Monday, February 10, 2014

காரைக்குடி பயணம்: பகுதி 4: “செட்டிகள் கெட்டிகள்தாம்”


  உலகத்தில் பல அரண்மனைகளைப் பார்த்திருக்கிறேன். இது முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. அதிலிருந்த நுண்ணிய வேலைப்பாடுகள் மட்டுமல்ல, அதன் பல்வேறு வண்ணங்கள் மதிய வெயிலில் பளிச்சென்று மின்னின.


        செட்டிநாடு அரசர் ராஜா சர். அண்ணாமலை செட்டியார் அவர்கள் கட்டி வாழ்ந்த அரண்மனை இதுவாகும்.

 செட்டிநாடு என்ற நாட்டை அல்லது பகுதியை அரசாண்டவர் இவர் என்று பலரும் தவறாக நினைத்துக் கொள்கின்றனர். செட்டிநாடு அரசர் (The Raja of Chettinad) என்பது சர். அண்ணாமலை செட்டியார் அவர்களின் பொதுச் சேவையை பாராட்டி, 1929-ல் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஒரு கெளரவப்பட்டம். இவர்கள் பரம்பரையும் இந்தப்பட்டத்தை பயன்படுத்தலாம் என்பது அப்போதிருந்த மெட்ராஸ் மாநில (Madras Presidency) அரசாங்கத்தின் உத்தரவு.

        அப்படியென்ன பொதுச்சேவை செய்தார் என்றால், அண்ணாமலை பல்கலைக்கழகம் இவரால்தான்  உருவாக்கப்பட்டது. இது தவிர செட்டிநாடு சிமெண்ட்ஸ் மற்றும் இந்தியன் வங்கி இவரால் நிறுவப்பட்டது. மேலும் பல பொதுச் சேவைகள், நன்கொடைகள், கட்டிடங்கள் மற்றும் கோவில்களை நிறுவியுள்ளார்.
With Edwin 
        அரண்மனை கட்டுவதற்குத்தேவையான  பல பொருட்கள் கிழக்கு ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன.  40,000 சதுர அடி கொண்ட இந்த அரண்மனை 1902-ல் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1912-ல் முடிக்கப்பட்டதாம். பர்மா தேக்கு, இத்தாலிய சலவைக்கற்கள் மற்றும் இங்கிலாந்தின் உருக்குக்கம்பிகள் பயன்படுத்தப்பட்டன. காரையோடு சுண்ணாம்பு, கடுக்காய் மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு பயன்படுத்தப்பட்டதாம். இங்குள்ள கட்டில் மேஜை நாற்காலிகள் ரோஸ்வுட்டினாலானவை. பீங்கான் சாமான்கள் இந்தோனேசியாவிலிருந்தும், கிறிஸ்டல் சாமான்கள் ஐரோப்பாவிலிருந்தும், கண்ணாடிகள் பெல்ஜியமிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டன.செட்டிநாட்டின் கட்டிடக்கலைக்கு உதாரணமாக விளங்கும் இந்த அரண்மனையில் பல சினிமா படப்பிடிப்புகள் நடக்கின்றன.
        ரொம்ப நாளாக நான் பார்க்க வேண்டுமென நினைத்திருந்த செட்டிநாடு அரண்மனையை பார்த்த திருப்தியில் எட்வினுக்கு ஒரு நன்றியைத் தெரிவித்துவிட்டுக் கிளம்பினோம். எங்கே என்று நானும் கேட்கவில்லை அவரும் சொல்லவில்லை. கார் கிளம்பி, ஒரு சிறு ஊரின் வழியாகச் சென்றது.


 அங்கு சாலையோரத்தில் நுங்குக் குலைகளை வைத்து விற்றுக் கொண்டிருந்தனர். சற்றே நிறுத்தி சில நுங்குகளை ஆசையோடு சப்புக்கொட்டி சாப்பிட்டுவிட்டு வயிறு நிரம்பியவுடன் கிளம்பினோம். நுங்குகளை சாப்பிட்டு எத்தனை நாளாகிறது.

        சடாரென்று ஒரு சந்திலே திரும்பிய கார், ஒரு சிறிய வீட்டின் முன் நின்றது. எட்வின் தன் அக்கா வீட்டுக்கு கூப்பிட்டுப் போன மாதிரி எங்காவது போய் விடுவாரோ என்று நினைத்து, "அண்ணே இன்னும் நிறைய பார்க்கவேண்டி இருக்கிறதா  சொன்னீங்களே", என்றேன். “இதைப் பார்க்காம போக முடியாது”,ன்னு சொல்லி, காரை விட்டு இறங்கச் சொன்னார். அப்புறம் தான் தெரிந்தது. அந்தச் சிறிய வீடு பெருங்கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பிறந்து வளர்ந்த வீடு. பராமரிப்பில்லாமல் பூட்டிக்கிடந்தது.


