Monday, June 24, 2013

மெக்சிகோ பயணம் 17: நீதானா அந்தக்குயில் ?

David Mora
            திட்டிவாசல் திறக்க, ஆவேசமாக நாலுகால் பாய்ச்சலில் வந்தது காளை. அரை மணியில் சாவதற்கு இவ்வளவு அவசரமா? என்று நினைத்தாலும் வழியில் எதிர்த்து, டேவிட் இருக்கிறாரே, அவ்வளவுதான் இவர் என்று நினைத்தேன்.
         பாய்ந்து வந்த காளையை நோக்கி துணியை உயர்த்திப்பிடிக்க, வந்த காளை துணியை முட்ட தவ்வியதில், டேவிட் குனிய, காளை அவரை தாண்டிக் குதித்தது. ஆத்திரத்துடன் திரும்பி வர, டேவிட் எழுந்து நின்று போக்குக்காட்ட, உதவியாளர்கள் ஓலமிட்டு கையில் ஸ்டம்புடன் ஓடி வர, டேவிட் பாக்சுக்குத்திரும்பினார். இது இவர் ஸ்டைல் போல.
            மீண்டும் நான் எழுந்து நிற்க, பக்கத்தில் இருந்த பெண், “என்னாச்சு” ?என்றாள், உணர்ச்சி வசப்பட்டு உள்ளே குதிச்சிருவேன்னு தப்பா நினைச்சிட்டா போல  இருக்கு. நாமெல்லாம் எவ்வளவு உணர்ச்சி வசப்பட்டாலும் தெளிவோ இருப்போம்னு, பாவம் அவளுக்கு  தெரியாது. இதோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு ஏறி ஏறி ஏ………..றி, உஸ் உஸ் பின்னர் இறங்கி இ>>>>றங்கி  கிறங்கி வந்தேன். வெளியிலிருந்த அதே கேட்டுக்குத்திரும்ப வழி தெரியவில்லை. ஒரு பலோமாஸ் வாங்கிவிட்டு திரும்பி மேலே ஏறி வாயிலில் இருந்து பார்த்தேன், செத்துப்போன காளையை இழுத்துச் செல்வது தெரிந்தது.
Manola Mejia
         மூன்றாவது ஆள், நம்ம ஹீரோ மனோலா வர சபை எழுந்து நின்று ஆரவாரிக்க, அதேதான் நடந்தது. உசுப்பேற்றுவது, ஏமாற்றுவது, போக்குக்காட்டுவது, குத்துவது கொல்வது என இதெல்லாம் ஒரு பொழப்பு என்று வெறுத்துப்போய் வெளியே வந்து விட்டேன்.
           இந்த ஒவ்வொருவரும் மீண்டும் ஒருமுறை வேறொரு காளையை கொல்வார்களாம், ஆளுக்கு  ரெண்டு காளை. எங்க ஊர் மயிலக்காளையிடம் வந்து பாருங்கடா என்று சவால்விட்டேன். நம்மூர் காளை ஒரு ரெண்டு தடவை துணியைக் குத்திவிட்டு மூன்றாவது முறை ஆளைக்குத்தி, குடலை உருவும். கண்டிப்பாக இப்படி ஏமாந்து உயிரைவிடாதென்று நினைத்துக் கொண்டே வெளியே வந்தேன். மணி ஆறுதான் ஆனது. ஒரு ஆர்வக்கோளாறுல டிரைவரை எட்டு மணிக்கு வரச்சொல்லிவிட்டேன். நான் வந்த கேட்டை கண்டுபிடிக்க படாதபாடு பட்டு வழி என்றால் “சலுடா”  என்று கண்டுபிடித்து ஒரு வழியாக வெளியே வந்தேன். கேட்வாசிகள், என்ன சீக்கிரமாய் கிளம்பிட்டான்னு ஆச்சர்யமாய்ப் பார்த்தார்கள்.
    அங்குமிங்கும் பராக்குப் பார்க்க, அங்கு பெரிய மாலோ கடையோ ஒன்றுமில்லை. நேரம் ஆக ஆக குளிர் கூடியது, ஜாக்கெட்டும் இல்லை. அப்போது “ஆல்ப்பிரடோ”, என்று குரல் கேட்க, திரும்பினால், அட நம்ம டிரைவர். எட்டு மணிக்கு வர வேண்டியவன், ஏழு மணிக்கே வந்துவிட்டது எனக்கு பெரிய ஆச்சரியம். கேட்டால், “எனக்கு அப்பவே தெரியும், நீ முழுசாய் இருக்க மாட்டாய் என்று” என்றான். என் முகத்தில் ஒரு அப்பாவிக்களை இருப்பது தெரியும். அது ஸ்பானிஷ் மொழியிலும் எழுதியிருக்கிறது என்று அன்றுதான் தெரிந்துகொண்டேன்.
