blue Sapphire) என்பது சனிக்கு (Saturn)
8)   கோமேதகம் (Hessonite) என்பது ராகுவுக்கு
9)   வைடூரியம் (Cat's Eye) என்பது கேதுவுக்கு.
Image result for Nopparat Ratchawaraphon)
Add caption
"ஆனால் இவைகளை அணியும் போது இவையெல்லாம் குறையில்லாத நல்ல தரமான கற்களாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் துரதிர்ஷ்டத்தை கொண்டு வந்துவிடும்" என்றும் சொல்லி பயமுறுத்தினார். நானும் கேட்டுக் கொண்டேன்.
“அது சரி இந்த பாம்பு கக்கும் ரத்தினம் எது ?”
“அது சும்மா கதை ,பாம்பு விஷம்தான் கக்கும்” .
“அய்யய்யோ ஆளை விடுங்க சாமி”
"அதோடு விவரம் தெரியாதவர்களிடம் வாங்கிவிடக் கூடாது"
“ஏன்?”
Image result for navaratna ring

"ஒன்பது கற்களுக்கு ஒரு அமைப்பு இருக்கிறது. மாணிக்கம் சூரியனைக் குறிப்பதால் அது நடுவில் இருக்க வேண்டும். அதனைச் சுற்றிலும் கடிகாரச்சுற்றுவாக்கில் (clockwise)வைரம், முத்து, பவளம் , கோமேதகம், நீலம், வைடூரியம் புஷ்பராகம் மற்றும் மரகதம் என்று அமைய வேண்டும். நவக்கிரக எந்திரத்திலும் இதே அமைப்புதான் இருக்கிறது"
தாய்லாந்து அரசிகள் வழிவழியாக இப்படி ஒரு அமைப்புள்ள சங்கிலிகளைத்தான் அணிகிறார்களாம்.
இன்னும் பலவிஷயங்களைச் சொல்லத்துவங்கினார். நான் தான் நடுவில் தடுத்து நிறுத்தி ஆளைவிடச் சொன்னேன். ஒரு நவரத்தின மோதிரத்தையும் வாங்கிக் கொண்டேன்.
என்னவோ கண்ணை மூடிச் சொல்லிவிட்டு, கண்களில் ஒற்றிவிட்டு இரு கைகளாலும் கொடுத்தார். நானும் இரு கைகளை நீட்டி வாங்கிக் கொண்டு உடனே அணிந்து கொண்டேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
நான் ஏற்கனவே அதுமாதிரி மோதிரங்களை அணிந்திருந்த பலரைப் பார்த்திருக்கிறேன். அந்த மோதிரங்களில் உள்ள கற்கள் மிகவும் சிறியதாக இருக்கும். ஆனால் நான் வாங்கிய மோதிரத்தில் கற்கள் பெரியதாகவும், ஒளி நிறைந்ததாகவும் இருந்தது.

Thailand's flawless "Queen Sirikit Navaratna" Necklace.
முதன்முதலில் நான் ஏமாறாமல் வாங்கிய இந்த நவரத்தின மோதிரம் நன்றாகவே இருந்தது எனக்கு மகிழ்ச்சியளித்தது.
"சார் நல்லாப் பேரம் பேசி வாங்குறீங்களே", என்றான் அம்ரி.
நான் ஏமாந்த கதைகளைச் சொல்லி என்னை நானே குறைத்துக் கொள்ள விரும்பாமல் ஒரு புன்னகையை உதிரவிட்டுவிட்டு கீழிறங்கி நடந்தோம்.
ஆற்றங்கரையிலிருந்து மெயின் ரோட்டுக்கு வந்த சாலையில் இருபுறமும் சுவினியர் கடைகள் இருந்தன. அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தேன். திடீரென ஞாபகம் வர, "அம்ரி இங்கு யானைத் தந்தம் கிடைக்குமா?"
"சார் கிடைக்கும் ஆனால் கிடைக்காது"
“நீயும் அந்தப் படத்தைப் பாத்திட்டியா? சரி விளங்குறாப்ல சொல்லு”.
“சார் கள்ள மார்க்கெட்டில் கிடைக்கும். ஆனால் ஆனால் என்ன? நீங்கள் கள்ளத் தோணியில் தான் போக முடியும்”.
 “ஐயையோ ஏன்?”.
“தந்தம் ஒரு தடை செய்யப்பட்ட பொருள், ஏற்றுமதி செய்யமுடியாது, வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்ல முடியாது.
“அட இங்கேயுமா?”
 எத்தனை யானைகள் இங்கு இருக்கு ஆஹா. யானைகளும் இருக்கு தந்தமும் இருக்கு ஆனால் எடுத்துச் செல்ல முடியாது?
“சரி அம்ரி கிளம்பலாமா? அடுத்து எங்கே?”
“அடுத்து கண்டிதான்”


“அடுத்து கண்டி? அப்ப எடு வண்டி ?”
“போகிற வழியில் ஒரு அழகிய தோட்டம் இருக்கிறது”
“ தோட்டமா அதெல்லாம் வேண்டாம்”
“ இல்லைசார் இது கண்டி ராஜா அமைத்த ராயல் பொட்டானிக்கல் கார்டன்”
“ அப்படியா அப்ப அவசியம் போகலாம்”
கார் கிளம்பி வேகமெடுத்தது .
-தொடரும்.

11 comments:

  1. பயண விவரத்துடன் நவரத்தினங்கள்
    குறித்த பல அறியாத விஷயங்களையும்
    அறிந்து கொண்டோம்
    நல்வாழ்த்துக்களுடன்..

    ReplyDelete
  2. Replies
    1. நன்றி சென்னை பித்தன்.

      Delete
  3. Replies
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. நவரத்தினம் நன்மை அளிக்க வாழ்த்துகள். :)

    ReplyDelete
    Replies
    1. தீதும் நன்றும் பிறர் தர வாரா நண்பா.

      Delete