Wednesday, August 14, 2013

தாயின் மணிக்கொடி, தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய்ஹிந்த்.

கடந்த வாரம் சுற்றுலா சென்று இருந்ததால் நமது பகுதி வெளிவரவில்லை. மன்னியுங்கள் நட்பூஸ்.

தாய்  மண்ணை விட்டு வந்து, பல ஆண்டுகள்  ஆனாலும் அந்த மண்ணை மறக்கமுடியாமலும், மீண்டும் சென்று மிதிக்கமுடியாமலும், அமெரிக்க மண்ணை துறக்க முடியாமலும், அதிக இருமனப்பட்ட வாழ்க்கைதான், புலம்பெயர்ந்த எங்கள் வாழ்க்கை. யாரைக்கேட்டாலும் இதைத்தான் சொல்வார்கள். டாலரைத் துரத்தி துரத்தி நாங்கள் என்னதான் இங்கே சாதித்தோம்? என்று கேள்வி கேட்டால், ஒரு வெற்றுப் பார்வையும் பெருமூச்சும்தான் வெளிப்படும். எனவே இங்கே எங்காவது இந்திய அடையாளங்களைப் பார்த்தால் மனது குதூகலிக்கும்.

நம்மூரில் மழை பெய்தால், நம் சாக்கடைகள் நிரம்பி தண்ணீர் முழங்காலுக்கு வந்துவிடுமல்லவா ?. ஆனால் இங்கே பேய் மழை பெய்தால் கூட, ஒரு சொட்டு தேங்காது.காரணம் பாதாள சாக்கடைகள். 

பெரிய பெரிய இரும்பு மூடிகள் Made in India என்று இருக்கும். ஜாக்கிரதையாக மிதித்து விடாமல் தாண்டிச் செல்வேன்.

நியூயார்க் Midtownனில்  உள்ள என் அலுவலகம் இருக்கும், Broadway க்கு அருகில் இருக்கிறது, ஒரு மூன்று ஸ்டார் ஹோட்டல் .கொரியன் கடைகள் அதிகமாக இருப்பதால் அதற்கு  ‘கொரியன் வே' என்று பெயர்.  அந்தப்பக்கம் தினம் போகும் எனக்கு பார்க்கும்போதெல்லாம் பரவசமூட்டுவது, பட்டொளி வீசிப்பறக்கும் நம் இந்திய தேசிய மூவர்ணக்கொடி.

 அந்த ஹோட்டலின் உரிமையாளர் நிச்சயமாக இந்தியராகத்தான் இருக்க வேண்டும்.நண்பர் வனராஜ் இங்கே வந்திருக்கும்போது,தெரிந்தோ  தெரியாமலோ இங்குதான் இருமுறை       தங்கினார். 

பல ஹோட்டல்களும் மோட்டல்களும் இங்கு இந்தியருக்குச்சொந்தம். குறிப்பாக ஸன்ட் சிங் சட்வால் என்ற பஞ்சாபி இந்தியர் பல முக்கிய ஹோட்டல்களுக்கு சொந்தக்காரர். டெமாக்கிரட் கட்சியை சேர்ந்த இவர் 'கிளின்டன்' அதிபராக இருந்தபோது, அவரின் முக்கிய டோனர் ஆவார்.
ஹிலரிக்கும் அவர்தான்.

