Thursday, August 22, 2013

இருபதாவது இல்லத்தரசி


            வரலாற்றுப்புதினங்களில் என்னுடைய விருப்பம் அதிகமாக வளரத்துவங்கிய போது, தற்செயலாக நம்மூர் "ஐயங்கார் வீட்டு அழகு" பொண்ணு ஒருவர் மொகலாய வரலாற்றை நாவலாக எழுதி பிரபலமடைந்ததை அறிந்து தொடர்பு கொண்டேன். அப்பொழுது நான் பகுதிநேர VJவாக பணியாற்றிய, நியூயார்க்கில் இயங்கிய "திராவிடியன் தொலைக்காட்சி"யில் ஒரு நேர்முகம் நடத்தலாம் என்று அவர்களிடம் சொன்னேன். உடனே அப்போது எழுதி வெளியிடப்பட்டிருந்த தன்  இரண்டு புத்தகங்களை தன் பப்ளிஷர் மூலம் எனக்கு அனுப்பி வைத்தார்.
Indu Sudaresan

            அவர் பெயர் இந்து சுந்தரேசன்.(
http://www.indusundaresan.com) இந்தியாவில் பிறந்து வளர்ந்த இந்து, மேற்படிப்புக்காக அமெரிக்கா வந்து பின்னர் இங்கேயே 'சியாட்டில்' நகரில் தன குடும்பத்தோடு வசித்து வருகிறார்.

            அவர் எழுதிய முதல் புத்தகம் "The Twentieth Wife". "அட்ரியாபுக்ஸ்" நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இப்புத்தகம் இங்கு மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மெஹ்ருன்னிஷாவின் குடும்பம் ஒரு நாடோடியாக இந்தியாவில் நுழைவதில் ஆரம்பிக்கும் இந்த நாவலில், மொகலாயச் சக்ரவர்த்தியான அக்பரின் கடைசிகாலம், அவரின் மூத்தமகன் ஜஹாங்கீர் பொறுமையில்லாது அரியணையைக்கைப்பற்ற எடுத்த தோல்வியுற்ற முயற்சிகள், பின்னர் மெஹ்ருன்னிஷாவின் மேல் காதல், மொகலாய அந்தப்புரத்தின் அழகிகள், அதன் கடுமையான சட்டதிட்டங்கள் என அழகிய தடையில்லாத ஆங்கிலத்தில் அருமையாக எழுதப்பட்டதைப்படித்து அசந்துவிட்டேன். மிகவும் பெருமையாக உணர்ந்தேன். ஆங்கில எழுத்தாளர்களுக்கு சற்றும் குறையாத நடை, விவரணைகள், குழப்பமில்லாத தெள்ளிய நீரோடை போன்ற கதையமைப்பு, வரலாற்று நிகழ்வுகள், என அதிக ஆராய்ச்சியுடன் எழுதப்பட்ட இந்த நாவல் உலகத்தின் 22 மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. மேலும் இந்து இந்த நூல்களுக்கு பல அவார்டுகளை அள்ளியிருக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக எழுதப்பட்டது,"The Feast of Roses", என்பது. இந்த நாவலில் பேரரசராக முடிசூட்டப்பட்ட ஜஹாங்கீர் எப்படி தடைகளை மீறி மெஹ்ருன்னிஷாவை திருமணம் செய்கிறார், மெஹ்ருன்னிஷா எப்படி "நூர்ஜஹான்" என்ற பட்டத்துடன் செல்வாக்குப் பெற்றார், ஜஹாங்கீரின் மகன் நூர்ஜஹானின் மருமகளை திருமணம் செய்தது. பின்னர் அவன் ஷாஜஹான்  என்ற பட்டத்துடன் பேரரசரானது, அவன் மனைவி அர்ஜுமன்ட், மும்தாஜ் என்ற பெயரில் பிரபலமடைந்தது, ஆகியவை வருகின்றன.

            தன் மூன்றாம் நாவலில் ( Shadow Princess) தாஜ்மஹால் கட்டப்பட்ட கதை, ஷாஜஹானின் மகன்களுக்குள் நடந்த வாரிசுப் போட்டி, அதன்பின் அவுரங்கசீப் பட்டத்துக்கு வருதல் ஆகியவை வருகின்றன.
            உலகின் முக்கிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த மூன்று நாவல்களை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற பலரின் ஆசைக்கிணங்க (நான் கூட மொழிபெயர்க்க ஆசைப்பட்டேன்) இப்போது வானதி பதிப்பகத்தின் மூலம் அது நிறைவேறியுள்ளது.
            மொழிபெயர்த்தவர் வேறு யாரும் இல்லை. இந்துவின் அன்னை, 'மதுரம் சுந்தரேசன்' அவர்கள். மொழி பெயர்ப்பில் எந்த அனுபவமுமில்லாத இவருக்கு "இருபதாவது இல்லத்தரசி" முதல் முயற்சி. இந்த முயற்சி பாராட்டப்படக்கூடியது என்றாலும், பல இடங்களில் திக்கித்திணறிச் செய்த நேரடி மொழி பெயர்ப்பில் (Literal Translation) குழப்பியடித்திருக்கிறார். ஆங்கிலத்தை அப்படியே மொழி பெயர்க்காமல், அதன் சாரத்தை உணர்ந்து அதனைத் தன்னுடைய மொழியில் கொடுத்திருந்தால், மூலநூலின் அழகு கெடாதிருந்திருக்கும். அவரது அனுபவமின்மை பல இடங்களில் வெளிப்படுகிறது. அதனை எடிட் செய்தவர்கள், எப்படி கண்டுகொள்ளாமல் விட்டார்கள் என்பது ஆச்சரிய மூட்டுகிறது.

            ஆனால் அவரது இரண்டாவது மொழிபெயர்ப்பான "இதய ரோஜா" வில் அந்தப்பிரச்சனை வெகுவாக குறைந்துள்ளது. இப்பொழுது மூன்றாவது நாவலும் “நிழல் இளவரசி” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட செய்தி வந்திருக்கிறது. வாங்கிப்படிக்க வேண்டும். 

நம் வாசகர்கள் முடிந்தால் மூலநூலான ஆங்கிலத்தில் வந்தவற்றைப் படிக்கலாம். அல்லது தமிழில் வெளிவந்த நூல்களைப் படிக்கலாம்.
            இதில் தமிழர்களுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதத்தில், இந்துவின் இந்த நாவல்களைத்தழுவி “மல்லிகா”   என்ற தலைப்பில் எபிக் டிவியில் ஒரு தொலைக்காட்சி சீரியல் வரவிருக்கிறது.
Indu-Sundaresan-author-of-the-book-The-Twentieth-wife-along-with-the-cast-of-the-show
           
 இந்து சுந்தரேசன் மேலும் பல புத்தகங்கள் எழுதி அழியாப் புகழ் பெற பரதேசியின் வாழ்த்துக்கள்.
Indu Sundresan


2 comments:

  1. மிக நல்லதொரு அறிமுகம்...பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் தொடர்ந்து படித்து வருவதற்கு என்னுடைய நன்றிகள்

      Delete