Monday, January 25, 2016

சகாயத்துடன் பரதேசி !!!!!!!!!!!!

சகாயத்துடன் பரதேசி !!!!!!!!!!!!

இடம் சென்னை விமான நிலையம் , டொமெஸ்டிக் டெர்மினல் , ஜனவரி 9ஆம் தேதி , 2016. ஒரு சிறு கைப்பெட்டியுடன்நடந்துவருவது உற்றுப்பார்த்தால் அட சகாயம். என்னை அறியாமலேயே என் பொருட்களை விட்டுவிட்டு விரைந்து சென்று கைகுலுக்கினேன். ஒரு நிமிடம் என்ன பேசுவது என்றே தெரியவில்லை, உரையாடலை ஆரம்பித்தது அவரே.  
உங்கள் பெயர் என்ன? எங்கே இருக்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள்? என்ற கேள்விகள் சம்பிரதாய முறையில் இருந்தாலும், அவர் சம்பிரதாயத்திற்காக கேட்ட மாதிரி தெரியவில்லை. னென்றால் அவரைப்பார்க்க வந்த அனைவரையும் அவர் இதே கேள்விகளைக் கேட்கத்தவறவில்லை.  
"யார் இவர்? எதற்கு அவர் வந்ததும் எல்லோரும் அவரை நோக்கி ஓடுகிறீர்கள்", கேட்டாள் அந்த வெள்ளைக்காரி, அவரிடம் பேசி முடித்து வந்த என்னிடம். இந்தக் கேள்விக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்?
ஒரு அரசு அலுவலர் என்ன சொன்னால், அதில் என்ன சிறப்பு?
இவர் ஒரு IAS  அதிகாரி என்று சொன்னால், அதில் என்ன தனித்துவம் இருக்க முடியும் ?. அதிகாரிகள் தான் ஆயிரம் பேர் இருக்கிறார்களே.
ஒரு நேர்மையான மனிதன் என்று சொன்னால், அவ்வளவுதானா? அதுமட்டும்தானா என்று என் மனமே எதிர்க்கேள்வி கேட்கும்.
அப்படியென்றால் சகாயம் என்பவர் யார்? பின்னர் அவரை என்னவென்றுதான் சொல்வது?
Sagayam IAS
Sahayam IAS
'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' என்ற வரிகளுக்கு மட்டுமல்ல, அந்த தவ வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். சுயநலத்தை, குடும்ப நலத்தைப் பின்னுக்குத்தள்ளி, பொது நலனில் நாட்டு நலனுக்காக மட்டுமே தொடர்ந்து செயல்படும் ஒரு போராளி.
அவருடைய முதல் அதிரடி வெளிப்பட்டது, மாபெரும் வெளிநாட்டு கம்பெனியான பெப்சி கோலாவுக்கு எதிராக பெப்சி பானத்தில் தூசி மிதந்ததை அவரிடம் சிலர் காண்பிக்க, லேப் சோதனையில் அது குடிக்கத் தகுந்த பானம் இல்லை என்று தெரிய பூட்டுகளோடு சென்று தொழிற்சாலைக்குப் பூட்டுப்போட்டார். அந்தச் சமயத்தில் என்னுடைய மாமா மகன் அங்கு Personnel Officer ஆக இருந்தான். அவனிடம் நான் பேசும்போது, அவன் சொன்னான், "எல்லோருக்கும் ஒரு விலை இருக்கிறது" என்று. ஆனால் தலைமைச்செயலாளர், மந்திரிகள் முயன்றும் அவர் சம்மதிக்காதலால், அவரை மாற்றம் செய்தபின்தான், தொழிற்சாலையை திறக்க முடிந்தது. அந்த வீறு கொண்ட நேர்மை இந்நாள் வரை கொஞ்சம் கூட குறையக் காணோம்.
அவர் பணி செய்த வருடங்களை விட அதிகமுறை பணிமாற்றம் செய்யப்பட்டாலும், மனமாற்றம் அடையாமல் எந்த சோர்வுமின்றி, சென்ற இடங்களில் எல்லாம் முத்திரை பதிப்பவர்.
அரசாங்கத்தின் பிரதிநிதியாய் செயல்பட்ட காலம் போய், நீதியின் பிரதிநிதியாய் செயல் படத்துவங்கியிருக்கிறார். நமக்கு இன்னும் கொஞ்சம் நம்பிக்கை ஒட்டிக் கொண்டிருக்கிறது என்றால் அது நீதித்துறையும் நீதிமன்றமும் இருப்பதால்தானே.  
ஆமாம் ஆயிரக்கணக்கானவர்கள் தன்னிச்சையாக அவர் மேல் மதிப்பு கொண்டு, அவரை அரசியலுக்கு வரச் சொல்லும் பேரணிகள் தமிழ்நாடு முழுதும் நடைபெறுகின்றன. வெறும் காசுக்காக கூடுகின்ற உன்மத்தர்களின் கூட்டமல்ல அது. நாட்டு முன்னேற்றத்திற்காக கனவுகளைத் தாங்கி நிற்கும் மக்கள். யாராவது ஒரு மேசியா வந்துவிடமாட்டாரா என ஏங்கித்தவிக்கும் தானாகக் கூடிய மக்கள்.
தனிமனிதர்கள் சரித்திரம் படைக்க முடியுமா என்றால் முடியும் என்பதை சரித்திரம் படித்தவர்கள் ஒப்புக்கொள்வார்கள்.
 அவருடன் நடந்த உரையாடல் இன்னும் என் நினைவில்.
நான் முதலில் சொன்னேன். "கடவுள் உங்களுக்குத் துணை நிற்கிறார் "என்று. சிறுபுன்னைகையுடன் அதனை அங்கீகரித்த அவர் "இல்லாவிட்டால் எனக்கு எப்படி இவ்வளவு தைரியம் வரும்"?, என்றார்
"வெகுகாலமாக தங்களை உய்விக்க ஒருவர் வரமாட்டாரா என்று மக்கள் ஏங்கித்தவித்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். அது ஏன்  நீங்களாக இருக்கக்கூடாது" என்றேன். ஒரு சிறுபுன்னகை மட்டுமே பதிலாக வந்தது. 
"உங்களால் கவரப்பட்டவர்கள் வெளிநாட்டில் நாங்கள் அநேகர் இருக்கிறோம். நாங்கள் உங்களுக்குத்துணையாக நிற்கவும் தாய் நாட்டுக்குத் திரும்பவும் ஆயத்தமாக இருக்கிறோம்",  என்றேன். வெறும் உணர்ச்சி வசப்பட்ட வார்த்தைகள் இல்லை இவை.
நியூயார்க்கிற்கு அவரை அழைத்தேன். சிகாகோ தமிழ்ச்சங்கம் அழைத்ததையும் அதற்கு அரசு அனுமதி கிடைக்காததையும் சொன்னார். அதற்குள் கூட்டம் கூடிவிட, தன் தொலைபேசி எண்ணைக் கொடுத்து அவசியம் தொடர்பில் இருங்கள் என்றார். விடைபெற்று வெளியே வர சிறிது சிரமப்பட்டேன்.
. சகாயம் அவர்களே பத்திரமாக இருங்கள். சீக்கிரம் வெளியில் வந்து மக்களுக்கு சகாயம் செய்யுங்கள். இன்றைய இளைஞர்கள் மட்டுமல்ல எல்லா வயதிலும் உங்களுக்கு ஆதரவாளர்கள் இருக்கிறோம்.

அவரை ஒரு வார்த்தையில் அழைக்கமுடியுமென்றால் அவர் ஒரு மாபெரும் புரட்சியாளர். ஆமாம். பக்கத்தில் இருந்த வெள்ளைக் காரப் பெண்மணியிடம் சொன்னேன், "He is a great Revolutionist " என்று. அந்தப் பெண் கூட்டத்திற்குள் புன்னகைத்து நின்ற சகாயத்தைப் பார்த்துவிட்டு என்னை  நம்பமுடியாமல் பார்த்தாள்.
ஆம், எளிமையில் உள்ள வலிமை வெறும் தோற்றத்தில் தெரிவதில்லை. ஆனால் அவர் கொண்டு வரப்போகும் மாற்றத்தில் தெரியும். விடிவெள்ளி விரைவில் வெளிப்படும்.
முற்றும் 





19 comments:

  1. அரிய மனிதரைப் பற்றிய நல்ல பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி Doctor.

      Delete
  2. "He is a great Revolutionist " மிகச்சரியான வார்த்தைகளில் அவரைப்பற்றி கூறியிருக்கின்றீர்கள். நல்ல அனுபவம், நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி Sampath kalyan.

      Delete
  3. மிகவும் சிறப்பாகச் சொன்னீர்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  4. ஆகாயத்தில் இருந்து பார்க்கும் பொது சீன பெருஞ்சுவர் மட்டும் தான் தெரியும்,
    நேர்மையை விண்வெளியில் இருந்து பார்த்தால் கூட இவர் பெயர் தெரியும்.....
    தரம்கெட்டவர்களிடமிருந்து, தமிழர்களால் காப்பாற்ற பட வேண்டியவர்,அரிய மனிதர் .

    ReplyDelete
    Replies

    1. மிகவும் சிறப்பாகச் சொன்னீர்கள் Sakthivel.

      Delete
  5. சிறப்பான ஒரு மனிதரைச் சந்தித்தது மகிழ்ச்சியான விஷயம்....

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  6. அடடா...ஒரு இடைவெளிக்குப் பின்...சகாயத்துடன் தொடங்கியிருக்கிறது பயணம்..
    முதலில் உங்களுக்கு நன்றிகள்..
    அழைப்பை ஏற்று புதுகைக்கு வந்ததற்கும்...நல்ல உரை தந்ததற்கும்..

    நலமுடன் ஊர்வந்து சேர்ந்தீர்களா?

    சகாயம் பற்றி இன்னும் சற்று நீளமான பதிவை எதிர்பார்த்தேன்..தொடர்ந்து எழுதுங்கள்..ஒருவேளை அவர் பொதுவாழ்க்கைக்கு வர அது ஒரு தூண்டுகோலாய் அமையலாம்...

    நன்றி..நன்றி....

    ReplyDelete
    Replies
    1. நலமாக வந்து சேர்ந்துவிட்டேன் செல்வா .
      அடுத்த பதிவு உங்களைப்பற்றித்தான்.

      Delete
  7. No doubt that he is a very honest and professional govt official and gentle human being. however, people trying to portray him like a messiah or the second coming is way too much.

    ReplyDelete
    Replies
    1. I understand what you are saying. But our frustrated people are looking up to someone to save them.

      Delete
  8. அருமையான பதிவு..

    ReplyDelete