அந்த ஹோட்டலில் அமெரிக்கக் கொடிக்கு இணையாக நமது கொடி பறக்கும். இங்கே எழுதப்படாத ஒரு சட்டம் உண்டு. எங்கெல்லாம் வேறு நாட்டுக் கொடிகள்  பறக்கிறதோ, அங்கே அமெரிக்க நாட்டுக் கொடியும் பறக்க வேண்டும்.
அமெரிக்கர்கள் தங்கள் கொடிக்கு மிகுந்த மரியாதை தருபவர்கள். பலர் வீடுகளின் முன் நட்சத்திரகொடி பறக்கும். எல்லா பொது நிறுவனங்கள், அரசாங்க அலுவலகங்கள் மட்டுமல்லாமல் தேவாலயங்களில் கூட அமெரிக்கக்கொடி இருக்கும்.
            நமதுஇந்தியக்கொடியைப் பார்த்ததும், என்னுடைய பள்ளி நாட்கள் ஞாபகம் வரும். நான் 1 முதல் 8 வரை படித்த தேவதானப்பட்டி, இந்து நடுநிலைப்பள்ளியில், ஒவ்வொரு திங்கள் கிழமை காலையும் பள்ளி துவங்குவதற்கு முன் கொடியேற்றம் நடக்கும். போடி ஜமின்தார் கட்டிய அரண்மனைச்சத்திரத்தில் தான் அப்போது பள்ளி நடந்தது. பள்ளிக்கு முன்னால் இருக்கும் சிறிய மைதானத்தின் நடுவில் உள்ள கொடிக்கம்பத்தில் நடக்கும் மாணவர் அசெம்பிளியில் மூவர்ணக்கொடி ஏற்றப்படும். வகுப்பு தலைவர்களின் தலைமையில் ஒவ்வொரு வகுப்பாக வரிசையில் வந்து கூடுவர். ஆசிரியர்களும் இருப்பர். இருபுறமும் இரு எட்டாம் வகுப்பு மாணவர்கள் (என் அப்பாதான் வகுப்பாசிரியர்) சுழற்சி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தமிழ்த்தாய் வாழ்த்துடன் அசெம்பிளி ஆரம்பமாகும். ஒருவன் அசெம்பிளி நடத்த இன்னொருவன் உரையாற்ற வேண்டும். தலைமை மாணவன் பரேட் செய்து வழிநடத்த, இந்திய உறுதிமொழி ஏற்க வேண்டும். "இந்தியா என் தாய் நாடு, இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர். என் தாய் நாட்டை நான் நேசிக்கிறேன்" என்று போகும் உறுதிமொழி. அதன்பின் போகன்வில்லா காகிதப்பூக்களை உள்ளே வைத்து மடித்து உயர்த்தப்பட்ட தேசியக்கொடி தலைமை ஆசிரியரால் ஏற்றப்பட, அனைவரும் சல்யூட் செய்வார்கள். கிருஷ்ணன் கோயில் வழுக்குமரம் தான் திருவிழா முடிந்ததும் கொடிமரமாகும். அதன்பின்னர், மகாகவி பாரதியார் எழுதிய “தாயின் மணிக்கொடி பாரீர் அதை தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் “என்ற பாடல் பாடப்படும் (http://www.youtube.com/watch?v=83OTliJtTGA)
எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. "பட்டொளி வீசி பறக்குது பாரீர்", என்று பாடும்பொழுது, நான் எப்பொழுதும் அண்ணாந்து கொடியைப் பார்ப்பேன். அது பறக்காமல் தொய்ந்து கிடக்கும்போது மனசுடைந்து போவேன்.அது நன்கு பறக்கும்போதெல்லாம், மனசு குதூகலமாகி இன்னும் உரக்கப்பாடுவேன். "பட்டொளி வீசி பறக்குது பாரீர்".
சுதந்திர நாளும் வந்தது.என்னுடைய முறை. வகுப்பின் முதல் மாணவன் (சத்தியமா, நம்புங்க) என்பதால் எதிர்பார்ப்பு எகிறியது. நேதாஜி அவர்களைப்பற்றி நான் பேசுவதாக முடிவு செய்து, நன்றாக தயார்செய்து வைத்திருந்தேன். வீராவேசமாக பேசி அசத்தி விடவேண்டும் என நெட்டுறுப்போட்டு வைத்திருந்தேன். "ஸ்டாண்ட் அட் ஈஸ்", இப்பொழுது சேகர் உரையற்றுவார், என்று சொன்னதும், டிசம்பர் மாச சில்லிப்பிலும் வேர்த்துக்கொட்டியது. நேதாஜி பற்றிப்பேச ஆரம்பித்த நான், தாத்தாஜி போல நடுங்க ஆரம்பித்தேன். மனப்பாடம் செய்த எல்லாம் மறந்துபோய், முழித்தபோது என் பித்தாஜி வேறு முறைத்தார். எனக்கு என் இயலாமையை நினைத்து ஆத்திரம் வந்ததோ என்னவோ, மூத்திரம் வந்து விட்டது.
