தமிழ்ப் புத்தாண்டை வரவேற்கும்
விதத்திலும், சித்திரைத் திருநாளைக்
கொண்டாடும் விதத்திலும், நியூயார்க் தமிழ்ச்சங்கம்,
மகாநதி ஷோபனா அவர்களின் கர்நாடக இசைக்கச்சேரி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன் சென்னையின்
டிசம்பர் கால இசை சீசனில் "சென்னையில் திருவையாறு" நிகழ்ச்சியில் ஷோபனா
அவர்களின் கச்சேரியை கண்டும் கேட்டும் மகிழ்ந்திருக்கிறேன். எனவே ஆவலோடு சென்றேன்.
கடந்த சனியன்று மாலை (ஏப்ரல் 19,
2014) குயின்சில் உள்ள ஃபிளஷிங்கில் உள்ள ஒரு பள்ளியின் கலையரங்கத்தில் நடைபெற்றது.
தமிழ்ச்சங்க பொறுப்பாளர் ஆல்பர்ட்
செல்லத்துரை அவர்கள் வரவேற்று டிக்கெட்டுகள் வழங்கினார்.
அரங்கத்திற்குள் என்னையும் சேர்த்து ஒரு ஐம்பது பேர்தான்
இருந்தனர். கர்நாடக இசை ரசிகர்கள் நியூயார்க்கில் அவ்வளவுதானா என்று ஒரு வருத்தம்
வந்தாலும், ஒருவேளை வழக்கம்போல் தாமதமாக வருவார்கள் என
நினைத்துக்கொண்டேன்.
அதற்குள் பரதேசி பிளாக்கை படித்த,
கேள்விப்பட்ட பலரும் வந்து கைகுலுக்கினார்கள். குறிப்பாக
தற்போதைய தலைவர் விஜயகுமார், செயலாளர் ராம்மோகன் ,பொறுப்பாளர்கள்
காஞ்சனா பூலா ,வனஜா பார்த்தசாரதி ஆகியோர்.
புதிதாக பொருளாளராகப்
பொறுப்பேற்றிருக்கும் ரங்கா புருஷோத்தமன் என்னுடைய நெருங்கிய நண்பர். CPA முடித்து ஒரு நிதிநிறுவனத்தின் தலைவராக இருப்பவர். சரியான ஆளைத்தான்
பொருளாளராகப் போட்டிருக்கிறார்கள்.
![]() |
Ranga on my right Bala on the left |
மேடை அலங்காரங்கள் மற்றும் செளன்ட்
சிஸ்டம் ரெடியாக இருந்தது. பக்கவாத்தியக் கலைஞர்களும் சுருதி சேர்த்து ரெடியாக,
தமிழ்ச்சங்க பொறுப்பாளர்கள் புடை சூழ தங்கத்தாரகையாய் வைரங்கள்
ஜொலிக்க மேடையேறி, விரிந்த தாமரையாய் அமர்ந்து, மலர்ந்து
தகத்தக தகாயமாய் மின்னும்போதே பாதி மக்களின் மனதைக்
கவர்ந்துவிட்டார் ஷோபனா.
குரலுக்கு அனுதினம் சாதகம் செய்தால்தான்
சாதனை செய்ய முடியும் என்பார்கள். சப்பணமிட்டு மூன்று மணிநேரம் உட்கார்ந்து
பாடுவதும் சாதனைதான். நம்மால ஒரு பத்து நிமிஷம் கூட உட்கார முடியாது.
கச்சேரிகளில் இப்போதெல்லாம்
தம்புராவைப் பார்க்க முடிவதில்லை, எல்லாமே
எலக்ட்ரானிக் ஸ்ருதிப்பெட்டிதான். ஸ்ருதிப்பெட்டியை ஆன் செய்ததும் பக்க
வாத்தியங்களான வயலின், மிருதங்கம் மற்றும்
தபேலாக்காரர்களும் தட்டிக்கொட்டி சுருதி சேர்த்துக்கொள்ள, ஷோபனா மெதுவாக இதழ் பிரித்து ஆலாபனையை ஆரம்பித்தார்.
