எனக்கும் தொலைந்து போகும் 'வாலட்' களுக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது என்று நினைக்கிறேன். பலருடைய
வாலட்டுகள் அடிக்கடி என் கண்ணில் பட்டுக் கொண்டேயிருக்கின்றன.
டேய் மகேந்திரா நிறுத்து உன் கற்பனையை, இங்கெல்லாம் பிக்பாக்கட் அடிக்க முடியாது.
அப்படித்தான் இன்றைக்கும் நடந்தது. Q-40-லிருந்து
'F'டிரைன் பிடிக்க இறங்கும்போது, ஒரு பருத்த, கருத்த வாலட் கண்ணில் பட்டது. ஐயோ
பாவம், யாரோ மறந்து, விட்டு விட்டுப் போய் விட்டார்கள்.
இங்கே பஸ் மற்றும் டிரைனிலிருந்து இறங்கும் பலரைக்
கவனித்திருக்கிறேன். இறங்கும்போது, தான் உட்கார்ந்திருந்த இடத்தை ஒருமுறை திரும்பிப்
பார்த்துவிட்டுத் தான் இறங்குவார்கள். கொஞ்ச நாளைக்குப்பின்தான் எனக்கு விளங்கியது.
அது எதையாவது விட்டுவிட்டார்களோ என்று இறங்கும் முன் செக் பண்ணிக் கொள்வதற்காக. அந்தப்
பழக்கம் எனக்குப் பின்னர் ஒட்டிக் கொண்டது.
பக்கத்தில் இருந்த ஒரு பெண்ணிடம் கேட்டேன்,
"டிரைவரிடம் கொடுத்துவிடலாமா?" என்று. அவள் சொன்னாள், "தபாலில் அனுப்பிவிடுங்கள்,
அப்பொழுதுதான் விரைவில் கிடைக்கும்" என்று. சரியென்று சொல்லி, F டிரைனில் ஏறி
ஆபிஸ் வந்து சேர்ந்தேன். ஆபிஸில் ஈமெயில் எல்லாம் செக் பண்ணிவிட்டு, வாலட்டை எடுத்து
ஆராயத்துவங்கினேன். பருத்த வாலட் முழுவதும் கத்தை கத்தையாக டாலர் நோட்டுகள், டாலர்
நோட்டுகள் $$$$$$$$$$$$$$$$$$
இல்லை நிறைய
கார்டுகள்தான் இருந்தது. பலவித கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டு, பலருடைய பிஸினெஸ்
கார்டுகள், இன்சூரன்ஸ் கார்டு, சிறு குறிப்புகள் அடங்கிய ஒரு சில சிட்டைகள் ஆகியவை
இருந்தன.
அதோடு முக்கியமாக பாஸ்போர்ட் கார்டும், டிரைவிங்
லைசென்சும் இருந்தன. அப்பாடா, காணாமல் போக்கியவரின் மூஞ்சியும் பெயர் மற்றும்
அட்ரசும் அதில் இருந்தன. 1970ல் பிறந்தவர். போன் நம்பர் இல்லை, பெயர் ஃபிரான்க் கார்டர் III. யாரைக் கூப்பிடலாம் என்று நினைத்துக்கொண்டே,
இன்சுயூரன்ஸ் கார்டில் இருந்த டாக்டரைக் கூப்பிட்டேன். நான் என்ன சொல்லியும்,
அவர் போன் நம்பர் கொடுக்க மறுத்தார். அது பிரைவேசி ஆக்டின்படி தப்பாம். அடப்போங்கடா
என்று மறுபடியும் ஆராய்ந்தபோது மற்றொரு டாக்டர் அப்பாயின்ட்மென்ட் கார்டு இருந்தது.
அங்கு டிரை செய்தபோது வாய்ஸ் மெயில் போனது. சொந்த பிஸினெஸ் கார்டு தவிர மற்ற எல்லாக்கார்டும்
இருந்தது. இன்னும் இரண்டு கார்டுகளில், ஒரு மியூசிக் ஸ்டுடியோ நம்பரும், இன்னொரு
'பெர்கஷனிஸ்ட்' நம்பரும் கிடைத்தது. அவர்களுக்கு ஃபோன் செய்தால் மியூசிக் ஸ்டுடியோ
ஆளுக்கு இவரை தெரியவில்லை. ஆனால் என் நம்பரை வாங்கி வைத்துக் கொண்டு, அவரும் விசாரிப்பதாகச்
சொல்லி, என் முயற்சிக்கு நன்றியும் வாழத்தும் தெரிவித்தார். அந்த டிரம்ஸ் இசைக்கலைஞரின்
வாய்ஸ் மெயிலில் "நோபடி லீவ் இனி பேட் மெஸெஜ் , ஒன்லி குட் மெஸெஜ்"
என்றது. சரி அன்று மாலை வீட்டைக் கண்டுபிடித்து கொடுத்துவிடலாம் என்று முடிவு செய்தேன்.