       எனவே, காளைச்சண்டை பாக்கனும்கிற ஆசை இப்படி முடிந்தது. இனிமேல் நம்ம வெஜிடேரியன் ஆகணும்னு நினைத்துக்கொண்டேன். ஐயையோ இனிமேல் நமக்கு ரத்தம் ஆகாதப்பா.
             ஹோட்டலுக்குத்திரும்பி, ஜாக்கெட்டை எடுத்துக்கொண்டு பக்கத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்குப் போய், ஊருக்கு எடுத்துச் செல்ல, கொய்யாப் பழங்களையும், சிறு ரஸ்தாளி பழங்களையும் வாங்கிக்கொண்டு ரூமுக்குத் திரும்பினேன்.
            ரிஷப்சனில் மீண்டும் ஒரு பெண் குரல் கூப்பிட்டதாகச் சொன்னார்கள். மறுபடியும் கூப்பிட்டால் ரூமுக்கு கனெக்ட் பண்ணச் சொல்லிவிட்டு போனேன். யாரந்தப்பெண், தெரியாமலேயே அல்லது பார்க்காமலேயே திரும்பி விடுவேனோ என்று நினைத்த வண்ணம் உட்கார்ந்திருந்தபோது, போன் ஒலிக்க, பட்டென்று எடுத்து ஹலோ என்றதும், என் மனைவியின் 20 வருடப்பழைய குரல் ஒலித்தது. வழக்கம் போல் “என்ன பார்த்தாய், எப்போது ஃபிளைட், நேரத்திற்கு ஏர்போர்ட் போய்விடு, எத்தனை மணிக்கு நியூயார்க் வருவாய்? எத்தனை மணிக்கு பெஞ்சியை அனுப்ப வேண்டும்?” என்று கேள்விக்கணைகளால் துளைத்தாள். எல்லாவற்றுக்கும் பதில் சொல்லி முடித்துப்பின், “சற்று நேரத்திற்கு முன் போன் செய்தேன், எப்போது ரூமுக்கு திரும்பினாய்?” ,என்று கேட்டாள். ரெண்டு மூணு தடவை போன் பண்ணியது “நீதானா அந்தக்குயில்” என்று கேட்க, ஆம் என்றாள். ஏன் மெசேஜ் விடவில்லை என்றால், “அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை”, என்றாள். அதானே பார்த்தேன், நமக்கு பெஞ்சாதி தவிர வேறொரு பெண் ஜாதியும் போன் பண்ணாதே என்று நொந்து கொண்டு படுக்கைக்குச் சென்றேன். தூக்கம் வராமல் கிருஷ்ண தேவராயரைப்புரட்ட, அந்த நடனப்பெண்மணியையும் மணம் முடித்து, இரு பெண்களுடனும் இனிதே இல்லறம் நடத்த சுபமாக முடித்துவிட்டார் ராகிரா. அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணுங்க.
          காலையில் சீக்கிரமே எழுந்து ரெடியாக, டேனியல் ஃபிரெஷாக வந்தான். ஏர்போர்ட்டுக்கு கிளம்பினோம். தயங்கி தயங்கி “அந்த சலவைக்காரி மேட்டர்”, என்றேன். “ நீ சீரியஸாகவா சொன்னாய், இப்போது அதற்கு டைம் இல்லையே “  என்றான். கடைசி வரைக்கும் கண்டுபிடிக்க முடியாத வருத்தத்தோடு கிளம்பினேன் .போகிற  வழியில்  நடந்து கொண்டிருந்த பழங்குடி மக்களின் குத்தாட்டத்தை சில நிமிடங்கள்  பார்த்துவிட்டு ஏர்போர்ட் சென்று சேர்ந்தோம் .