 சிறு கூடற்பட்டி என்ற அந்த சிறிய ஊரில், ஒரு சிறிய வீட்டில் பிறந்து சரியான படிப்பு கூட இல்லாமல், உலகம் போற்றும் ஒரு மாபெரும் கவிஞனாக வளர்ந்து எந்தப் பாசாங்கும் முகமூடியும் இல்லாமல் வெளிப்படையாக எல்லோரும் வாசிக்கும் திறந்த புத்தகமாக வாழ்ந்த கண்ணதாசனின் இருப்பிடத்தைப் பார்த்து பரவசமானேன்.
மானிட ஜாதியில் தனிமனிதன், நான்
 படைப்பதனால் என்பேர் இறைவன்! நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த
 நிலையிலும் எனக்கு மரணமில்லை!
என்ற அவரின் வைர வரிகள் ஞாபகம்  வந்து உடலெல்லாம் சிலிர்த்தது.
        பின்னர் அப்படியே கிளம்பி வருகையில், முதலில் பொட்டல்காடாக தெரிந்தவை இப்போது கவிதையாக தெரிந்தன. வரும் வழியில், அட இந்தச் சிறிய தடாகம் அல்லி மலர்கள் சூழ்ந்து அந்த சூரிய ஒளி சுட்ட மட்ட மதியானத்திலும் ஒளியை  உள்வாங்கி பிரதிபலித்து ஜொலித்தது.

        கவிஞர் பாடல்களை முணுமுணுத்த வண்ணம், அப்படியே ஆளரவமற்ற பல பெரிய வீடுகளைக் கடந்து பல ஊர்களைக் கடந்து ஒரு சந்துக்குள் கார் நுழைய, "இதுதான் ப. சிதம்பரம் வீடு", என்றார் எட்வின். அங்கு எதற்கு வந்தோம் என்று புரியவிட்டாலும்ஓ அவரும் செட்டிநாட்டின் பிரபலங்களில் ஒருவர் அல்லவா என்று நினைத்துக் கொண்டேன்.
P.Chidambaram's House

 வேறு யாரெல்லாம் பிரபலங்கள் என்று எட்வின் அண்ணனோடு யோசித்ததில் கீழ்க்கண்ட லிஸ்ட் உருவானது.
Dr. அழகப்பா செட்டியார் - அழகப்பா பல்கலைக்கழகம் அழகப்பா செட்டியார் பொறியியல் கல்லூரி, கலைக்கல்லூரி ஆகியவற்றை உருவாக்கியவர்.
AM முருகப்பா செட்டியார் - முருகப்பா குழுமத்தில், EID பாரி, டியூப் இன்வெஸ்ட்மெண்ட்ஸ், TI சைக்கிள்ஸ்,சோழமண்டலம் ஃபைனான்ஸ், கோரமண்டல் இண்டர்னேஷனல் ஆகியவற்றை உருவாக்கியவர்.
கருமுத்து தியாகராய செட்டியார் - தியாகராசர் கல்லூரியை நிறுவியவர், தியாகராய மில் மற்றும் மதுரா வங்கியை (Bank of Madura Ltd) நிறுவியவர். இந்த வங்கி 2001-ல்  ICICI வங்கியோடு இணைந்தது.
M.A. சிதம்பரம் செட்டியார் - M.A.சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியம் ஞாபகம் இருக்கிறதா?
ராஜா. சர் முத்தையா செட்டியார் - ராஜா முத்தையா மன்றம், ராணி சீதை ஹால், ராஜா முத்தையா ஆய்வு நூலகம்.
M.Ct.M. சிதம்பரம் செட்டியார் - இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை நிறுவியவர்.
Dr. ஜஸ்டிஸ் A.R.லட்சுமணன் - முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி.
A.V.மெய்யப்ப செட்டியார்: AVM நிறுவனத்தை உருவாக்கியவர்.
        அடேயப்பா, தமிழ்நாட்டின் மொத்தப் பொருளாதாரத்தையும் செட்டிநாடு தம் உள்ளங்கையில் அல்லவா வைத்திருந்தன. செட்டிகள் கெட்டிகள்தாம். வண்டி அப்படியே விரைந்து புதுக்கோட்டைக்குள் நுழைந்தது.

தொடரும் >>>>>>>>>>>>>>>>

10 comments:

 1. படங்களும் தகவல்களும் வழக்கம் போல அருமை tha.ma 2

  ReplyDelete
  Replies
  1. தங்களுடைய வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி மதுரைத்தமிழன் .

   Delete
 2. செட்டிநாட்டின் கட்டிடக்கலையை நினைத்தாலே பெருமூச்சு வருகிறது...!

  கவிஞர் வீட்டிற்கு சென்று வந்தது சிறப்பு... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களுடைய வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி திண்டுக்கல் தனபாலன்.

   Delete
 3. செட்டிகள் கெட்டிகள்தாம் unmai unmai

  ReplyDelete
  Replies
  1. தங்களுடைய வருகைக்கு நன்றி D Babu Thirumaran.

   Delete
 4. செட்டிநாடு என்ற நாட்டை அல்லது பகுதியை அரசாண்டவர் இவர் என்று பலரும் தவறாக நினைத்துக் கொள்கின்றனர். ////
  ஹீ..ஹீ.. அதுல நானும் ஒருத்தன்..

  இப்போ புரிஞ்சிருச்சி.. நன்றி

  எங்க ஊர் பக்கம் , செட்டிபுள்ள கெட்டிபுள்ளனு ஒரு பதம் சொல்லுவாங்க சாரியாதான் சொல்லிவச்சிருக்காங்க...!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி ANaND.

   Delete
 5. அருமையான படங்கள். தகவல்களும் நன்று.

  உங்களுடன் நானும் தொடர்கிறேன்.

  த.ம. +1

  ReplyDelete
 6. தங்களுடைய வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி வெங்கட் நாகராஜ்.

  ReplyDelete