Monday, October 10, 2016

இளையராஜா அதிக நேரம் எடுத்துக்கொண்ட பாடல்!!!!!!!!

அமெரிக்காவில் மீண்டும் இளையராஜா - பகுதி-2

Image result for Ilayaraja in NJ,2016

செளண்ட் சிஸ்டம், குரலுக்குத் தேவையான மைக்ரோஃபோன்  அவுட்புட், PA சிஸ்டமென அருமையான இசைக்குத்தேவையான அனைத்தும் இருந்தன. 7 மணி என்று போட்டிருந்தாலும் நம் மக்கள் வந்து சேர நேரம் கொடுத்து  7.25க்கு ஆரம்பித்தது  எட்டு மணிக்குள் அரங்கம் ஓரளவு நிறைந்துவிட்டது. ஐயாயிரம் பேர் உட்காரும் அரங்கில் மூவாயிரம் பேருக்கு மேல் வந்திருப்பார்கள். அதுவே இங்கு பெரிய கூட்டம்தான்.


இளையராஜா ஜனனி பாடிமுடிக்க, ஒரு நொடி இடைவெளியில்லாமல் அடுத்த BGM  ஆரம்பிக்க, கார்த்திக் வழக்கம்போல் துள்ளல் ஓட்டத்துடன் உள்ளே நுழைந்தார். கார்த்திக் தனது யுஎஸ் டூரில் கடந்தமுறை நியூஜெர்சி வந்தபோது அனைவரையும் கவர்ந்துவிட்டதால், கார்த்திக்கைப் பார்த்து பலத்த கரகோஷம் எழுந்தது. (அதனைப்பற்றி நான் எழுதிய பதிவை இந்த லிங்க்கில் காணலாம் http://paradesiatnewyork.blogspot.com/2014/06/blog-post_12.html ). கார்த்திக் வந்த வேகத்தில் "ஓம் சிவோகம்" என்ற நான் கடவுள் படத்தில் விஜய் பிரகாஷ் பாடிய பாடலை அதே உத்வேகத்துடன் பாடினர். அது முடிந்தவுடனே இடைவெளியில்லாமல் மனோ சாதனா சர்கம்  வந்து நிற்க மனோவுக்கு உற்சாக வரவேற்பு எழுந்தது. இருவரும் இணைந்து 'ஜெகதா' என்ற ஒரு தெலுங்குப் பக்திப் பாடலைப் பாடினர். மனோ கீழிறங்கிச் சென்றுவிட, சாதனா சர்கம் "ஆனந்த ராகம்" என்ற பாடலைப் பாடினார். இந்தப் பாடலில் வயலின் செக்ஷன் மிகப்பிரமாதமாக இருந்தது. சாதனா உச்சஸ்தாயியை கொஞ்சம் கஷ்டப்பட்டே பிடித்தார். நல்ல பாடகிதான் தொண்டையில் ஏதோ பிரச்சனை போலத்தெரிந்தது. ஆனால் பாடலின் இசை அப்படியே புல்லரிக்க வைத்தது. உமாராமணன் பாடிய அற்புத பாடல் இது. இளையராஜாவின் மாஸ்டர் பீஸ்களில் இதுவும் ஒன்றுஎன்று சொல்லலாம்.


அடுத்து வந்த சித்ராவுக்கு பலத்த கரகோஷம் எழுந்தது "அம்மாடி அம்மாடி" என்ற பாடலின் தெலுங்கு வெர்ஷனைப் பாடினர். அடுத்து வந்தது கீரவாணி ராகத்தில் அமைந்த 'கீரவாணி' பாடல், பாடியவர் கார்த்திக் மற்றும் சாதனா. தெலுங்கில் ஆரம்பித்தது இந்தப் பாடல். நான் தம்பியிடம் சொன்னேன். தெலுங்கிலும் தமிழிலும் இருக்கின்ற சில பாடல்களை ஒரு சரணம் தெலுங்கிலும் இரண்டாவதை தமிழிலும் பாடினால் நன்றாக இருக்குமென்று. காதில் விழுந்ததோ என்னவோ அடுத்து தமிழ் வந்த போது பலத்த ஆரவாரம் எழுந்தது. அதிலிருந்து தெலுங்குப் பகுதிக்கு தெலுங்கர்களும், தமிழ்ப்பகுதி அல்லது தமிழ்ப்பாடல்கள் வரும்போது தமிழர்களின் ஆர்ப்பரிப்பும் மாறி மாறி எழுந்தது. ஒரு போட்டி போலல்ல ஆனால் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக இருந்தது. இந்தப்பாடல் அமைந்த விதத்தை இளையராஜா சிறிது விளக்கினார். 

இளையராஜா பாடல்களை பல ஆயிரம் முறை கேட்ட ரசிகர்கள் என்னைப்போன்ற பெருமளவில் கூடியிருந்தார்கள் என்பதற்கு ஆதாரமாக ஒவ்வொரு தமிழ்ப் பாடலுக்கும் BGM  ஆரம்பிக்கும்போதே என்ன பாடல் என்று தெரிந்து ஆரவாரம் எழுந்தது.


அடுத்து வந்த பிரியா ஹிமேஷ்க்கும் மக்கள் வரவேற்பு கொடுத்தனர். நல்ல குரல் வளம் இவருக்கு, மனோவோடு சேர்ந்து விக்ரம் படத்தில் வந்த "வனிதா மணி" என்ற பாடல் மிகவும் சிறப்பாக அமைந்தது. சுருமுகி வந்து ஒரு தெலுங்குப் பாடல் பாடி முடிக்க அடுத்து வந்தது யாரும் எதிர்பாராத இளையராஜாவின் வெற்றிகரமான தயாரிப்பு யுவன் சங்கர் ராஜா வந்து "ஏப்ரல் மேயிலபசுமையேயில்லை" என்ற இளையராஜா பாடிய பாடலைப் பாடினர். இவருடைய குரல் இளையராஜா குரலைப்போலவே ஒலித்தது. இவர் திறமையான இசையமைப்பாளர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் திறமையான பாடகரா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லையென்றே சொல்வேன்.
பாடலின் நடுவில் இளையராஜாவின் வாயருகில் மைக்கை வைக்க அவர் ரெண்டு வரிகளைப் பாட பாடல் முடிந்தது.  "எந்த ஊர் பிடிக்கலன்னு சொல்ற" என்று யுவனைக் கிண்டல் பண்ணினார் இளையராஜா. அது புரியாமலேயே யுவன் இறங்கிச் சென்றார். ஏனென்றால் அந்தப் பாடலில்" இந்த ஊரும் புடிக்கல உலகம் புடிக்கல போரு போருடா" என்ற வரிகள் வரும்.


அதற்கப்புறம் வந்த இளையராஜாவின் ஆலாபனைக்கு    எழும்பிய ஆரவாரம் ரொம்பநேரம் நீடித்தது. வந்தது சூப்பர் ஹிட் பாடலான "நான் தேடும் செவ்வந்திப் பூவிது". 73 வயதுக்கு இளையராஜா குரல் நன்றாகவே இருந்தது. இதே பாடலை அவர் மேடையில் பலமுறை பாடிக்  கேட்டிருக்கிறேன். ஆனால் ஒரு தடவை கூட சரியாகப் பாடவில்லை. இப்போது, கூடப் பாடிய சித்ராவும் சரியாகப் பாடவில்லை. சித்ராவுக்கு நல்ல cold என்பது அவர் குரலில் தெரிந்தது . சித்ராவிடம் மலையாளத்தில் பேசிய இளையராஜா, "என்ன சரியாகப் பாடவில்லை ?" என்று கேட்டுவிட்டு, ஒரிஜினலாக அவர் பாடவில்லை என்று சபைக்குச் சொன்னார். இது ஜானகி பாடியது என்றுதான் எங்களுக்குத் தெரியுமே. மலையாளத்தில் பேசிக் கொண்டிருக்கும்போது, மக்களை நோக்கி, "தும்பி வா வேண்டுமா?" என்று கேட்க மக்கள் வேணுமென்று சொல்ல, சித்ரா 'தும்பிவா தும்பக் குரத்தில்' என்னு சில வரிகளை பாடிச் சென்றார். இங்கு சொல்லியாகி வேண்டிய ஒரு விஷயம், இளையராஜா தமிழ் தவிர தென்னிந்திய மொழிகளான, கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் சரளமாக பேசக்கூடியவர். இந்தி தெரியுமா என்று தெரியவில்லை.  அடுத்து வந்த தெலுங்குப் பாடல் முடித்து "தென்றல் வந்து என்னைத்தொடும்" என்ற பாடல் என்னைத்தொட்டபோது மறுபடியும் புல்லரித்தது. ஒரிஜினல் ரிக்கார்டிங்கை அப்படியே அதே இசைக்கருவிகளோடு வாசித்தது மிகவும் சிறப்பு. ஒரிஜினலாகப் பாடியது ஏசுதாஸ், ஜானகி.  அடுத்து வந்தது அனிதாவும் சாதனா சர்கமும். இளையராஜா இசையமைத்த முதல் படமான அன்னக்கிளி படத்தில் வந்த பட்டிதொட்டி எல்லாம் கலக்கிய 'மச்சானைப் பாத்திங்களா" என்ற பாடல் தேடித் கொண்டு வந்தது. இதில் உள்ள ஃபோல்க் என்று சொல்லக்கூடிய நாட்டுப்புறப் பாடலின் டோனை அனிதா அப்படியே கொண்டுவர, சாதனாவுக்கு அது  முடியவில்லை. அனிதாவே முழுப்பாடலையும் பாடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். நாற்பது ஆண்டுகள் முடிந்தும் இந்தப்பாடல் அவ்வளவு புதிதாக ஒலித்து நரம்புகளை முறுக்கேற்றியது. குறிப்பாக சுந்தர் வாசித்த தவில் ஆடத்தூண்டியது. இந்தப்பாடல் முடிந்த போது இளையராஜா இந்தப்படத்தில் தன்னை அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாசலம் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தினார். இந்தப்பாடலை எழுதியவரும் அவரே. இளையராஜாவை மட்டுமல்ல கார்த்திக் ராஜாவையும், யுவன் சங்கர் ராஜாவையும்  கூட அறிமுகப்படுத்தியது பஞ்சு அருணாச்சலம்தான்.
NSK ரம்யா அடுத்து வந்த உஷா உதுப் பாடி ப் புகழ்பெற்ற "வேகம் வேகம் போகும் தூரம் மேஜிக் ஜேர்னி" என்ற பாடலைப் பாடி அசத்தினார். அடுத்து இளையராஜாவும் சித்ராவும் "மாசிமாசம் ஆளான பொண்ணு",என்ற பாடலைப்  பாடினார்கள். 

