வைகோ எனக்கு மிகவும் பிடித்த தலைவர் என்று
இருந்து அதன்பின் பிடிக்காத தலைவர்களுள் ஒருவர் என்று ஆகி சில வருடங்கள் ஆகிறது.
பேச்சுத்திறமை, எழுத்துத்திறமை,
தலைமை ஆளுமை, தமிழ் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் நல்ல புலமை, தமிழ்நாடு மட்டுமல்லாது இந்திய நாடு ஏன் இலங்கை மலேசியா போன்ற உலகின் சில
பகுதிகளிலும் மதிக்கப்பட்ட தலைவர்.
கலைஞர் கருணாநிதி அவருக்கு பலமுறை MP பதவி கொடுத்து அழகு பார்த்தார். வைகோவுக்கும் கலைஞர் மேல் அதீத பாசம்
இருந்தது. ஆனால் ஸ்டாலினுக்கும் இவருக்கும் ஒத்துப்போகவில்லை .ஒரு கட்டத்தில் தன் மகன் ஸ்டாலினுக்கு
மேல் போய்விடுவாரோ என்பதால் சிறிதே ஓரம் கட்டப்பட்டு இறுதியில்
ஒதுக்கப்பட்ட வைகோ வெளியே சென்று வேறு கட்சி ஆரம்பிக்கும் நிலைக்குத்
தள்ளப்பட்டார். இலங்கை சென்று பிரபாகரைப்பார்த்தது என்ற காரணம் ஒரு சாக்குதான் .
![]() |
ஆனால் திமுகவில் இருந்த பலருக்கும் வைகோவின்
மேல் பற்று இருந்தாலும் கருணாநிதியை
விட்டுவிட்டு அவரை ஆதரிக்கும் அளவுக்கு இல்லை என்பதால் வைகோ வளர முடியவில்லை.
தேர்தல்களிலும் தனித்து நிற்குமளவுக்கு
பலமில்லை என்பதால் அதிமுக மட்டுமல்ல, வெட்கத்தை விட்டு
மனஸ்தாபத்தில் பிரிந்து வந்த திமுக கூடவும் மாறி மாறி கூட்டணி வைக்க வேண்டிய நிலை.
ஆனாலும் திமுகவை விட அதிமுகவில் அதிக
மூக்குடைப்புகள் நடந்தன. அதுவும் போன தேர்தலில் நடந்தது மிக அநியாயம். தோற்கும்
பக்கம் நின்று விஜய்காந்தைப் பிடித்துக் கொண்டு வீரவசனம் பேசி அசிங்கப்பட்டதோடு,
தான் ஜெயிப்பதல்ல திமுகவை தோற்கடிப்பதே என் இலட்சிய திட்டம் என்று
சொல்லி தரம் தாழ்ந்தார்.
![]() |
வைகோ செய்த தவறுகள்:
1.
என்னதான் மனஸ்தாபம்
இருந்தாலும் தன்னை வளர்த்த தலைவரை அனுசரிக்காமல் வெளியே வந்தது. இவருக்கு
இணையான ஒருவர் திமுகவில் இப்போது இல்லை .
2.
தமிழகப் பிரச்சனைகளை
அதிகமாக முன்னெடுக்காமல், நீண்ட நெடிய காலமாக
இலங்கைப் பிரச்னையையே பேசி தமிழக மக்களிடமிருந்து அந்நியப்பட்டது. வளர்த்து விட்ட
தலைவரான கருணாநிதியை பலசமயம் மிகவும் கீழத்தரமாக திட்டியது.
3.
கொள்கைப்
பிடிப்பின்றி மாறி மாறி கூட்டணிகள் அமைத்து ஏன் பிஜேபி கூடவும் கூட்டணி சேர்ந்தது.
4.
கூட்டணி சேர்ந்தும்
ஜெயிக்க முடியாமல் சட்டசபையில் பங்கெடுக்க முடியாமலே போனது.
5.
தனிப்பட்ட
செல்வாக்கால் ஒருமுறை கூட ஜெயிக்க முடியாதது.
6.
உணர்ச்சி வசப்பட்டு
எடுத்த கடைசி நேர முடிவுகளால் சுயமரியாதையை இழந்து போனது.
7.
தன் கூட இருந்த
இரண்டாம் கட்ட தலைவர்களை வளர்க்க முடியாமல் போனதால் இழந்து போனது.
8.
கடைசி நேர குளறு படிகளால் காசு வாங்கி
விட்டார் என்ற கெட்ட பெயரும் வந்தது
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
வைகோவின் தற்போதைய
நிலை:
1.
தான் கூட்டுச்
சேர்ந்த மக்கள் கூட்டணி இப்போது ஒன்றுமில்லாமல் போனது. குறிப்பாக விஜய் காந்தின்
கட்சி.
2.
தனித்து நிற்கும்
பலம் இப்போது மதிமுக, தேதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட்டு காட்சிகள்,
பாமகா, சீமான் என்று யாருக்கும் கிடையாது.
3.
ஜெயலலிதாவுக்குப்
பின்னைய அதிமுக என்பது அழியும் திராவிட முன்னேற்றக் கழகமாக ஆகிப்போனது.
4.
ஊழலில் ஊறிய,
குண்டர்கள் மற்றும் கோமாளிகள் கூட்டமான அதிமுகவுக்கு அவரால் இனி
ஆதரவு அளிக்க முடியாது.
5.
சசிகலா,
தினகரன், கும்பலிடமும் போகமுடியாது. கொள்கையை
விட்டு வெறும் பணத்திற்காக நாஞ்சில் சம்பத் அங்குதான் இருக்கிறார்.
6.
எந்த ஒரு நபருக்காக
திமுகவை விட்டு வெளியேறினாரோ அதே நபரான மு.க.ஸ்டாலினிடம் போக வேண்டிய நிலை.
7.
அவருக்குப்பின்
கட்சியை வழி நடத்தும் வலிமை யாரிடமுமில்லை.
வைகோ என்ன செய்ய
வேண்டும்?:
![]() |
1.
மு.க. ஸ்டாலினிடம்
முழுவதாக ஒப்புரவாகி, தன் கட்சியை
திரும்பவும் தாய்க் கட்சியான திமுகவுடன் இணைக்க வேண்டும். ஏனென்றால் அவருக்குப்
பின் இதுதான் நடக்கும் என்பதால் இப்போதே செய்ய வேண்டியது அவசியம். எம்ஜியாரே இதைச்
செய்ய நினைத்தபோது வைகோ ஏன் செய்யக்கூடாது? ஏனென்றால் அவருக்குப்பின் நிச்சயமாக
மதிமுக சுவடில்லாமல் அழிந்துவிடும்.
2.
முடிந்தால்
அன்பழகனுக்கு ஓய்வு கொடுத்து பொதுச் செயலாளர் பதவியைக் கோரிப் பெறலாம்.
3.
முதலமைச்சர் பதவி
ஸ்டாலினுக்குத்தான் என்றும் எக்காலத்திலும் அதற்கு முயற்சி பண்ண மாட்டேன் என்றும்
வாக்குக் கொடுத்துவிட வேண்டும். வீண் பிரச்சனைகளை இது தவிர்க்கும்.
4.
மீண்டும்
பாராளுமன்றம் புகலாம். இல்லையென்றால் ஏதாவது தமிழ்ப்பணி எடுத்துக் கொண்டு வாக்கு
அரசியலிலிருந்து முற்றிலுமாக ஒதுங்கிக் கொள்ளலாம்.
5.
திமுகவின் உள்கட்ட
பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பித்து அதற்கு துணை வேந்தர் ஆகலாம்.
6. உலகமெங்கும்
சுற்றி தமிழ்ப்பணி செய்யலாம், இதற்கு
அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டியது அவசியம். இல்லையென்றால் அவரது திறமைகளும்
உழைப்பும் யாருக்கும் பயன்படாமலே போய்விடும்.
![]() |
நன்பர்கள்
அனைவருக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்.இறைமகன் இயேசு உங்களுக்கு
மகிழ்ச்சியையும் நிறைவான மன அமைதியையும் தருவாராக.