Thursday, February 6, 2014

காசு, பணம் துட்டு மணி மணி !!!!!!!!!!!!!!

இலந்தை ராமசாமி 
நியூஜெர்சி தமிழ்ச்சங்க பட்டிமன்றம் ஆடிஷன் -09.28.2013 .

பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் நடந்த கல்யாணமாலை பட்டிமன்றத்தில் பங்கு பெறுவதற்காக வைக்கப்பட்ட ஆடிஷனில் அடியேன் கலந்து கொண்டு “வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு பணமே  முக்கியம்”, என்ற தலைப்பில் பேசிய உரையை இங்கு தருகிறேன் .அதில்  முதலாவது பெயராக தெரிவு செய்யப்பட்டு கல்யாணமாலை பட்டிமன்றத்தில்   பேசினேன்   என்று உங்கள் அனைவருக்கும் தெரியும்..
            வணக்கம் - வாய்ப்புக்கு நன்றி. நடுவராக வீற்றிருக்கும்  ஐயா இலந்தை ராமசாமி  அவர்களுக்கு என் பணிவான வணக்கம் .இலந்தை முன்னால் தமிழில் நான் ஒரு குழந்தை.  தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.

        சித்திரமும் கைப்பழக்கம்
        செந்தமிழும் நாப்பழக்கம்
        பட்டிமன்றத்தமிழும் பாப்பையா பழக்கம்
        வாங்க பழகலாம் - தமிழ்பேசி.

        சித்திரமும் கைப்பழக்கம்
        செந்தமிழும் நாப்பழக்கம் -ஆனா
        பணப்புழக்கம் இல்லைனா - வெறும்
        மனப்புழுக்கம் தாங்க.

ஒன்னுமில்லை. என் நண்பன் ஒருவன் ஊரிலுள்ள  அவன் அம்மாவுக்குப் போன் பண்ணான். நடந்த கதைங்க, சாட்சி இருக்கு.
அம்மா சொன்னாள்: ராசா ஒன்னைப்பார்த்து எத்தனை நாளாச்சு? அஞ்சு வருசமாச்சு. ஒரு வாட்டி வந்து இந்தக் கிவியைப் பாத்துட்டு போனா, நான் சந்தோஷமா கண்ணை மூடிறுவேன்.
நண்பன் கேட்டான்: ம்மா நான் வர்றதைப் பத்தி இல்ல. ஆனா குறைஞ்சது அஞ்சாயிரம் டாலர் செலவாகும். ஒரு அஞ்சு மாசம் பணம் அனுப்பமுடியாது பரவாயில்லையா? இப்ப நான் வரனுமா? இல்லை பணம் வரனுமா?
அம்மா சில நிமிடங்கள் அமைதியாய் இருந்து விட்டு  பதில் சொன்னாள்: சரி ராசா நீ வராட்டிப் பரவாயில்ல, பணத்தை அனுப்பிடு சாமின்னு.
அந்தத்தாயை நான் குறைசொல்ல மாட்டேன்.அந்த படிக்காத தாயையும்  பிராக்டிக்கலா யோசிக்க வைத்தது பணத் தேவைதான்.

பட்டிமன்றத்துல பேசுவதற்கு ஏதாவது பாயிண்ட்ஸ் கிடைக்குமா என்று டிவியைத்திருப்பினேன்.
ஜெயா மேக்சைத் திருப்பினால்
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே
இதைப்பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லை
பிழைக்கும் மனிதன் இல்ல.

சன் டிவியைத் திருப்பினால்
காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது
வாசக்கதவை ராசலட்சுமி தட்டுகிற நேரமிது.

விஜய் டிவியைத்திருப்பினால்
காசு, பணம் துட்டு மணி மணி
காசு, பணம் துட்டு மணி மணி

இப்படி உலகமே பணமயமாவுள்ள போயிருச்சு.
நம்மூரு  பழமொழிகளை  எடுத்துக்கங்க .
பணம் உண்டானால் மணம் உண்டு
பணம் பாதாளம் மட்டும் பாயும்
பணம் என்றால் பிணமும் வாயைத்திறக்கும்.

பக்கத்தில் கொஞ்சம் செக் பண்ணிப்பாருங்க. ஏதாவது பிணம் வந்து  உட்கார்ந்திருக்கப்போகுது. .ஹாலோவீன் சமயம் வேற. 
பாருங்க பணத்தின் அருமையைப்பற்றி நம்ம முன்னோர்கள் எத்தனை பழமொழிகளை   சொல்லியிருக்காங்க.
 நமக்கெல்லாம் தெரியும் இங்க   காலம் மாறிக்கிட்டே இருக்கு . ஆனா நம்மைப்போல உள்ள மிடில் கிளாஸ் மக்களுக்கு ரெண்டே காலம்தான். ஆனா இது மாசா மாசம் வரும்.
 
        முதல்வாரம் - டெபிட் கார்டு காலம்
        கடைசி வாரம் - கிரெடிட் கார்டு காலம்
நண்பனுக்கு போன் செய்தேன், "எப்படி புரோ இருக்கிற?”.
"சூப்பரா இருக்கேன் புரோ", என்றான். இது முதல் வாரம்
அவனையே கடைசி வாரத்திலே கேட்டேன் – ஓகேடா என்றான்
என்னடா குரல்ல சுரத்தில்லயேன்னேன்.அட ஒண்ணுமில்லன்னு சொன்னான்.
ஒண்ணுமில்லன்னு சொன்னது பணம் ஒண்ணுமில்லன்னு தான்னு எனக்குத்தெரியும்.