பிள்ளையார் சுழியாக நாட்டை
ராகத்தில், ஆதிதாளத்தில் "மஹா கணபதிம்" வந்து விழுந்தது. இதே
பாடலை பலமுறை பலபேர் பாடியதைக் கேட்டிருக்கிறேன். குறிப்பாக
சிந்துபைரவியில் ஜேசுதாஸ் பாடியபின் இந்தப்பாட்டு மிகவும் பிரபலமடைந்தது. ஆனால்
ஷோபனா இந்தப் பாடலை எளிமையாகவும், அதே சமயம் இனிமையாகவும் கையாண்டார். பாட
ஆரம்பித்தபோது பக்க வாத்தியங்களின் இசை, ஷோபனாவின் குரலை அமிழ்த்த முயல, PA சிஸ்டத்தில் ஒரு சில அட்ஜஸ்ட்மெண்ட் செய்தவுடன் , கச்சேரி களை கட்டியது.
இரண்டாவதாக ஒரு தமிழ்ப்பாடலாக
"மாமயூர மீதிலேறி வா" என்ற முருகன் பாடல். இது பிலஹரி ராகத்தில் ஆதி தாளத்தில் நித்யஸ்ரீ பாடிப் புகழடைந்த ஒரு பாடல்.
அதன்பின்னர் ஊத்துக்காடு வெங்கட்ட சுப்பு
ஐயர் இயற்றிய "அலைபாயுதே" வந்தது. ராகம் கானடா என்றாலும் தாளம் அதே
ஆதிதான். ஒரு பாடலுக்கு பக்க வாத்தியங்களாக மிருதங்கம்,
தபேலா இரண்டையும் ஒரே சமயத்தில் வாசிக்கும்போது இருவருக்கும்
கோஆர்டினேஷன் மிக முக்கியம். இருவரும் அருமையாக வாசித்தார்கள்.
அடுத்த பாடல் தியாகராயர்
கீர்த்தனைகளில் உலகப்புகழ் பெற்ற "மானச சஞ்சரரே" என்ற பாடல் ஷோபாவுடைய
மெல்லிய குரலில் தேனாக ஒலித்தது. ஸ்யாமா ராகத்தில் மறுபடியும் ஆதி தாளத்தில் வந்த
பாடல்.
பக்கத்திலிருந்த நண்பரிடம் சொன்னேன்,
"மிருதங்கத்தையும் தபேலாவையும் மறைத்தாற் போல இந்த
மானிட்டரை வைத்துள்ளார்கள்.மானிட்டரை சற்றே நகர்த்தினால் நன்றாக இருக்கும்",
என்று. என்ன ஆச்சரியம் நான் சொன்னது காதில் விழுந்ததுபோல்
புதிதாக போட்டாகிராபர் அவதாரம் எடுத்துள்ள ஜெர்சி இசைக்குழுவைச் சேர்ந்த
கிடாரிஸ்ட் ரமேஷ் ராமநாதன் போய் மானிட்டரை தள்ளி வைத்தார். இப்போது மேடையின் முழு
வியூவும் நன்றாகத் தெரிந்தது.
அதை அடுத்து வந்த மூன்று பாடல்களும்
தமிழ்ப்பாடல்கள்தான். குறிப்பாக நம்ம ராஜாஜி (ஆம் அவரேதான் சக்ரவர்த்தி
ராஜகோபாலாச்சாரியார்) அவர்கள் எழுதி M.S.சுப்புலட்சுமி அவர்களால் ஐ.நா சபையில் பாடிப்புகழடைந்த
"குறையொன்றும் இல்லை" என்ற பாடல், கொஞ்சம் கூட
இமிட்டேட் செய்யாமல் பாடினார். ராகமாலிகையில் அமைந்த இந்தப்பாடலும் ஆதிதாளம்தான்.
குறையொன்றும் சொல்லமுடியாது.