அடுத்து மனோ சித்ரா பாடிய "சுந்தரி கண்ணால் ஒரு சேதி", வந்தது. பம்பாயில் நடந்த இந்தப் பாடலின் ரெக்கார்டிங்கை நினைவு கூர்ந்த இளையராஜா, மார்ச் 13 1991 என்று தேதியைக் கூடச் சொன்னார். ஏனென்றால் கையில் அதே ஒரிஜினல் மியூசிக் ஷீட்டை வைத்திருந்தார்.  எல்லாப் பாடல்களுக்கும் மியூசிக் நோட்ஸ் எழுத அரைமணி நேரம் அல்லது அதற்குக் குறைவாக எடுத்துக் கொண்டதாகவும், இந்தப் பாடலுக்கு மட்டும் 45 நிமிடங்கள் எடுத்துக் கொண்டதாக அவர் சொன்னது ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு சிக்கலான பலவித இசைக் கருவிகள் பயன்படுத்தப்பட்ட பாடலுக்கு வெறும் 45 நிமிடங்கள் ஆனது என்பது ஒரு அசுர சாதனைதான். அதோடு வாலியின் சாதாரண வரிகள் இந்த இசையோடு சேர்ந்து எவ்வளவு பிரம்மாண்டமானது என்பதையும் சொல்லி வாலியையும் சிலாகித்தார்.

-தொடரும் 

5 comments:

 1. இது போன்ற நிகழ்ச்சிகளில் பாடப்படும் பாடல்களின் லிஸ்ட் மட்டும் கொடுக்காமல், இடை இடையே பாடகர்கள் சொல்லும் விவரங்கள், இளையராஜா சொல்லும் சம்பவங்கள் அவர்களிடையே நடக்கும் சம்பாஷணையின் சுவாரஸ்யமான பகுதிகள் எல்லாம் சுவாரஸ்யமாக இருக்கும். அவற்றைச் சொல்லியிருக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வது உண்மைதான் ஸ்ரீராம் , எழுதும்போது எனக்கும் தோன்றியது .
   ஆனால் நடந்தவைகளை அப்படியே எழுதியுள்ளேன் .அடுத்த பகுதியில் இன்னும் அதிக செய்திகள் உண்டு .

   Delete
 2. மிஸ் பண்ணிட்டோமோனு தோணவச்சிடீங்களே தலை. ராஜாவுக்கு நீங்க
  PRஆ? :)

  ReplyDelete
  Replies
  1. பாஸ்கர் இனிமேல் உங்கள் ஊர்ப்பக்கம் வந்தா தவற விடாதீங்க .
   ஆமா எப்படி கண்டு பிடிச்சீங்க? நான் இளையராஜாவுக்கு PR தான்.
   Public Rasigan.

   Delete