ஏர்போர்ட்டில் விட்டுவிட்டு கையசைத்து, தன்னுடைய பிஸினெஸ் கார்டைக் கொடுத்து விடைபெற்றுக் கிளம்பினான்.
              ஏர்போர்ட்டில், டூட்டி ஃப்ரி கடைகளில் வின்டோ ஷாப்பிங் செய்யும்போது, கையால் செய்யப்பட்ட ஒரு அழகிய, வண்ணமய மணியைப் பார்த்தேன். விலை 100 பீசோ என்றதும் உடனே எடுத்துச் சென்று கவுண்டரில் கொடுத்து கையில் மீதமிருந்த 100 பீசோவை எடுத்து நீட்டினேன். அந்தப் பெண் சிரித்தபடி 100 டாலர் என்றாள். டாலருக்கும் பீசோவுக்கும் ஏன்தான் $ என்ற ஒரே அடையாளத்தை பயன்படுத்துகிறார்களோ என்று நொந்து கொண்டே வேண்டாம் என்றேன். தன் சிரிப்பு மறைய, முதல் போனியே ஃபோனி ஆனதால், முறைத்தாள். சாரி சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

        ஃபிளைட் நேரத்திற்கு கிளம்பி மயாமி சென்றது. இமிக்கிரேசன் படிவத்தில் உண்மையை எழுத, என்னை தனியாகக் கூப்பிட்டு, கொய்யாப்பழங்களை அனுமதிக்க முடியாது என்று எடுத்துக்கொள்ள, “நீயே சாப்பிடு”, என்றேன். வாட் என்று முறைத்து, என் கண் முன்னாலேயே குப்பைத் தொட்டியில் போட்டான். சரி அட்லீஸ்ட் ஒன்றிரண்டு பழங்களை கேட்டு வாங்கி இங்கேயே சாப்பிட்டிருக்கலாம் என்று நினைத்த வண்ணம், நியூயார்க் பிளைட்டில் ஏறி உட்கார்ந்தவுடன், உயிர்த்தெழுந்த என் செல்போன், பார்க்காமல் விட்ட பல ஈமெயில்களை காண்பித்தது. அதில் ஒன்றில் என் மெக்சிகோ பயணத்தைப்பற்றி அறிந்த என் தோழிகளில் ஒருவள், சுஜாதாவின் சலவைக்காரி ஜோக்கை எங்கிருந்தோ கண்டுபிடித்து அனுப்பியிருந்தாள்.
(என்ன முத்து? நலமா? சொல்லு என்ன செய்தி? “சினேகாவின் காதலர்கள்" படப்பிடிப்பு ஆரம்பிச்சாச்சா ? என்ன சலவைக்காரி ஜோக்கா, அது வந்து, சலவைக்காரி தன் கழுதையோடு துணி துவைக்க ஆற்றுக்குப்போனாள். அங்கே ஆற்றில் குனிந்து……… என்ன முத்து சரியா கேட்கலியா, சரிவிடு நேரில் சந்திக்கும்போது சொல்றேன், ஆல்  தி பெஸ்ட் ஃபார் யுவர் ஃபிலிம் ப்ராஜெக்ட், பை முத்து.)
நியூயார்க்கில் இரவு 10.30 மணிக்கு வந்து இறங்கினேன்.
உறைபனிக்குளிர் உடலைத்தொட்டது
வாழ்க்கையின் நிதர்சனம் நெஞ்சைத் தொட்டது.
Welcome Back என்று பெஞ்சி சொன்னது
Welcome back to reality என்று ஒலித்தது.

மெக்சிகோ பயணம் முற்றியது.

விரைவில் எதிர்பாருங்கள்
1)  ராக்கஃபெல்லெர்  எஸ்டேட்
2)  அகஸ்டா , மெய்ன்
3)  போர்ட்டரிக்கோ

4)  கியூபெக் - கனடா

4 comments:

 1. அண்ணே கட்டுரை அருமை , நானே நேர்ல பார்த்த பீலிங் ... ஆனா அண்ணே கடைசிவரைக்கும் அந்த சலவைகாரி ஜோக்கை சொல்லாம ஏமாத்திபுட்டிங்களே,,,

  ReplyDelete
 2. நன்றி ஆனந்த் .

  உங்களைப்போன்றோர் கொடுக்கும் பாராட்டு மட்டுமே , என்னை மீண்டும் எழுதத் தூண்டுகிறது .

  ReplyDelete
 3. பயண கட்டுரை விரிவாக இருந்தது... நான் போய் வர உபயோகமாய் இருக்கும்.. தொடர்ந்து இது போன்ற பயண கட்டுரைகளை எழுதுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராஜ்.Thanks for your support. Pls feel free o contact me if you need more details about Mexico trip.

   Delete