என்ன இது எல்லாமே ஆதிதாளமாக
வருகிறதே,
பக்க வாத்தியக்காரர்களுக்கு வேறு தாளம் வராதா என்று சந்தேகப்பட்ட
சமயத்தில், அதைப்போக்கும் விதமாக ரூபக தாளத்தில்
பாரதியாரின் “சின்னஞ்சிறு கிளியே" ஊற்றாக வந்தது. ராகமாலிகையை அநாயசமாகக்
கையாண்டார் ஷோபனா.
![]() |
Rammohan,Vijaykumar,Kanjana with Shobana |
சிறியதொரு இடைவேளையில்,
தலைமை விருந்தினராக வந்திருந்த நியூயார்க் வாழ் சாவித்திரி
ராமநாதன் (பாம்பே சிஸ்டர்சின் இளைய சகோதரி) வந்து ஷோபனாவை
கெளரவித்து, தமிழ்ச்சங்கம் சார்பாக “தமிழ் இசைப்பேரொளி” என்று விருதை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக வந்திருந்த கிடார்
பிரசன்னாவும் கெளரவிக்கப்பட்டார். இப்போது இவர் நியூயார்க்கில்
வாழ்கிறார். வருங்காலத்தில் தமிழ்ச் சங்கத்தில் அவருடைய
கச்சேரியை எதிர்பார்க்கலாம்.
![]() |
Guitar Prasanna |
இடைவேளை முடிந்ததும் ஷோபனா பாடிய பாடல் “நீலகண்ட கருணாகரனே" என்ற பாகவதரின் பாடல். சமீபத்தில் விஜய் டிவியின் சூப்பர் நிகழ்ச்சியில்
கலந்து கொண்டபோதும் ஷோபனா இதே பாடலைப் பாடியதை பலபேர் பார்த்திருக்கலாம். இப்போது
நேரில் பார்க்க ஒரு சந்தர்ப்பம். பின்னர் "தந்தனானானன" என்ற காவடிச்சிந்துப் பாடல் வந்து முடிய, சபையில் யாரோ
சினிமாப்பாடல் பாடச்சொல்லிக் கேட்டனர். அப்போது, ஷோபனா
அவர்கள் சிறுவயதில் மகாநதியில் பாடிய, இளையராஜா இசையில் வந்த "ஸ்ரீரங்க
ரங்கநாதனே" என்ற பாடலைப் பாடினார். வல்லிசையிலிருந்து மெல்லிசைக்குத் தாவிய குரல் இனிமையாகவே ஒலித்தது. திரையிசையில் இவர் ஏன்
அதிகம் சோபிக்கவில்லையென
வருத்தமாய் இருந்தது. இறுதியில்
முத்தாய்ப்பாக ஸ்ரீ அருணகிரி சுவாமிகளின் திருப்புகழ் பாடல்களில் TMS பாடி மிகப்பிரபலமடைந்த "முத்தைத்திரு பத்தி திருநகை
" என்ற பாடலை கொஞ்சம் கூட மூச்சு வாங்காமல், அநாயச
சாதகத்தில் பாடி பின் “வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர்
” பாடி முடிக்க கச்சேரி இனிதே முடிந்தது.
ஆரம்பத்தில் இருந்ததைவிட
நிறையப்பேர் வந்திருந்தாலும் அரங்கம் பெரும்பாலும் காலியாகவே இருந்தது.
கச்சேரியின் பெரும் வெற்றிக்கு மேலும் ஒரு முக்கிய
காரணம் மூன்று பக்க வாத்தியங்கள் தான். வயலின் வாசித்த கெளரி ராமகிருஷ்ணன் மிகுந்த
அனுபவசாலி. வானொலியிலும் தூர்தர்ஷனிலும் டாப்
கிரேட் ஆர்டிஸ்ட். பல கர்நாடக விற்பன்னர்களுக்கு வாசித்தது மட்டுமல்லாது, வயலின் தனிக்கச்சேரியும்
ஏராளமாகச் செய்திருக்கிறார். இங்கேயே வாழ்பவர். வயலின் தனி ஆவர்தனத்தில் வாசித்து அசத்த,
பாராட்டும் வண்ணம் ஷோபனா பலமுறை புன்னகைத்தும், பதில் புன்னகையோ பேச்சோ எதுவுமில்லை.
ஆனால் மாறாக அவருடைய வயலின் பேசியது, புன்னகைத்தது, சிரித்தது.
தபேலா வாசித்த ரவீந்திர குமார்தாஸ், கனெக்டிகட்டிலிருந்து
வந்திருந்தார். தமிழரல்ல, ஆனால் ஆடாத குடுமியுடனும்
அசையாத உடம்புடனும் விரல்கள் மட்டும் நர்த்தனமாட அருமையான நாதம் பிறந்தது.
![]() |
யாழ்ப்பாணம் செந்தூரான் |
மிருதங்கம் வாசித்த “யாழ்ப்பாணம் செந்தூரான்” இலங்கைத்
தமிழன். சிறுவயதிலிருந்தே எனக்குத் தெரியும். இப்போது வளர்ந்த அழகிய இளைஞன். அவனுடைய
வாசிப்பைப் பார்த்து நான் மட்டுமல்ல வந்திருந்த அனைவரும் அசந்துபோயினர். விரல்கள் புரோகிராம்
செய்யப்பட்டு தானியங்கும் ரோபோ போல் வாசிக்க வாசிக்க, விரலசைவில் பெரும் வித்வத்வம்
தெரிந்தது. உமையாள்புரம் சிவராமனின் சீடனல்லவா, சொல்லவா வேண்டும்.
முழுவதுமாகவே பக்திப்பாடல்கள்
பாடாமல் பாரதியார், கவிமணி என்று சிலரின் தேசபக்திப் பாடல்களையும் பாடியிருக்கலாம் என்று நினைத்தேன். அதோடு மாயூரம் வேதநாயகம்பிள்ளை
எழுதிய பொதுவான ஓரிரு கிருதிகளை பாடியிருக்கலாம்.
தமிழ்ச்சங்கத்தில் மற்ற மதத்தினரும் இருக்கிறார்களே.
எல்லோருக்கும் பெரும்பாலும் தெரிந்த பாடல்களே என்றாலும்,
வந்த அனைவருமே கர்நாடக சங்கீத ரசிகர்கள் என்று சொல்லமுடியாது. எனவே வழக்கமில்லை என்றாலும்,
யாருடைய பாடல் என்றும் ராகம் தாளத்தையும் சொல்லியிருந்தால் என்னைப்போல குறைந்த அறிவுள்ள
பரதேசிகளுக்கு பிரயோஜனமாயிருந்திருக்கும். நன்கு அறிமுகமான
பாடல்கள் என்பதும் அதிகம் தமிழ்ப் பாடல்கள் என்பதும் பிக் பிளஸ்.
மந்திர ஸ்தாயிலும் சரி,
மத்திய ஸ்தாயி, தரஸ்தாயிலும் ஒரே
கனத்துடன் இனிமையாக ஒலித்தது ஷோபனா குரல். குறிப்பாக மேல் பஞ்சமத்தில் மேலும்
இனிமை சேர்ந்தது. பிர்காக்கள் பனியில் சறுக்கும் இக்லூ வண்டிபோல் அனாசயமாக வழுக்கி வழுக்கி விழ, ஸ்வரப்பிரஸ்தாரங்கள்
துல்லியமாக ஒலித்தன. மொத்தத்தில் காதில்
தேன் பாய்ந்த கச்சேரி என்றே சொல்லலாம்.
மகாநதி ஷோபனா சிறுவயதிலிருந்து, 1500 பாடல்கள் அடங்கிய 130 ஆல்பங்களை
வெளியிட்டிருக்கிறாராம். அவர் மேன்மேலும் வளர்ந்து புகழ்பெற பரதேசியின்
வாழ்த்துக்கள். நல்ல ஒரு மாலைப்பொழுதினை
வழங்கிய நியூயார்க் தமிழ்ச்சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டுக்கள் .
பின்குறிப்பு : பரதேசி, துருக்கி
நாட்டுக்கு பரதேசம் போவதால் வரும் திங்கள்கிழமை
பதிவு வராது. மறுபடியும் உங்களை வரும் வியாழனன்று
சந்திக்கிறேன்.நன்றி