அப்புறம்தான் ஞாபகம் வந்தது, உடனே "கூகுள் கூகுள்
பண்ணிப்பார்த்தேன் உலகத்திலே". இருந்தது. அதெப்படி இல்லாமல் போகும். (அட மட சேகரு,
முதல்ல நீ அதை தானே பண்ணியிருக்கணும்). ஃபேஸ் புக்கில் கண்டுபிடித்தேன். ஈமெயில் அனுப்பினேன்.
அவர் ஒரு பாடகர். அவர் பாடல்களை நீங்களும் தேடி யூடுயுபில் கண்டு பிடிக்கலாம், கேட்கலாம் ( Frank H Cater
III). 2 மணி நேரத்தில் கனெக்ட் ஆகி, என் அலுவலகம் வந்து பெற்றுக் கொண்டார். நன்றி செலுத்தி,
தன் CD ஒன்றை அன்பளித்தார்.
இதே மாதிரி சில மாதங்களுக்கு முன்னால் என் வீட்டின் முன்னால், ஒரு
பெண்கள் பர்ஸ் கிடைத்து. இன்சுயூரன்ஸ் ஆபிஸ் மூலம், போன் கண்டுபிடித்து, சப்வே ஸ்டேஷனில்
வந்து பெற்றுக்கொண்டு நன்றி சொல்லிச் சென்றாள். வெறும் நன்றி மட்டும்தான்.
வாலட்
மூலம் வேறு ஒரு பெரிய நன்மை நடந்தது ஞாபகம்
வருகிறது. சுருக்கமாகச் சொல்கிறேன்.
தேனாம்பேட்டையில் "குட்வில் HRD கன்சல்டிங்" ஆரம்பித்த புதிதில், சிறிது
சிறிதாக சில கம்பெனிகளுக்கு HR கன்சல்டிங் மற்றும் மேனேஜ்மென்ட் டிரைனிங்
கொடுக்க சில வாய்ப்புகள் கிடைத்தது. அதில் ஒன்று ஆம்பூரில் உள்ள "அல்தாஃப் ஷுஸ்"
என்ற கம்பெனி. கிளார்க் மற்றும் பாஸ்டானியன் காலணிகள் அங்கு ஏற்றுமதிக்கு தயாராயின. அதன் MD அல்தாஃப்
எப்போதும் எனக்கு AC சேர்காரில் புக்
செய்துவிடுவார். அப்படி ஒருநாள் "லேட் கமிங்" பிராப்ளத்திற்கு சில சர்வேக்கள்
செய்து முடித்து, திரும்பும்போது, ஏசி குளிரில் கொஞ்சம் அசந்துவிட்டேன்.
ரயில் வண்டி ஒரு குலுக்கலிட்டு சென்ட்ரலில் நின்றபோது, படக்கென்று எழுந்தேன். பக்கத்தில் ஒரு புடைத்த வாலட் கிடந்தது. சில நிமிடங்களில்
ஒரு ரெண்டு பேர் புயலாய் உள்ளே நுழைந்தனர். மக்களே ஒரு ஸ்டண்ட் சீனை எதிர்பார்க்காதீங்க,
நானென்ன இளைய தளபதியா?
பயணிகள் விட்டுப்போகும் செய்தித்தாள்கள், பத்திரிகைகளை
எடுத்து பிழைப்பு நடத்தும் மக்கள் அவர்கள். ஏசிகோச்சில் மட்டும்தான் இவை கிடைக்கும்.
கொஞ்சம் தவறியிருந்தால் வாலட் அவர்கள் கைக்குப் போயிருக்கும்.
வாலட்டை எடுத்து வீட்டுக்குச் சென்று பார்த்தால்
பணம் உண்மையிலேயே கத்தை கத்தையாக முள்ளங்கி பத்தை பத்தையாக நிறையவே இருந்தது. எண்ணவில்லை.
மேலும் நிறைய கிரடிட் கார்டுகளுடன், நல்லவேளை பிஸினெஸ் கார்டும் இருந்தது.டெலிபோன்ஸில்
அவர் சீனியர் டிவிஷனல் மேனேஜர். அடுத்த நாள் போன் பண்ணி தெரிவித்தேன். அவரால் நம்பவே முடியவில்லை. மதியம் போல், அவருடைய
பியூன் வந்து ஒரு பெரிய சாக்லட் டப்பாவைக் கொடுத்துவிட்டு வாலட்டை வாங்கிச்சென்றார்.
அவர் பெற்றுக் கொண்டபின் மறுபடியும் போன் செய்து
நன்றி சொல்லிவிட்டு வந்து சந்திக்கச் சொன்னார். எங்கள் ஆபிசுக்கு போன் அப்ளை செய்து
பலமாதங்கள் காத்திருந்த நேரம் அது. ஆனாலும் அவரிடம் செல்ல மிகுந்த தயக்கமாய் இருந்ததால்
விட்டுவிட்டேன்.
ஒரு மாதம் கழித்து மீண்டும் ஒரு பிஸ்கட் டின் அனுப்பி
தன்னை சந்திக்கும்படிசொல்லி அனுப்பியிருந்தார். சரியென்று மரியாதை நிமித்தம் நான் சென்றபோது
ஒரு பெரிய வரவேற்பு கொடுத்து, தன் ஸ்டாஃப் எல்லோரையும் வரவழைத்து அறிமுகம் செய்து
வைத்தார். வாலட்டைத் திருப்பிக் கொடுத்தது அத்தனை பெரிய விஷயமில்லை என்று திரும்ப திரும்ப
சொன்னேன்.
"ஆமாம் ஏன் உங்களுக்குப்போன் இல்லை?, பக்கத்து
ஆபிஸ் மூலமாகவல்லவா, ஒவ்வொரு தடவையும் கூப்பிடுகிறார்கள்" என்று கேட்டார். அப்போதுதான்,
தட்கல்லில் புக் செய்துவிட்டு வெயிட் பண்ணும் விஷயத்தைச் சொன்னேன். "ஏன்
என்னிடம் முதலிலேயே சொல்லவில்லை" என்று கோபித்து உடனடியாக தன் சொந்த
கோட்டாவி ல் போட்டுக்கொடுத்து, ஒரு வாரத்தில் 2 போனும் வந்தது. 90 களில் போன் கிடைப்பது
அவ்வளவு கஷ்டம். எனவே
அது ஒரு பெரிய விஷயம்தான்.
Back to Newyork now, என் மனைவியிடம் சொன்னபோது உனக்கு
எப்பவுமே திருப்பிக்கொடுக்கும்படிதான் பொருட்கள் கிடைக்கிறது என்றாள். அவள் சொல்வது
உண்மைதான். அவளுக்குக் கிடைப்பதெல்லாம் டாலர் நோட்டுகள் மற்றும் தங்க நகைகள்
பலதடவைகள் கிடைத்திருக்கின்றன.
குனிந்த
தலை நிமிராதவள் அல்லவா .
ஒரு நல்ல
காரியம் செய்த திருப்தியோடு, அன்று மாலை மகிழ்ச்சியோடு வீடு வந்து சேர்ந்தேன். என்
மகள் வெளியே போவதற்கு என்னுடைய சப்வே அன்லிமிட்டட் மெட்ரோ கார்டைகேட்க , பாக்கெட்டில் கையைவிட்டால் என் வாலட்டைக்
காணோம். அய்யய்யோ , யாராவது பார்த்தீர்களா? ஐயா எடுத்திருந்தால் உடனே தகவல் கொடுக்கவும் .
ஹா..ஹா .. வாலெட் க்கு பின்னால இவ்ளோ கதையா...
ReplyDeleteசுவாரசியமாக இருந்துச்சி அண்ணா ...
ஆமா அண்ணே .. யாரு இந்த மகேந்திரன், சேகரு... உங்க ரூட்ல ரொம்ப கிராஸ் பண்றாங்க
சொல்லுங்க அண்ணே அவங்க வாலெட் ட தூக்கிடலாம்
நன்றி ஆனந்த் , நான்தான் சேகர் . மகேந்திரன் என் மைண்ட் வாய்ஸ் .
ReplyDelete