Monday, October 31, 2016

சீனாவின் ஏமாற்று வேலை!!!!!!!

சீனாவில் பரதேசி -27

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2016/10/blog-post_25.html

zhengyanmen gate ( Courtesy Wikipedia)

சிறிது நேரம் கழித்து பாராக்குப் பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்த லீயைப் பின்னால் போய் முதுகில் தட்டினேன். அவன் திரும்பிப் பார்த்து 'ஓ வந்துட்டியா" என்றான்.
"எப்படி இருந்தது"?
"ஒரு 'ஃபியூனரல் ஹவுசில்' நடக்கும் 'வியூவிங்' போல இருந்தது. இதில் ரசிக்க ஒன்றுமில்லை. ஆனால் முதன்முதலாக இவ்வளவு ஆண்டுகள் பாதுகாக்கப்பட்டிருக்கும் உடலைப் பார்க்கிறேன்".
"வேறு எங்கும் பார்த்ததில்லையா"
"சில இடங்களில் இவ்வாறு வைக்கப்பட்டதை அறிந்திருக்கிறேன்.  குறிப்பாக எகிப்திய மம்மிகள்,ரஷ்யாவில் லெனினின் உடல், ஏன் எங்கள் இந்தியாவில் கோவாவில் புனித பிரான்சிஸ்-ன் உடலும் பாடம் செய்து வைக்கப்பட்டுள்ளது. ஒன்றையும் பார்க்கவில்லை. பார்க்க வேண்டும் என்று முன்பிருந்த ஆவலும் இப்போது மாவோவைப் பார்த்தவுடன் தணிந்துவிட்டது".
"ஆமாம் மாவோவின் உடல் எப்படி இருந்தது"?
" ஒரே மஞ்சள்  மயமாக அதீத மேக்கப் போட்டதுபோல இருந்தது". 
"அது மாவோவின் உடல் என்று நினைக்கிறாயா?”
"ஆமாம் பிறகு வேறென்ன"?
"அது வெறும் மெழுகுச் சிலைதான்".
"இல்லை, நான் அந்தச் சிலையைச் சொல்லவில்லை. இன்னொரு ரூமில் பூந்தொட்டியின் நடுவிலிருந்த மேடையில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் இருந்த உடலைச் சொல்கிறேன்".
"நானும் அதைத்தான் சொல்கிறேன்".
"என்ன? அது உண்மையான உடல் இல்லையா?”
"இல்லை அது வெறும் மெழுகு பொம்மை".
"உண்மையாகவா? என்ன ஒரு ஏமாற்று வேலை".
"அப்ப உடல் எங்கே? புதைக்கப்பட்டுவிட்டதா?”
"இல்லை சில முக்கிய நாட்களில் மட்டும் உடலை வைப்பார்கள்".
"என்ன மாதிரி முக்கிய நாட்களில்?”
"மாவோவின் பிறந்த நாள், இறந்த நாள், சீனக்குடியரசின் நிறுவன நாள் என்று வெகு சில நாட்களில் மட்டும்தான் உண்மையான உடலை வைப்பார்கள். அவர் பிறந்த இறந்த நாட்களில் அவருடைய குடும்பத்தினர் வந்து போவார்கள்".
"ஏன் இப்படி ஏமாற்றுகிறார்கள்?”
"மாவோவின் உடலென்பது சீன கம்யூனிஸ்ட்  ஆட்சியின் முக்கிய அடையாளம். இது மக்களை ஒன்று சேர்த்து இன்றைக்கும் மக்களை உணர்ச்சி வசப்பட வைக்கிறது. ஆனால் அவரின் உடல் நல்ல ஷேப்பில் இல்லை. வெறும் ரசாயனங்களால் எத்தனை நாள் தான் உடலைப் பாதுகாக்க முடியும்?”
"அது உண்மைதான். இதை நீ முன்பே சொல்லியிருந்தால் இன்னும் கொஞ்சம் உற்றுப் பார்த்திருப்பேனே"  என்று சொல்ல லீ சிரித்தான்.
 "இது மிகவும் ரகசியமானது டாப் சிகரெட்".
என்னால் நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை இன்னொரு முறை உள்ளே போய்ப் பார்க்க வேண்டும் போலத் தோன்றியது. மறுபடியும் நீண்ட வரிசையில் நிற்கவேண்டுமே என்று நினைத்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்.
"சரி லீ இப்போது வேறெங்கே?"
"இதோ இங்கேதான்",என்று சொல்லி எதிரே காண்பித்தான்.
 "வா போய் பார்க்கலாம்".
"என்ன? உள்ளேபோய் பார்க்கமுடியுமா?”, என்று சொல்லிவிட்டு பின்தொடர்ந்தேன்.

இது ஷியான்மன் (Quianmen) என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. அதற்கு 'Front Gate' என்று அர்த்தம்.  ஆனால் இதன் பெயர் ஜென்கியாங்மென் (zhengyanmen) என்பது அதன் அர்த்தம் "சூரிய வாசல்" (Gate of the Zenith Sun) என்பது . இது பீஜிங்கின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மதிலுக்கு தெற்குவாசலாக இருந்ததாம். டியன்மன் சதுக்கத்தின் தெற்குப்புறம் அமைந்துள்ள இந்த வாயில், உள்புற நகரின் தெற்குப் பகுதியை பாதுகாக்கும் கோட்டையாக இருந்திருக்கிறது. பீஜிங்கின் நகரின் வெளிப்புறச் சுவர்கள் முழுவதும் இடிக்கப்பட்டு விட்டாலும் ஜெஸ்கியாங்மென் மட்டும் இப்போதும் கம்பீரமாக பழைய பீஜிங்கின் அடையாளங்களுள் ஒன்றாக நிற்கிறது.


இதோ அதனைப்பற்றிய தகவல்கள்:
1.   இது 1419ல் மிங் வம்சத்தால் கட்டப்பட்டது.
2.   இந்த வாயில்தான் "விலக்கப்பட்ட நகரை" நேரடியாக பாதுகாத்தது.
3.   இந்த வாயில் மற்றும் அதன் பக்கத்தில் இருந்த இடங்களில்தான் போர்த்தளவாடங்கள் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.
4.   பீஜிங் நகரின் முதல் ரயில் நிலையம் இதனருகில்தான் அமைக்கப்பட்டது.
5.   சிங் வம்சம் ஆண்டபோது 1900 -ல் பாக்சர் புரட்சி நடைபெற்றது. அ ப்போது எட்டு நாடுகள், மாஃபுலு   தலைமையில் இணைந்து தாக்கியபோது இந்த வாயில் அதிக சிதிலமடைந்து. இதனைக் காக்கப்போரிட்ட 100 பேரும் அந்த இடத்திலேயே மாய்க்கப்பட்டனர்.
6.   சிங் பேரரசர் அதன்பின் அந்த வாயிலில் ஒரு கோபுரத்தைக் கட்டினார். அதுதான் இப்போது "ஆர்ச்சரி டவர்" என்று அழைக்கப்படுகிறது.
7.   1914ல் இது மீண்டும் புனரமைக்கப்பட்டது.
8.   1949ல் நடந்த சின்ன உள்நாட்டுப் போரில், கம்யூனிஸ்ட்டுகள் வெற்றி பெற்றபிறகு மக்கள் விடுதலை ராணுவம் (People's Liberator Army) இதனை ஆக்கிரமித்து தங்கள் தளமாக பயன்படுத்தினர்.
9.   1980ல் ராணுவம் அகன்றபின் இது ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக ஆகிவிட்டது.
10.               42 மீட்டர் உயரமுள்ள இந்த ஜெங்கியாங்மன் வாயில்தான் பீஜிங் நகர வாயில்களில் மிகவும் உயரமானது.
11.               1960கலீல் சப்வே கட்டப் படுவதற்கு பல கட்டடங்களும் வாயில்களும் மதில்களும் இடிக்கப்பட்டாலும் இந்த வாயில் மட்டும் பிழைத்துக் கொண்டது.
சிறிய கட்டணம் செலுத்தி இருவரும் உள்ளே சென்றோம். உள்ளே பலவித வரலாற்றுப் பொருட்கள் ஆவணங்கள், வரைபடங்கள், மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.  மூன்று மாடிகளில் ஏறிஏறி மேலே வந்தோம். பால்கனி போல இருந்த சுற்றுப்புற சுவர்களில் இருந்து பார்க்கும்போது, முன்புறம் ஒரே வரிசையில், மாவோ மசூலியம், டியனன்மன் ஸ்கொயர் நினைவுத்தூண், பரந்த மைதானம், அதன் பின் விலக்கப்பட்ட நகரம் அதன் உள்ளே கூட  வரிசையாக பலவித வாயில்களும் தர்பார் மண்டபங்களும் தெரிந்தன.
பார்த்துவிட்டு கீழே இறங்கும்போது தரையில்  பாதிக்கப்பட்ட ஒரு அடையாளத்தைப் பார்த்தேன். அதனைச் சுற்றிலும் நான்கு மிருகங்கள் இருந்தன. அது என்னவென்று கேட்டபோது லீ சொன்னான் "அதுதான் சீனாவின் நெடுஞ்சாலையின் ஜீரோ பாயின்ட்" என்றான். சீனாவின் அனைத்துச் சாலைகளுக்கும் அதுவே ஆரம்பப்புள்ளி என்றும், அங்கிருந்துதான் தூரங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன என்று சொன்னான்.
அதோடு "நீ மிகவும் அதிர்ஷ்டசாலி"  என்றான்.
"எதற்கு?" என்று கேட்டேன்.
- தொடரும்.
Happy Diwali Tamil Images

நண்பர்கள்  அனைவருக்கும் என் இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துக்கள்.
இந்த நல்ல நாளில் , இருள் நீக்கும் ஒளியாக இறைவன் உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் அருள் புரிவானாக .

ஒரு முக்கிய அறிவுப்பு :

Image result for Emirates flight


குடும்பத்தில் நடக்கும் திருமண விழாவிற்காக நான் நவம்பரில் சென்னை வருகிறேன்.நவம்பர் 13 முதல் 25 வரை சென்னையில் இருப்பேன் .இடையில் நவம்பர் 20 முதல் 22 வரை மூன்று நாட்கள் மதுரையில் இருப்பேன். சந்திக்க விரும்பும் நண்பர்கள் ஈமெயில்( Alfred_rajsek@yahoo.com) அல்லது whatsupல் ( 12123630524) தொடர்பு கொள்ளவும் . அந்த நாட்களில் பதிவுகள் வெளி வராது என்றும் தெரிவித்துக்கொள்கிறேன் .ஆனால் பல புதிய பதிவுகளுடன் உங்களை டிசம்பரில் சந்திப்பேன் .நன்றி.

No comments:

Post a Comment