இதெல்லாம் நம்ம எதிர்க்கட்சி நண்பர்களுக்கும் தெரியும்ம்ம்ம்,  ஆனா தெரியாத மாதிரி நடிக்கிறாங்க.

வீட்டில்லிருந்து  வெளியே போகும்போது ,சில நாள் வாலட்டை மறந்துருவோம் பாருங்க எவ்வளவு பதட்டமாயிருக்கும் தெரியுமா. பாதி தூரம் போயிட்டு திரும்ப வந்திருக்கிறோம். வாலட்டில் பணம் கொஞ்சமா இருந்தா நடை கொஞ்சம் வீக்கா இருக்கும் .அதே சமயம் வாலட்டில் ஒரு நூறு டாலர் இருந்தா, அடா அடா வருமே ஒரு ராஜ நடை காணக்கண் கோடி வேணும்.

ஆமா தெரியாமத்தான் கேட்கிறேன். நீங்கலெல்லாம் எதுக்கு அமெரிக்காவுக்கு வந்தீங்க?
அமெரிக்கப் பொருளாதாரத்தை நிமிர்த்தி வைக்கவா?
சொந்த ஊரிலே
நொந்த பொருளாதாரத்தை மாற்ற
இந்த ஊருக்கு
வந்த ஜனம் தானே நாமெல்லாம்.

திரைகடலோடியும் திரவியம் தேடுன்னு சும்மாவா சொன்னாங்க.அப்புறம் எதுக்கு இந்த வெட்டிப்பேச்சு.வேணும்னா ஒரு பெட்டி வாங்கிட்டு என் கட்சியிலே சேர்ந்துறுங்க.

மத்த தலைப்புகளில் பேச வந்திருக்கும் நண்பர்களே நீங்களே யோசிச்சுப் பாருங்க.
உழைப்புன்னு சொல்றீங்களே.
ஊதியம் இல்லாத உழைப்பு வெறும் களைப்புதானே.
தன்னம்பிக்கையின்னு எடுத்துக்கிட்டா
பணம் இல்லாத தன்னம்பிக்கை மூட நம்பிக்கைதானே.
விடாமுயற்சின்னு சொன்னா
பணம் இல்லாத விடாமுயற்சி கூடா முயற்சிதானே.
அறிவு- அறிவிருந்தால் பணத்தை கண்டிப்பாக தேடுவீங்க.
அதிர்ஷ்டம்- பணம் இல்லாத அதிர்ஷ்டம் குருட்டு அதிர்ஸ்டம்ங்க. திரும்பத் திரும்ப வராது.

எனவே பணம்தான் முக்கியமானது. வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு பணம் இருந்தால் மற்றவை எல்லாம் தானாக கூடிவரும் என்று கூறி வாய்ப்புக்கு நன்றி சொல்லி விடைபெறுகிறேன்.நன்றி வணக்கம்.


பின் குறிப்பு: விரைவில் சன் டிவியில் கல்யாண மாலை பட்டிமன்றத்தில் பட்டிமன்ற ராஜா அணியில், “ குடும்ப வாழ்வு சுவைப்பது  அமெரிக்காவில்தான்” என்ற  தலைப்பில் அடியேன் பேசுவதை எதிர்பாருங்கள்.

11 comments:

  1. சரி தான்... அங்கு எல்லாமே பணம் தான்...

    அடுத்த பட்டி மன்றத்திலும் அசத்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன், உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்

      Delete
  2. அருமையான உரை..ரசிக்கமுடிந்தது ..நிதர்சனப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. நன்றி இராஜராஜேஸ்வரி , உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்.

      Delete
  3. as a speach i can appreciate you...! but in the real life money can do things better! but apart from money there are lot of things which are unable to buy or capture by money...! you also know the facts! sorry sekar !!

    ReplyDelete
    Replies
    1. I agree with you, Kannan. You are absolutely right. This is not my personal opinion but a negative argument for humor in Pattimanram only.

      Delete
  4. ///ஆமா தெரியாமத்தான் கேட்கிறேன். நீங்கலெல்லாம் எதுக்கு அமெரிக்காவுக்கு வந்தீங்க? ///

    நல்ல கேள்வி

    ReplyDelete
  5. ///ஆமா தெரியாமத்தான் கேட்கிறேன். நீங்கலெல்லாம் எதுக்கு அமெரிக்காவுக்கு வந்தீங்க? ///

    பணத்துக்காகத்தான் வந்தோம் ஆனா பணத்தை இன்று வரை பார்க்க முடியலை.காரணம் எல்லாவற்றையும் நீங்களே சுருட்டிடீங்க போல இருக்கு.....அண்ணே கொஞ்சம் கண்ணுலேயாவது காட்டுங்கண்ணே

    ReplyDelete
    Replies
    1. மதுரைத்தமிழனிடம் பணம் இல்லையென்றால் அமெரிக்கா ஏழை நாடுதான் .

      Delete
  6. நல்ல உரை ரசித்தேன். அடுத்த பட்டிமன்றத்திலும் அசத்தலாகப் பேச வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி வெங்கட் நாகராஜ்.

    ReplyDelete