என் வாயினுள் இருந்த நாக்கு எங்கோ காணாப்போய்விட்டது. ஏதோ முணுமுணுத்துவிட்டு நான் நிறுத்திவிட, எல்லோரும் அமைதி காத்தனர். நான் மெதுவாக நழுவி, உள்ளே கழிப்பறைக்கு ஓடும்போது தான் பிறருக்கு தெரியும், நான் பேசி முடித்துவிட்டேன் என்று. அதன் பின்னர் தேசீய கீதம் பாடும் போது, என் டிரவுசரில் சிந்தியவற்றை கழுவிவிட்டு நிமிர்ந்தால், யார் பார்க்கக்கூடாது என்று நினைத்தேனோ அந்த என் குல எதிரி ராகவன் பார்த்துவிட்டான். பயபுள்ள சொன்னான் "டேய் சேகர் அருமையா இருந்துச்சு, ஆனா ஒன்னுமே கேக்கலன்னு". ஹிஹ்கே, ஹிஹ்கேஹே நான் பேசுனது எனக்கே கேட்கல அப்புறம் அவனுக்கு எப்படி கேட்டிருக்கும்.
             என்னுடைய இரண்டாவது முறை வந்தபோது, “டேய் நான் பேசல, அசெம்பிளி நடத்துறேன்”, என்றேன். கொடிதனை தயார்செய்து, அட்டென்ஷன், ஸ்டாண்ட் அட் ஈஸ், ஸ்கூல் சல்யூட், ஸ்கூல் டிஸ்பர்ஸ், ஆகிய வார்த்தைகள்தான். எதுக்கும் இருக்கட்டும் என்று ஒரு பேப்பரில் எழுதி வைத்துக்கொண்டேன். எல்லாம் நல்லபடியாகவே ஆரம்பித்தது. கொடியேற்றம் வந்தது. தலைமை ஆசிரியர் வந்து கொடியைச் சுண்ட, கொடி விரியவில்லை. மீண்டும் சுண்ட, கொடி மேலும் இறுகியது. எனக்கு மட்டும்தான் தெரியும் என்ன நடக்கிறது என்று. 'உருவாஞ்சுருக்கு' சரியாக போடாததால் வந்த தொல்லை. மீண்டும் ஒருமுறை வேகமாக சுண்ட, கயிறு அறுந்து கொடி  கீழே விழுந்தது. பலபேர் கொல்லென்று சிரிக்க,
எங்கள் HM, ராமு வாத்தியார், ,என்னைப்பார்த்த பார்வையில் கோபமும் பரிதாபமும் கலந்து இருந்தது. என் அப்பா பக்கம் நான் திரும்பிப் பார்க்கவேயில்லை. ராகவன் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்துக் கொண்டு இருந்தான். பலாக்கொட்டை முத்தலிப் வந்து மடமட வென்று கொடியை சரிசெய்து மேலே அனுப்ப, ராமு வாத்தியார் கொடியை ஏற்றினார். கொடி அழகாக விரிந்து காகிதப்பூக்களை விரித்து சிரித்தது. ரசித்துக்கொண்டிருந்த, நான் அடுத்து சொல்ல வேண்டியதை மறந்து நிற்க அடுத்த பக்கத்தில் பேசுவதற்கு தயாராய் இருந்த ஜெயலட்சுமி எனக்கு நினைப்பூட்ட, அவசரத்தில் "ஸ்கூல் சல்யூட்” என்று சொல்லவேண்டிய இடத்தில், "ஸ்கூல் டிஸ்பர்ஸ்" என்று சத்தமாக சொல்ல, சிறுபிள்ளைகள் நகர, ஆசிரியர்கள் திகைக்க, மீண்டும் கழிவறைக்கு ஓடினேன்.


சுதந்திர தின நாள் வாழ்த்துக்கள் 

நண்பர்களே.

4 comments:

  1. ஸ்வாரசியமாக சொல்லி இருக்கீங்க!

    அந்த சில நிமிடங்கள் டென்ஷனில் என்ன பேசுவது எனத் தெரியாமல் முழிப்பது எனக்கும் நடந்திருக்கிறது.....

    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. சுதந்திர தின நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete